தாலிபன்
ஆசிரியர் – பா. ராகவன்
பதிப்பு – மதி நிலையம், 2012
பிரிவு – அரசியல்
முந்தைய பாகங்கள்
- இது வேறு ஷரியத் – தாலிபன் 3
- சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2
- அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1
சட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. வணிகம் – பொருளாதாரம் – கல்வி – பெண் கல்வி – வேலை வாய்ப்பு – குழந்தை நலம் – முதியோர் நலம் – ஓய்வூதியம் – உதவித்தொகை – இட ஒதுக்கீடு – இது பற்றியெல்லாம் சட்டதிட்டத்தில் ஏதுமில்லை. அல்லா இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக ஓமர் இருக்கிறார். “21 அம்சத்தில் வராத இதைப்பற்றி எல்லாம் ஏன் சிந்திக்கிறாய். கிளம்பு முதல்ல.”
பள்ளிக்கூடம், மருத்துவமனைகளுக்கு படியளந்து கொண்டிருந்த NGOக்கள் மீது கண் வைத்தார்கள். மறுகணம் அவை மறைந்துவிட்டன.
1998 – வெறும் அடக்குமுறைகள் போர் அடித்துவிட்டது தாலிபன்களுக்கு – பழகிவிட்டது மக்களுக்கு. ஏதாவது செய்யவேண்டுமே. தொடங்கியது இனப்படுகொலை. வன்முறை எல்லாம் அல்ல. கலவரம் – கொலை. செய்தவர்கள் அரசுக்கு எதிரானவர்கள் அல்ல. அரசே செய்தது. பூதமே கிணறு வெட்டியது.
ஹஸாராகள் இனப்படுகொலை
1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 தொடங்கி இரு தினங்களில் மஸார் ஏ ஷரீஃபில் வாழ்ந்த சுமார் எட்டு ஹஸார் ஹஸாராக்கள் எட்டாயிரம் பேர் தாலிபன்களால் போட்டுத்தள்ளப்பட்டார்கள். துப்பாக்கிச் சூடு.
அசைவன அனைத்தையும் சுடுங்கள் – ஆடு மாடு கோழி தொடங்கி தாடி வைத்த ஆண்கள், பர்தா அணிந்த பெண்கள் உட்பட அனைவரையும். ஆணையிட்டார் முல்லா நியாஸி. குழந்தைகளை இடது கையில் தூக்கிப் பிடித்தார்கள். வலது கையில் சுட்டு தூக்கிப் போட்டார்கள். 8000 பிணங்களைப் புதைக்கக்கூட இல்லை. நாய்கள் வந்து இழுத்துச் சென்றன.
மாபெரும் சாம்ராஜ்ஜியங்களின் சரிவுகள் இந்த ஒரு புள்ளியில்தான் எப்போதும் தொடங்குகின்றன. சரித்திரம் முழுவதும். யுகம் யுகமாக. சந்தேகமே இல்லாமல்.
மஸார் ஏ ஷரீஃப் சம்பவத்துக்குப் பிறகு தாலிபன்கள் அநேகமாக ஆப்கனின் 90 சத நிலப்பரப்பைப் பிடித்து விட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அங்குமிங்குமாக சொச்சப்பகுதிகள் மிச்சம். அவற்றை ஆண்டு கொண்டிருந்தது வடக்குக் கூட்டணிப்படை. இனிமேல் வடக்குக் கூட்டணி என்று சொல்லாதீர்கள். அவர்களும் காஃபிர்கள். ஒழிக்கப்பட வேண்டியவர்கள்.
அல்லாவின் உத்தரவு என்றுதான் அறிவிக்கப்பட்டது. உத்தரவுத் தாளில் கையெழுத்துப் போட்டிருந்ததோ, முல்லா ஓமர்.

