chennai – mahabalipuram – ECR Touring


அதிகாலை கருக்கல், ஆர்ப்பரித்து அடங்கும் கடல், அதிலிருந்து உப்பு வாசம் சுமந்து வரும் தென்றல், அத்தென்றலுக்கு தலையாட்டி பூத்தூவி வரவேற்கும் வரிசையான கொன்றை மரங்கள், அதன் அருகில் நீண்டு விரிக்கப்பட்ட நெடுஞ்சாலையில் பறக்கும் வாகனங்கள்.. இப்படி ஒரு சூழல் இருந்தால் யாருடைய மனதுதான் மகிழ்ச்சியில் ஆடாது?

அவ்வண்ணமே எனக்கும். இன்றைய  (Jun 13, 2009) அதிகாலைப் பொழுது எனக்கு அப்படித்தான் விடிந்தது. வாங்கிய வண்டியில் ஒரு நெடும்பயணம் போகவும், அதும் தன்னந்தனியே போய் ஊட்டுக்காரம்மாவின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொட்டவும், BCMtouring தளத்தில் வந்து சலம்பவும் இந்தப் பயணம் இரண்டொரு நாட்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே கூகிளாண்டவரிடம் வேண்டி வழிகளைப்
பெற்று, ஓசி போயிருந்த காமிராவை இரவோடு இரவாக திரும்ப வாங்கி, இரவெல்லாம் மனம் மகிழ்ச்சியில் கொண்டாட காலை பயணம் ஆரம்பமாயிற்று. இனி பயண விபரங்கள்.

ஆரம்பம்: கோடம்பாக்கம் பாளையம், மோட்டார் சுந்தரம் பிள்ளை அரண்மனை
முடிவு: பல்லவராசா பாளையம், மாமல்லபுரம்
செல்லும் வழி:
View Larger Map

நேரம்: அதிகாலை 04-00
அலாரம் அடிக்கிறது. கண்டுகொல்லாமல் மீண்டும் தூக்கம்.

நேரம்: அதிகாலை 04-15
அடுத்த அலாரம் அடிக்கிறது. உற்சாகம் தொற்றிக்கொள்ள காலைக்கடன்கள், சூப்பரா ஒரு குளியல், சாப்பிட ஏதுமில்லை எனவே ரெண்டு

தம்ளர் தண்ணி வயிற்றுக்குள் இறக்கப்படுகிறது.

நேரம்: அதிகாலை 04-50
வண்டியை வெளியே எடுக்கப்பட்டு முடுக்கப்படுகிறது. இஞ்சினைப் பக்குவப்படுத்தும் நேரத்தில் கொஞ்சம் வண்டி கிளினிங்.

நேரம்: அதிகாலை 04-55
கிலோமீட்டர் குறிக்கப்படுகிறது. 2027/9. வண்டி நகர்த்தப்படுகிறது.

அதிகாலை சென்னை ஏற்கனவே விழித்துவிட்டது. ஆவின் வாகனங்கள் ஆங்காங்கே நின்றிருக்கும் சப்ளையர்களிடம் பால் பைகளை வழங்கிக் கொண்டிருக்கிறன. பேப்பர் பண்டல்கள் வந்துவிட்டன. பிருந்தாவனம் சந்திப்பு அருகே நிறைய பேப்பர் சப்ளையர்கள் பண்டல்களைப் பிரித்துக் கொண்டிருக்கின்றனர். வண்டி 40, 50 கிமீ வேகத்தில் பயணிக்கிறது.

கூகிள் ஆண்டவர் தி நகர் வழியே, கோட்டூர்புரம் மார்க்கமாக வழி போட்டுக் கொடுத்தார். அவ்விடம் மேம்பாலப் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், வழக்கமான சைதை, அண்ணா பல்கலை வழியாகவே வண்டி செல்கிறது. அதிகாலையில் அண்ணா சாலையில் அதிகமான இண்டிகா, சுமோ பறக்கின்றன. உற்று நோக்கினால் அத்தனையும் கால்செண்டர் வண்டிகள். எனவே நாம் மரியாதையாக அவர்களுக்குவழிவிட்டு 60ல் செல்கிறோம்.

