அல்லி அல்லி தீபாவளி


பண்டிகை என்றால் மனம் கொண்டாடும்தானே. அதும் தீபாவளி என்றால் இன்னும் கொஞ்சம் சேர்ந்தாடும். சமீப காலங்களில் பொங்கல் கொண்டாடுவோர் எண்ணிக்கையைவிட தீபாவளி கொண்டாடுவோர் எண்ணிக்கையும் கூடிக்கொண்டுதானே வருகிறது. சென்னையில் இருந்த வரை தீபாவளி பயண பரபரப்பு மூன்று மாதங்களுக்கு முன்பே, டிக்கட் எடுப்பதில் இருந்து, தொடங்கிவிடும். கோவை வந்த பிறகு அந்த பரபரப்பு சற்று குறைவு. கோயம்பேடு, எழும்பூர் என்பன மாறி, தற்சமயம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் என்பது கூட்டம் இல்லாததாகத் தோன்றியது. நிற்க.

திருச்சி மதுரை செல்லும் பேருந்துகள் 2 அல்லது 3 நிமிடங்களுக்கு ஒன்று என்ற விதத்தில் கிளம்பின. வேகமான ஏறப்போன எங்களை தடுத்தாட்கொண்ட காவல்துறை நாயனார் வரிசையின் இறுதிக்குச் செல்லுமாறு பணித்தார். நீ……ண்ட வரிசை.. போகப்போக பரமபத பாம்பாய் வளைந்து நெளிந்து. பேருந்து கழக நாயனார்கள் காவல்துறை நாயனார்களுடன் இணைந்து பணியைச் செவ்வனே செய்து குடும்பஸ்தர்கள் மற்றும் மல்லுக்கட்டி ஏறஇயலாத மகளிர் வயிறுகளில் பாலை வார்த்துக் கொண்டிருந்தனர். இல்லையேல் அவர்கள் பேருந்து ஏறுவது குதிரைக் கொம்பே. அன்று எல்லாம் பேருந்திற்கு டிக்கட்டுக்கு 20 ரூபாய் சர்சார்ஜ் வசூலித்தார்கள்.

போனஸ் வாங்கிய குஷியில் ஏறும் மில் தொழிலாளர்கள், சவரண் பளபளக்க வெட்கம் மினுமினுக்க தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர், அரசு சாராயக்கடையில் மப்பேத்திய கிர்ர்ர்ர்ரக்கத்தில் சலம்பும் குடிமகன்கள், நண்டுகள், பொடிசுகள், அவர்கள், நீங்கள், நான் என ஒரு பயணியர் கதம்பமாய் அனைத்து பேருந்துகளும் கிளம்பின. இது மாதிரி பயணத்தை ரசிக்க நல்ல மனநிலை வேண்டும். தூங்கி நம் தோள்மீது சாயும் குண்டு கும்பகர்ணன்கள், மொபைல் ஸ்பீக்கரில் பாட்டுப்போட்டு ஒரு பயலையும் தூங்கவிடாது செய்யும் அளப்பரை ஆறுமுகன்கள், எதிர் சீட் பிகரை வசியம் செய்ய, 221 டெசிபலில் கீச்சிடும் மைனர் குஞ்சுகள், பேருந்தையே மணக்கச் செய்யும் குவாட்டர் கோவிந்தசாமிகள், இன்னும் பிற….. எண்ணிலடங்கா. கொஞ்சம் மனம் பிசகினாலும் பயணம் கொடூரமாகிவிடும். ஒன்று அவரவர் செய்கையை ரசித்து ஒன்றிவிடவேண்டும். இல்லையேல், சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே என்ற பாடலைப் போட்டு இயர்போனைச் செருகிக்கொள்ள வேண்டும். இதே பிரச்சினைகள் ரயிலின் முன்பதிவில்லா பயணத்திலும் கிடைக்கும்.

