துக்ளக் 42வது ஆண்டு விழா கண்ணோட்டம்


பொங்கலோ பொங்கல்

நரேந்திர மோடியும் அத்வானியும் துக்ளக் ஆண்டுவிழாவிற்கு வருகிறார்கள் என்றதும் அவசியம் செல்லவேண்டும் என்கிற ஆவல் வந்தது. காங்கிரசு தற்சமயம் நடத்தும் கொள்ளையடிப்பு அரசியலும் தமிழர் விரோத அரசியலும் அயற்சி அடையச் செய்யும் இடத்தில் – எதிர் வருகிற பாராளுமன்ற தேர்தலின் கூட்டணி தொடர்பானதாக இருக்கும் என்கிற அங்கு வந்திருந்த அனைவருக்கும் இருந்த எதிர்பார்ப்பு எனக்கும் இருந்தது. அது தவிற அரசியல் கூட்டத்திற்குப் போய் நிறைய நாட்களும் ஆகிவிட்டது.

மாலை 6-30 மணிக்குத் துவங்கும் என்று போட்டு இருந்தார்கள். 6-20க்குத் தொடங்கியது. கொடுமை. நான் சென்ற எந்தக் கூட்டங்களும் காக்க வைத்த கூட்டங்களே. சரி விசியத்திற்கு வரலாம்.

விரிவாக சொல்லவேண்டிய வேலை எனக்கு இல்லை. பெரும்பாலான விசியங்களை இட்லி வடையில் பார்க்கலாம்.

எனக்குக் குறிப்பிட வேண்டும் என்கிற விசியங்களை மட்டும் இங்கே வைக்கலாம் என்று எண்ணுகிறேன்.

1. சோ – அரசியல் சரவெடி

2. அத்வானி – சாந்த சொரூபி (வழக்கத்திற்கு மாறாக)

3. நரேந்திர மோடி – பொருளாதார செமினார்

தொடக்கமாக சோவின் சரவெடி

மன்மோகன் சிங்

manmohan-singh.jpg

நல்லா தெய்வத்தை வேண்டிக்கனும். நம்ம ஊரு தெய்வங்கள் எல்லாம் பத்தாது. அது நல்லது செய்யறதுக்கு மட்டும்தான் துணை வரும். ஆனால் நான் செய்யப்போகும் காரியத்திற்கு வேற சாமிய கும்பிடனும். நான் பேசறதில பிரச்சினை வரலாம். நான் ஊழல் பண்ணலாம். எல்லாத்தையும் காத்து நிக்கனும் ஓம் மன்மோகன சிங்காய நமக என்றதில் அரங்கம் அதிர்ந்தது.

எதற்குமே அவருக்கு கோவம் வரமாட்டேன் என்கிறது. தட்சிணாமூர்த்தி ஒரு மவுன குரு என்பார்கள். அதாவது குரு மவுனமாக இருப்பார். ஆனால் சீடர்களுக்கு விளங்கிவிடும். அது மாதிரி இவரும் மவுனமாகவே இருக்கிறார்.

“2ஜி வருது. கொஞ்சம் காசு பாத்துக்கலாம்னு பாக்கறேன்..” மவுனமா தலையசைக்கிறார்.

“பிரணாப் ஆபிசை கொஞ்சம் ஒட்டுக் கேட்டுக்கலாம்னு பாக்கறேன்..” மவுனமா தலையசைக்கிறார்.

இப்படி எல்லாத்துக்கும் சைகையாலேயே சொல்லிட்டு கம்முன்னு இருக்கார்.

அவருக்கு எல்லார் மேலயும் confidence அதிகம். ஆராஜாவைப் பார்த்து I am confident on him னு சொன்னார். திகாருக்கே போயிட்டார். அடுத்து சிதம்பரத்தைப் பார்த்து I am confidentன்றார்.

அவருக்கு கபில் சிபல் போதும். எல்லாத்தையும் இல்லவே இல்லையே என்று மறுக்க.

lmhc4vhegdj.jpg

2ஜில ஊழலாமே – இல்லவே இல்லையே

அரசுக்கு நஷ்டமாமே – இல்லவே இல்லையே

சிதம்பரத்துக்குப் பங்கு இருக்காமே – இல்லவே இல்லையே

சிதம்பரத்துக்கு…. இல்லவே இல்லையே என்று சிதம்பரம்னாலே இல்லவே இல்லையே என்று பதில் சொல்லும் அளவிற்குப் போய்விட்டார்.

ஆனால் அவருக்கும் கோவம் வந்தது. அத்வானி மன்மோகனை weak prime minister என்று சொல்லிவிட்டாராம். அதனால் எல்லா பத்திரிகையாளர் கூட்டத்திலும் புலம்பித் தீர்த்தார். அத்வானி என்னை weak prime minister என்று சொல்லிட்டார். weak prime ministerனு சொல்லிட்டார். அத்வானி செய்தியைப் படிக்காதவர்கள் கூட இவர் சொல்வதைப் பார்த்து தெரிந்து கொள்வார்கள் போல.

உண்மையச் சொன்னா இப்டித்தான் கோவம் வரும்.

இப்ப என்னையே யாராவது திட்டனும்னா.. அவன் போறான் பைத்தியக்காரன்னு சொன்னா.. யாரோ பாமகவைப் பத்திச் சொல்றாங்கன்னு நினைப்பேன். அவன் போறான் சொறணை கெட்டவன்னு சொன்னா – யாரோ கம்யூனிஸ்டு பத்தி சொல்றாங்கன்னு நினைப்பேன். மொட்டைத்தலையன்னு சொன்னா கோவம் வரும் இல்லையா. அது மாதிரிதான்.

2319969987_843a82bcb1.jpg

என் பின்னாடி இருக்கிறவர் கேட்டாரு. தேவ கவுடாவை விட இவர் weak prime ministerஆ என்று. ஆமாம். தேவ கவுடாவிற்கு ஒரு தைரியம் இருந்தது. தூங்கனும்னு நினைச்சா தூங்கிடுவார். ஆனால் இவரால அது கூட முடியலையே.

அன்னா ஹசாரே

இவர் என்ன சொல்றாருன்னே புரியலை. குடிக்கிறவன கட்டி வெச்சு அடிக்கனும்கிறார். அமைச்சர்களை கெரோ செய்னு சொல்றார். உண்ணாவிரதம் இருக்கப் போறேன்றார். அரசு பணிஞ்சு வந்திடுச்சு. உண்ணாவிரதம் இல்லைங்கிறார். அரசு ஏமாத்திடுச்சு திரும்ப உண்ணாவிரதம் கிறார். உடம்பு சரியில்லைங்கிறார். ஒரு நாள் பட்டினி கிடந்தால் உடல் சரியில்லாம போகுது. அத்தணை வயசாச்சு. பாகிஸ்தானுடன் போர் வந்தால் போவேன்றார். இவரப் போய் காந்திய வாதின்னு சொல்றாங்க. விநாயகர் பீடியில விநாயகருக்கும் பீடிக்கும் என்ன சம்பந்தமோ அவ்வளவுதான் அன்னாவுக்கும் காந்தியத்திற்கும்! இப்ப என்ன பன்றதுன்னே தெரியலைங்கிறாங்க. நீங்க எதாவது சொல்லுங்கன்றாங்க.