எட்டிப்பிடித்தால் பழைய மகாபலிபுரம் சாலை (தற்சமயம் ராஜிவ் காந்தி சாலை அல்லது ஐடி காரிடர்) வருகிறது. 70ப் பிடித்து தடையின்றி வண்டி ஓடத்துவங்குகிறது. அங்கிருந்து திருவான்மியூர் வழியாக எளிதாக கிழக்குக் கடற்கரைச் சாலையைப் பிடித்துவிடலாம். இருந்தாலும்ப.ம.சாலையில் சிறுசேரி வரை தொடர்ந்து பவர்புல் தெருவிளக்குகள் இருக்கும் என்பதால் ப.ம.சாலையிலேயே பயணத்தைத் தொடர்கிறோம்.

பரவாயில்லை 5 மணிக்கு எழுந்து நடை பயிலும் கெட்ட பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது!!!! தம்பதி சமேதராக நிறைய பேர் நடைபயில்கிறார்கள். டோ ல் பூத் தாண்டி காரப்பாக்கம் தாண்டியதும் வாகன நெரிசல் குறைகிறது. நாம் 70க்கு மேல் பயணிக்கிறோம். வெளிச்சம்இல்லாததாலும், நமது வண்டி விளக்கின் வெளிச்சம் போதாததாலும் அதற்கு மேல் நாம் வேகம் செலுத்தப் போவதில்லை. எந்த நேரத்திலும் நாய்கள், மாடுகள் அவைகளை விட மோசமான மனிதர்கள் வந்து விழுவார்களோ..

சிறுசேரி கடந்து, வரிசையான தெரு விளக்குகளும், 6 வழிச்சாலையும் முடிந்துவிட்டன, இனி விளக்குப் போடாத 4 வழிச்சாலைதான். இருந்தாலும் லேசான வெளிச்சம் இருப்பது சூரியனின் வரவைக் காட்டுகிறது. சாலை சரியில்லை. பழக்கமில்லாத சாலை வேறு. திரும்ப 60க்குப் போகிறோம்.

வண்டலூர் கேளம்பாக்கம் மாநில சாலை, ப.ம. சாலையில் இணைகிறது. அடுத்த அரை கிலோமீட்டருக்குள் நாம் இடது புறமாக திரும்ப வேண்டும். வந்தாச்சு.  மக்களிடம் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு இதுதான் வழி என்று உறுதி செய்யப்படுகிறது. இடது புறமாக திரும்ப இரு வழிச்சாலையில் பயணிக்கிறோம். இங்கிருந்து 4 கிமீ கடந்தால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இணையலாம். சென்னையிலிருந்து கிளம்பும் மாமல்லபுரம் பேருந்துகள் நேரே திருப்போரூர் வழியாக மாமல்லபுரத்தை அடைகின்றன.

இந்த சாலையும் மிக அழகாக உள்ளது. இருபுறமும் பச்சை பசேல் என்று உள்ளது. நல்ல காற்று. ஆனால் துர்நாற்றம் வீசும்படி குப்பையைக் கொட்டி வைத்திருக்கிறார்கள். முட்டுக்காடு ஊராட்சி தாண்டி, கோவளம் எல்லைக்குள் செல்கிறோம்.

நேரம்: காலை 05-39
தூரம்: 2064/3 (36 கிமீ பயணம்)

இடது புறம் ஒரு பெரிய ஏரி உள்ளதைக் காண்கிறோம். அதோடு வானமும் சிவக்க ஆரம்பித்து விட்டது. ஒரு சிறிய போட்டோ  செசன் முடிச்சிட்டு பயணத்தைத் தொடரலாம்.

