பேரூர் நாட்டியாஞ்சலி – 1 – மாதவி முத்கல் ஒடிஸி நாட்டியம்.
நாட்டியாஞ்சலி என்ற ஒன்றுக்கு இன்றுவரை போனதில்லை. மஹாபலிபுரம் நாட்டியாஞ்சலி விழாவிற்கு போவதற்கு எண்ணம் இருந்தாலும், பணி நிமித்தம், தொலைவு நிமித்தம் என்று தட்டிப்போனது அதிகம். கோவை நகர் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் மூன்று நாட்கள் நாட்டியாஞ்சலி விழா நடந்து வருகிறது. இரண்டாம் நாளான என்றைய நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். விழாவினைப் பற்றி இன்னொரு பதிவு போடுகிறேன். இன்று அதில் மனம் கவர்ந்த ஒரு பகுதியினை மட்டும் பார்ப்போம்.
மாதவி முத்கல் இந்தியாவின் நடனக் கலைஞர்களில் தனி இடம் பிடித்தவர், தனக்கென தனி பாணியைப் பின்பற்றுபவர். கலையைப் பேணிப் பாதுகாக்கும் குடும்பத்தில் பிறந்த இவரும், வியத்தகு பங்களிப்பினை நடனத்திற்கு அளித்துள்ளார் என்று அறியப்பெற்றேன். இவரது நடன ஈடுபாட்டினைப் பாதுகாக்கும் விதத்தில் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினை அளித்து பெருமைப்படுத்தியிருக்கிறது.
இசை மற்றும் நாட்டியத்தில் மிக இள வயதில் தேர்ச்சி பெற்ற இவர், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட நடனக்கலைகளில் சிறந்தவராகத் திகழ்கிறார். பரதநாட்டியம் மற்றும் கதக் ஆகிய நடனங்களை சிறந்த குருக்களிடமிருந்து பயிற்சி பெற்ற இவர், அந்தந்த நடன வடிவங்களை நளினத்துடன் வெளிப்படுத்தினார்.
பின்னர் ஒடிஸி நடனத்தைக் கற்றுக்கொண்ட இவர், ஒடிஸியை தனது விருப்பத்தேர்வாக அமைத்துக்கொண்டார். ஒடிஸி நடனத்தின் நளினம் மிகு அபிநயங்கள், கற்றுக்கொடுத்த குருவின் ஈடுபாடு போன்றவை காரணமாக இருக்கலாம். ஹரிகிருஷ்ண பஹேரா என்பவரிடம் ஒடிஸியின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்ட மாதவி, பின்னர் கெலுச்சரன் மஹாபத்ரா என்ற புகழ்பெற்ற குருவின் பிரதான மாணவியாகத் திகழ்ந்தார்.
ஒடிஸியின் நளினம் மிகு அழகான அபிநயங்களில் (NRITTA) மிக லாவகமாகக் கையாளுகிறார். அவர் அபிநயம் பிடிக்கும் விதமும், சுத்தமான foot workம் பிரசித்தி பெற்றது என்று அறிகிறேன். இசை மற்றும் அபிநயத்தில் இவருக்கு இருக்கும் பாந்தித்தியம், சக கலைஞர்களில் அவரை முன்னிலைப் படுத்துகிறது.
ஒரிஸ்ஸா மாநிலத்தில் கோவில்களில் தேவதாசிகளால் ஆடப்பட்டு வந்தது இந்த நடன வகை. அதனை வெளியே எடுத்துக்காட்டியவர் மாதவி முத்கல்-லின் குரு மஹாபத்ரா. அந்த நடனத்தை இன்று உலகுக்கே அறிமுகப்படுத்தி வருகிறார் மாதவி.
சரி, பேரூர் நடன நிகழ்ச்சிக்கு வருவோம், கடவுள் வணக்கம் சொல்ல ஆரம்பிக்கும்போதே இவரது கால்கள் மற்றும் கைகளில் லாவகம், இவரது அனுபவத்தைச் சொல்வதாக இருந்தன. முத்திரை காட்டும் விரல்களும் சரி, அங்கும் இங்கும் அலைபாயும் கண்களும் சரி, சோகம்-கோபம்-சந்தோஷம் காட்டும் முகபாவங்களுமாய்….. அரங்கத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இருந்த கூட்டத்தில் எத்தணைபேருக்கு ஒடிஸி நடனம் தெரியும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதில் என்னவோ இருப்பது எங்களுக்குப் புரிந்தது. அரங்கத்தில் மவுணமும், முடிக்கையில் வந்த கரகோஷங்களும் அதற்கு சாட்சியாக இருந்தன.
கடவுள் வணக்கம் மற்றும் மங்களம் இடையில் ஒடிஸி நடனத்தில் நுணுக்கமான சிறப்புகளைக் கையாளும் வகையில் இரண்டு pieceகளைச் செய்து காட்டினார்.