40957b36-c72e-4637-84b6-974c5e53a2c3HiRes.JPG

ஒருத்தன் இரவு தூங்கும்போது கனா கண்டானாம். ஒரு நாய் சுவரை அங்கிட்டும் இங்கிட்டும் தாண்டுவதாக. அடுத்த நாள் பஞ்சாயங்காரை (குறி சொல்பவர்) அணுகி அந்தக் கனவின் பொருள் என்ன என்று கேட்டானாம். பைத்தியக்காரன் அகப்பட்டான் என்கிற மகிழ்ச்சியில் பஞ்சாயமும் “நாய் சுவரைத் தாண்டுவதே கெட்டது. ரெண்டு தடவை தாண்டியிருக்குதுன்னா.. குடும்பமே நாசம்தான்” என்று கூற.. “அதுக்கு என்ன பண்ணனும்”னு இவன் கேக்க. “எனக்கு 100 எறுமை மாடு தட்சணையா கொடு. நான் அசண்டாள யாகம் நடத்தறேன். எல்லாம் சரியாப் போயிடும்”னு அளந்து.. 100 எறுமை மாடுகள் காணிக்கையுடன் அசண்டாள யோகம் நடக்க ஆரம்பித்தது. அப்படி ஒரு யாகத்தை கெஜ்ரிவால் அன்னா கஜரேக்கு நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் அங்கே சாந்தி பூசன் வருகிறார். அவன் இன்னொரு பஞ்சாயஞ்காரு. என்னடா இவன் நம்ப பொழப்ப கெடுத்திடுவானே என்று யாக மொழியிலேயே “100 எறுமை காணிக்கையில அசண்டாள யாகம்… உனக்குப் பாதி எனக்குப் பாதி. காரியத்தைக் கெடுக்காதே” என்று சிக்னல் கொடுக்க சாந்தி பூசனும் மந்திரம் சொல்ல ஆரம்பிக்கிறார்…. இப்படித்தான் இந்தப் போராட்டம் போனது. அவர்களுக்கு உள்ளேயே பிரச்சினைகள். அவர்கள் மீதான மோசடி புகார்கள். இந்த அம்மா கிரண்பேடி பெரிய கொடியை எடுத்து ஆட்டிக்கிட்டு இருக்கு. இந்த கிரிக்கெட்ல வர சியர் கேர்ள் மாதிரி. டிவியின் போக்கிரித்தனத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. டிவியில வரது எல்லாம் மெகாசீரியல் மாதிரி. பார்க்க interestingஆ இருக்கும். பார்க்கிறதோட விட்டுடனும்.

47759afb-c5bf-4a7a-922d-bb3a97c93cb7HiRes.JPG

ஆனால் இது போன்ற நிகழ்வுகள் தோல்வி அடையும்போது ஊழலுக்கு எதிராகப் போரிட்டால் இதுதான் கதி என்று மற்றவர்கள் எண்ணுவதற்கு வாய்ப்பாகப் போகும்.

நக்கீரன்
முதல்வரைப் பற்றி இவ்வளவு அவதூறாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதே. அதை பத்திரிகைகள் பெரிதாக கண்டிக்கவில்லையே. உங்கள் கருத்து என்ன என்று சோவிடம் கேட்டார்கள்

 

Nakkheeran-07-01-2012-Moviezzworld.com_-150x150.jpg(தனிப்பட்ட முறையில் தினமணி ஒரு தலையங்கமே எழுதியது. தவிறவும் அந்த செய்தியில் பிழை என்று நான் நம்பவில்லை. உண்மையைச் சொல்லிவிட்டார்களே என்கிற ஆத்திரம் வேண்டுமானால் இருக்கலாம். இதைப்பற்றி விரிவாக எழுதினால் சோவைப் பற்றி எழுதினால் பிராமண அடிவருடி என்றும். பீப் கதையைப் பற்றிப் பேசுவதால் பிராமண எதிரி என்றும் ஊர் மக்கள் அனைவராலும் நான் அன்போடு போற்றப்பட்டு விடுவேன் என்பதால் நிற்க.)


அந்தப் பத்திரிகையில் அவ்வாறு ஒரு செய்தி வந்தது ஆச்சரியப் படத்தக்கது அல்ல. அவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள். அவர்களிடம் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது. அது அவர்கள் குணம். அட்டை செய்தியாகப் போட்டதை வேண்டுமென்றால் தவறு என்று எடுத்துக்கொள்ளலாம்.

பெரும்பாலான பத்திரிகைகள் an objectionable content, a debatable content என்றெல்லாம் செய்தி வெளியிட்டார்கள். ஆனால் இந்து பத்திரிகை நடந்து கொண்டவிதம் ஆச்சரியம் தரத்தக்கதாய் இருந்தது. நக்கீரன் செய்தியை வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் வெளியிட்டார்கள். அதுதான் ஆச்சரியம். இந்து என்றால் நியூயார்க் டைம்சில் இருந்து மேற்கோள் காட்டுவார்கள். இன்ன பிற பெரிய பத்திரிகைகளைக் காட்டுவார்கள். நக்கீரன் செய்தியை மேற்கோள் காட்டும் அளவற்கு தரம் தாழ்ந்துவிட்டார்களா என்றால் இல்லை. இது வேண்டும் என்றே செய்யப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. நக்கீரன் செய்தியைப் படிக்காதவர்களும் இதைப் படித்து செய்தியைத் தெரிந்து கொண்டார்கள்.

(இதைக் கேட்டதும் எனக்கு நினைவிற்கு வந்தது.
கடந்த முறை இந்து உட்பட்ட சில பத்திரிகைகள் மீது ஜெ அடக்குமுறைகளை ஏவினார். இந்துப் பத்திரிகையாளர்கள் தஞ்சம் தேடி பெங்களூர் எல்லாம் ஓடினார்கள். அந்த சமயத்தில் சோ இந்துவுக்காகப் பரிந்து பேசினார். “இந்துப் பத்திரிகையில் வந்தது ஒரு பிரச்சினைக்குரிய செய்தி அல்ல. “எதிர் கட்சிகளுக்கு வசை மாறி பொழிந்தது” இது மாதிரியான வார்த்தைப் பிரயோகங்கள்தான் இருந்தன. தவிற அந்தப் பத்திரிகையில் வந்தது ஒரு reporting செய்திதான். தன்கருத்தைக் கூட அந்த செய்தியாளர் ஏற்றிக் கூறவில்லை”)

இலவசம்
முதலில் சில வாசகர்களைப் பேச அழைத்தனர். முதலில் வந்த பெண்மணி – இலவசங்களை தமிழகத்தை விட்டு ஒழிக்க இயலாதா என்றார்.

jayalalitha_illus_20110425.jpg

இலசங்கள் ஒழியவேண்டும் என்பது ஒரு ideal நிலை. அதை நோக்கி நாம் அனைவரும் பயணிக்கவேண்டும். வளர்ந்த நாடுகளிலேயே உடல் நலக் காப்பீடு, வேலை வாய்ப்பற்றவர்களுக்கு உதவி என்று இலவசங்கள் உள்ளன. கடந்த தேர்தலில் அதிமுகவும் இலவசங்களை அறிவித்தது. எதிரில் திமுக இலவசங்களை அறிவித்ததால் வேறு வழியில்லை. இலவசங்களை அறிவிக்காவிட்டால் திமுக ஆட்சியை அகற்ற இயலாது. அந்த அளவிற்கு மக்கள் இலவசங்களுக்குப் பழகிப் போயிருந்தார்கள். இலவசங்களைக் குறைத்துக் கொள்வது எதிர்காலத்தில் செய்யவேண்டும்.

மோடி பிரதமர்

நரேந்திர மோடியும் அத்வானியும் அமர்ந்திருந்த அதே அம்மணி இன்னொரு திரியையும் கொளுத்திப் போட்டார்.
மோடி பிரதமராவதற்கு நீங்கள் உங்கள் நண்பர் அத்வானியிடம் சிபாரிசு செய்யக்கூடாதா?

பெண்களைப் பேசினாலே பிரச்சினைதான்… மோடி பிரதமராகனும் என்று நீங்க நினைக்கிறீங்க. நானும்தான் நினைக்கிறேன். ஆனால் இது மக்களால் முடிவு செய்யப்படவேண்டியது என்று நாசூக்காக அதற்குப் பதில் சொல்லமலே நழுவினார்.

சசிகலா
சசிகலாவை வெளியேற்றியதில் உங்கள் பங்கு என்ன. அதைக் கேட்கத்தான் இங்கே அனைவரும் வந்திருக்கிறோம் என்றார் இன்னொருத்தர்.

நீங்க அத்வானி பேச்சைக் கேட்க வரலை. மோடி பேச்சைக் கேட்க வரலை. சசிகலா பற்றிக் கேட்கத்தான் வந்திருக்கீங்க.. உங்களை எல்லாம் அவர் இன்சல்ட் பண்ணிட்டார் என்று கடைசி வரை அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவே இல்லை.
What she had done is a surgical operation. How beautifully she had done it. தவறு நடக்கிறது என்று தெரிந்தவுடன் அவர் எப்படி நடவடிக்கை எடுத்தார் என்பதற்கு இது ஒரு உதாரணம். அவர் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தார் இப்படி நடந்து கொண்டிருக்க தைரியமே இருக்காது.

சீனா
கோவை காரமடையில் இருந்த வாசகர் கூறினார். சீனா நமக்கு எதிரி. அதை எதிர் கொள்ள மோடி பிரதமரானால்தான் சரிப்பட்டுவரும்.
Modi_china-2.jpg
சீனாவைப் பார்த்து பயப்படவேண்டியதில்லை. சொல்லப்போனால் எல்லாரையும் விட சீனா மோடிக்கு நண்பன். நாம் நமது உள் கட்டமைப்பு நமது திறன்களைப் பெருக்கிக் கொண்டாலே போதும்.

விலைவாசி
விலைவாசி என்று வரும்போதெல்லாம் நீங்கள் அதை ஆதரித்தே எழுதுகிறீர்கள். கீழ்தட்டு மக்களை அரசாங்கம் கவனித்துக் கொள்கிறது. மேல்தட்டு மக்கள் விலைவாசியைப் பற்றிக் கண்டு கொள்வதே இல்லை. நடுத்தர மக்கள்தான் கஷ்டப்படுகின்றனர். அதற்காக வரிச்சலுகை அதிகம் தர தாங்கள் பரிந்துரைக்கக் கூடாதா என்றார் ஒரு ஹைதை வாசகர்.
1207549007678.jpg
விலைவாசி என்பது இன்றைக்கு நேற்றைக்கு ஏற்பட்டதல்ல. சுதந்திரத்தின் போது என்ன விலை. தற்போது என்ன விலை என்று யோசித்தால் புரிந்து போகும். இதற்காக அரசாங்கம் எல்லாத்தையும் மானியத்திலா கொடுக்க முடியும். அப்படிக் கொடுத்தால் அதுவே பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பது எனது கருத்து.

கருணாநிதி
பீர்மேடு தேவிகுளம் பகுதிகளை தமிழ்நாட்டுடன் சேர்க்கவேண்டும் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறாரே. அதுவும் புத்திசாலித்தனமாக சொல்லியிருக்கிறாரே. அது அப்போதைக்கு இருந்த கவர்னரின் தவறு என்கிறார். உங்கள் கருத்து என்ன? (அந்த வாசகர் கேள்வி கேட்டதை நான் ரசிக்கவில்லை. பொதுவாகவே கிண்டல் பண்ணவேண்டும் என்கிற தொணியே இருந்தது)

2008051953070401.jpg

அவருக்கு என்ன பேசறதுன்னு தெரியலை. நாம செம அடி வாங்கினா தலை சுத்திரும். எங்க இருக்கோம். என்ன பேசறோம்னே தெரியாது. அதுமாதிரி கடந்த தேர்தலில் வாங்கிய அடியிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. டைம் ஆகும். ஆனால் மீண்டுவிடுவார். நானும் ஏதாவது சொல்லனுமே என்பதற்காக சொல்லிட்டு இருக்கார். என்ன சொல்றாருன்னு அவருக்கே தெரியலை. தேர்தல் கமிசன் சதி செய்தது என்றார். இவங்க பணம் கொடுத்தத அவங்க தடுத்திட்டாங்களாம். அனுமதிச்சிருக்கனும். பிறகு எதிர் கட்சிகள் சதின்னு சொன்னார். பிறகு பார்ப்பனர்கள் சூழ்ச்சி காரணம் என்றார். அதாவது விஜயகாந்த் அய்யர். தா.பாண்டிய ராவ். கிருஷ்ணசாமி கணபாடிகள் மற்றும் சரத்குமார சாஸ்திரிகள் என்ற பார்ப்பனர்கள் ஒன்றாகச் சேர்த்து அவரைத் தோற்கடித்துவிட்டார்கள். கடைசியில் நான்தான் காரணம்ன்னார். பாவம் என்னதான் செய்வார்.

ஒரு ஓட்டுக்கு 2000 3000னு கொடுத்தார். பணத்தை நம்பினார். எப்படியும் வென்றுவிடுவோம் என்று. எப்படியும் ஓட்டுவிழுகப்போவதில்லை என்று உணர்ந்த கட்சி ஆட்களே… எதறகு இந்தப் பணத்தையும் இழக்கவேண்டும் என்று பெரும்பாலான இடங்களில் பணத்தை இறக்கவே இல்லை.

