தாலிபன்
ஆசிரியர் – பா. ராகவன்
பதிப்பு – மதி நிலையம், 2012
பிரிவு – அரசியல்
பாகம் 1: அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1
யுத்தம் தொடங்கபோகிறது. பாகிஸ்தான் ஆயுதங்களைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பீரங்கிகள், வாக்கி டாக்கிகளை அள்ளிக்கொடுத்திருக்கிறது. கந்தஹாரை முதலில் கைப்பற்றவேண்டும். ஓமர் நகரை நெருங்கியதும் ஜலாலாபாத் குழு தாக்கத்தொடங்கவேண்டும். தாக்குதல் – தாக்குதல் – இறுதித்தாக்குதல். ஓமரை தெய்வமாகத் துதிக்கிறார்கள் தாலிபன்கள். 100 சதம் hero worshipping. கேள்விக் கேட்பாடில்லாத வேட்கை மிகுந்த ரசிகர் கூட்டம். நாளை ஆட்சி நம் கையில். வண்ணக் கனவுகள்.
யாரை எதிர்த்துப் போர்? சக போராளிக்குழுக்கள் – அப்போதைய ஆப்கன் ராணுவம் (பர்ஹானுதீன் ரப்பானியின் ராணுவம்) – வடக்குக் கூட்டணிப்படை என்றைழைக்கப்படும் குல்புதீன் ஹெக்மதியாரின் ஹெஸ்பி இஸ்லாமி ராணுவம். ஆப்கனே போற்றும் ஒப்பற்ற படைவீரரான அஹமது ஷா மசூத் அந்தப் படையின் தளபதி என்கிற போருக்கு முந்தைய காட்சிகள் விளக்கப்படுகின்றன.

ரப்பானிக்கும் ஹெக்மதியாருக்கும் ஆகாது. வடக்குக் கூட்டணிப்படையின் தாக்குதல், ஏற்கனவே ஓய்ந்திருந்த சோவியத்துக்கு எதிரான போர் எல்லாம் சேர்ந்து காபூலை துவம்சம் செய்திருந்தன. பெரும்பாலான வீடுகள் சாய்ந்திருந்தன. சாலைகள் குண்டு குழிகள் வியாபித்திருந்தன – சண்டை மட்டும் ஓயாதிருந்தது. வடக்குப் படை விடும் ராக்கெட்டுகள் தவணை மாறாமல் காபூல் பக்கம் வந்து விழுந்தன. வெடித்தன.

ரப்பானி ஆள வந்தபோது ஆட்சியில் ஆப்கானியர்ளை விட உஸ்பெக்குகளுக்கும் தஜிக்குகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். இதுவும் தாக்குதலுக்கு ஒரு காரணம். என்னதான் வம்ச வாடை என்றாலும் கவர்மெண்டு போஸ்டிங் முதற்கொண்டு அனைத்தையும் கட்சி ஆபீசில் (ஜமியத் ஏ இஸ்லாமி) வைத்தா போடுவது? கொதித்தார்கள் ஆப்கன் பூர்வ குடிகளும் பஃதூன்களும். அங்கங்கே குறுநில மன்னர்களாய் ஏரியாக்களை வளைத்துப்போட்டு ஆளத் தொடங்கினார்கள். உருப்பிடாத தேசத்தில் வரும் தரித்திரக் காட்சிகள் இவை. இவற்றை எளிமையாக ஆசிரியர் சொல்லியிருப்பது அருமை. அவரது விவரிப்பைப் படித்தால் கொட்டாவி வரவில்லை. ரத்தம்தான் ஜிவ்வென்று உச்சிமுடி வரை பாய்கிறது.
காபூல் – ரப்பானி. வடக்கே – ஹெக்மதியார். தெற்கே யாரு? ஒருவரில்லை மூன்று பேர். கமாண்டர் அமிர்லாலாய், கமாண்டர் குல் அகா ஷெர்ஜாய் மற்றும் முல்லா நக்கிப் ஊலா. எங்க ஏரியா உள்ள வராதே!

