அதிகாலை மாமல்லபுரம் பயணம்


ஒரு சிறிய பயணத்தை அடுத்த நாள் காலையில் மேற்கொள்வது என்று முடிவானது.  எந்த இடம்?! முதல் கேள்வி. சிறுவாபுரி முருகன் கோயில் என்று முதலில் முடிவானது. அந்த தொலைவு போகும் அளவிற்கு பொறுமை இல்லை. நல்ல சாலைதான் ஆனால் தென்சென்னையிலிருந்து வட சென்னை எல்லையைத் தாண்டுவது என்பது எரிச்சலான காரியத்தில் ஒன்று.  முதல் நாள் இரவு அந்த திட்டம் மாறி கோவளம் பீச் என்று முடிவானது. புதிதாக வண்டி வாங்கி அலுவலகம் தவிற வேறு எங்கும் போகாத நிலையில் அதை ஒரு காரணமாக்கி கிளம்புவதற்கு கதை திரைக்கதை எல்லாம் எழுதியாச்சு.  அதோடு இந்த முறை என் இல்லத்தரசியாரும் மகனும் வருவதாக கூடத்தொற்றிக்கொள்ள ஏகமனதாக கோவளம் பீச் முடிவானது.

காலைப்பயணம் என்பது மனதிற்கு உகந்தது. சென்னையில் புழுக்க இரவின் கொடுமைக்கு ஒத்தடம் கொடுப்பதாய் அமையும் அந்த ஈரப்பதம் மிகுந்த காற்றும் மெலிதான வெளிச்சமும். எனவே கிழக்குக் கடற்கரைச் சாலை பயணம் என்பது காலைக்கே உகந்தது. இது ஏற்கனவே எழுதிய கதையிலும் கூறியுள்ளேன். எனவே அதிகாலை 4-15 மணிக்கே எழுந்து கடகடவென கிளம்புகையில் காலை மணி 4-55. வழிவிடு விநாயகர், பாடிகாட் முனீஸ்வரர் என்று தெய்வங்களை துதித்துவிட்டு வண்டியைக் கிளப்புகிறோம்.

இரு மணித்துளிகளில் அண்ணாசாலையை அடைந்து அங்கிருந்து வெகு விரைவில் பழைய மகாபலிபுரம் சாலையை அடைந்து அதிலேயே மிதமான வேகத்தில் பயணிக்கிறோம். பல கால் செண்டர் வண்டிகள் வழக்கமான வேகத்திலும் தூக்கத்திலும்!  கடந்த முறை போல் அல்லாமல் ஒரு நிகழ்வு நம் கவனத்தைக் கவர்கிறது. ஒரு சைக்கிள் குழுமம் மத்திய கைலாஷ் சந்திப்பில் ஏதோ திட்டம் வகுத்துக்கொண்டுள்ளனர். ஆண் பெண் என்று மேலும் சில சைக்கிள் காரர்கள் ஏற்கனவே கிளம்பிவிட்டிருந்தனர். ஒளிரும் தலைக்கவசத்துடன் கடமையே கண்ணாக அவர்கள் சாலையில் விரைந்துகொண்டிருந்தனர். இந்தப் பயணம் முடியும் வரை அவர்கள் நம் உடன் பயணித்தனர்.

சிறுசேரியுடன் முடிவடையும் பகட்டான சென்னை பயணம், ஏழ்மையும் பகட்டும் கலந்த கேளம்பாக்கம் சாலையில் தொடர்கிறது. தொடர்மாடிக்குடியிருப்புகளும் அதன் ஊடே நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தோட்டங்களும்… காற்றுக்குப் பஞ்சமில்லை. அடுக்குமாடிக்குடியருப்புகளின் உயரத்தைக் காட்டுகையில் கூடவே பூகம்பத்தின் விளைவுகளை நியாபகம் வருகிறது என் மனைவியாருக்கு. என் கவலை தோட்டங்களின் மீது.

சூரியன் இன்னும் தலைகாட்டவில்லை என்றாலும் கிழக்கில் விடிவது கண்கூடாகத் தெரிகிறது. அந்தச் சமயம் நாம் கேளம்பாக்கத்தை அடைகிறோம். நேராக பயணத்தைத் தொடராமல் கோவளம் சாலையில் திருப்புகிறோம். பொதுவாக கிழக்குக் கடற்கரைச் சாலையுடன் இணைய மூன்று பிரதான வழிகள் – திருவான்மியூர், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம் மற்றும் திருப்போரூர். இதில் கேளம்பாக்கம் கோவளம் சாலை சற்று கண்ணுக்குப் பசுமையாக இருக்கும். கருவைக் காடுகள் மற்றும் நீர்நிலைகள் இருப்பதால் இந்த சாலையைத்தான் கடந்த பயணத்திலும் தேர்ந்தெடுத்தோம். காற்று இன்னும் சில்லிப்பாய் இருக்கிறது. கொசு பூச்சிகள் அதிகமாக பறக்கின்றன. வந்தாச்சு கோவளம் சந்திப்பு.

