விடுதலைப் புலிகள்
ஆசிரியர் – மருதன்
பதிப்பு – கிழக்கு பதிப்பகம், 2007
பிரிவு – அரசியல்
ISBN 978-81-8368-638-9 Title No: Kizhakku 301
புத்தகம்
நண்பர்களே
விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றிய சிறு குறிப்பு தருவது இந்தப் புத்தகம். குறிப்பாக ஈழப் போராட்டத்தின் பிண்ணனி, பிரபாகரன் வளர்ந்த சூழல், இலங்கை ஆட்சியாளர்களின் தனியாத இனவெறி, இந்தியாவின் குழப்பமான ஆதரவு மற்றும் எதிர்ப்பு பற்றி மிக சுருக்கமாக வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் இது.
ஆசிரியர்
நாம் முன்னர் பார்த்த தாலிபன் புத்தகத்தை பின்வருமாறு அர்ப்பணித்திருப்பார் பா.ராகவன்.
நம்பிக்கை அளிக்கும் நாளைய தலைமுறையின் எழுத்துப் பிரதிநிதிகள் மருதன், கண்ணன், முகில், முத்துக்குமார் ஆகியோருக்கு..
இவரைப்பற்றித் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தைப் பார்க்கவும்
இராஜீவ் கொலையில் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். பிறகு நினைவு கூறலைப்போல பழைய செய்திகளைத் தொகுத்துத்தருகிறது. முதலே இராஜீவ் கொலையில் ஏன் ஆரம்பித்தார் என்று தெரியவில்லை. பெரிய பொருத்தமான ஆரம்பமாகவும் தெரியவில்லை.
உலகம் முழுக்க போராளிக் குழுக்களுக்குப் பஞ்சமில்லை. விடுதலைப் புலிகள் அவர்களின்று எப்படி வேறுபடுகிறார்கள். அவர்களால் ஒரு தரைப்படை – கப்பல் படை – விமானப்படை இராணுவத்தை எப்படி உருவாக்கி வைக்க முடிந்தது? வெறும் இராணுவ நோக்கமல்ல. ஒரு இறையாண்மை மிகுந்த ஆட்சியை எங்ஙணம் தர முடிந்தது போன்றவை நேர்மையாக சிந்தித்தால் உலகில் யாதொரு இயக்கத்தினின்றும் மாறுபட்டது விடுதலைப்புலிகள் இயக்கம்.
வெறும் புகழ்ச்சி நூல் அல்ல இந்தப் புத்தகம். அவர்களின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளையும் தொகுத்துத் தருகிறது. உதாரணமாக கடத்தல் காரியங்கள் – சக போராளிக் குழுக்களைப் போட்டுத்தள்ளியது – புலம் பெயர்ந்த தமிழர்களை மிரட்டிப் பணம் பறிப்பது – முஸ்லீம்களின் இடப்பெயர்ச்சி போன்றக் குற்றச்சாட்டுக்களைக் கூறி, எந்தச் சூழல் அவ்வாறு செய்தனர் என்பதையும் கூறுகிறார் ஆசிரியர்.
- பிரிட்டிஷ் ஆட்சியில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய தமிழர்கள் மீதான சிங்களர்களின் தாழ்வுணர்ச்சி மற்றும் காழ்ப்புணர்ச்சி.
- பெரும்பான்மை சிங்களர்களின் கையில் ஆட்சி சென்று சேர்ந்தவுடன் நிகழும் கலவரங்கள்
- அஹிம்சா நெறியின் தொடர் தோல்விகளில் பொருமை இழந்த பதின் வயது பிரபாகரனின் அறிமுகம்
- பிரபாகரனின் முதல் ஆயுத உபயோகப் பயிற்சி
- சுதந்திரம் பெற்றது முதலே சிங்களர்களுக்கு மட்டும்தான் இந்த பூமி. பூர்வ குடி தமிழர்களுக்கோ, இந்தியக் குடியேறிகளுக்கோ அல்ல என்பதில் சிங்களர்களின் நிலை வழுவா இனவெறி
- ஆட்சிமொழியில் சிங்கள இனவாதத்தை முன்னிறுத்தித்தொடங்கி வைக்கும் SLFPயின் தலைவர் பண்டாரநாயகா
- கத்தியை எடுத்தவன் மட்டுமல்ல. மதத்தை எடுத்தவனும் மதத்தாலேயே சாவான். புத்தபிக்கு சுட்டு செத்தார் பண்டார நாயகா
- இந்திய வந்தேறிகளைக் குறிவைக்கும் 1948 குடியுரிமைச் சட்டம் – அதற்கான இலங்கைப் பூர்வ குடிகள் மற்றும் சிங்களர்களின் நிலைப்பாடு
- இனக்கலவரத்தில் அர்ச்சகரின் சாவு – பிரபாகரனின் மன எழுச்சி
- சக நண்பர்களின் அறிமுகம் – போராளிக்குழு உருவாக்கம் – முதல் பலி
இந்திய ஆதரவு என்பது இலங்கை விவகாரத்தில் தமிழர்களுக்கு இருப்பதாகத் தொடங்கி இலங்கை அரசின் பக்கமாக மெல்ல மெல்ல சாய்கிறது. தமிழர்களின் எதிர்பார்ப்பு மிக வேகமாக பொய்க்கத்தொடங்கியதைப் படம்போட்டுக் காட்டுகிறார்.
ஆபரேஷன் பூமாலை போன்ற ஆக்ஷன் காட்சிகளைத் தமிழர்கள் நம்பினார்கள். ஆனால் அது தனக்குக் கட்டுப்படாத சிங்கள அரசுக்கான இந்தியாவின் எரிச்சலாக எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. தமிழர்களுக்கான ஆதரவாக அல்ல.
சக போராளிக் குழுக்களை ஒடுக்கும் முயற்சிகள் – பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு – எம்.ஜி.ஆரின் நேரடி ஆதரவு என்பன மிக நேர்த்தியாகவும் சுருக்கமாகவும் விளக்கப்படுகின்றன.
அமைதிப்படையின் திருவிளையாடல்கள் இந்தி அரசியல் ரீதியான குழப்பம் என்று தெளிவாகச் சொல்கிறார். அரசியல் ரீதியான செயல்பாடுகளை இராணுவம் எப்படி எடுக்க முடியும். ‘தவறோ சரியோ – தன் முடிவைத் தெளிவாக எடுக்கக்கூடியவர் இந்திரா. ஆனால் ராஜீவ் அப்படி அல்ல’ என்று கூறும் ஆசிரியரின் கூற்றுப்படி பெரும் குழப்பமாக முடிகிறது இந்திய அமைதிப்படை. சீனாவிடம் தோற்றது பெரிய காரியமல்ல. புலிகளிடம் அமைதிப்படை பெற்ற அடி இந்திய இராணுவ வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை சிங்களச் சிப்பாயியின் துப்பாக்கி அடி குறி தவறாமல் இருந்திருந்தால் இலங்கை தலைகீழாக மாற்றி எழுதப்பட்டிருக்குமோ என்னவோ. ராