சென்னை புறநகர் ரயில் ATVM எந்திரங்கள்


இது ஒரு பாவகரமான பொட்டி. பல லகரங்களை விழுங்கிவிட்டு தேமேஎன்று இடத்தை அடைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் அசமந்தம். மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயல்திட்டத்தின் இன்றைய நிலை என்ன?

பெரிய வரிசை. மதிய வெய்யிலில் வியர்த்து வழிந்து கிண்டி இரயில் நிலையத்தின் வெளியில் டபுள் S போட்டு நின்று கொண்டிருக்கும் கூட்டம். உள்ளே இரண்டு கவுண்டர்கள். அதில் ஒன்றில் ஆள் இல்லை. அந்த ஒரு டிக்கட் கிளர்க் என்கிற ஆண்டவரிடம் அருள் பெறக் காத்திருக்கும் ஜனங்களின் எண்ணிக்கைதான் எத்தணை எத்தணை.

காலை வேளையில் அத்தணை ரயில் நிலையங்களிலிலும் இதுதான் நிலைமை. அதைத்தாண்டி பார்க், சென்ட்ரல், எழும்பூர், கிண்டி, தாம்பரம் ரயில் நிலையங்களில் எப்பவுமே இதுதான் கண்கூடு.

வரிஈஈசை

வரிஈஈசை

கண்டுகொள்ளாத ரயில்வேயில் நீடு துயிலையும் பயணிகளின் நெடுந்துயரையும் நீக்க பாடிவந்த நிலாதான் ATVM – Automatic Ticket Vending Machine.

சென்னை பீச் ரயில் நிலையத்தில் ATVM

சென்னை பீச் ரயில் நிலையத்தில் ATVM

இதன் பின்புலத்தைப் பார்த்துவிட்டு நம்ப பிரச்சினைக்கு வரலாம்.

தானியங்கி டிக்கட் மெசின்கள் பிரிட்டனில் 1842ல் நிறுவப்பட்டன. அதன் வழி வந்தவைதான் இந்த ATVMகள். டிக்கட் அட்டையில் ஓட்டை போட்டுக் கொடுக்கும் இத்தகைய கருவிகளுக்கு 1990களிலேயே மங்களம் பாடி வீட்டிக்கு அனுப்பிவிட்டார்கள். டிராவல் கார்டுகள் அதனைப் பிடித்துக்கொண்டு வருடங்கள் பலவாகின்றன. உலகின் புகழ் பெற்ற டிராவல் கார்டுகளாக லண்டன் போக்குவரத்து கார்டான ஆய்ஸ்டர், ஆங்காங்கில் உபயோகத்தில் உள்ள ஆக்டோபஸ் கார்டுகளை உதாரணமாகக் கூறலாம்.

டிராவல் கார்டுகள்

டிராவல் கார்டுகளில் உபயோகம் என்பது டிக்கட் எடுக்க மட்டும் என்பதில்லை. ரீசார்ஜ் செய்வதிலும் எளிமையாக இருப்பது அத்தியாவசியமானது. உதாரணமாக லண்டனில் வழங்கப்படும் டிராவல் கார்டுகளை எப்போதும் உங்கள் பாக்கெட்டுகளில் வைத்திருந்து தீரத்தீர ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ரீசார்ஜ் செய்வதற்கு ரயில் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. சிறிய பெட்டிக்கடைகளில் ஆரம்பித்து ஷாப்பிங் மால்கள் வரை எலக்ட்ரானிக் ரீசார்ஜிங் செய்ய ஆட்கள் இருக்கின்றனர்.

ஆய்ஸ்டர் கார்டைத் தேய்க்கிறார் ஒருவர்

ஆய்ஸ்டர் கார்டைத் தேய்க்கிறார் ஒருவர்

அத்துடன் ஒரே கார்டு ரயிலுக்கும் பேருந்துக்கும் டியூப் (மெட்ரோ ரயில்)க்கும் பயன்படுத்தப்படுவதால் ஆய்ஸ்டர் இன்றி ரயிலுக்குள் ஆய் கூட போகமுடியாது என்பதே உண்மை. கூட்டம் குறைகிறது. நேரம் வீணாவதில்லை. அதை விட பயணக்கட்டனமும் குறைகிறது. (காசு கொடுத்து பேருந்து டிக்கட் எடுத்தால் 2.20 ரூபாய். அட்டை இருந்தால் 1.20 ரூபாய்). தவிற சில்லரை தொந்தரவு கிடையாது.

