பனியின் ஊடே பயணம் செய்வது எவ்வளவு சுகமானது. அதுவும் சாலையின் இருபுறங்களிலும் பச்சைப்பசேல் வயல்வெளிகளும், தோப்புகளும் இருந்தால் சொல்லவா வேண்டும். இன்றைய காலைப் பொழுது அவ்வாறுதான் விடிந்தது. எங்காவது வெளியே போனா நல்லா இருக்கும் என்று நேற்று இரவு தோன்றியது. பேரூர் மருதமலை கோவை குற்றாலம் என்று யோசித்து கடைசியில் மலம்புழாவில் முடிந்தது.
காலை மணி 5-30 அடிக்கும் அலாரம் அமர்த்திவிட்டு திரும்ப தூக்கம். 5-45 அடுத்த அலாரம் (நம்ப பத்திதான் தெரியுமே. அதான் 3 அலாரம் டெய்லி!) அவசரமா பல்லு தேய்ச்சி, குளிச்சி, 6-30க்குக் கிளம்பியாச்சு.
மணி – காலை 6-35
மலைநாடு பற்றிய எதிர்பார்ப்புகளுடன் வண்டி நகர்த்தப் படுகிறது. சந்து பொந்து என்று நுழைந்து கோவை பைபாஸ் சாலையைப் பிடிக்கிறோம். கோவை பைபாஸ் சாலையைப் பற்றி ஒரு பதிவே போடலாம். ரயில் பாதை மாதிரி நேரே விரிந்து கிடக்கும் இந்த சாலையில் 100க்கு அதிகமான வேகத்தில் வாகனங்கள் பறக்கின்றன!
From Malampuzha Nov 2009 |
From Malampuzha Nov 2009 |
காலை பனி இன்னும் விலகவில்லை. இடம் பழக்கம் இல்லாததால் 50 60க்குள் பயணிக்கிறோம். அத்தோடு வேகத்தைக் கூட்டினால் எந்த ஒரு இடத்தையும் ரசிக்க முடியறதில்ல. அதிக போக்குவரத்து இல்லாததால் விரைவில் பைபாஸ் சாலையை முடித்து பாலக்காடு சாலையில் நுழைகிறோம். இது வரை வந்த சாலையை விட இது அகலம் கம்மி, ஆனால் போக்குவரத்து அதிகம். லாரிகள் அதில் பெரும்பங்கு.
மணி – 7-30
இந்த சாலையின் வலது புறம் மேற்குத் தொடர்ச்சி மலை தொடர்ந்து வரக் காண்கிறோம். ஆனால் அவற்றைப் பார்க்க முடியாமல், அனைத்தும் மேகத்தால் மூடிப்பட்டிருக்கிறது. ஓரிடத்தில் இறங்கி சில படங்கள் எடுத்துகிறோம். பிறகு பயணம் மீண்டும் தொடங்குகிறது. கேரளா கர்நாடகா, தமிழ்நாடு என்று தென் மாநில நம்பர் பிளேட்டுகள் தொங்க வாகனங்கள் பறக்கின்றன.
From Malampuzha Nov 2009 |
From Malampuzha Nov 2009 |
மணி – 7-40
வாளையார் வந்து சேர்கிறோம். அதன் பெரிய நீர்ப்பரப்பு சென்ற முறை பார்த்தேன். அதை கொஞ்சம் படம் பிடித்துக் கொள்ள என்று வண்டியை ஓரத்தில் நிப்பாட்டிவிட்டு புல் மேட்டில் கால் வைக்கிறோம். ஈரொடு அடிகளில் கால் முழுக்க ஈரமாகிறது. அவ்வளவும் பனியில் நனைந்த புல் பூண்டுகளின் வேலை! குருவி கொக்கு வண்ணத்துப் பூச்சி என்று இந்த இடம் மனிதரால் கெடாமல் இருக்கிறது. தற்போது வெயில் இல்லாவிட்டாலும் கொஞ்சம் வெளிச்சம் வந்திருக்கிறது. மலைகளில் அழகான தோற்றத்தைக் காணமுடிகிறது.