இடையில் சவுதி மற்றும் பாகிஸ்தான் நடத்திய சமாதான பஞ்சாயத்துகளைப் பற்றியும் அவை ஒத்துவராமல் போனதைப் பற்றியும் செய்திகளைத் தருகிறார் ஆசிரியர். ரப்பானி அதிபர் -ஹெக்மதியார் -பிரதமர். இப்ப மசூத் ராக்கெட் விட்டார் அரசாங்கத்தை எதிர்த்து. அவரையும் அரசாங்க விளையாட்டுக்குச் சேர்த்துக் கொண்டார்கள். ம்ம்! ஒன்று ஆயுத ஆட்டம். அல்லது அரசியல் ஆட்டம். எப்படியும் ஆட்டம் ஆட்டம்தான்.
இடையில் யுத்த விவரிப்புக் காட்சிகள். பாஸ்தானின் இராணுவ உதவி – மக்களின் ஏகோபித்த எழுச்சி – போரிட மதரஸா மாணவர்கள் – ISIயின் போர்க்கள உத்தி – பாக் ராணுவத்தின் உதவி –
விளைவு? கந்தஹாரின் வீழ்ச்சி – மஸார் ஈ ஷரீஃப் வீழ்ச்சி – ஜலாலாபாத் வீழ்ச்சி

இடைச்செருகலாக யுனோகால் எண்ணை நிறுவனக் கதை வருகிறது. அட்சர சுத்தமாய் அமெரிக்காவும் தொழில் இலாபங்களுக்காக பாகிஸ்தானை நம்பி தாலிபன்களுக்கு ஆதரவாகிறது. யுனோகாலின் முதல் அலுவலகம் கந்தஹாரில் திறக்கப்படுகிறது.
யுனோகாலின் அவசரத்திற்கு ப்ரிடாஸ் நிறுவனத்தின் சேர்மேன் கார்லோஸ் புல்கரோனியின் போட்டியில் வீழ்த்தப்பட்டுவிடக்கூடாது என்று அமெரிக்கா நினைத்ததை ஒரு காரணமாகவும் சொல்கிறார் ஆசிரியர். கார்லோஷ் ஏற்கனவே ரப்பானியை சந்தித்துப் பேசியிருக்கிறார். யுத்தத்துக்கு அப்புறம் ஆப்கன் சீரமைப்பு – கல்விக்கு நிதி – தேவன்கள் (மேற்கத்திய நாடுகள்) அருளாசிகள் என்று கண்டதையும் சொல்லி தன் பக்கம் தாலிபன்களை இழுக்கிறது அமெரிக்கா.
ஹெல்மாண்ட் வீழ்ச்சி – உரூஸ்கன் வீழ்ச்சி.. இந்தப் போரினை உங்களுக்கு வழங்குவோர் பாகிஸ்தான், இணைந்து வழங்குவோர் அமெரிக்கா.
எண்ணைக் குழாய் திட்டத்தின் பின்புலத்தில் உள்ள அரசியலை மிக அபாரமாக வெளிப்படுத்துகிறது “உனக்கு ஓமர். எனக்கு ஒசாமா” கட்டுரை. யுரேஷியா என்று சொல்லப்படுகிற மத்திய ஆசிய – முன்னாள் ரஷ்யக் கூட்டமைப்பு தேசங்கள் அனைத்துக்கும் வர்த்தக வருமானம் அளிப்பதன் மூலம் பிராந்தியத்தின் பதற்றத்தைக் கணிசமாகக் தவிர்க்கக்கூடிய ஒரு முயற்சி என்கிறார் ஆசிரியர். பத்திரப்பேப்பர்களுடன் ஒப்பந்தம் போட தாலிபன்களிடம் வருகிறது யுனோகால்.
”இதோ பார். நீங்கள் ஆட்சி அமைக்க நாங்கள் மறைமுகமாக உதவ முடியும். நாங்கள் என்றால் அமெரிக்கா. அமெரிக்க அரசு என்றும் எடுத்துக்கொள்ளலாம். புரட்சி செய்து ஆட்சிக்கு வருகிறீர்கள். சர்வதேச அங்கீகாரம் கிடைப்பது அத்தனை சுலபமாக இருக்காது. ஆனால் அமெரிக்கா உங்களை அங்கீகரித்துவிட்டால் பிற தேசங்கள் அதற்குப் பின் தயங்காது. காலக்கிரமத்தில் ஐ.நா. சபை அங்கீகாரமும் கிடைக்கும். அதற்கும் ஆவன செய்யப்படும். வேண்டியது ஒன்றுதான். ஒப்பந்தம். எண்ணைய்க் குழாய் ஒப்பந்தம் எங்களுக்கே வேண்டும். கூட்டணிகள் கூடாது. ரகசிய பேரங்கள் உதவாது. எட்டு பாயிண்டில் கண்டிஷன்ஸ் அப்ளை என்று பொடி எழுத்தில் ரகசியமாக எதையும் திணிக்கக்கூடாது. என்ன சொல்கிறீர்கள்?”

