வீடு விட்டு வேறு இடம் எதையும் விரும்பாத வீட்டுப்புழுக்களில் நானும் ஒருவன். விதி வேறு மாதிரி விளையாடி பணி பணம் என்று தற்சமயம் சென்னையில் ஜாகை கொண்டாலும் சொந்த இடம் தேடிப்போகும் நாளுக்காக ஒவ்வொரு மணித்துளியும் காத்திருப்பவன். அதில் தவறு இல்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சக நண்பர்களுக்கும் அந்த நினைப்புகள் இருந்தவண்ணம் இருக்கின்றன என்பதே உண்மை.
கொசுவத்தி சுத்துவது இருக்கட்டும். இந்தப் பழமை பதிவு திருவரங்கம் பற்றியது. கொஞ்சம் 18 வருடங்கள் பின்னால் செல்லலாம். பழங்கதைன்னா சுருள் போடனும்ல.
9ஆம் வகுப்பில் அது ஒரு குளிர்கால டிசம்பர் மாதம். பள்ளியின் தேசீய மாணாக்கர் படையில் ஒரு முகாம் வாய்ப்பு வந்தது. அது போன்ற வாய்ப்பினை முன்னர் அதிகம் இழந்திருந்தேன். பெரும்பாலும் சீனியர்கள் அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள். மாணாக்கர் படையின் இரண்டு ஆண்டு கால முடியும் தருணம் அது. எனவே இந்த வாய்ப்பையும் இழந்தால் பிரிதொரு வாய்ப்பு என்பது அமையப் போவதில்லை. அரையாண்டில் நான்காவது நாள் பரிட்சை நடந்து கொண்டிருந்தது. மாணாக்கர் படையினர் மாலையில் அலுவலகம் வருமாறு அறிவிப்பு செய்யப்பட்டது.
ஏனைய பள்ளிகளில் மாணாக்கர் படை ஏனோதானோ என்று இருந்தாலும் எங்கள் படை சற்று பொறுப்புடன் இருந்தது என்று சொல்லவேண்டும். நாங்கள் செய்த சாதனைகளில் சில…
அரசுப்பள்ளி மாணவர்கள் தானே. காலணி பூட்சு என்பது நாங்கள் அணிவதே இல்லை. விளையாட்டில் அக்கரையாய் மெனக்கெடும் மாணவர்கள் தவிற யாரும் ஷூவை சீந்தியதாக நினைவில்லை. அப்படி இருக்க எங்கள் காலுக்குப் பொறுந்தாத ஷூ, முட்டிக்கால் வரை தொங்கும் சாயம் போன சீருடை என்று மாணாக்கர் படையின் காமெடிகள் நிறைய. இரண்டாம் வருடம் கிடைத்த டிசி துணிகளைப் பெற ஒரு போட்டா போட்டியே நடந்தது.
அந்த ஷூவைப் பற்றி ஒரு தனிப் பதிவே போடலாம். அதன் பராக்கிரமங்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் மட்டும் இங்கே.
என்னை ஒத்த மாணவர்களின் கால் அளவு என்னவோ 6. தரப்படும் ஷூவின் அளவோ 8 அல்லது 9.. என்ன செய்வது? நுனிப் பகுதியில் கொஞ்சம் துணி வைத்து அடைத்துப் போட்டால்தான் கால் அதன் உள்ளே நிற்கும். எனக்குக் கொடுத்த ஷூவிற்குள் என் அப்பாவின் பனியனையே உள்ளே நுழைக்கலாம். அவ்வளோ பெரிசு!
அதையும் லெப்ட் ரைட் மாற்றிப் போட்டு விட்டு பப்ளிக்கா நடந்து போகையில் ‘டேய் தம்பிகளா. ஷூ தப்பா போட்ருக்கியடா’ என்று தெருவில் சொல்பவர்கள் உண்டு!