From Mahabalipuram – Jun 2009
From Mahabalipuram – Jun 2009

திரும்ப பயணத்தைத் தொடங்குகிறோம். எளிதாக ECRஐப் பிடித்துவிட்டோ ம் (மேப்பில் B). அதற்கப்புறம் 60, 70, 75 என்று நமது கூட்டுகிறோம். தெற்குப் பட்டு என்ற இடத்தில் சவுக்கு தோப்பின் உள் பயணம் செய்கிறோம். அதைத் தாண்டினால் கடல் நமக்குத் துணையாக இடது பக்கம் வந்துகொண்டே இருக்கிறது.

நேரம்: காலை 05-50
தூரம்: 2070/0 (42 கிமீ பயணம்)

ஆரஞ்சு கலர் பந்து போன்ற சூரியன் கடலில் இருந்து எழுந்துவிட்டான். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு மேலும் சில படங்கள் எடுத்துக் கொள்கிறோம். மகாபலி புரத்தில் இருந்தால் கூட இந்த சூரிய உதயம் மகிழ்ச்சி அளித்திருக்காது. இந்த தனிமை உணர நன்றாக உள்ளது. என்றாலும் பெண் பிள்ளைகளை ஏற்றிச் சென்றால் இவ்விடங்களில் நிற்பது நல்லதல்ல.  அந்த சூரிய மகராசாவைப் படம் பிடித்துவிட்டு பின் தொடரலாம்.

From Mahabalipuram – Jun 2009
From Mahabalipuram – Jun 2009
From Mahabalipuram – Jun 2009

நேரம்: காலை 06-00

பயணத்தை முடித்துக் கிளம்புகிறோம். 60லிருந்து 85க்குள் வண்டி சரளமாகப் போகிறது. அதற்கு மேல் ஏற்ற மனம் ஒப்பவில்லை. எதிரில் வரும் வண்டிகள் பறக்கின்றன. நாமும் பேருந்துகள் மற்றும் சக மோட்டார்சைக்கிள்களை ஓரம்கட்டிப் போகின்றோம். நமக்கும் எத்தன்களாக 3 பேர் நமக்கு முன் பறக்கிறார்கள்.

இடது புறம் மகாபலிபுரம் ஒற்றைச் சாலை பிரிகின்றது.

நேரம்: காலை 06-10
தூரம்: 2086/4 (57 கிமீ பயணம்)

அருச்சுனன் தபசு அடைகிறோம். ஒரு சிறிய நியாபகார்த்த போட்டோ  செசன் நடக்கிறது. பேருந்து நிலையம் அருகே ஒரு தேனீர் துணையுடன் நண்பர்களிடம் மொக்கை போடப்படுகிறது.

The Evolution of movement :)From Mahabalipuram – Jun 2009

நேரம்: காலை 06:37

சென்னை பயணம் தொடங்குகிறது. கி.க.சாலை அடைந்தவுடன் வண்டி துரிதமாக ஓடுகிறது. கேளம்பாக்கம் சிறுசேரி சாலை சரியில்லாத காரணத்தால் கி.க. சாலையிலேயே பயணத்தை தொடர்கிறோம். தற்சமயம் 90க்கு மேல் ஏற்ற முடிகிறது. இருப்பினும் நீலாங்கரை, திருவான்மியூர் டிராபிக்கிற்கு பயந்து டோல் பூத் தாண்டியதும் இடது புறம் திரும்பி சோழிங்கநல்லூரில் திரும்ப பழைய மகாபலிபுரம் சாலையைப் பிடிக்கிறோம்.

வரும்போது மாதிரி இல்லை. வண்டி 60 70க்குமேல் செல்லவில்லை. டிராபிக் சிகப்பு விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன. ஆங்காங்கே நின்று செல்கிறோம்

நேரம்: காலை 07:38
தூரம்: 2144/4 (58 கிமீ பயணம்)

கோடம்பாக்கம் அரண்மனை லாயத்தில் வண்டி நிறுத்தப்படுகிறது..

டூரிங் இலக்கணப்படி,
இருவழி : 115 கிமீ
அதிகப்படியான வேகம் : 109 kmph (கிளாடியேட்டர் எஸ்எஸ் 125)

6 thoughts on “chennai – mahabalipuram – ECR Touring

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s