நாங்கள் ராவண வம்சம்ங்கிறார். இராமாயணத்தைப் பற்றிப் பேசினால் ஒரு உளரல் கூட உளராமல் இருப்பதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு உள்ளார். இராமன் 14 வருடம் வனவாசம் செய்தபோது தாடகையை வீழ்த்தினான்கிறார். தாடகையை வீழ்த்தியது இராமனின் சிறு பிராயத்தில். விசுவாமித்திரருடன் செல்லும்போது. சூர்ப்பநகைக்கும் தாடகைக்கும் இவருக்கு வித்தியாசம் தெரிவதில்லை.

கருணாநிதியைப் பற்றி புகழ்ந்து ஏதாவது சொல்லக்கூடாதா என்று துண்டு சீட்டு கொடுத்துவிட்டார்கள்.
என்ன சொல்றது. என்னை யாராவது புகழ்ந்து பேசினால் எனக்கு காதுகள் செவிடாகிவிடுகிறது என்றார். அவரைப் பற்றி புகழ்ந்து பேசி என்ன செய்ய? அதற்காகத்தான் கடந்த ஆட்சியில் அவரை எல்லாரும் புகழ்ந்து கொண்டே இருந்தார்கள். கவிஞர்கள் புகழ்ந்தார்கள். சினிமா டெக்னிசியன்கள் புகழ்ந்தார்கள்.
“நீங்கள்தான் தமிழினத்தலைவர்”
“ம்ம்ம்ம் என்ன சொன்னே… காது கேக்கலையாம்”
“நீங்கள்தான் தமிழினத்தலைவர்” – சற்று உரக்க
“ம்ம்ம்ம் என்ன சொன்னே…
“நீங்கள்தான் தமிழினத்தலைவர்” – சத்தமாக
“ம்ம்ம்ம் என்ன சொன்னே…

இப்படிப் புகழ்ந்து புகழ்ந்தே அவரை ஒரு இடத்தில் உக்கார வெச்சிட்டோம். என்ன. எல்லாரும் புகழ்ந்ததை அவர் நம்பிட்டார்.

முல்லைப் பெரியாறும் ஜெவும்
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இந்த அம்மாவின் உறுதியை நீங்கள் பார்க்கவேண்டும். தமிழக நலனில் எந்த அளவும் விட்டுக்கொடுக்க இயலாது என்று எவ்வளவு ஆணித்தனமாகச் சொல்கிறார். இந்நிலையில் கருணாநிதி இருந்தால் இன்னேரம் கடிதம் எழுதியிருப்பார். பல தடவை டெல்லிக்குப் போகிறார். ஜாமீன் அது இதுன்னு என்னவோ வாங்க போகிறார். இந்தப் பிரச்சினைக்கு கடிதம் எழுதுவார். மத்தியில் நடப்பது அவர்களது ஆட்சி. அவர்களின் எம்பிக்கள் மந்திரிகளாக இருக்கிறார்கள். இவர் கடிதம் எழுதுவார். எப்படி இருக்கிறது தெரியுமா. ஒரே விட்டுக்குள்ள உட்காரந்து கொண்டு ஒருத்தருக்கு ஒருத்தர் லெட்டர் போட்டுக்கொள்வது போன்றது.
vijaykanth-manmohansingh-mullaiperiyar-dam.jpg
கேரளாவில் நடப்பது ஒரு அரசா. நீதி மன்ற உத்தரவையே மீறுகிறார்கள். அந்த ஒரு காரணத்திற்காகவே ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணலாம். ஆனால் பண்ண மாட்டார்கள். ஏன்னா அங்கதான் காங்கிரசிற்கு கொஞ்சமாவது ஓட்டு இருக்கு.

இங்கே வீரமணி போன்றவர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள். உச்ச நீதி மன்ற உத்தரவை கேரள அரசு மீறலாமா என்று. வழிகாட்டியது யார்? இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் உச்ச நீதி மன்ற உத்தரவை மதிக்காமல் அதிகமாக இட ஒதுக்கீடு கொண்டு வந்ததி யார்?

கூடங்குளம்
கூடங்குளம் பத்தி பேசனும் என்றார்கள்.
Koodankulam-protest-300x200.jpg
கூடங்குளம் எங்க போகும். வந்தே தீறும். அவ்வளவு செலவு பண்ணிட்டு எப்படி வராமல் போகும். வந்தே தீறும். அது காலத்தின் கட்டாயம். அந்தப் போராட்டம் யாரோ ஸ்பான்ஸர் செய்வது.

FDI
சில்லறை முதலீடுகளில் அந்நிய முதலீடு தப்பில்லை என்பது எனது கருத்து. அது ஒரு ஆரோக்கியமான போட்டியை உண்டாக்கும். காலாவதியான பொருட்களைத் தரான். எடை ஏய்ப்பு செய்யறான். தங்களின் உலகலாவிய பெயர் கெட்டுவிடும் என்பதற்காக அந்த நிறுவனங்கள் கவனமாக இருப்பார்கள். தவிற இதனால் விவசாயிகளுக்கும் இலாபம்தான். இடையில் உள்ள தரகர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். எனவே FDI தவறில்லை

பாஜக
பாஜக எதிர் வரும் தேர்தலில் வெற்றி பெற என்ன செய்யவேண்டும்?
ஒற்றைமையாக இருந்தால் போதும்.
bjp48.gif
தற்போதிருக்கும் பிரச்சினைகளில் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல பாஜகவினால் மட்டும்தான் முடியும். அதிலும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. காங்கிரசை எடுத்தால் சோனியாவை விட்டால் ஆள் கிடையாது. திமுகவில் கருணாநிதியை விட்டால் ஆள் கிடையாது. அதிமுகவில் முன்னர் எம்ஜுஆரை விட்டால் ஆள் கிடையாது. இப்ப ஜெவை விட்டால் ஆள்விடையாது. என்று எல்லா இடத்திலும் ஒரு discipline இருக்கிறது. பாஜகவில் அது இல்லை. அனைவருக்கும் திறமை உள்ளதால் வரும் பிரச்சினை உள்ளது. இவரை விட்டா ஆள்கிடையாது என்கிற நிலை பாஜகவில் இல்லை.

