தாலிபன்
ஆசிரியர் – பா. ராகவன்
பதிப்பு – மதி நிலையம், 2012
பிரிவு – அரசியல்
தாலிபன் பற்றிப் படிக்க வேண்டி இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம். ஆனால் படித்த முடித்தவுடன் தாலிபன்கள் பற்றிய சிந்தனையை விட ஆஃப்கனின் மிஸ்டர் பொதுஜனங்கள்தான் சிந்தனையை வியாபித்திருக்கிறார்கள். அடிப்படை மக்களின் தேவை – அவர்களின் எதிர்பார்ப்பு இவற்றைப் புரிந்து கொள்ளாமல் என்ன புரட்சி நடத்தி என்ன புண்ணியம்?
- தாலிபனுக்கு முந்தைய ஆஃப்கன் நிலை
- தாலிபன் எழுச்சியின் பின்புலம்
- தாலிபன் எழுச்சி
- அவர்களின் வீழ்ச்சி
- ஆஃப்கன் மறுமலர்ச்சி
இந்த ஐந்து கட்டங்களை 35 கட்டுரைகளின் வழியில் தனது பாணியில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர் பா.ராகவன்.
ஆசிரியர் பா.ராகவன் தமிழின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். கதையல்லாத எழுத்து வகைக்கு மாபெரும் வாசகர் வட்டத்தை உருவாக்கியவர். அதே சமயம் படைப்பிலக்கியப் பங்காளிகளுக்காக பெருமைக்குரிய பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றவரும் கூட.
போராளிக் கும்பல்களின் போர்வையாக ஆப்கன்
சோவியத் யூனியனை ஆப்கனில் இருந்து அடித்து விரட்டுகிறார்கள் அமெரிக்க ஆதரவு பெற்றப் போராளிக்குழுக்கள். கம்யூனிச சோவியத்திலும் இறங்கு முகம். ஆப்கனுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்த சோவியத் தனது பாரத்தை இறக்கி வைத்துவிடுகிறது. ஆப்கனுக்கு நோ உதவி என்று அறிவிக்கிறது. போரின் காரணமாக செலவுகள் – இடிபாடுகள் – பணவீக்கததின் நடுவில் நஜிபுல்லா ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இந்தக் காட்சியில் காமிரா தொடங்குகிறது. தேசத்தின் விடுதலைக்குப் போராடிய குழுக்கள் விடுதலைக்குப் பின் ஆட்சி தாகம் பிடித்து ஆட்டுகிறது. உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாய தருணம் அது. அதில் கவனம் செலுத்தாமல் ஆட்சிக்கு ஆசைப்படுகின்றன பல்கிப் பெருகியிருந்த புரட்சிக் குழுக்கள். நஜிபுல்லாவே ஆள்றான். நம்பளால் ஆள முடியாதா?

நெக் மொஹம்மதுவிடம் அமெரிக்க ஆயுதங்கள் சிலவற்றைப் பெறுகிறான் ஓமர். குதிரை வீரனாக அவர் அறிமுகப்படுத்தப்படும் வேளை அவரை ஆப்கனுக்கான கல்கி அவதாரமாக பின்னாளில் நாடு பார்க்கப்போகிறது. திரும்பவும் விடுதலை பெறவேண்டும் – ஆட்சி அமைக்கவேண்டும் என்கிற தாகம் ஓமருக்கும் இருக்கிறது.

ஆப்கன் நீடு துயில் நீக்க
திரும்பி வரும் வேளையில் ஒரு போராளிக்குழு ஒரு ஏழைக் குடும்பத்தைத் தாக்கி அக்குடும்பத்தின் பெண்களை பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கி கத்தியால் குத்திவிட்டு ஓடுவிடுவதை அறிகிறான். தம் குழுவினருடன் சென்று அவர்களை இழுத்துவந்து கட்டி வைத்து அதே இடத்தில் அவர்களைப் பிரேதமாக்குகிறான். ஆப்கன் ஓமரைப் பார்க்கத்தொடங்கியது இந்த நிகழ்விற்குப் பிறகுதான் என்று அலப்பறையான ஒரு அறிமுகம் ஓமருக்குக் கிடைக்கிறது. முதல் இரண்டு கட்டுரைகளில்.