வடக்குக் கூட்டணிப் படையின் கமாண்டர் அஹமது ஷா மசூத் மற்றும் முக்கியத் தளபதிகளுள் ஒருவர் கன்வர்ப்ரீத் ரந்தாவா, மஸார் ஏ ஷரீஃபை மீட்கும் காட்சிகள் விருவிருப்பாகக் காட்டப்படுகின்றன. ரொம்ப காலமில்லை. திரும்ப மரண அடி அடித்து மஷார் ஏ செரீஃபை மீட்கின்றனர் தாலிபன்கள். அடி மட்டும் அல்ல. இடை விடாத துப்பாக்கி பீரங்கி சத்தம் – ஓடி வருபவர்களை 10 அடி தூரத்தில் சுடுவது – விஸ்ஸ்ஸ்ஸ்…. கரும்பு வெட்டும் சத்தமல்ல. தலை சீவப்படும் சத்தம். வடக்கிக் கூட்டணிப்படை மஸார் ஏ ஷரீஃபில் முழுவதுமாக அழிந்தது. தரித்திர நாட்டுக்குள் ஒரு சபிக்கப்பட்ட பூமியானது மஸார் ஏ ஷரீஃப்.
ஓமரும் ஒஸாமாவும் கலந்து ஆலோசிக்கின்றனர். முடிவில் மசூதின் உயிருக்குக் குறி வைக்கிறார் ஒசாமா. ஒரு காலத்தில் அவருடன் ‘ஒண்ணுமண்ணாய்’ திரிந்த ஒசாமா. ஒரு தற்கொலைப் படை வீரனின் தாக்குதலுக்கு மிக எளிதான இலக்காகி செத்துப்போனார் மசூத். நயந்து பெசிக் கொன்றார்கள் – ஆண்மை! ஒசாமா மசூதைக் கொல்வதற்கான காரணத்தை விளக்குகிறார் ஆசிரியர். தன்னலம் கலந்த நன்றி அறிதல்.
எதிர் குரல்
இடையில் தாலிபன்களுக்கு எதிரான குரல் உலகில் ஒலிக்க ஆரம்பிக்கிறது. சவுதி, அமீரகம் மற்றும் பாகிஸ்தான் தவிற அனைத்து நாடுகளும் வடக்குக் கூட்டணிப்படைக்கு ஆதரவு தர ஆரம்பிக்கின்றன.
1997 மத்தியில் தாலிபன்கள் பற்றிய உண்மை எண்ணம் அமெரிக்காவிற்குத் தெரியத் தொடங்கியது. யுனோகால் திரும்பி வந்தது, கென்யா மற்றும் தான்ஸானியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீதான அல் காய்தாவின் தாக்குதல் அவற்றை உறுதிப்படுத்தின. பாகிஸ்தானை நெருக்கத் தொடங்கினர் அமெரிக்க ஆட்சியாளர்கள். தாலிபன்களின் நெருங்கிய கூட்டாளியான பாக் கையைப் பிசைய வேண்டிய நிலை.
சவுதி தாலிபன்களின் தூதரக உறவை அறுத்தெரிந்தது. என்னாப்பா. பரிபூரண இஸ்லாமிய தேசமாச்சே. இருந்தா மாத்திரம். அண்ணன் சொல்றான். சவுதிக்காரன் செய்யறான். ஒசாமைவை எங்களிடம் திருப்பி அனுப்பு என்று குரல் எழுப்பியது இந்த இஸ்லாமிய தாதா நாடு. அதுவும் அண்ணன் வேலைதான் என்கிறார் ஆசிரியர். தூதனாய் வந்ததால் உன்னை சும்மா விடுகிறேன் என்று கடிதம் கொண்டு போனவனை எச்சரிக்கிறார் நவயுக கலீஃபா முல்லா ஓமர்! உலகின் விமான சர்வீஸ்கள் ஆப்கனைத் துண்டித்தன. அதைப்பற்றி என்ன கவலை.