ஜெயலலிதா – மோடி – மத்தியில் ஆட்சி
ஜெவுக்கும் மோடிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இந்திய முதல்வர்களில் இவர்கள் இருவருக்கும் இருக்கும் ஆண்மை வேறு யாருக்கும் இல்லை. மத்தியிலிருந்து எந்த ஒரு ஆதரவும் இல்லாத நிலையில் இவர்கள் perform பண்ணுகிறார்கள். (ஜெ என்ன செய்தார்??????) பல நாடுகளிலிருந்து தொழில் முனைவோர்கள் வருகிறார்கள். பல கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. குஜராத்தில். இப்படி திறமை இருக்கும் ஒருவரை தேசிய அளவிற்கு தள்ளி ஆகவேண்டும். செய்யவில்லை என்றால் அது நாம் செய்யும் முட்டாள்தனம்.

tamil1.jpg

தமிழகத்தில் நமக்கிருக்கும் நிலைமை வேறு. ஐந்து வருட காலம் காரை ஒருத்தர் ஓட்டுகிறார். அப்புறம் அவரை அகற்றிவிட்டு இன்னொரு டிரைவரைப் போடுகிறோம். அந்த டிரைவருக்கு தன் ஒட்டு மொத்த குடும்பத்தையே காரில் ஏற்றிச் செல்லவேண்டிய நிர்பந்தம். காரின் திறனுக்கு மீறி ஏற்றுவதால் கார் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுத்தமாக ரிப்பேராகிவிடுகிறது மீண்டும் ஆட்சியில் திரும்ப கட்டவேண்டி உள்ளது. இதற்கு என்ன செய்யவேண்டும். சிலவற்றை மீதமில்லாமல் அழிக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். கடன் பகை இவைகளை. இல்லாவிட்டால் திரும்ப திரும்ப வளரும். இதை அதிமுககாரர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம்.

மோடி பிரதமராகவேண்டும். அதற்குண்டான உதவிகளை அதிமுக செய்ய வேண்டும்.  ஆனால் secularism பேசி சிலர் மோடியை எதிர்க்கிறார்கள். அப்படி ஒரு பிரச்சினை வந்து பாஜக ஆதரவு பெற்ற ஒருவர் பிரதமராகலாம் என்கிற நிலை வந்தால் ஜெவுக்கு பாஜக ஆதரவு தரவேண்டும்.

அத்வானி
திமுகவை இவ்வளவு நான் விமர்சித்தாலும் அண்ணாத்துரையிடம் உள்ள ஒரு நல்ல விசியம், மற்றவர்களை வளர்த்து விடுவது. இவன் வளர்ந்தால் நமக்குப் பிரச்சினை ஆகுமோ என்று நினைக்காமல் பலரையும் வளர்த்துவிட்டார். அதுமாதிரிதான் அத்வானியும். அத்வானி பிரதமராக வாய்ப்புகள் இருந்தபோதும் என்னை விட வாஜ்பேயி சிறந்தவர். அவர் கைகளில் தேசம் ஒப்படைக்கப்படவேண்டும். இன்று பிரதமர் பதவிக்கு அத்வானியை விட்டால் வேறு யாருக்காவது தகுதி இருக்கிறதா. பாஜகவை வளர்த்தவர் இவர். இவருக்கு உள்ள தேசபக்தி, தனிநபர் திறன் மற்றும் அனுபவம் வேறு யாருக்கும் இல்லை. இவர் வந்தாலே எழுந்து நிற்கத் தோன்றுகிறது. 40 ஆண்டு காலமாக அரசியலில் உள்ள இவர் 19 மாதங்களை சிறையில் கழித்திருக்கிறார்.

அத்வானி விமானத்தைப் பிடிக்க இருப்பதால் அவரை முதலில் பேச அழைக்கிறேன் என்று ஆங்கிலத்தில் அழைத்தார். (ஏன் இப்ப ஆங்கிலம்???)

அத்வானி பேச்சு
அத்வானியின் பேச்சில் வழக்கமான காரம் இல்லை. ஏதோ நண்பர் இடத்திற்கு வந்து பேசும் அரட்டை அடிக்கும் தொணியும் அதிமுகவை அழைக்கும் காரியமுமே தெரிந்தது.

CHO_RAMASWAMY_L_K_A_893394f.jpg

தமிழகத்தில் பொங்கல் என்கிறார்கள். கேரளாவில் சங்கராந்தி என்கிறார்கள். வட மாநிலங்களில் உத்தராயன் என்கிறார்கள். இந்த நாள் இந்தியா முழுமைக்கும் விசேடமான நாளாகவே இருக்கிறது.

அத்வானி மோடி
மோடி பிரதமராக வேண்டி இங்கே ஒரு பெண் கூறினார். இதே கேள்வியை ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் இன்னொரு பெண் நிருபர் கேட்டார். பொதுவாக இந்தக் கேள்வியை பெண்களே கேட்கிறார்கள். நான் அவரிடத்தில் சொன்னேன். பொதுவாக நாங்கள் ஒரு குடும்பம். அனைவரையும் அனைவரும் நாங்கள் அறிவோம். ஒரு குடும்பத்தில் இளைய தலைமுறையினர் வளர்கிறார்கள் என்றால் வளர்கிறார்களே என்று நினைக்கமாட்டார்கள். பெறுமைதான் கொள்கிறார்கள். அதன்படி நானும் நரேந்திர மோடியைப் பார்த்து பெறுமை கொள்கிறேன்.

குஜராத்
நான் வாழ்வின் 19 20 வருடங்களை சிந்துவில் கழித்தவன். கராச்சியில். பிரிவினையின் போது நடந்த கலவரங்கள் கொலைகள் இந்துக்களை புலம் பெற வைத்தது. அப்போது குஜராத்திற்கு புலம் பெயரலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். என் பாட்டி 80 வயதில் இருந்தார். இனி நான் எவ்வளவு காலம் வாழ்வேன் என்று தெரியாது. எனவே என்னை காசியில் கொண்டு சேர்த்துவிடுங்கள் என்றார். நல்ல சாப்பாடு வேண்டுமா சூரத் போ. நல்ல சாவு வேண்டுமா காசிக்குப் போ என்கிற சொலவடை அப்போது இருந்தது. அந்த அளவிற்கு குஜராத் அப்போதே சிறந்து விளங்கியது.

narendra-modi-kites-india.jpg

இதே நாளில் உத்தராயன் விழாவில் பட்டம் விடுவது குஜராத் பஞ்சாப் மாநிலங்களில் வழக்கம். தற்போது நரேந்திர பாய் (சகோதரராஆஆஆம்) குஜராத் மாநிலத்தில் செய்திருக்கிற மாற்றங்களைப் பாருங்கள். யாராவது குஜராத் சமீபத்தில் போயிருக்கிறீர்களா. போய் பாருங்கள். அங்கே செய்யப்பட்டுள்ள வசதிகளைப் பாருங்கள். பட்டம் விடும் விழாவை ஒரு சர்வதேச விழாவாக மாற்றியிருக்கிறார் மோடி. இன்றும் பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் பட்டம் விடும் பழக்கம் இருக்கிறது. இது இந்து மத பழக்கம். பட்டம் விடக்கூடாது என்று பாகிஸ்தான் அரசு சட்டம் போட்டு உள்ளது.

