அதிவேக பயணத்தால் “கொத்துக்கொத்தாக’ உயிர்கள் மடியும் அவலம்


நான்கு வழிச்சாலையில், அதிவேக பயணம் மற்றும் தவறான பாதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வதால், கொத்துக் கொத்தாக உயிரிழப்பு ஏற்படுகிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களையும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் கொண்ட பகுதியாக, விழுப்புரம் மாவட்டம் உள்ளது. நீண்ட தூரம் நெடுஞ்சாலை உள்ள இப்பகுதியில் ஆண்டுதோறும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் முதல் ராமநத்தம் வரை விபத்துகள் அதிகம் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நான்கு வழிச்சாலையில் 80 முதல் 100 கி.மீ., வேகத்திற்குள்ளாகவே, வாகனங்களை ஓட்ட வேண்டும். ஆனால், 120 முதல் 140 கி.மீ., வேகம் வரை செல்வதால், எதிரில் கால்நடைகள் வந்தால் கூட பிரேக் பிடிக்கும் போது சிறிய கார், சுமோ மற்றும் டாடா ஏஸ் போன்ற வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுகிறது.

மதுரை, நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் இருந்து இரவில் புறப்பட்டு சென்னைக்கு நெடுந்தூரம் பயணம் மேற்கொள்பவர்கள், வந்த வேலை முடிந்து மீண்டும் அன்று இரவே புறப்படுகின்றனர். இதனால் நாள் முழுக்க தூக்கம் இல்லாமல் வாகனம் ஓட்டி வரும் டிரைவர், கால் நீட்டி நிம்மதியாக தூங்க முடிவதில்லை. அப்படியே ஒரு நாள் தங்கினாலும் டிரைவருக்கு என்று தனியாக ரூம் எடுத்து கொடுப்பதில்லை. இதனால், சீட்டில் உட்கார்ந்த படியே தூங்கிவிட்டு, மீண்டும் வாகனத்தை ஓட்டும் போது, சோர்வு காரணமாக விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். முதல் முறையாக கார் வாங்குபவர்கள், நான்கு வழிச்சாலை விசாலமாக இருப்பதை பார்த்து, பரவசமடைந்து அதிவேகமாக செல்ல முற்படுகின்றனர். சிறிய ரக காரில் 120 முதல் 140 கிலோ மீட்டர் வரை அதிவேகமாக பறக்கின்றனர். 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பெரிய கார் வாங்குவோர், டிரைவிங் செய்வதில் நன்கு தேர்ந்தவர்களாக இருப்பதால் விபத்தில் சிக்குவது அரிதாக உள்ளது. வாகனங்களை முறையாக பராமரிக்காமல் தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்டுவதும் விபத்துக்கு காரணமாகிவிடுகிறது. உதாரணத்திற்கு 5,000 கிலோ மீட்டர் ஓடினால், அதன் பின் சர்வீஸ் செய்ய வேண்டும். அதுபோல் செய்யாமல், ஹெட் லைட், வைப்பர் போன்றவை இயங்காமல் விபத்தில் சிக்குகின்றனர்.

உள்ளூர்வாசிகள் வேன், இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது, முறையாக போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து, “யூடேர்ன்’ செய்வதில்லை. மாறாக, அவ்வளவு தூரம் சுற்றி வரவேண்டுமே என்று சோம்பல் பட்டு, இடது புறமாக வந்து கொண்டிருக்கும் வாகனங்களை நோக்கி எதிர் திசையில், போக்குவரத்து விதிகளை மீறி தவறான பாதையில் செல்லும் போது விபத்தில் சிக்கி, “கொத்துக் கொத்தாக’ இறக்கின்றனர். உதாரணமாக, செஞ்சி அருகே லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் எட்டு பேர் இறந்துள்ளனர். சமீபத்தில் முண்டியம்பாக்கம் அருகே குறுக்கே வந்த கரும்பு லாரியில் மோதி காரில் சென்ற இருவர் இறந்தனர். இதற்கு காரணம், காரை ஓட்டி வந்தவர் மொபைலில் பேசிக்கொண்டே 140 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது தான். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய சென்றவர்கள், இறந்தவரின் அருகில் கிடந்த மொபைல் போனை எடுத்துள்ளனர். அப்போது மொபைல் போன், “கட்’ ஆகாமல் “ஆனில்’ இருந்தது. எதிர் முனையில் பேசியவர், “என்ன நடந்தது?’ என்று கேட்டுள்ளார்.

குடிபோதையில் வாகனங்களை ஓட்டும் போதும், வாகனங்கள் பழுது ஏற்படும் போதும், ஓரமாக நிறுத்தாமல் ரோட்டிலேயே நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. நான்கு வழிச்சாலை, போக்குவரத்திற்கு தரமானதாக உள்ளது. இச்சாலையில் வாகனங்களில் பயணிப்போர் மிதமான வேகத்தில், போக்குவரத்து விதிமுறைகளை அலட்சியம் காட்டாமல் கடைபிடித்தால் சிறிய அளவிலான விபத்துகள் கூட நடக்க வாய்ப்பிருக்காது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

DINAMALAR / 17-06-2010

விதிகளை மீறி தான் பாதிக்கப்பட்டால் அந்த நபர் அனுபவிக்கட்டும். மற்றவரை பாதிக்கவிட்டால் அவருக்கு ஏன் அந்த இடத்திலேயே கசையடி வழங்கக்கூடாது???

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s