எதற்கும் கலங்காமல் தெருவோர பைப்படியில் மாற்றிவிட்டு (பேலன்சுக்கு பிடிச்சிக்க ஏதாவது வேணும்ல!) பொது ஊர்வலம், தீபாவளி பந்தோபஸ்து, மாணாக்கர் படை மேலதிகாரிகள் வரும்போது பேரேடு என்று அனைத்திலும் கலங்கடிக்கும் மார்ச் பாஸ்ட் போடுவதில் எங்களுக்கு இணை யாரும் இருக்க முடியாது. முட்டுக்குடுத்த துணி பத்தாமல் லெப்ட் ரைட் போடும்போது சில பையன்களின் ஷூ காற்றில் பறக்கும் என்றாலும் அவன் போட்டுக்கொண்டு வரும்வரை அந்த இடத்தை வெற்றிடமாகவே வைத்திருக்கும் ஒரு டீஜண்டான பசங்க நாங்க!
அத்தோடு முன்னால் நடப்பவனின் கால்களை மிதிப்பது, “டேய் சவட்டைக் காலு” என்று வெறுப்பேத்தி சேவை சாதிப்பது (அலுவலர் கவனிக்காத நேரத்தில்தான். அந்த ஆளு கண்ணில பட்டா அப்புறம் கிரவுண்ட சுத்தச் சொல்லுவாரு)
என்ன இருந்தாலும் மாணாக்கர் படைக்குக் கிடைக்கிற மவுசும் பந்தோபஸ்தும் தனிதான். அதற்காகவே எந்த ஒரு பேரேடுக்கும் தவறாமல் செல்வதுண்டு.
அப்படி இருப்பின் எங்களால் செயற்கரிய காரியங்களும் அவ்வப்போது நடைபெறத்தான் செய்தது.
புதுகை வெள்ளாற்றங்கரையோரம் இருந்த ஒரு துப்பாக்கி சுடும் தளம்தான் பிரதான பயிற்சி இடம். நாங்கள் படையில் சேர்ந்த அதிர்ச்சியோ என்னவோ. அந்த தளம் இடிந்து விழ, துப்பாக்கி பயிற்சி என்பதே முதல் வருடத்தில் எங்களுக்குக் கானல் நீராயிற்று! விடுவதாய் இல்லை என்று மாணாக்கர் படை அலுவலர் எங்களுடன் சேர புதிய துப்பாக்கி சுடும் தளத்தை பள்ளிக்கு சற்று தொலைவில் காடுகள் நிறைந்த பிரதேசத்தில் அமைத்தோம். அது ஒரு நல்ல அனுபவம். 8 மற்றும் 9ஆம் நிலையில் இருந்த சிறார்கள் ஈர செம்மண் மூட்டைகளைத் தூக்கி வந்து ஒரு மண்மேடு அமைத்த நாள் அது. பக்கத்தில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அப்பொழுது கட்டிக் கொண்டு இருந்தார்கள் என்று நினைக்கிறேன். கான் பறித்த மணல் இவ்விடம் துப்பாக்கி சுடும் மேடு ஆயிற்று. இவனுகளே firing range செஞ்சுட்டானுக என்று எங்கள் அலுவலர் பெறுமை பொங்க சொல்லிக்கொண்டு இருந்தார்
அத்தி பூத்தாற்போல வரும் வெளியூர் முகாம்களிலும் சக மாணவர்கள் திறமைகளைக் காட்டி பட்டாசு கிளப்பினார்கள். பொதுவாக நாங்க கொஞ்சம் சரியாவே சுடுவோம்.
ஒரு இனிய அதிகாலையில் புதிய தளத்தில் அதிகாரிகள் புடை சூழ “புதுத் தளப் புகுவிழா”வானது முதல் துப்பாக்கிப் பயிற்சியுடன் தொங்கியது. துப்பாக்கி குண்டுகளை மேலதிகாரிகளிடம் இருந்து பெற்று அதற்கென்று உள்ள சரணங்களை எல்லாம் பாடி முடித்து ‘கன் கிளியர் சார்’2 சிக்னல் கொடுத்தால் சோலி முடிந்தது. வந்தது வந்திட்டாங்க. நீங்களும் சுட்டுப் பழகுங்க என்று எங்கள் பள்ளி வாத்தியார்களும் சிலர் சுடுவதற்கு வாய்ப்பு பெற்றார்கள். புலிகேசி கரடிக்கு அம்புவிட்டது போல் அது ஒரு காமெடிப் பட்டாசு. ஒவ்வொரு குண்டும் ஊய்ய்ய் என்று கத்திக்கொண்டு வானத்தில் பறந்ததே தவிற ஒன்றும் இலக்கைத் தாக்கியதாக தெரியலை. நம்மைக் கலங்கடிக்கும் வாத்தியார் நம் முன்னிலேயே கலங்கினால் பசங்க மனசும் ஊய்ய்ய் என்று விசிலடிக்கத்தானே செய்யும்?