From Malampuzha Nov 2009 |
From Malampuzha Nov 2009 |
மணி – 7-50
வாளையார் பாலம் வந்து சேர்கிறோம். கேரள நுழைவாயிலை படம் எடுத்த பின் மீண்டும் கிளம்புகிறோம். கேரளா மற்றும் தமிழ்நாடு செக்போஸ்ட் அதிகாரிகள் செய்யும் அலம்பல்கள் கொஞ்ச நெஞ்சமல்ல. அவர்களின் கைங்கரியத்தால் பல கிலோமீட்டர் நீளத்திற்கு லாரிகள் காத்துக் கிடக்கின்றன. இரட்டைச்சாலையில் ஒற்றைச்சாலை முற்றிலும் லாரிகள் நிரம்பி வழிய மூடப்பட்டிருக்கிறது. இரண்டாவது சாலையிலும் அடுத்த வரிசை தொடங்கிவிட்டது. அப்படி இப்படி என்று வளைத்து வளைத்து லாரிகளிடம் இருந்து தப்பி கேரளப் பகுதியில் செல்கிறோம். வேகம் அதிகமில்லை என்பதால் பராக்கு பார்த்தபடி ஓட்டமுடிகிறது.
From Malampuzha Nov 2009 |
பள்ளிக் குழந்தைகள், கல்லூரி இளசுகள், அலுவலகசாரிகள் என்று ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நாலைந்து பேர் நிற்பதைப் பார்க்கிறோம். தமிழ்நாடு சாலை மாதிரி இல்லை. சிறு சிறு இடைவெளியில் சிறு சிறு ஊர்கள் நிறைய வருகின்றன. கேரள தனியார் பேருந்துகள் எம தர்ம ராசாவின் தூதுவர்கள். விர்ர்ரென விரட்டி சடக் என பிரேக் போடுவார்கள். ஏதும் விபத்தோ என்று பார்த்தால் பஸ்ஸ்டாப்பில நிக்கத்தான் அப்பிடி பிரேக் போட்டுருப்பார் மகராசன்!
பாலக்காடு 9 கிமீ என்று போர்டு தெரிகிறது. அனேகமாக மலம்புழா சாலையைத் தவறவிட்டுவிட்டோம் என்று எண்ணுகிறோம். சற்று தொலைவில் பொள்ளாச்சி சாலை வந்து சேர்கிறது. சூப்பர். வழி தவறியாச்சு. கூகிள் மேப்பில் பார்க்கும்போது பொள்ளாச்சி சந்திப்பிற்கு முன்னதாகவே ஓரிடத்தில் சாலை பிரிந்தது. ஆனால் என்ன இடம் என்று பெயர் இல்லை. ஜிலேபிய பிச்சிப் போட்டது மாதிரி ஏதாவது எழுகி வெச்சிருப்பாங்க. மிஸ் பண்ணியிருப்போம். புதுசேரி என்று ஓரிடம் வருகிறது. அங்கே ஒரு சாயா! டீ மாஸ்டர் ஏதோ மலையாளத்தில் பறைகிறார். திரும்ப கேட்கையில் களிக்க… என்று கேக்க… ஓஓ.. ஏதும் சாப்பிடுறியான்னு கேக்கிறார். உள்ள பாக்கயில ஆப்பம், இட்லி என்று ஐட்டங்கள்.. இல்ல வேண்டாம்… ஒரு கிளாஸ் நிறைய டீ கிடைக்கிறது.
முடிச்சிட்டு பாலக்காடு நோக்கி பயணம் செல்கிறோம். பாலக்காடு பைபாஸ்-ல் இருந்து மலம்புழாவிற்கு ஒரு ரோடு பிரியும். அந்த சவடால் நம்பிக்கையில் பழைய பாதையை நாம் தேடாமல் பயணிக்கிறோம்.
மணி 8-36
பாலக்காடு – கோழிக்கோடு சாலையில் இருந்து மலம்புழாவிற்குப் பிரிகிறோம். இங்கிருந்து 8 கிமீ தூரம்தான். போயிடலாம். அசுவாசப்படுத்திக்கொண்டு பயணத்தைத் தொடர்கிறோம்.