பாமியன் புத்தர் சிலை உடைப்பு
இஸ்லாமிய மார்க்கத்தை நிலைப்படுத்தும் விதமாக பாமியன் புத்தர் சிலை உடைப்பு என்கிற சரித்திர இகழ் பெற்ற காரியத்தைச் செய்ய முடிவு செய்தார் ஓமர். இஸ்லாத்தில் ஏதய்யா உருவ பலிபாடு. புத்தர் சிலைகளைப் பார்த்தாலே வாந்தி வருகிறது. நபி பிறப்பதற்கு 63 வருடங்கள் முன்பே செய்யப்பட்ட சிலைகள். காந்தாரக்கலை இப்ப நினைவுக்கு வரவேண்டும். போட்டுத்தள்ளிவிட்டார்கள். சும்மா அல்ல. பீரங்கி வைத்து – ராக்கெட்டுகள் தொடுத்து. கஜினியிடம் தப்பித்த புத்தர் – நாதிர் ஷாவிடம் தப்பித்த புத்தர் – தாலிபன்களிடம் தப்பிக்க முடியவில்லை என்கிறார் ஆசிரியர்.
என்னவோ நடக்க இருக்கிறது என்பதை அறிந்த முஷாரப் உளவுத்துறையிடம் ”என்னான்னு பாருங்கப்பா” என்கிறார். ஓமரைச் சந்திக்க முடிந்தால்தானே.
தாலிபன்களின் கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்த கத்ரதுல்லா ஜமால் அறிக்கை வெளியிட்டார். 400 மார்க்க அறிஞர்கள் புத்தர் சிலைகளை அகற்றவேண்டுமென்று போர்க்கொடி தூக்குகிறார்கள். …….
”அந்தச் சிலைகளை உட்டுடுங்கப்பா” அலறுகிறது யுனெஸ்கோ

இஸ்லாமிய தேசங்கள் ஒன்று கூடி தீர்மானம் போட்டன. முஷாரஃப் முயற்சியின் பேரில் ISIயும் சவுதி இளவரசரும் ஓமரைச் சந்தித்தார்கள். பருப்பு வேகலை. முஷாரப் இடைவிடாது முயற்சித்தார். “இனி பாகிஸ்தான் ஆபீசர்னு ஒரு பய வரக்கூடாது” என்று தடை விதிக்கிறார் ஓமர். அபாயம் புரியத்தொடங்கியிருந்த முஷாரப் கடிதங்கள் அனுப்பிப் பார்க்கிறார். கடைசியில் ”இறைவன் மகிழும்படி இக்காரியத்தை முடித்துவிட்டோம்” என்று அறிவிக்கிறார் முல்லா ஓமர்.
ஓபியம் பயிரிடு

உலக நாடுகளின் பகை காரணமாக பசி வந்து சேர்ந்தது. உதவத்தான் ஆளைக்காணோம். ஓபியம் பயிரிடும் முடிவிற்கு வந்தார்கள் தாலிபன்கள் – முன்னர் இதை எதிர்த்தே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். இப்ப “பரவாயில்லை பயிரிடு. நாம விவசாயிகள்தான். இஸ்லாம் மார்க்கப்படி இது ஹராம்தான். என்றாலும் பாவம் விளைய வைப்பவனுக்கல்ல. அதை நுகர்பவனுக்குத்தான்” சொன்னவர் போதைத் தடுப்புத்துறைத் தலைவர் அப்துல் ரஷீத்.

மக்கள் பசிக்கு என்று சொன்னாலும் இது பணத்தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளவே என்பதை விளக்குகிறார் ஆசிரியர். பட்டினிச் சாவுகள் ஆரம்பித்தன தரித்திர ஆப்கனில்.
ஒசாமா செப் 11 திருவிளையாடல்

இதற்கிடையில் செப்டம்பர் 11 – அதி தீவிற இறைப் பணியை அமெரிக்காவில் செய்து முடித்திருந்தார் ஒசாமா. அமெரிக்கா & கோ படையுடன் ஆப்கனில் இறங்கின. ஆப்கன் மக்களுக்கு இந்தப் போரை வழங்குபோர் ஒசாமா பின்லேடன். உடன் இணைந்து வழங்குவோர் தாலிபன். கிழிஞ்சது கிருஷ்ணகிரி.. கந்தஹார்.