என்னசார் இப்டி சுடுறீங்க. முன்ன ஒரு U இருக்கும் சார். பின்னாடி ஒரு I இருக்கும் சார். ரெண்டையும் சேத்தா ஒரு நாமம் வரும். அந்த நாமத்தை வெச்சு சுடவேண்டியதுதான் சார் (உபயம் – முந்திய நாள் நடந்த பயிற்சி வகுப்பு) வாத்தியாருக்கு ஒப்பித்து, அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையாக்களாக காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதற்கும் நாங்கள் தயங்கவில்லை!
இப்படியாகிய சூழலில் அடுத்த முகாம் அறிவிப்பு வந்தது.
இடம் திருவரங்கம்
நாள் 30 (என்று நினைக்கிறேன்)
பையன்கள் படிப்புக் காலம் அத்துடன் பொங்கல் விழாவும் கட் ஆகும் என்பதால் அலுவலர் சற்று எச்சரிக்கையுடனே மாணவர்களைத் தேர்ந்தெடுத்தார். தேர்வுதானே அது போனால் போகிறது. அத்துடன் தேர்வை எழுதாதிருக்க டியூசனைக் கட் அடிக்க இது அல்லாது பெரிய காரணம் வேண்டுமா என்ன? சில மாணவர்கள் வீடுகளில் திட்டுவார்கள் என்று பயந்தார்கள். எனவே இருக்கும் இடத்தில் ஒட்டிக்கொண்டு, மாலையே வீட்டில் வந்து காரணம் தெரிவித்து (இது போன்ற காரணங்களுக்கு வீட்டில் மறுக்கமாட்டார்கள் என்று நமக்கும் தெரியுமே!) அடுத்த நாள் 11 மணிக்கு புதுகை பேருந்து நிலையத்தில் அனைவரும் ஆஜர்.
பையன்களைக் கூட்டி வந்த பெற்றோருக்கு செம டோஸ். விட்டது யாரு. நம்ப பயிற்சி அலுவலர் பருத்திவீரன்தான்!
இந்த ட்ரெயினிங் அனுப்பறதே தனியா பசங்க அவனுகள மேனேஜ் பண்ணிக்கனும்னுதான். என்னவோ இதுக்கும் கூடவே வந்திட்டு இருந்தா அவன் எப்பிடிதான் வெளி உலகத்தைத் தெரிஞ்சிக்குவான் என்று ரோட்டில் வைத்து அவர் சர வெடி வெடிக்க.. பெற்றொர்கள் அசடு வழிந்து கொண்டு வெளியேறினார்கள். கடைசியில் யாதொரு பெற்றொரும் பேருந்து நிலையத்தினுள் வரவில்லை.
புதுக்கோட்டை டு திருச்சி; திருச்சி டு திருவரங்கம் என்று எங்கள் புண்ணிய யாத்திரை ஆரம்பமாயிற்று. திருவரங்கம் பேருந்து திடீரென ராணுவத்தினரால் வழி மறிக்கப்பட என்னவோ ஏதோஎன்று அனைவரும் சுவாரசியமாக வேடிக்கை பார்க்க.. நாங்களும் அவ்வண்ணமே பிராக் பார்க்க.. இந்தியில் ஏதோ கமாண்டு வந்தது. கடைசியில் ‘பாய்ஸ் கெட் டவுன் ‘ என்று எங்கள் அலுவலர் உத்தரவிட..அடப்பாவிகளா.. எங்களுக்குத்தானா…. என்றவாறே இறங்க முகாம் போபியா பிடிக்க ஆரம்பித்தது.