நேரம் அதிகமில்லை. சூரிய உதயத்திற்கு கோவளத்திற்குப் போயிடலாம் என்றாலும் பயணத்தை மாமல்லபுரம் வரை நீட்டிப்பது என்று மனைவியாருக்குத் தோன்றுகிறது. ஆச்சரியமில்லை. அந்த சாலை அது மாதிரி.  சரி சூரிய தரிசனத்தை போகும் வழியில் பெறலாம் என்று கி.க சாலையில் பயணத்தைத் தொடர்கிறோம். வண்டி ஓரிடத்தில் நிறுத்தப்பட்டு படங்கள் எடுக்கப்படுகின்றன. கண்ணுக்கெட்டும் தூரத்தில் கடல் – நீர் கவசம் அணிந்த புல்வெளி – கடற்கரையிலிருந்து புறப்பட்டு வரம் வலிய சில் காற்று – வண்டியின் பக்கத்தில் ஆள் அரவம் இல்லாத ஒரு நெடுஞ்சாலை. வேறு என்ன வேண்டும்?!

50 அல்லது 55க்கு மேல் போகவில்லை. முக்கிய காரணம் இரண்டு பேரை கூட அள்ளிக்கொண்டு போனது. அத்துடன் புது வண்டியை 60க்கு மேல் முடுக்க இது நேரமும் இல்லை. சென்ற முறை இது மாதிரியான ஒரு இனிய பயணத்தில் பழைய வண்டியில் வைத்த ரெக்கார்டுதான் 109kmph. ஆனால் இப்ப முடியாதே! ஆனால் ஒரே சாலை – ஒரே வலைப்பதிவு – இரு மாதிரியான பயணங்கள்.

மீண்டும் பயணம் துவங்குகிறது. வழித்துணைக்கு இப்போது பைக்கர்கள் பறக்கிறார்கள். மாமல்லபுரம் எல்லைத் தொடுகையில் சிற்பக்கலைக்கூடங்கள் கண்ணில் படுகின்றன. வேறு என்ன. படம்தான்! ஏற்கனவே எழுதிய மலம்புழா பயணக்கட்டுரையில் சொன்னபடி 60க்குமேல் பயணிப்பது என்பது பயணத்தின் இனிமையைக் கெடுத்து விடலாம். என்னை விட என் உடன் வந்த சைக்கிள் காரர்கள் காலையின் இனிமையை முழுமையாகப் பருகியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. வேகத்தில் ஓட்டுவது என்பது ஒரு கைவந்த கலை. காலை வாறும் கலையாக மாறாதவரை இனிமையாகவே இருக்கும்.

1 மணி 45 நிமிட பயணம் அர்ச்சுனன் தபசில் முடிகிறது. நமக்கி முன்பே ஆந்திரா தமிழ்நாடு என்று பலதரப்பட்ட சுற்றுலா குழுவினர் மாமல்லபுரத்தை அலச ஆரம்பித்துவிட்டார்கள். நாமும் அலசுவோம்.

காலை நேரத்தில் இந்த மண்ணில் உட்காரத்தான் எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.

நல்லதொரு காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு 09-45 மணிக்குத் துவங்கும் நமது வீடு நோக்கிய பயணம் வழியில் முட்டுக்காட்டில் ஒரு படகு சவாரிக்குப் பிறகு 11-40க்கு முடிகிறது.

பை பை!

பயண தூரம்: 112 Kms
அதிகப்படியான வேகம்: 55 கிமீ/மணி (!)

5 thoughts on “அதிகாலை மாமல்லபுரம் பயணம்

  1. புகைப்படங்கள் அருமை. மாமல்லபுரம் நானும் போயிருக்கிறேன். ஆனால் காலை நேரத்தில் இன்னும் அழகான மாமல்லபுரம் தெரிகிறது.

    1. நன்றி தென்றலாரே. அதிகாலைப் பயணம் என்பது எப்பொழுதும் அதிகம் தீண்டப்படாத காட்சியைக் காட்டுவதால் அதன் அழகு கொஞ்சம் ஜாஸ்திதான்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s