மெட்ரோ என்றால் லண்டன் நகரத்திற்குள் எல்லா ரயில், பேருந்து, படகு, டியூப் நிலையங்களிலும் இது செல்லும். ஒட்டு மொத்த பயணத்தின் 80% ஆய்ஸ்டர் கொண்டே நடக்கிறது.

இந்தியாவில் டிராவல் கார்டு

மும்பைதான் முன்னோடி. மும்பையில் கடவுள் அருளுக்காக வெயிட் பண்ணாமல் ஒரு மெசினில் டிக்கட்டைக் கவர்ந்து சென்ற பையன் இன்னும் என் கண்களில் நிற்கிறான். ஒரு நொடி சென்னை டிக்கட் எடுப்பு இன்னல்கள் – கியூ சண்டைகள் – ஒரு டிக்கட் எடுத்துக்கொடுங்களேன் ப்ளீஸ் என்று யுவதிகளிடம் ஜொள்ளும் யுவன்கள் என்று எல்லாமே வந்து போயின. இது போன்ற மெசின்கள் நமக்கும் கிடைக்காதா என்கிற ஏக்கம் ஒவ்வொரு சென்னை சிங்காரர்களுக்கும் வராமல் இருப்பதில்லை.

ஜோகேஸ்வரி ரயில் நிலையம் - வரிசையும் ATVMகளும்

ஜோகேஸ்வரி ரயில் நிலையம் – வரிசையும் ATVMகளும்

கிடைத்தது வரம்

புறநகர், MRTS ரயில்களுக்கான ஸ்மார்ட்கார்டு

புறநகர், MRTS ரயில்களுக்கான ஸ்மார்ட்கார்டு

2008ல் முக்கிய ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கட் எந்திரங்கள் வந்தன. படிப்படியாக பிற ரயில் நிலையங்களுக்கும் வந்தன. 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 105ரூபாய்க்கு டிக்கட் எடுக்கும் வசதி ஆகியவை வந்தன. நீண்ட கியூ இல்லை. சண்டை இல்லை. வந்தோமா சென்றோமா என்று வேலை முடியும். ஒவ்வொருமுறை கிண்டி ரயில் நிலையத்தைக் கடக்கையிலும் ATVM பகவானை ஆவாகணம் செய்தவருக்கு நன்றி செலுத்திவிட்டுத்தான் போனேன்.

நிலைத்ததா?

இரு மாதங்களுக்கு முன் டிக்கட் செக்கர்களுக்கான ரயில்வே யூனியன் போஸ்டர் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. ATVM போன்ற ஆகாத ஐடியாக்களை ஏசி ரூம்களிலிருந்து செயல்படுத்தும் …….. என்று ஏக வசனத்தில் வசை மழை பெய்திருந்தது. போஸ்டர் எப்படி அடிக்கவேண்டும் அல்லது சுவர் விளம்பரங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ரயில்வே யூனியன்கள் ஒரு முன்னுதாரணம். மருந்துக்கும் மரியாதை இருக்காது. எழுதியவருக்கும் சரி. எழுதப்பட்டவருக்கும் சரி. கூட்டம் கூட்டமாக இயங்கி வரும் தோழர்களின் நாநயம் இது.

சரி விசியத்திற்கு வருவோம். போஸ்டரில் கூறப்பட்ட ஏக வசனத்தை விடுத்துப் பார்த்தால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. ATVMகள் பஞ்சராகி பல நாள் ஆகின்றன. நிறுவிய சில நாட்களிலேயே கலெக்சன் சரியில்லை. அன்றாட வசூலில் 1% கூட மெசின் மூலமாக வரவில்லை. அதை விட மோசம் வருடங்கள் உருண்டோட அவை இன்னும் குறைந்ததே தவிற அதிகமானதாய் தெரியவில்லை. புறநகர் மற்றும் MRTS புண்ணியத்தில் கச்சேரி செய்யப்போகிறவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 10லட்சம் பேர். சீசன் டிக்கட் மற்றும் டெய்லி டிக்கட் என்று இவர்கள் மெசின்களைச் சீந்தவில்லை.

