பாகிஸ்தான் அரசியல் வரலாறு
ஆசிரியர் – பா. ராகவன்
பதிப்பு – மதி நிலையம், 2012
பிரிவு – அரசியல்
நான் முன்னரே கூறியது போல செஞ்சீனத்தின் இன்னுமொரு புத்தகத்தைப் பார்க்கும் முன்னர் ஒரு Action-Thriller ஆக இந்தப் புத்தகத்தைப் பார்த்துவிடலாம். சமகால நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள இந்தப் புத்தகம் வெகு உபயோகமாக இருக்கும்.
முகம்மது அலி ஜின்னா தொடங்கி சர்தாரி வரை முக்கியமான பாகிஸ்தான் தலையெழுத்தை மாற்ற முயன்றவர்களை ஆசிரியர் அவரது நடையில் அறிமுகப்படுத்துகிறார். காஷ்மீர் தீவிரவாதம் – கிழக்கு பாகிஸ்தான் (அ) பங்களாதேஷ் – கார்கில் போர் – பாகிஸ்தான் தலிபான் காதல் என்று முக்கிய நிகழ்வுகளைப் படம் போட்டுக் காட்டும் இந்த நூல் குமுதம் இதழில் தொடராக வெளி வந்தது. மொத்தம் 28 கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர் பா.ராகவன் தமிழின் மிக முக்கிய எழுத்தாளர்களுல் ஒருவர். கதையல்லாத எழுத்து வகைக்கு மாபெரும் வாசகர் வட்டத்தை உருவாக்கியவர். அதே சமயம் படைப்பிலக்கியப் பங்காளிகளுக்காக பெருமைக்குரிய பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றவரும் கூட.
சுதந்திரம் கிடைத்து 10 நாட்களுக்குப் பின் என்று பாகிஸ்தான் பக்கம் காமிராவை வைத்து புத்தகத்தை ஆரம்பிக்கிறார் ஆசிரியர். தனியான தேசம் – நாடு மாறும் மக்களின் அகதிகள் பிரச்சினை – கலவரங்கள் என்று ஒரு நிம்மதியில்லாத சூழ்நிலையில் பாகிஸ்தான் பிறப்பெடுக்கிறது. இன்றளவும் அவர்களின் நிலை அவ்வாறுதான் இருக்கிறது. ஜின்னாவை ஒரு “இம்சை பிடிச்சவராகத்தான்” இன்றளவும் கருதி வந்திருக்கும் வேளையில், அவரது இஸ்லாமிய அரசின் நோக்கங்களை அவரின் பக்கம் இருந்து பார்த்தால் நியாயமாகத்தான் தோன்றும். ஆனால் அவற்றை முழுமையாகச் செயல்படுத்தும் திறன் அவரிடம் இல்லாது போனதுதான் வேதனை. காஷ்மீர் பிரச்சினையை முதல் கட்டுரையில் அறிமுகப்படுத்துகிறார். காஷ்மீரத்தை அடிப்போம் என்று முடிவு செய்யும் பாகிஸ்தான் அதிகாரிகள். ஆனால் நேராக அல்ல – குள்ளநரித்தன வேடம் போட்டு…. அடிப்போம் என்று ஒரு மனதாக முடிவு செய்கிறார்கள். இன்று வரை அடித்து இரத்தம் குடித்தும் பசியாறாத பெரு மகன்கள். காஷ்மீர் மன்னர் ஹரிதாஸின் நிலை பற்றிய பத்திகள் நிச்சயம் அவர் உணர்ந்த பதட்டத்தைப் படம்போட்டுக் காட்டுகின்றன – “மூன்றாவது யோசனை” கட்டுரை


முதல் காஷ்மீர் போருக்குக்கான குள்ளநரித்தனத்தின் பின் உள்ள காரணங்களை (காஷ்மீர் துவங்கி ஆப்கன் சுல்தான் வரை) நாம் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் “கூப்பிடு கொலைகாரர்களை” என்ற கட்டுரை வருகிறது. காஷ்மீருக்குப் போரிடச் சென்ற பதான் ஆதிவாசிகள் என்னும் முட்டாள் வஸ்தாதுக் கூட்டம் முஸாபராபாத் வந்த உடன் புனிதப்போரை மறந்து கொள்ளை அடிக்க ஆரம்பிக்கும் காட்சியை விளக்கும்போது மனமாற்ற ஜிகாத்தின் முதல் பதிப்பு தீவிரவாதிகளைக் காட்டுகிறது. அதன் மறுபதிப்பு ரீப்பிரிண்டுகள்தான் இப்ப இருக்கிறார்கள்.