தாலிபன் சார்பில் இந்தப் பேச்சு வார்த்தையில் பங்கெடுப்பவர் ஜெனரல் அப்துல் ரஷீத் தோஸ்தும். யுத்தக்காட்சிகள் டிவியில் ஓடியபோது இவரை டால்லஸில் வைத்து குளிப்பாட்டி வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு குதிரைகளைக் கட்டியிருந்தார்கள்.
இன்னொரு வழியில் எவ்விப் பார்த்தது ப்ரிடாஸ். சவுதி இளவரசர் ஃபைசலின் பிணாமி கம்பேனி நிங்கர்சோவுடன் கூட்டணி அமைத்து முயல்கிறது. அவர்கள் மூலமாக ஒசாமாவை வைத்து ஆப்கனை வளைக்கலாம் என்று. ஃபைசலுக்கும் ஒசாமாவிற்கும் அண்டர்ஸ்டேண்டிங் அந்த மாதிரி. இந்த ஒரு கட்டுரைக்காக ஆசிரியருக்கு ஒரு சிறப்பு நன்றி நவிலல்.

அடுத்ததாக வரும் ‘விழுந்தது காபூல்‘ கட்டுரையும் சளைத்ததல்ல. யுனோகாலின் சகுனியாட்டங்கள் தொடர்கின்றன. துர்க்மெனிஸ்தானின் அதிபர் சபர்முராத் நியாஸோ முன்னர் ப்ரிடாசுடன் வைததிருந்த ஒப்பந்தத்தை அழுகுணி காரணங்கள் சொல்லி நிறுத்துகிறார். போட்டார்கள் வழக்கு. வர்த்தக ஒழுங்கை மீறுவதாக யுனோகால் மீது – டெக்ஸாஸ் நீதிமன்றத்தில். 3 வழக்குகள் துர்க்மெனிஸ்தான் அரசாங்கத்தின் மீது சர்வதேச சேம்பர் ஆஃப் காமர்ஸ் நீதிமன்றத்தில். பிடரி சிலிர்க்க எண்ணைக்கோழிகளின் வர்த்தக சண்டையைப் படம்பிடிக்கிறது இந்தக் கட்டுரை. இறுதியில் துர்க்மெனிஸ்தான், பாகிஸ்தான் இரண்டும் யுனோகாலுக்கு அனுமதி அளிக்கின்றன. அத்துடன் புதிதாக அமையப்போகும் ஆப்கன் அரசிடம் பேசி காரியத்தை சாதிப்பது என்று. பெனசீரே ஓமரிடம் யுனோகாலுக்காக மார்க்கெட்டிங் செய்கிறார். கமர்சியல் செண்டிமெண்ட்ஸ்! சி.ஐ.ஏ மற்றும் ஐ.எஸ்.ஐயின் அனுசரணை. காபூலும் வீழ்கிறது! தாலிபன் வின் த மேட்ச்!
கதை இன்னும் முடியல!! விஸ்வரூபம் படத்தில் கமல் சொன்ன குரலில் மனதிற்குள் நினைத்துக்கொள்கிறார் ஓமர்!
2 thoughts on “சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2”