அமெரிக்கா தாலிபன்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. ஏனைய தேசங்கள் அதன் பின்னாள் நிற்கின்றன. பாகிஸ்தான் வேறு வழியின்றி வான்வெளியைத் திறந்துவிடுகிறது. பாக்.கின் நிலையைக் கீழ்கண்ட படத்துடன் ஒப்பிடுகிறார் ஆசிரியர்.
தொடங்கியது போர். தோராபோரா, இந்துகுஷ் மலைகள் சல்லடையாய் சலிக்கப்படுகின்றன. ஓமரையோ ஒசாமாவையோ நெருங்க முடியவில்லை. இந்தப் போருக்கு தாலிபன்களும் ஒசாமாவின் தலைமையை ஏற்றிருந்தனர். சாமர்த்தியமான தற்காப்புத் தாக்குதல் அது என்கிறார் ஆசிரியர். அமெரிக்கப்படைக்கு வடக்குக் கூட்டணிப்படை உதவிக்கு வருகின்றனர். என்றாலும் முழு வெற்றி என்பது சாத்தியமில்லாமல் போகிறது.
இடையில் கிருமி தாக்குதல் சோதனை நடந்தது. காட்டெருமைகள் மீது ஆந்த்ராக்ஸ் செலுத்தப்பட்டன. விசியம் விபரீதமாகத் தொடங்கியதை மிரட்டல் மொழியில் விவரிக்கிறார் ஆசிரியர். உயிரியல் கிருமியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள அமெரிக்கா என்ன ஆப்கனா? தொடங்கியது ஆபரேஷன் அணகோண்டா.
ஓமரையும் ஒசாமாவையும்தான் பிடிக்க முடியவில்லை. ஆனால் தாலிபன்களின் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவில் நசுக்கியது கூட்டுப்படை. இறுதியில் வெற்றி. ஆனால் தொழில் நுட்ப அளவில் அமெரிக்காவிற்கு பெரிதாக சிலாகிக்க ஏதுமில்லை. எல்லா குழுக்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டு மிதவாதி ஹமீத் கர்ஸாய் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

தாலிபன்களை முழுவதுமாக ஒழிக்கமுடியாது என்பதுதான் நிதர்சனம். அதற்கான காரணங்களை இறுதிக்கட்டுரையில் பட்டியலிடுகிறார் ஆசிரியர்.
இடைக்கால அரசு அமர்ந்தது தாலிபன்களுக்கு மட்டுமில்லை. இயற்கைக்குப் பொறுக்கவில்லை. மிகப்பெரிய பூகம்பம். உதவிக்கு வாருங்கள் என்று உலகிற்குக் கோரிக்கை விடுக்கிறார் கர்ஸாய். மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்த போதே தாக்குதல் நடத்திய தாலிபன்களது குணத்தை ஆப்கன் மக்கள் புரிந்து கொண்டார்கள் (தன்னலச் சேற்றில் விஷ விதையை நம்மூரில் விதைக்கும் சிலரும் புரிந்து கொண்டு மற்றவர்கள் புரிந்து கொள்ளாமல் தடுக்கிறார்கள்). இவர்கள் மக்கள் நலம் பேணுபவர்களா என்ன?
ஹமீத் கர்ஸாய் தெளிவாக இருந்தார். தாலிபன்களைத் தேடுவதும் கிடைத்தால் அழிப்பதும் தடையற்று நடந்து கொண்டிருக்கவேண்டிய பணி. அதற்காக தேசத்தை மறுகட்டுமானம் செய்யும் பணிகளைத் தள்ளிப்போடவோ, நிறுத்திவைக்கவோ முடியாது.
ஊருக்கு ஊர் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு குழந்தைகள் எப்பாடு பட்டாவது படிக்க அனுப்ப அனுப்பப்பட்டார்கள். கஞ்சாவும் அபினும் விளைந்த நிலங்களில் கோதுமை பயிரிட ஏற்பாடு செய்தார் கர்ஸாய். கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாக பயன்படுத்திக்கொண்டார் என்பதுதான் இதில் முக்கியம்.