தீபாவளி என்றால் பின்வருபவர்களைப் பற்றி சொல்லியே தீரவேண்டும்.
1. பொடிசுகள்.
30 நாட்களுக்கு முன்பாகவே கவுண்டவுன் ஆரம்பித்து, நாள் நெருங்க நெருங்க அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்து புத்தாடை கட்டி பட்டாசை வெடித்து தெருவை ரெண்டாக்குபவர்கள். ‘டார்ச்சர்’ அணுகுண்டுகள்

2. பெண்டிர்.
இவர்கள் கணக்கிற்கும் சிறுவர் கணக்கிற்கும் வித்தியாசமில்லை. ஆடை அணிகலன் என்று இளசுகளும், அடிசனலா வீட்டுக்கு ரெண்டு சாமான் என்று இல்லத்தரசிகளும் வரிந்து கட்டிக்கொண்டு இறங்கி, வணிகத்தைச் சூடுபிடிக்கச் செய்வர். தீபாவளி அன்று இந்தப்பக்கம் செல்போன், இந்தபக்கம் ரிமோட் என்று சலம்புவார்கள். ‘புத்தாடை’ புஸ்வானங்கள்

3. குடிமகன்கள்
அடடா. இவர்கள் தீபாவளிக்கு ஒரு நா அல்லது ரெண்டு நா முன்ன களத்தில் இறங்குவார்கள். மூக்கு முட்ட சரக்கு அடித்து, கடை கண்ணி ஏறி வம்பு பண்ணி, எதிரில் வரும் பிள்ளைகளிடம் சிலுமிசம் பண்ணி, தியேட்டரில் உவ்வே.. எடுத்து, இடத்திற்கு தலா ரெண்டு என்று தர்ம அடி வாங்குபவர்கள். ‘நமுத்துப்போன’ ஊசிப்பட்டாசுகள் (ஆமா தண்ணி ஊத்தினா பட்டாசு நமுத்துப் போயிடும்ல)

இவை எல்லாவற்றையும் விட இன்னொரு சமூகம் உண்டு.
சிங்கை பேருந்து நிலையத்திற்கு வெளியே, ‘நோ பார்க்கிங்’ போர்டுக்குக் கீழே வண்டியை நிறுத்திவிட்டு வந்தபோது, ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். வயது சுமார் 30 இருக்கும். அனேகமாக பேருந்து ஏற வந்திருப்பார் என்று நினைக்கிறேன். கையில் ஒரு ஒயர் கூடை. காலடியில் இரண்டு சிறுவர்கள் கண்ணீருடன். அம்மா சட்டை வாங்கித்தாம்மா என்று ஒருவன் பிடிவாதம் பிடிக்க, கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் இன்னொருவன் பார்க்க, தவித்துப்போன அந்த அம்மா சமாதானம் செய்து செய்து சாகிறாள். சிறுபிள்ளைதானே, அவனுக்கென்ன தெரியும், அவனது பிடிவாதம் அதிகரித்துக்கொண்டே செல்ல, சோளம் வாங்கித்தரவா என்கிறாள், கடலை சுண்டல் வாங்கித்தரவா என்று கொஞ்சுகிறாள்… ம்ஹூம்.

எப்படிச் சமாளித்து கூட்டிக்கொண்டு சென்றோளோ தெரியவில்லை. மனித இயல்பில் மாறாமல் நானும் கிளம்பி வந்திட்டேன் என்றாலும் இன்னும் அந்த உரையாடல் மனதை உளப்பிக்கொண்டே உள்ளது. (இதே சூழலை ‘தவமாய் தவமிருந்து’ படத்தில் ராஜ்கிரண் தந்தையாய் நடித்திருப்பார். அப்போது நண்பர்களுக்கிடையே நடந்த சம்பாஷணையில் ‘அய்யே ஓவர் செண்டிமெண்டு’ என்று ஒதுக்கித்தள்ளியவர்களும் இருந்தனர். ரெண்டு நிமிட காட்சியைக் காணமுடியாத போஷித்த வாழ்க்கைத்தரம் எங்கே.. அந்த காட்சியே வாழ்க்கையாய் உள்ள மற்றொரு வாழ்க்கைத்தரம் எங்கே.. என்னவோ போங்க).

4 thoughts on “அல்லி அல்லி தீபாவளி

  1. இயல்பான கருத்துக்கள் ….. வாழ்க்கையின் முரண்பாடுகளை நேரில் சந்திக்கும் தருணங்கள் மிக கடினமானவை.

    1. பலர் அந்த நிலையிலேயே இருக்கோம்.சமீபத்தில் ராகுல் (காந்தி) சொன்னது மாதிரி, இந்தியாவில் ரெண்டு பக்கம். ஒன்று ஒளிரும் இந்தியா. இன்னொன்று தேயும் இந்தியா. இந்த இடைவெளி அதிகரிப்பது நல்லதல்ல.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s