அவ்வழி வரும் நகரப் பேருந்துகளில் சீருடை அணிந்து யாராவது வந்தால் வழிமறித்து இறக்குவதில் ராணுவத்தினர் குறியாய் இருந்தனர். அவர்கள் பின்னால் தொடர்ந்த போதும் சரி, அவர்கள் எங்களுக்கென தனித்துத் தந்த வகுப்பறைகளில் நுழையும்போதும் சரி…. “இந்த ஆளு அந்த ஆடு.. இந்த கொடை.. அந்த அருவா.. ரெண்டுக்கும் சம்மந்தம் இருக்கமாதிரியே இருக்கு இல்லே ” என்ற எண்ணமே எங்களுக்கு.
கொள்ளிடக்கரையில் உள்ள திருவரங்கம் ஆண்கள் மேநிலைப்பள்ளிதான் எங்கள் ஜாகை
மதியமே கெடுபிடிகள் தொடங்கியது. பதுவிசாவே ஒரு அதிகாரிக்கும் பேசத்தெரியலை. எதுக்கெடுத்தாலும் ஒரு அதட்டல். ஒரு கேர்ர்ரராவே சுத்திட்டு இருந்தோம். “இனி டரியல் தொடரும்”னு ஒரு ஆப்பீசர் குச்சியும் கையுமாவே சுத்திட்டுத் திரிவார். ஆடுகள் மந்தையை விட்டு அடச்சே.. நாங்கள் வரிசையை விட்டு எங்காவது நகர்ந்தால் பிருஷ்டம் பிய்யும் வரை அடிக்கும் அந்த சிங்குமாமாவை இப்ப நினைத்தாலும் மனதிற்குள் திட்டுவதில் தவறேதும் இல்லைதானே!
மார்கழி மாச குளிர். அதுலையும் காலையில 5 மணிக்கி விசில். ஒரு மணிநேரத்தில் ‘எல்லாம்’ முடிச்சிட்டு 6 மணிக்கி பல்லவன் கிளம்பற நேரத்தில கவாத்துப் பயிற்சி. 8 மணிக்கி சாப்பாடு. 9 மணிக்கி திரும்ப கவாத்து. 2 மணிக்கி சாப்பாடு. 3 மணிக்கு ஊர்வலமாகப் போய் கொள்ளிடத்தில் குளியல் (கெடுபிடிகளுக்கு நடுவில் எங்களுக்கு இருந்த பாலைவனச் சோலை அது) பிறகு 6 மணிக்கி பொழுது போக்கு (ஆடல் பாடல்) 8 மணிக்கி இரவுச்சாப்பாடு என்று முகாம் முழுக்க ‘திகார் ராசா’ கெட்டப்பிலேயே நாங்கள் திரிந்தோம் என்றாலும் ஓரிரு நாட்களில் சூழல் பழகிவிட்டது.
டேய் அவிங்களுக்கு மாத்திரம் சப்பாத்தி ரொட்டியா போட்டு நமக்கு வெந்ததும் வேகாமையும் போடுறாய்ங்கடா…. (ஆப்பீசர் மெஸ்சை எட்டிப்பார்த்தவனின் குமுறல்)
அவனுக்கு ஒரு நாள் இருக்குடீ.. எங்க எரியாவிற்கு வந்து எங்களையே அடிச்சிட்டான் (பக்கத்தில் இருந்த பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து சிங்ஜியிடம் அடிபட்டு, கிரவுண்டில் முட்டி போட்ட திருவரங்கத்தானின் கருவல்)
என்சாய் பன்னுங்கடே (ஒரு வாரமாக விளக்கில்லாத சிறை மாதிரியான வகுப்பறையில் தங்கி விளக்கு வந்ததும் ஆட்டம் போட்ட எங்களைப் பார்த்து கோவம் கொண்டு அடி பின்ன ஓடி வந்து பின் மனசு மாறிய ‘அன்பே சிவம்’ நெல்லை ராணுவத்தானின் நெகிழல்)
டேய் அவிங்க சீரெட்டு பிடிக்கிறாய்ங்கடாஆஆ.. (எங்களுடன் தங்கியிருந்த மதுரை நாகமலை மாணவர்களின் புகையைப் பார்த்து வாய் பிழந்த எங்கள் சேக்காளியின் வியப்பு)
நல்லா பாடினடேய் (பொங்கலுக்கு ரிலீசாகும் தேவர் மகன் ‘போற்றிப் பாடடி’ பாட்டை ரிலீசுக்கு முன்னாடியே தாள வித்வானுடன் பாடியதில் உற்சாகப்படுத்திய இன்னொரு டமீல் மிலிட்டரி)
அய் பொங்கலு (பொங்கல் விழா முகாமால் எங்களுக்கு இல்லாமல் போனதால் ராணுவத்தார் மனமிறங்கி பொங்கல் போட்டார்கள். அதன் வியப்பு ஆச்சரியக்குறி)
ஸ்ஸ்ஸ்… கொதிக்கிதுடா..