எங்க வருவான் எப்டி வருவான்னு தெரியாது. வரவேண்டிய நேரத்தில் கரெக்டா குதிரையில் வருவான் ஓமர் என்று ஆப்கன் மக்கள் பேசத்தொடங்கினார்கள். பல்வேறு உண்மை – புனைவுக் கதைகள் பரவத்தொடங்கின. எல்லாவற்றையும் நிராகரித்துவிட முடியாது. ஓமரின் வீரம் அப்படிப்பட்டது. ஆனால் விசிலடித்த மக்கள் ஓமரின் பின்புலத்தையும் அவரது சிந்தனையும் புரிந்து கொள்ளவில்லை. அதற்காகத்தான் பின்னாளில் அவர்கள் விலை கொடுக்க நேரிட்டது என்கிறார் ஆசிரியர்.
பாகிஸ்தானிய ஆதரவு
ஓமரின் சுக்கிரதிசையைத் தொடங்கி வைக்கிறார் பெனசீர். பாக் சரக்கு ஆப்கனைத் தாண்டிப் போவதற்குள் பணம் கொளுத்திப்போட்ட கற்பூரமாகக் கரைகிறது. கடுப்பாகிறார் பெனசீர் (தமது இரண்டாம் ஆட்சி காலத்தில். பார்க்க: பாகிஸ்தான் அரசியல் வரலாறு) ISI இயக்குநர் மற்றும் பெனசீரின் உரையாடல்களாக ஆசிரியர் காட்ட முயல்வது எளியோருக்கும் விளங்கும் வகையில் உள்ளது.

“மிகச் சுலபம் மேடம். அவருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் பரவலாக வேண்டும். அவ்வளவுதான். தவிரவும் ஓமர் பதவி வெறியோ பணவெறியோ பிடித்தவர் இல்லை. இஸ்லாத்தில் ஆழ்ந்த பற்று கொண்டவர். ஒரு பரிபூரண இஸ்லாமிய தேசமாக, ஷரியத் அடிப்படையில் ஆட்சி அமையவேண்டுமென்கிற கனவு கொண்டவர். ஷரியத்தை மதிப்பவன் ஊழலுக்கு அப்பாற்பட்டவனாகத்தான் இருப்பான்.”

பெனசீருக்கான மனமாறுதலுக்காக ISI உதிர்க்கும் வாக்குமூலம் இது. பெனசீர் தலையாட்டுகிறார். ஓமரை தத்தெடுக்கிறது பாகிஸ்தான் அரசும், ISIயும். ஆச்சரியப்படகிறார் ஓமர். பெனசீரா? எங்களையா? அல்-காய்தாவிற்கு அந்தம்மா கொடுத்த கொடச்சல் தாங்கமுடியாமத்தானே ஒசாமா சூடானுக்கு ஓடினார். இப்ப மட்டும் எப்படி?!
பெனசீரை நம்பவேண்டாம். ISIஐ நம்பலாம். இனமான சகோதரர்கள். ஓமரின் கூட்டத்தை பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் வைத்துப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்படுகிறது. சும்மாவா. பணம் வருகிறது. பைசா செலவில்லாமல் புதிய அமெரிக்க ஆயுதங்கள் வருகின்றன. பயிற்சி அளிக்க டியூசன் மாஸ்டர்கள். மாறாக அவர்கள் கேட்பதென்ன? தடையில்லா சரக்குப் போக்குவரத்தும் அதற்கான சாலையும். ரைட்டு.
அடுத்தநாளே ISI அருளாசியோடு மாணவர்கள் பயிற்சிக் கூடத்திற்குப் பயணமாகிறார்கள். பயிற்சிக் கூடம் அமைந்திருக்கும் இடம் ஆப்கன் எல்லைக்கு அருகில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் மேற்கு எல்லையில் அமைந்திருக்கும் சாமன் என்கிற இடம். ஓமர் இருக்கிறார். தாதுல்லா இருக்கிறார். ஆப்கனிலிருந்து அகதிகளாய் பாக் வந்திருந்தவர்களில் இளைஞர்களை அள்ளிக்கொள்கிறார். அனைவரும் மதரஸாக்களில் பாடம் படித்துக்கொண்டிருந்தவர்கள். பேசுகிறார் ஓமர். மனம் உருகுகிறார்கள் மாணவர்கள். அவர்களை ‘மாணவர்களாக’ ஆக்குவேன் என்று அழைத்துச் செல்கிறார் (தாலிபன் – மாணவன்)