இன்று சோ கேட்டுக் கொண்டதற்கிணங்க நரேந்திர மோடியுடன் பயணம் செய்தேன். அதே போல முன்பு வாஜ்பேயியுடன் பயணம் செய்தேன். அவரது தேசபக்தி மொழிப்புலமை கிண்டல் நகைச்சுவை திறன் நிறைந்த பேச்சாற்றலைக் கண் ஆகியவற்றைக் கண்டபோது இவரிடம்தான் நாட்டை ஒப்படைக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். பின்னாளில் கட்சிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொன்னார்கள்.
என்னால் முடியாது
ஏன்
என்னால் அப்படி பெரிய கூட்டங்களில் பேச இயலாது.
பார்லிமெண்டில் மாத்திரம் பேசுகிறீர்களே
பார்லிமெண்ட் வேறு கதை (சிரிப்பலை எழுகிறது)
இங்கே பெரிய கூட்டம் வரும். அவர்களைப் பேச்சாற்றல் மூலம் கட்டிப்போடுதல் என்னால் ஆகாது என்று கூறினேன்.

இதைப்போன்று நகைச்சுவை ததும்ப பேச சோவினால் மட்டுமே முடியும். அன்று நிறைய பேர் நகைச்சுவை நிறம்ப பேசினார்கள். இப்போது பார்லிமெண்டில் கூட நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது. எமர்ஜன்சி காலத்தில் கூட பார்லிமெண்டில் நகைச்சுவை மிகுந்திருந்தது என்பதை நீங்கள் நம்புவீர்களா. மது தந்தவதே போன்றவர்கள் டைமிங் அறிவு மிகுந்தவர்களாக இருந்தனர்.
Madhu_Dandavate_300.jpg

எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் ஒரு நாள் கட்சி கூட்டத்திற்காக கர்நாடகா சென்றிருந்தோம். திடீரென்று எங்களைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள். நீதிபதியே ஆச்சரியப்பட்டு யார் யார் வந்தார்கள். பெயர்கள் கூட போலிசாருக்கு சரியாகத் தெரியாது. ஆனால் அத்தணை பேரையும் கைது செய்து பெங்களூர் மத்திய சிறையில் அடைத்துவிட்டார்கள் என்று கூறினார். தீடீரென்று எங்களிடம் வந்தார்கள். உங்களுக்கான ரீலீஸ் ஆர்டர் வந்துவிட்டது. நீங்கள் விடுதலை ஆகிறீர்கள் என்றார்கள்.

இல்லை. அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. சரியாகக் கேளுங்கள் என்றேன். இல்லை. விடுதலை என்றார்கள். சரி அவர்களே சொல்கிறார்கள். கிளம்பலாம் என்று முடிவு செய்து கிளம்பினோம். சிறையை விட்டு வெளியே வந்தோம். இன்னொரு போலீசு ஜீப் தயாராக இருந்தது. You are under arrest என்றார்கள் (சிரிப்பலை). கைது செய்து ஹரியானா ரோதங் சிறைக்குக் கொண்டு சென்றார்கள். சரியான மழை. ஆடைகள் எல்லாம் நனைந்து சிறைக்குச் சென்றோம். அப்போது நள்ளிரவு 1-30 மணி. ஜெயில் சூப்பிரண்டு இல்லை. சப் சூப்பிரண்டு மட்டும் இருந்தார். அவர் எங்கள் உடமைகளை அக்கு வேறு ஆணி வேறாக சோதனை இட்டார்கள். அப்போது மது தந்தவதேயின் செருப்பு சற்று பிளந்து கொண்டிருந்தது. சூப்பிரண்டு இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பிய்த்து ஆராய்ந்தார். பிரதமர் நேற்றுதான் நம் ஆன்மாவைத் தேடவேண்டும் என்று சொன்னார். அதான் தேடுறார் போல என்றார். இது போன்று சோவின் ஒவ்வொரு வாக்கியமும் சிரிப்பலையை உண்டாக்குகிறது.

(கடந்த அத்வானி ரத யாத்திரையின் போது குண்டு விசியம் அனைவரும் அறிந்ததே. அதைப் பேசி ஜெ ஒரு natural ally என்றார். அதை விவரிக்கவேண்டிய அவசியம் இருக்காது. நாளிதழ்கள் பிரசுரித்துள்ளன)

Weak Prime Minister
8783DFB321A2EC0CE39AD9A7D435.jpg
நான் மன்மோகனை வீக் பிரதமர் என்று சொன்னதைப் பற்றி சோ குறிப்பிட்டார். வேற என்ன சொல்லுவது. தொட்டது தொன்னூறுக்கும் 10 ஜன்பத் சாலையையே பார்த்துக் அப்படித்தான் கூற வேண்டும். அமெரிக்காவிடம் பேசவெண்டும் என்றால் ஒபாமாவிடம் பேசினால் போதும். நாம் வைத்திருப்பது Prime ministerial system. இங்கே பிரதமர்தான் நம்பர் 1. ஆனால் அவரோ வேறு யார் அனுமதிக்கோ காத்திருக்கிறார். நான் என் வாழ்வில் சில காலம் பத்திரிகையாளனாக ராஜுஸ்தானில் பணியாற்றியதுண்டு. அப்போது ஒரு சமயம் USSRலிருந்து கம்யூனிச தலைவர்கள் இருவர் வந்தனர் (பேர் சொன்னார் விளங்கவில்லை) . அப்போது அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு அறிவுறை வந்தது. அந்த நாட்டு கம்யூனிஸ்ட் சீனியாரிடி படி தலைவர் பெயர்தான் கவரேஜ் செய்யப்படவேண்டும். இரண்டாமவரைப் பற்றி செய்தி போடாவிட்டாலும் பரவாயில்லை என்று. அது போன்ற கட்சி சார்ந்த ஒரு நிலையை சுதந்திர இந்தியாவில் இப்போதுதான் பார்க்கிறேன். உலகில் வேறு எந்த இடத்திலும் இது போன்ற நிலை இல்லை.

10 ஜன்பத்தில் அத்வானி!
1151_b_0312a662fb660e4cf26378f9c65d944c.jpg
ஆச்சரியத்தக்க வகையில் நானே ஒரு சமயம் 10 ஜன்பத் சாலையில் நான் வசிக்கும் சூழல் வந்தது. விபிசிங் ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுத்து வந்தோம். ரத யாத்திரைக்கு எந்த ஒரு தடையும் வரக்கூடாது என்று கேட்டிருந்தோம். தடை வந்த காரணத்தால் ஆதரவைத் திரும்பப் பெற்றோம். அப்போது பார்லிமெண்டுக்கு ராஜீவ் காந்தி ஒரு நோட் அனுப்பியிருந்தார். சந்திரசேகர் பிரதமராவதற்கு நாங்கள் நிபந்தனை அற்ற ஆதரவு தருகிறோம் என்று. உடனே ராஜீவ் காந்தியை போனில் அழைத்தார்கள். பிரதமரை முன்மொழிய எதிர்கட்சித் தலைவரால் மட்டுமே முடியும். காங்கிரசு தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. எனவே நீங்கள் முன்மொழிய முடியாது என்று விளக்கினார்கள். பிறகு நாங்களும் சந்திர சேகரை ஆதரித்தோம். எதிர்கட்சித்தலைவர் அத்வானி என்று அறிவிப்பு செய்யப்பட்டது என்று நிகழ்வுகள் நடந்தன.