அட சும்மா சாப்டுடா. ஸ்டேஷன்ல ஐஸ்வாட்டர் குடிக்கலாம் (அதிகாலை 4 மணிக்கு சிங்ஜிக்கு டிமிக்கி கொடுத்து காம்பவுண்டு சுவர் ஓட்டை வழியாக வெளியேறி பள்ளி வாசலில் குழாப் புட்டுக்கும் திருவரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ஐஸ்வாட்டருக்கும் வாடிக்கையாய் போன எங்களது வழக்கமான டைலாக்)
என்று அந்த மார்கழி முகாம் மார்கழி கலர் கோலம் மாதிரி பட்டையைக் கிளப்பியது.
என்றபோதும் மனதை விட்டு நீங்காத சில விசியங்கள் நடந்தன.
“யாருக்குடா கராத்தே தெரியும்?”. திருவரங்கத்தான் ஒருத்தன் கைதூக்க.. வேறு யாரும் இல்லையா.. என்று அந்த திருவரங்கத்து ஆப்பீசர் எங்களை கேவலமாகப் பார்க்க.. நல்ல வேளை எங்கள் செட்டிலும் இருந்த ஒருவனை வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் நாங்கள் தூக்கிவிட்டோம். ஆமா போன இடத்தில இமேஜ் டேமேஜ் ஆகக்கூடாதில்ல.
கோழிச்சண்டை பார்க்க ஆர்வமாகும் கிராமத்து பெரிய தலைமாதிரி அலுவலர் அமர, இருவருக்கும் யுத்தம் தொடங்கியது. அவன் அடிக்கவும் இவன் தற்காத்துக் கொள்ளவும் பார்த்த ஆசிரியர்.. புதுக்கோட்டைப் பய பயப்புடுறான் என்று தீர்ப்பளிக்க ஏகக்கடுப்பு. திருவரங்கத்து செட்டைப் பார்த்தாலே ஏகத்துக்கும் கடுப்பாகி புகைய.. ஆனால் முகாமின் இறுதியில் சண்டை போட்ட இருஊர் பையன்களையும் கராத்தே சேர்த்து வைக்க அதன் மூலமாக இரு செட்டும் பகையை விரைவிலேயே மறந்தது. முகாமின் இறுதியில் அந்த திருவரங்கத்து நண்பன்தான் ஊரைச் சுற்றிக் காண்பித்தான். அந்த அளவிற்கு நட்பு துளிர்விட்டிருந்தது.
இவை தவிற ஊரைக் கடந்த நட்புகள், தண்டாயுதபாணி சிங்ஜி என்று நினைவை விட்டு நீங்காத பயணம் அது. இப்பவும் பல்லவனில் வந்தால் பாடி ஆடிய மேடையும் வியர்வை வழிய வீரு நடை நடந்த பள்ளி மைதானமும் என் கவனத்தைத் தன்பால் ஈர்ப்பதாகவே படுகிறது.
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கிறது என்னான்னா..
மாணாக்கர் படை தீரமும் (!), அதன் மீதான அரசினர் பயிற்சியும் எந்த ஒரு மாணவரும் தவற விடக்கூடாதது. ம்ம்ம். ஆங்கிலப்பள்ளிகளில் எங்குபோய் தேட!
நம்மைக் கலங்கடிக்கும் வாத்தியார் நம் முன்னிலேயே கலங்கினால் பசங்க மனசும் ஊய்ய்ய் என்று விசிலடிக்கத்தானே செய்யும்?
ரசிக்கவைத்தது…!
அடடே. வாங்க வாங்க.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.