1. ராதா கிருஷ்ணன் ஊடல் (yaahi madhava)
வருவேன் என்று சொல்லிச்சென்ற கண்ணன் வரக்காணோம். ஆறாத் துயரத்தில் ஜன்னலைத் திறந்து தேடுகிறாள் ராதா. அதோ அவன் வருவது போல தோன்றுகிறது.. இல்லை அவன் இல்லை. மிகவும் வருந்துகிறார். வெகு நேரம் கழித்து கண்ணன் வருகிறான். மிகுந்த கோபத்தில் இருக்கிறாள் ராதா. சமாதானப் படுத்தும் கண்ணனை, ‘உன் பொய் கதைகளைக் கேட்க விருப்பமில்லை போய்விடு’ என்று சிடுசிடுக்கிறாள்.
கண்ணனுடைய உதடுகளில் கரை இருப்பதைப் பார்க்கிறாள், அவனுடைய உடலில் கீரல்கள் இருப்பதைப் பார்க்கிறாள். மிகுந்த சினம் கொண்டு, ‘போய்விடு மாதவா, என்னை விட்டுவிட்டு உனக்கு எங்கு இஷ்டமோ அங்கே போய்விடு’ என்று கூறுகிறாள். ‘இந்த கீரல்கள் எல்லாம் உன் அழகிய கூந்தலுக்காக இந்த மலரினைப் பறிக்கச் சென்றபோது முள் குத்தியதால் ஏற்பட்டது ‘ என்று கண்ணன் ரீல் விட்டாலும் ராதா மசியவில்லை (உதட்டுக் கரைக்கு ஏதோ காரணம் கூறினார் மறந்துவிட்டது). பின்னர் கண்ணன் அவளிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்துகிறான். ‘ராதா, உன் தாமரை போன்ற முகத்தின் இதழ்களைத் திறந்து என்னிடம் கொஞ்சம் பேசி என் உள்ளத்தில் உள்ள இருளைப் போக்க மாட்டாயா ‘.. ம்ஹூம்.. சமாதனமாவதாய் தெரியலை. குருகோவிந்த் இயற்றிய இந்தப் பாடலில் கடைசியில் கண்ணன் சரணாகதி அடைந்து, உன் பாதங்களை என் சிரசில் கொள் ராதா என்று சாஷ்டாங்கமாய் விழுவதாய் முடிகிறது அந்தப் பாடல்.
அது எப்படி, கடவுள் போய் காலடியில் விழுவது. குரு கோவிந்த் அப்படி எழுதலாமா. புலவர் அப்படி எழுதவில்லை. கண்ணனே வந்து எழுதியதாக நம்பப்படுகிறதாம்.
2. கண்ணன் குழலோசை
ராதா வீட்டில் இருக்கும்போது குழலோசை மெல்ல காற்றில் மிதந்து வருகிறது. ராதா அந்த குழலோசையுடன் பேசுகிறாள். இப்போ என்னை அழைக்காதே குழலோசையே. நான் உன்னைப் பார்க்க வருவது தெரிந்து அனைவரும் என்னை உற்று நோக்குகின்றனர். எனவே பகல் பொழுதில் என்னை அழைக்காதே என்கிறாள்.
தண்ணீர் தூக்க ஆற்றுக்குப் போகிறாள். அங்கே குழலோசை வருகிறது. இந்தக் குழல்தான் தன்னுடைய இந்த இனிய இசையை பறப்பி அனைவர் மனைதையும் வசீகரிக்கிறது. கண்ணனை நினைத்து முள்ளாய் குத்துகிறது. என்ன செய்வது, இந்த இசை தரும் குழலையும் முள்ளால்தானே செய்யப்பட்டது (மூங்கில் புல் மற்றும் முள்) அதான் காதலர் இதயத்தையும் இந்த இசை முள்ளாய் குத்துகிறது. எனக்கு மற்றும் வாய்ப்பு இருந்தால் அந்தக் குழலை கண்ணனிடம் இருந்து பிடுங்கி இந்த ஆற்றிலேயே எறிவேன் என்கிறார்
ஆனால் மாயக்கண்ணன் லீலையில் மயங்காதவர் யாரோ. இறுதியில் ராதாவே கண்ணனிடம் குழலைக் கொடுத்து வாசிக்கக் கேட்டு மயங்குவதாக முடிகிறது.
மிகச் சிறப்பாக பாடலை முன்னரே விளக்கிக் கூறியதால் அவரது நடனத்தை எளிதில் விளங்கிக் கொள்ள முடிந்தது. ஒவ்வொரு காட்சியையும் கூறும்போதே, அதன் இலக்கிய ரசத்தில் மூழ்குவதைப் பார்க்கும்போது, கலையின்பால் அவருக்குள்ள ஈடுபாடு நமக்குத் தெரிகிறது. காற்றில் பறக்கும் கைகளும், நர்த்தனமிடும் கால்களும் அப்பப்பா.. கொள்ளை அழகு.
ஆனால் அந்த நடனத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளும் அளவிற்கு நமக்கு ஞானம் இல்லையே. வருத்தம்தான்.
இணையத்தில் மாதவி முத்கல்-லின் அசைபடங்கள் நிறைய கிடைக்கின்றன. ஒன்றினை இங்கே இணைத்துள்ளேன்
One thought on “Perur Natyanjali 2009 – Odissi performance by Madhavi Mudgal”