ஓமர் சிலபஸ் உருவாக்குகிறார். மாணவர்கள் பயிலத் தொடங்குகிறார்கள்! ஒருவேளை மதக்கல்வி. மறுவேளை ஆயுதப் பயிற்சி.
ஷரியத்தின் அடிப்படையில் பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்று நினைக்கிற பாகிஸ்தானின் சான்றோர் இயக்கம் மற்றும் அரசியல் கட்சியான ஜமியத் உலமா ஏ இஸ்லாம் காட்சிக்கு வருகிறது. பாகிஸ்தானில் ஷரியத் அடிப்படையில் ஆட்சி அமைக்க அபிலாஷைகள் கொண்ட அவர்கள் தலிபான்களுக்கு வலியேக்க வந்து செய்த உதவிகள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிறார் ஆசிரியர். எப்படி? “இன்றைக்கு நாங்கள் உதவுகிறோம். நாளைக்கி நீங்கள் எங்களுக்கு” என்கிற போர்வையில்.
ஷரியத்தைப் பாகிஸ்தானில் அமல்படுத்த முடியாது போன ஜமியத் தன்னால் முடிந்த பணியாக நிறைய மதரஸாக்களைத் தொடங்குகிறது. ‘அதில் பயிலும் அனைவருக்கும் அழுக்கு ஜிப்பா, தலையில் முண்டாசு கட்டி உங்க பாசறைக்கு அனுப்புகிறோம் ஓமர்சாப்’ என்கிறார்கள். ஓமர் புலகாங்கிதப்படுகிறார். பஃதூன் படை என்று பின்னாளில் ஓமர் அதனைப் பெறுமையாகப் பேசுவதைச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். தாலிபன் படையில் உள்ள இனத்தின் சாயலை இங்கே காட்டுகிறார் ஆசிரியர். ஆட்சி அமைத்தபின் வரும் இனக்கலவரம் இதனை அடிப்படையாக வைத்துவருகிறது. தாலிபன் அனைவரும் முஸ்லீம் – கண்டிப்பாக சன்னி முஸ்லீம் – அதிலும் கண்டிப்பாக பஃதூன்.
மாணவர் படையை அருளியதோடு தாங்கள் வசூலிக்கும் தொகையில் ஒரு பங்கினை தாலிபன்களுக்குத் தருகிறார் ஜமியத் இயக்கத்தினர்.
போர் முன்னேற்பாடுகள்
ஹெல்மண்டில் ஒரு படை – உரூஸ்கனில் ஒரு படை – கந்தஹாரில் மறுபடை – ஓமரின் உத்தேச யுத்தக் கணக்கு
விரைவில் டீனேஜ்கள் உள்ளிட்ட பயிற்சி பெற்ற மாணவர்களுடன் ஆப்கன் செல்லும் திட்டத்தில் இருக்கிறார் ஓமர்.
அதற்கு முன் மக்களை ரகசியமாக சந்தித்து தாலிபன் படைக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். வசூல் செய்யவில்லை. படைக்கு ஆள் கேட்கவில்லை. மாறாக ஆதரவை மட்டும் கேட்கிறார்.
பேச்சு. உணர்ச்சி கொப்பளிக்கும் பேச்சு. ஒழுக்கத்தை முன் வைத்து – இறை நம்பிக்கையை முன் வைத்து – கம்யூனிச மற்றும் அமெரிக்க எதிர்ப்பை முன் வைத்து – ஷரியத்தை முன் வைத்து – அப்படி ஒரு பேச்சு. உணர்ச்சி மேலிட அனைவரும் ஓமரைக் கட்டுத் தழுவி – கையில் உம்மா கொடுத்து அதரிக்கின்றனர்.

நாடு முழுக்க பயணம் – அன்று காந்தி செய்தது – நம் மண்ணில் காமராஜர் செய்தது – ஆப்கனில் ஓமர் செய்தது. பயணம். நீண்ட நெடும் பயணம். வழியில் சந்திப்பு. மக்கள் சந்திப்பு – பெரிய மனிதர்களின் சந்திப்பு. எந்த ஒரு போராளிக்கும் ஆட்சியாளருக்கும் தேவையான ஒன்று இந்த பயணமும் சந்திப்பும். நான் இருக்கிறேன் என்று மக்களுக்குக் கட்டியம் கூறுவது இந்த பயணமும் சந்திப்பும். கவன ஈர்ப்பும் அதன் விளைவாக ஆதரவையும் பெற்றுத்தரும் ஒரு ‘போராட்ட மார்க்கெட்டிங்’ சூத்திரம் இந்த நிகழ்வு. வெறும் மார்க்கெட்டிங் என்று சொல்வது தவறு. இந்தப் பயணங்கள்தான் நாட்டின் நிலை பற்றி பயணம் செய்வோருக்கு எடுத்துக் கூறுகின்றன.
வெற்றி.. காபூலின் வீழ்ச்சி. கந்தஹாருக்கு அதிகாரப்பெயர்வு. அதுக்கப்புறம் பார்.. வருகிறார் நமது பூர்வீகப் பயிற்சியாளர் என்கிறார் ஓமர். கவனிக்கப்படவேண்டியது. இந்த எண்ணம்தான் தாலிபன்களை அடித்து திரும்ப ஆட்சிக் கொட்டாரத்திலிருந்து வெளியேற்றுகிறது.
நிற்க..
தொடங்குகிறது போர்!
5 thoughts on “அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1”