தங்க நாற்கரக் கொலைகள்


முன்பெல்லாம் செய்திகளில் சிலசமயங்களில் சாலை விபத்துகள் பற்றிப் படிப்போம் அல்லது கேட்போம். இப்போது படிக்கின்ற அல்லது பார்க்கின்ற செய்தியின் தொனியே தனி.

“”தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்ற சாலை விபத்துகளில் மொத்தம் 15 பேர் பலி. 40 பேர் காயம்…” இந்த ரீதியில்தான் விபத்துகளைப்பற்றிய செய்திகள் வருகின்றன.

விபத்துகளில் ஓரிருவர்தான் பலி என்றால் அது ஒரு செய்தியாகவே எடுபடுவதில்லை. நொறுங்கிக் கிடக்கும் இருசக்கர வாகனங்களும், கார்களும், மூளியாகிப்போன பேருந்துகளும், உடல் சிதறிய மனித உருவங்களும், ரத்தக்குளங்களும் அன்றாடச் செய்தியாகிவிட்ட நிலையில் நம் மனசெல்லாம் மரத்துப்போய் ரொம்ப நாளாகிவிட்டது.

ஏதோ நமக்கு வேண்டப்பட்டவர்கள் யாராவது இத்தகைய விபத்தில் பாதிக்கப்பட்டாலோ, இறந்தாலோ மட்டுமே ஒரு சிறு அனுதாபமேனும் பிறக்கிறது.

பத்து பேராவது பலியாகாத விபத்தும் ஒரு விபத்தா என்று சலித்துக் கொள்ளும் அளவுக்குத் தோல் தடித்துப் போய்விட்டது நமக்கு.

சாலைகள் என்றால் வாகனங்கள் இரண்டுபுறமும் போய்வரத்தான் செய்யும். அவற்றில் ஒன்றிரண்டு மோதிக் கொள்ளத்தான் செய்யும்.

ஆனால், இப்படிக் கொத்துக்கொத்தாக மனித உயிர்கள் பறிபோகும் அன்றாட நிகழ்வுகளை என்னவென்று சொல்ல? அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கான காரணங்களை இவ்வாறு பட்டியலிடலாம்.

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் சுற்றுலாப் பெருக்கத்தின் அடையாளமாகவும், சரக்குகள் மற்றும் மனிதர்கள் சாலை வழியே எவ்வளவு தூரத்தையும் கடக்க வசதியாகவும் இருப்பவைதான் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள்.

நாட்டின் தொழில் வளர்ச்சியையே குறிக்கோளாகக் கொண்டு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் போடப்பட்டு வந்த தங்க நாற்கரச் சாலைகள் அமைக்கப்பட்டபின்புதான் இவ்வளவு அதிகமாகச் சாலை விபத்துகள் நடக்கின்றன என்பதை உணர்வதற்குப் புள்ளிவிவரப் பட்டியல் தேவையில்லை.

வழவழப்பான ரேஸ்கோர்ஸ் போன்ற சாலை, அவற்றின் அகலம் இவையெல்லாம் சாதாரணமாகக் குறைந்த வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளைக்கூட விரைவாக ஓட்ட வைக்கின்றன என்பது மிக முக்கியமான காரணம்.

ஈசிஆர் போன்ற சாலைகளின் விபத்து விகிதம் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

சர்வசாதாரணமாக 80 கி.மீ. வேகத்தில் இரு சக்கர வாகனத்தில் விரையும் இளைஞர்கள் எத்தனை பேர்? 100 கி.மீ. வேகத்தில் பறக்கும் காரோட்டிகள் எத்தனை பேர்?

இவர்களுக்குச் சமமாக விரைவாக வண்டியோட்டும் சரக்குலாரி ஓட்டிகளும், பேருந்து ஓட்டுநர்களும் எத்தனை விபத்துகளுக்குக் காரணமாகிறார்கள்.

“ஓவர்டேக்’ என்ற ஒரே ஆசையினால் விளையும் உயிர்ச்சேதம்தான் எத்தனை…?’

நகரங்களின் சிக்னல்கள் காட்டும் சிவப்பு மறைந்து பச்சை தெரிவதற்குள் பரபரக்கும் வாகன ஓட்டிகள், நீண்ட நெடுஞ்சாலைகளில் ராக்கெட் விடாமல் என்னதான் செய்வார்கள்.

இந்தியா மக்கள்தொகை மிகுந்த தேசம்தான். ஆனால்-

அந்த மக்களின் எண்ணிக்கை வளமே இந்தத் தேசத்துக்கு ஒரு சொத்து போன்றதாகும். மனிதவளம் என்று பொருளாதாரத்தில் போற்றப்படும் எண்ணற்ற மனித உயிர்கள், வேறு எவ்விதக் காரணமும் இன்றி வெறும் வேக விளையாட்டில் பறிபோவது என்பது எத்தனை கொடுமையான விஷயம்.

மனித உயிர்களின் இழப்பு என்பது ஒருவகையில் இந்த தேசத்தின் பொருளாதாரத்தின் வீழ்ச்சி என்றே சொல்லலாம்.

எத்தனை திறமையாளர்களின் உயிர்களை இந்தச் சாலை விபத்துகள் பறிக்கின்றன?

எத்தனை விஞ்ஞானிகள், உழைப்பாளிகள், பட்டாளிகளின் உயிர்களை விபத்துகள் பலியிடுகின்றன?

இதுவெல்லாம் வெறும் தலையெழுத்து என்று விட்டுவிடக்கூடாது.

சாலை விபத்துகளை நம்மால் தவிர்க்க இயலும். நெடுஞ்சாலை போக்குவரத்துக் கண்காணிப்பை அதிகரிப்பது, பல்வேறு வாகனங்களின் வேகத்தை மணிக்கு 40 கி.மீ. முதல் 70 கி.மீ. வரை மட்டுமே இருக்க வேண்டும் என்று வரம்பு விதிப்பது என்ற வகையில் அரசாங்கங்கள் செயல்படலாம்.

பொதுமக்களும் தங்களது அதிவேக ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு விபத்துகளைத் தவிர்க்கலாம். நமது தங்கநாற்கரக் கொலைச் சாலைகளும் சிவப்பு வண்ணம் பூசிக்கொள்ளாமல் இருக்கலாம். நம்மால் முடியும். மனம்தான் வேண்டும்.

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=240972&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

2 thoughts on “தங்க நாற்கரக் கொலைகள்

  1. விபத்துக்களை தவிர்க்கும் வழிகளைப்பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன்?

    1. அன்பின் திரு கந்தசாமி அவர்களே.
      நிறைய பதிவுகள் இருக்கின்றன. ஒரு முறை எழுதவேண்டும். வருகைக்கும் பதிலுரைக்கும் மிக்க நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s