ஒரு எந்திரம் 3.5 லகரம் என்கிறார்கள். என்ன ஆச்சு ஏன் ஆதரவில்லை என்று தெரியவில்லை. 70 மெசின்கள். 37 ரயில் நிலையங்களில் உள்ளன. புண்ணியமில்லை. ஒரு டிக்கட் கிளர்க் 2 நிமிடத்தில் 4 பேரை அட்டெண்ட் செய்கிறார் என்றால் 9 பேரை ATVMஆல் செய்ய முடியும். மொத்த வருமானத்தில் 18% வருமானத்தை மும்பை மெசினால் பெற முடிகிறது என்றால் சென்னை மெசின்களால் ஏன் பெறமுடியவில்லை?

ஓரிவரிருவரிடம் பேச்சுக் கொடுத்தபோது..

 • 100 ரூபாய் முன்னமே கொடுத்து யார் டிக்கட் பெருவது? (பணம் அதில் முடங்குகிறது)
 • அதில டிக்கட் எப்படி எடுக்கிறதுன்னு தெரியலை (சிலர் அதை மிரட்சியுடன் பார்க்கிறார்கள்)
 • என்ன 100ரூபாய் கட்டினா 105 ரூபாயா.. அப்ப அத வாங்கனும்… (வாங்கினாரா தெரியாது)
 • எல்லாத்தையும் விட சிலருக்கு அது அநாவசியமாக இருக்கிறது. வரிசையில் நிற்பதுதான் harmony of indian railway

உபயோகப்படுத்துபவன் என்கிற முறையில் எனது ஆதங்கம்

 • நல்ல சமயத்தில் காலை வாரும். மெசின் வேலை செய்யாது. பிரிண்ட் அடிக்க டிக்கட் இருக்காது. பழுதடைந்த எந்திரங்கள் நாள் கணக்கில் சரிபார்க்கப்படுவதில்லை. சமயத்தில் வாரக்கணக்கும் ஆகிறது.
 • எந்திரத்தின் அமைவிடம் வாஸ்து சரியில்லை. உதாரணமாக டிராக்கின் அந்தப் பக்கம் ஏறி இறங்கி எடுக்க வேண்டி வரும். மூச்சிறைக்க ஏறி இறங்கினால் அந்த மெசின் வேலை செய்யாது
 • பொதுவாக பிளாட்பாரத்தின் தொடக்கத்தில் இருப்பது வசதியானது. யாரும் ஒடச்சி அள்ளிட்டுப் போகாம பார்த்துக்கணும்.
 • எந்திரத்தின் எண்ணிக்கை மிகவும் கம்மி.
 • பீக் அவரில் ரீசார்ஜ் செய்யப்போனால் செய்ய மாட்டார்கள். அப்படியே அவர்கள் ரீசார்ஜ் செய்ய எடுத்துப்போனால் வரிசையின் பின்புறம் உள்ளவர்கள் உச்சு நொச்சு கொட்டுவார்கள்
 • மும்பை ஸ்மார்ட் கார்டு மாதிரி ஆன்லைன் ரீசார்ஜ் வசதி இல்லை.
 • பயணம் செய்யவில்லை என்றால் 6 மாசத்தில் தொகை அலேக் ஆகிடும்.

ஏற்கனவே முக்கிய ரயில் நிலையங்களில் தன்னார்வலரோ அல்லது பிறரோ ATVMபயன்படுத்தி டிக்கட் எடுத்துக் கொடுப்பதைப் பார்க்கலாம். 100க்கு 5 அவர்களுக்கு இலாபம்!

ICUவில் இருக்கும் ATVM எந்திரத்தைப் பிரபலப்படுத்துவதற்காக ரிடையர் ஆன மக்களை பிரதிநிதிகளாக பயன்படுத்தப்போவதாக செய்திகள் வருகின்றன. பார்ப்போம்.

இவை இருந்தாலும் ஒரு ஸ்மார்ட் கார்ட் அவசியத்தேவையே. வாங்கி வையுங்கள். இருக்கும் டிக்கட் எந்திரங்களையாவது காப்பாற்றுங்கள்.

தமிழ்பயணி குழுமத்திற்காக

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s