குத்தாலம்


எமது அழிக்கப்பட்ட பழைய பதிவிலிருந்து ஒரு நாஸ்டால்ஜியா. குத்தாலம். சின்ன வயசில நமக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு இடம். என்னோட மாமா அங்க இருந்தார். ஒன்னாப்பு ரெண்டாப்பு படிக்கையில ஒவ்வொரு விடுமுறையும் அங்கதான். கதிராமங்கலம் இருக்கு இல்லையா.. அந்த வழி. அங்க ஒரு பெரிய சிவன் கோயில் இருக்கே. அதுக்கு பக்கமா மெயின் ரோட்டிலதான் மாமா வீடு. மாமாவுக்கு குழந்தைகள் இல்லாததுனால என்னோட அண்ணன் குத்தாலத்திலதான் சின்ன வயசில வளர்ந்தார். அஞ்சு வருஷம்னு நினைக்கிறேன். நானும் அக்காவும் விடுமுறை விசிட்டிங் செய்வோம்.

என் வயசிற்கு ஏற்ற நண்பர்கள் கிடையாது. அதனால ரெம்பவே போர் அடிக்கும். இருக்கவே இருக்கு விஜயா அக்கா வீடு. அங்க போனா கொஞ்சம் பொழுது போகும். அவங்களுக்கு நான் ரெம்பவே செல்லம். நான் அப்பவும் கூச்ச சுபாவம் ரெம்ப பேசமாட்டேன், இப்ப மாதிரி! என்னை பேசவைப்பதில் பெரிய பிரயத்தனம் செய்வார்.. நமக்கு ஒன்னும் பேச்சு வராது. அந்த வீட்டில் ஒரு அண்ணன் உண்டு. ரெண்டு பேரும் சேர்ந்தால் பாட்டுக்கச்சேரிதான்.. ஒரு முறை கொட்டாம்பட்டி ரோட்டுல பாட்டைப்பாடி அக்காவிடம் நல்லா பாட்டு வாங்கினோம். (எனக்கு அந்தப்பாட்டோட அர்த்தம் அப்ப தெரியாது)

நம்ம கிராமத்தில ஏது மச்சு வீடு.. விஜயா அக்கா வீடு மாடி வீடு. அதனால எனக்கு மொட்டை மாடில ஆட்டம்போடுறதில அவ்வளவு ஜாலி.. அதும் கனகாம்பரத்தொட்டிகள் – பெரிய மாமரம் – வீட்டுக்கு முன்னாடி சீரான மூங்கில் வேலி என்று அவ்வளவு அழகாய் இருக்கும் அந்த வீடு! அங்கயும் போர் அடிச்சா அப்டியே ஒரு சுத்து சுத்தி சினிமா கொட்டகையில என்ன படம்னு பார்த்துட்டு, வீட்டுக்குப் பக்கத்தில உள்ள வல்கனைசிங் கடையில ஆஜர். பெரும்பாலும் நமக்கு அதுதான் ஆஃபீஸ்.. அந்த பசங்களும் நமக்கு ரெம்ப பழக்கமாயிட்டதுனால சாப்பிட்டது போக மீதி நேரம் அங்கதான். பஸ் டிராக்டருக்கு அவங்க பங்சர் போடுறதைப் வேடிக்கை பார்ப்பதில்தான் எவ்வளவு ஆனந்தம்.. சின்னத்தம்பில பிரபு சொல்றது மாதிரி.. என்னா டயரு.. என்னா டியுப்பு…

அப்புறம் அழகான அந்தக்கோயிலுக்கு ஒரு மாலை விசிட். ஒரு பவுர்ணமி அன்று கோபுரத்தின் பின்னால் எழுந்த அழகான காவி நிற நிலவு… நான் இன்னும் மறக்கவில்லை. பிறகு காவிரிக்கரை (காவிரிதானே.. அல்ல கொள்ளிடமா.. காவிரி என்று என் மாமா சொல்லியதாக நியாபகம்).. ஆனால் ஒரு முறைதான் குிளித்திருக்கிறேன்.. தண்ணியே வராது. அதனால மேல் செங்கல் கட்டையிலிருந்து நம் வாண்டு நண்பர்களுடன் மணலில் குதிப்பதில் ஒரு தனி த்ரில்.. (என்ன.. கால் கொஞ்சம் விண் விண்ணென்று வலிக்கும்) அந்த ஆற்றுப்பாலத்தில் இருந்து நாங்கள் குதிப்பதற்குத் திட்டமிட்டோம். நடக்கவில்லை.

மாமா வீட்டு முற்றத்தில் தாயம் பல்லாங்குழி, மாமாவோட வயலுக்கு சைக்கிள் பயணம், காளிகோவில் திருவிழா, குதிரைச்சட்டை, திருமணஞ்சேரி நடை பயணம்.. இன்னும் இன்னும்… இன்னும்…. சொல்லிக்கொண்டே போகலாம்.. நினைக்க நினைக்க இனிப்பாக உள்ள நினைவுகள் அவை..

காலங்கள் கடந்து அந்த ஊருக்கான தொடர்புகள் அற்றபிறகு  அனைத்தையும் தாண்டி ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் தனியாக குத்தாலத்தைக் கடந்தபோது அந்த உணர்ச்சிகளை எப்படிச் சொல்ல.. எதோ எனக்கு சம்பந்தமில்லாத இடத்தை ஒரு மூன்றாவது மனிதரைப் போல குத்தாலத்தைக் கடந்த எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. பல பழைய நினைவுகள்.. மனிதர்களை வைத்து மண்ணா. மண்ணை வைத்து மனிதர்களா? மனிதர்கள் விலகினாலும் மண் மீதான பாசம் விட்டுவிடுமா என்ன?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s