இந்தியாவோ சீனாவோ ஜப்பானோ வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவது பெரிய விசியமில்லை. ஆப்கன் போன்ற ஒரு பரம தரித்திர தேசம் தனது சோக காலத்தை மறந்து புத்துணர்ச்சியுடன் வீரநடை போடுவதும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு தேர்தல் நடத்தி ஓட்டுப்போட்டு ஆட்சி செய்ய நினைப்பதும், வெட்கப்படாமல் பிற தேசங்களின் உதவிகளைக் கேட்டுப்பெறுவதும் மிக மிக முக்கியமான நிகழ்வுகள்.
அமெரிக்காவின் கைக்கூலி என்று வருணிக்கப்பட்டாலும் இது சாத்தியமானது ஹமீத் கர்ஸாயினால்தான்.

இடைக்கால அரசு தேர்தலை நடத்தியது. மக்கள் ஓட்டுப்போட்டு பட்டையைக் கிளப்பினார்கள். உலக நாடுகள் பாதுகாப்பும் உதவியும் அளித்தன. திரும்பவும் கர்ஸாய்!

ஆப்கனில் யாத்திரை போனது போதாது என்று திரும்பவும் ஓமர் பாகிஸ்தானில் யாத்திரை போகிறார். சுதந்திர தாகம் எடுத்த, பாகிஸ்தான் அரசால் புறக்கணிக்கப்படுகிற வாசிரிஸ்தான் பகுதியில். நேற்றுக் கூட தாலிபன்கள் நடத்திய பாகிஸ்தான் தாக்குதல் செய்தி வந்திருக்கிறது. மக்கள் நலம் புறக்கணிக்கப்படும் வரை போராளிக் கூட்டங்களுக்குப் பஞ்சமா வரப்போகிறது?
புத்தகத்தின் தாக்கம்
ஏகப்பட்ட நிகழ்வுகள் – அவற்றை 35 கட்டுரைகளில் சுருக்கமாகவும் அதே சமயம் அனைவருக்கும் புரிகிற வண்ணமும் தந்திருப்பது மிகப்பெரிய செய்தி.
எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் போராளிக்குழுக்களுக்கள் நீரூற்றி உரம்போட்டு வளர்க்கப்படுகின்றன என்கிற நவயுக கீதையைத்தான் இந்த நூல் சொல்கிறது. மக்கள் நலம் பேனாத ஒரு போராளிக்குழு ஆட்சிக்கு வந்தாலும் நீடிக்க முடியாது என்பதை தாலிபன்களின் வரலாறு சொல்கிறது. இன்னமும் பாகிஸ்தானில் ஒரு எல்லையோரப் புற்றுநோயாய் உள்ளது இந்தக் குழு.
இயற்கைச் சீற்றத்தில் மக்கள் படாதபாடு படும்போது தாக்குதல் நடத்தும் ஒரு போராளிக் குழு எப்படி ஒரு மக்கள் நலம் பேணுபவராய் இருக்க முடியும்? (இது தாலிபன்களுக்கு). பள்ளிக் கூடங்களை உடைத்து எரியும் ஒரு போராளிக்குழு எப்படி ஒரு மக்கள் நலம் பேணுபவராய் இருக்க முடியும்? (இது நம்மூர் மாவோயிஸ்ட்களுக்கு). மக்கள் நலம் பேணுவதில் போட்டி வருவதற்கு பதில் ஆட்சிக் கனவு, அடிப்படை வாதம், மதவாதம் இவற்றை முன்னெடுத்து நடத்தும் இவர்களிடம் மக்கள் படும் பாடு….. இவர்களை விரட்ட வரும் அடுத்த குழுவிடம் மாட்டிக்கொண்டு அதே மக்கள் படும் பாடு… என்று அனைத்தையும் புரியும் வண்ணம் விளக்கியிருக்கிறது இந்தப் புத்தகம்.
சுபம்!