இதை அறியாமல் தூங்கும் மன்னர் ஹரிதாஸின் பரிதாப நிலையை “உறங்கும்போதே சுட்டுவிடு” கட்டுரையில் சொல்கிறார். எப்படியாவது இந்தியாவுடன் சேரவேண்டும் என்கிற பிடிவாதமாக பாகிஸ்தான் பக்கமும் – எப்படியாவது பிழைத்துக்கொள்ளவேண்டும் என்று ஹரிதாஸ் பக்கமும் தோன்றியிருக்கவேண்டும். என்ன ஒரு மனஇருக்கம் வந்தால் இப்படி ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு மன்னர் படுக்கப்போவார் என்று தோன்றுகிறது. காட்சிகள் விறுவிறுப்பாய் மாறுகின்றன. காஷ்மீர் இந்தியா வசமாகிறது.

நம்ப வீடு மாறுவது கூட அவ்வளவு வேகமாக மாறமாட்டோம். அவ்வளவு வேகமாய் நடந்தது பாகிஸ்தான் “தனிக்குடித்தனம்”. நம்ப வீட்டுப் பத்திரப் பதிவு கூட அவ்வளவு வேகமாய் நடந்திருக்காது. அவ்வளவு வேகமாக நடந்தது காஷ்மீர் இணைப்பு. இதைப் புரியவைப்பதில் ஆசிரியர் பெருவெற்றி பெற்றிருக்கிறார். இந்தப் படுபாவி ஹரிதாஸ் ஏதாவது ஒரு ஜனநாயக ஓட்டு வேடம் போட்டு இந்தியாவின் பக்கம் முன்னரே சேர்த்திருந்தால் இந்தக் களரிகள் எல்லாம் பார்க்க வேண்டி இருந்திருக்காதோ என்னவோ.
“வெறியாட்டம்” கட்டுரையில் பாரமுல்லா நகரில் பதான் ஆசிவாசியினர் நடத்திய கொடூரம் கொப்பளிக்கும் கொள்ளை – கன்னியாஸ்திரிகள் கற்பழிப்பை விளக்குகிறார். கட்டுரை சொல்லியிருக்கும் அளவிற்கு அதன் தாக்கம் மக்களிடையே இருந்திருக்காது. சொல்ல முடியாத கொடூரங்களை அவர்கள் நிகழ்த்தியிருக்க வேண்டும். ஆதிவாசி மூர்க்கர்களாக இருந்து – ஜிகாதிகளாக சாயம் பூசப்பட்டு – முஸாபராபாத்தில் கொள்ளைக்காரர்களாக உருமாறி – பாரமுல்லாவில் ரேப்பிஸ்டுகளாகப் பரிணமித்திருந்தார்கள் புனிதப் போராளிகள். கூடவே இலவசமாக பெண்கள் – முதியோர்களின் கொலைகள் வேறு.

மவுண்ட் பேட்டனின் காஷ்மீர் நிலைப்பாடும் அதை பாகிஸ்தான் தவறாகப் புரிந்து கொண்டதும் புதிய செய்தி. காஷ்மீர் கைப்பற்றுதல் முயற்சி முறியடிக்கப்பட்டு 1947 யுத்தம் மீண்டு அதிலும் மூக்குடைபட்ட பாகிஸ்தான் ISIஐ உருவாக்க அடிவாரம் போடுகிறது என்கிற செய்தியைக் கூறுகிறார். அதிலும் இந்தியா மிகமோசமாகப் பாதிக்கபட்டுள்ள PoK என்கிற ஒரு கயவாலித்தனம் உலக நாடுகளின் கட்டப்பஞ்சாயத்தால் உருவாக்கப்படுகிறது.

நமது பர்சுக்குத் திரும்பத் திரும்ப வேட்டு வைக்கும் ஆசிரியரின் எழுத்து நடை!!
..(காஷ்மீர்) விலை அறுபது லட்சம் ரூபாய். இன்றைக்கு அறுபது லட்சத்தில் போயஸ் கார்டனில் ஒரு கர்ச்சிப் அளவு நிலம் வேண்டுமானால் வாங்கலாம். அன்று ஒரு மாநிலத்தையே ‘வாங்க’ முடிந்திருக்கிறது.
… (பதான் ஆசிவாசிகள்) காசுக்குக் கை, கால்களை வெட்டி, வீசைக்கு மனிதநேயத்தை விற்று வந்தார்கள்.
…. பதறிவிட்டார் நேரு. காரணம் அவர் கமலாவை மணப்பதற்கு முன்பிருந்தே காஷ்மீரைக் காதலித்து வந்தவர்!
… (பாரமுல்லா) சகிக்க முடியாத அவலமும் சோகமும் நிறைந்த சம்பவம் என்றாலும் பாக். படையினர் இந்த வெறியாட்டத்தை நடத்திக்கொண்டிருந்த நேரம்தான் ஸ்ரீநகரைக் காப்பாற்ற வழிவகுத்தது.
5 thoughts on “பாகிஸ்தான் அரசியல் வரலாறு – I”