அடுத்தநாள் ராஜீவ் காந்தியிடம் இருந்து அழைப்பு வந்தது. முதலில் நான் எதிர்கட்சித்தலைவர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்தார். பிறகு ஒரு யோசனை சொன்னார். நீங்கள் வெகு தொலைவில் இருக்கிறீர்கள். நீங்கள் காலி செய்து 10 ஜன்பத்துக்கு வந்திடுங்கள். நான் வேறு வீடு பார்த்துக் கொள்கிறேன். எப்பொழுதும் 7 ரேஸ் கோர்ஸ் பிரதமர் இல்லமாகவும் 10 ஜன்பத் எதிர்கட்சித் தலைவர் வீடாகவும் இருக்கட்டும் என்றார். தங்கள் யோசனைக்கு நன்றி. நான் இந்த வீட்டில் நெடுங்காலமாக வசித்து வருகிறேன். மாற்ற அவசியமில்லை என்று மறுத்து விட்டேன். பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு வீடு மாறவேண்டி இருந்தது.

மாநில சுயாட்சி
நரேந்திர மோடியின் ஆட்சியை குஜராத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள். அது போல பாஜக ஆளும் மாநிலங்களிலிலும் அதன் ஆதரவில் இயங்கும் ஆட்சிகளிலும் தரமான நிர்வாகத்தைத் தர முயற்சி செய்கிறோம். நம் அமைப்பின் படி வலுவான மாநில அரசு மற்றும் அதற்கு ஆதரவு அளுக்கும் மத்திய அரசு என்கிற Federal system இருக்கவேண்டும். ஆனால் காங்கிரஸ் அரசு திரும்ப மன்னராட்சியைக் கொண்டு வந்து மத்தியை வலுவானதாகவும் மாநில அரசை வீக் ஆக்கும் முயற்சி எடுத்து வருகிறது. ஸ்வராஜ்ஜியதிலிருந்தி சுராஜ் (நல்ல ஆட்சி) ஆட்சிக்கு மாறவேண்டும். ஆனால் நாம் மீண்டும் மீண்டும் பின்னோக்கிப் போய் கொண்டு இருக்கிறோம்.

ஊழல் அரசு
தற்போது நடக்கும் ஆட்சியில் பல பிரச்சினைகள் உள்ளன. சுதந்திரத்திற்குப் பிறகு இவ்வளவு பெரிய ஊழல்கள் எந்த ஒரு அரசிலும் நடக்கவில்லை. 2ஜியாக இருக்கட்டும். காமன் வெல்த் ஆக இருக்கட்டும். குற்றவாளிகளைக் காப்பதிலேயே குறியாக உள்ளது இந்த அரசு. பிரதமர் மன்மோகன் ஏதும் சொல்வதில்லை.

உள் ஒதுக்கீடு
முஸ்லீம்களை காங்கிரசை விட யாராலும் அப்பட்டமாக ஏமாற்ற இயலாது. உள் ஒதுக்கீட்டுச் சிக்கலில் எவ்வாறு பட்டுக்கொண்டு விழிக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். இது அடுத்து வர இருக்கிற மாநிலத் தேர்தல்களை மனதில் வைத்தே இந்தப் பிரச்சினை எழுப்பப்படுகிறது.

அத்வானி ஆங்கிலத்தில் பேசிய போது சிலர் கிளம்பிச் சென்றதைப் பார்க்க முடிந்தது. ஆனால் பெரும்பாலான கூட்டம் கலையாமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டும் கைகளைத் தட்டியும் ஆதரவு தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

எவ்வளவு பெரிய மனதுடன் பேசினார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று மோடியைப் பற்றிப் பேசியதைக் குறிப்பிட்டுப் பேசினார் சோ.  பிறகு மைக்கைப் பிடித்தார் மோடி.

வணக்கம். அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என்று டிபிகல் வடமாநில தலைவராய் தொடங்கியவர் எழுதி வைத்த அறிக்கையைப் படிக்க ஆரம்பித்தார். ஆரம்பமே GDP, economy என்று பேசியதால் சிலர் மண்டை காய்ந்து எழத் தொடங்கினார்கள். நல்ல வேளை எனக்கு கால் நீட்ட இடம் கிடைத்தது.

தமிழ்நாடு
பல விதங்களில் குஜராத்தும் தமிழ்நாடும் ஒன்று பட்டிருக்கின்றன. எனக்கும் உங்களுக்கும் பில்டர் காபி மிகவும் பிடிக்கும். அதனைத் தயார் செய்யப் பயன்படும் சிக்கரி குஜராத்திலிருந்து வருகிறது. தமிழ் பெண்களுக்கு காட்டன் சேலை மிகவும் பிடிக்கும் இந்தியாவின் அதிகமான பருத்தி விளையும் மாநிலமாக குஜராத் திகழ்கிறது. அதை விட பெரிய ஒற்றுமை. இரண்டுமே காங் அல்லாத முதல்வர்களால் ஆளப்படுகின்றன.

19gujarat2.jpg

காங்கிரஸ் அரசின் பிரச்சினை
ஒரு காலத்தில் சீனாவின் பொருளாதார மதிப்பைவிட இந்தியாவின் பொருளாதார மதிப்பு உயர்ந்திருந்தது. இப்பொழுது நிலை என்ன. இந்தியாவின் பொருளாதார மதிப்பை விட சீனா 3 மடங்கு பெரியது. காரணம் என்ன. எகானமி take off ஆகவில்லை. அதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இன்னமும் பட்டினி சாவுகள் நடக்கின்றன. குழந்தைகளுக்கு ஆரோக்கியக் குறைவினை சரி செய்ய முடியவில்லை. இவற்றை வைத்துக்கொண்டு எப்படி வல்லரசாக முடியும். நமது முயற்சிகள் ஒருங்கிணைத்து இரு இலக்க வளர்ச்சியை எட்ட வேண்டும். ஆனால் இந்த அரசால் அதைச் செய்ய முடியவில்லை. தற்போது இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வெளிநாடுகளுக்குப் போகிறார்கள். இது ஒரு சேதமான ஆரம்பம். இப்பொழுதாவது நாம் விழித்துக்கொண்டு முதலீடுகளை ஈர்க்கவேண்டும். இல்லை என்றால் மிகவும் பின்தங்கிவிடுவோம்.

தேசப் பாதுகாப்பு என்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. தீவிரவாதம் மற்றும் நக்சலிசம் அதிகமடைந்து வருகிறது. பார்டரில் பாகிஸ்தான் உள்ள காரணத்தால் அதிக ஆபத்தில் நாங்கள் இருக்கிறோம். அதற்குத் தகுந்த தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் இருக்கிறது மத்திய அரசு.