From Malampuzha Nov 2009 |
வழியில் ஒரு தரைப்பாலம் தென்படுகிறது. இறங்கி சில படங்கள் எடுத்தபின் தொடர்கிறோம். வழியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடப்பதால் டேக் டைவர்சன்….. இது சிங்கிள் ரோடு. ஏதோ காரைக்குடி டைப்பில் சந்து பொந்து என்று 90 டிகிரியில் வளைந்து வளைந்து செல்கிறது. டைவர்சன் ரோடு பக்கத்து இணை ரோடான ஒலவக்கோடு – மலம்புழா சாலையில் சென்று அடைகிறது. இந்த ரோடு நல்ல கண்டிசனில் உள்ளது. டிபிகல் கேரளா ரோடு, ஒரு மே….டு அப்புறம் ஒரு பள்ள்ள்ள்…ளம்..
From Malampuzha Nov 2009 |
From Malampuzha Nov 2009 |
From Malampuzha Nov 2009 |
காலை 9-00
மலம்புழா சென்றடைகிறோம். பார்க்கிங் நைனாவுக்கு நாமதான் மொத போனி. 5 ரூபாய் கட்டணம். அத்தோடு நுழைவுக் கட்டணம் 10 ரூபாய். அணைக்கு செல்லும் பாதையில் நடக்கிறோம். மேலே ரோப் கார்கள் ஆங்காங்கே நங்கூரமிட்டு (!!) நிற்கின்றன.
From Malampuzha Nov 2009 |
From Malampuzha Nov 2009 |
தேக்கடி துயர சம்பவத்தின் காரணமாக படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வேறு யாரும் படகில் செல்வதும் சட்ட விரோதம் என்று அறிவிப்பு பதாகைகள் தொங்குகின்றன.
From Malampuzha Nov 2009 |
அணையின் மேற்பரப்பில் அழகை ரசித்தவாறும் படம் பிடித்தவாறும் செல்கிறோம். அணை நிறைய தண்ணீர் உள்ளது. எனினும் சிறிய மதகுகளிலிருந்து மட்டுமே சிறிதளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
From Malampuzha Nov 2009 |
From Malampuzha Nov 2009 |
காலை 10-10
மிஸன் கம்ப்ளீட்டட். போலாம் ரைட்!
From Malampuzha Nov 2009 |
இந்த முறை பாலக்காடு செல்லாமல் நேரே கோவை சாலையில் செல்கிறோம். கஞ்சிக்கோடு என்ற இடத்தில் இந்த ரோடு தேசீய நெடுஞ்சாலையில் சேர்கிறது. இதைத்தான் வரும்போது தவறவிட்டோம். இந்த ரோடு வயல், காடு அடர்ந்த கானகம் வழியே செல்கிறது. நாம் தவறவிட்டதில் தவறில்லை. ஏன்னா, அந்த இடத்தில் ஒரு கைகாட்டி மரம் கூட இல்லை.
From Malampuzha Nov 2009 |
காலை 11-00
திரும்ப வந்த வழியே திரும்பி வந்து மழையில் நனைந்தவாறே கோவையை அடைகிறோம்.
டூரிங் இலக்கணப்படி,
இருவழி : 130 கிமீ
அதிகப்படியான வேகம் : 75 kmph (கிளாடியேட்டர் எஸ்எஸ் 125)
\ஜிலேபிய பிச்சிப் போட்டது மாதிரி ஏதாவது எழுகி வெச்சிருப்பாங்க. மிஸ் பண்ணியிருப்போம். \
சரியாச் சொன்னீங்க
பயண அனுபவம் அருமை
வாழ்த்துக்கள்
கடைசி வரைஅங்க போர்டு ஏதும் வைக்கலைங்க. அதனாலதான் மிஸ் பண்ணிட்டேன்!அடுத்த முறை சரியா போய் சேரனும்.
வருகைக்கும் பதிலுக்கும் மிக்க நன்றி தெய்வம்!
நல்ல அனுபவப் பகிர்வு. பயன்படுத்திய பைக் விவரம்?
நன்றி வாய்ஸ், பைக் விபரத்தைப் பதிவில் சேர்த்திருக்கிறேன். வருகைக்கு நன்றி.
மிக அருமை ……. வாசிக்கும் போது கூடவே பயணித்தது போல் இருந்தது .