காங்கிரசும் முஸ்லீமும்
ஸ்வராஜ்ஜியத்திலிருந்து சுராஜ்ஜியத்திற்கு மாறவேண்டும் என்று அத்வானி கூறினார். ஆனால் திரும்ப மன்னராட்சியை ஏற்படுத்தி வருகிறது காங்கிரஸ். அது ஓட்டு வங்கி அரசியலைப் பயன்படுத்தி தேசத்தை அழித்துக் கொண்டு உள்ளது. முஸ்லிம்களுக்கு அவர்களை விட யாராலும் துரோகம் இழைக்க இயலாது. ஆனால் எதிர்வரும் 5 மாநில தேர்தல்களை மனதில் கொண்டு அவர்களின் ஓட்டு வங்கிக்காக இப்பொழுது உள் ஒதுக்கீடு என்னும் நாடகத்தை நடத்துகிறது.

தனிநபர் அரசியல்
எல்லாவற்றையும் விட புதிதாக ஒரு அரசியல் பாணி காங்கிரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் தனி நபர் அரசியல். தனக்குப் பிடிக்காத நபர்களை எப்பாடு பட்டாவது தொல்லைகளைக் கொடுத்து அகற்ற முயற்சிப்பது. துரதிருஷ்ட வசமாக நான் அதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். எப்பாடு பட்டாவது என்மீது குற்றம் கூற சிபிஐயைப் பயன்படுத்துகிறார்கள். சிபிஐ மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ. எனக்கு இல்லை. அதை வைத்து காங்கிரஸ் ஆளாத மாநிலங்களை மிரட்டி வருகிறார்கள்.

இவற்றை விடுத்து நாட்டை முன்னேற்ற முயற்சிகள் எடுக்கவேண்டும்.  என்னுடைய குஜராத் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். நம்மால் முடியும்.

குஜராத்
dilip_656946f.jpg
தேசத்தின் வருட விவசாய வளர்ச்சி 3 சதம். குஜராத்தில் மட்டும் 11 சதம். உங்கள் மாநிலத்தில் மனிதர்களுக்கு காட்டராக்ட் சிகிச்சை செய்து கேள்விப் பட்டிருப்பீர்கள். குஜராத்தில் கால் நடைகளுக்கு நாங்கள் செய்கிறோம். இதன் மூலம் பால் உற்பத்தியில் 60 சதம் உயர்ந்திருக்கிறோம். உங்களுக்கு அமுல் தெரியாமல் இருக்க முடியாது. இதை வைத்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த நாட்டில் மனிதர்களுககு ஒரு health card கிடையாது. ஆனால் எங்கள் மாநிலத்தில் ஒவ்வொரு விவசாயியிடமும் soil card இருக்கிறது. என்ன மாதிரியான நிலம். நிலத்தில் வளம் எவ்வளவு. எந்த நிலத்திற்கு எவ்வளவு பூச்சி மருந்து அடிக்கவேண்டும் என்று அணைத்தையும் அட்டவணைப் படுத்தியிருக்கிறோம். விவசாயிகளுக்கு என்ன தேவை. அவர்களுக்கு என்ன கருவிகள் தேவை என்பதை எல்லாம் உணர்ந்து அவற்றை முடிந்த அளவிற்குப் பெறுக்கி இருக்கிறோம்.

தொழில் முனைவோர் நம்பிக்கை
நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல கட்டமைப்பு வசதிகள் தேவை. தரமான சாலைகள். துறைமுகங்கள். விமான நிலையங்கள் ஆகியவை. ஆனால் அவற்றை வளர்க்காமலே வைத்திருக்கிறார்கள். இவற்றை வைத்துக்கொண்டு உலகப் பொருளாதாரப் போட்டியில் வெற்றி பெற இயலாது.

தொழில் முனைவோருக்குத் தகுந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும். டாடா நானோவிற்கு மேற்கு வங்கத்தில் பிரச்சினை வந்தபோது என்னுடைய அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள். இந்தந்த மாநிலம் இன்னன்ன சலுகைகளை வழங்குகின்றனர் என்று. மேற்கு வங்கத்திலிருந்து வெளியேறுகிறோம் என்று ரத்தன் டாடா அறிவித்த அடுத்த நிமிடம் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஸ்வாகதம் (நல்வரவு)

ஊழல்
1313431101_latest_news_15-kani-raja-kalmadi.jpg
அப்படி தொழில் முனைவோரின் நம்பிக்கையைப் பெற்றதாக குஜராத் மாநிலம் திகழ்கிறது. ஆனால் அடுத்தடுத்த ஊழல்களால் முதலீட்டார்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். சுதந்திர இந்தியாவில் அதிகமாக ஊழல் புரிந்தது இந்த அரசுதான். 2ஜி ஊழல். காமன்வெல்த் ஊழல் என்று மெகா ஊழல்கள் குற்றச்சாட்டுகள் உள்ளன. பெரிய பெரிய தொகைகளில் ஊழல் செய்கிறார்கள். அந்த டெண்டர்களின் மதிப்பு ஒரு மாநில அரசின் பட்ஜெட் தொகையை விட அதிகம்.

இந்த ஊழல் அரசு அகற்றப்படவேண்டும். அதற்கான ஆதரவை ஜெ தரவேண்டும். தவறுகள் நிகழ்ந்தால் தண்டனை கொடுப்பதில் தமிழ் மக்கள் சிறந்தவர்கள். ஆகவே சோ ராமசாமி போன்றவர்கள் இந்த விசியங்களைப் பற்றி ஆழமாக எழுதி மக்களிடம் விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும்.

அரசியல் கூட்டங்களுக்குப் போவதில் பெரிய நன்மைகள் ஏதும் வந்துவிடாது. ஆனால் அதில் ஏற்படும் ருசிகரங்களுக்காவே பலரும் போய் வருகிறார்கள். சுதந்திர காலத்தில் வாழ்ந்த அத்வானி போன்றவர்களிடம் ஆவணப்படுத்தவேண்டிய செய்திகள் நிறைய பொதிந்திருக்கின்றன. அவற்றையும் அவர்களிடம் உள்ள செவி வழிச்செய்திகளையும் முழுக்க இல்லாவிட்டாலும் ஓரளவாவது யாராவது ஆவணப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

முற்றியது.

15-01-2011 தமிழ்பயணி குழுமத்திற்கு எ

7 thoughts on “துக்ளக் 42வது ஆண்டு விழா கண்ணோட்டம்

  1. மிகுந்த சிரமப்பட்டு மொத்த நிகழ்ச்சியையும் விரிவாகத் தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    1. நன்றி. உங்கள் வருகையும் மறுமொழியுமே அதற்குச் சன்மானம்.

  2. அருமையான கவரேஜ் ! நிகழ்ச்சிக்கே போயிட்டு வந்த திருப்தி கிடைச்சது !

    நன்றி !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s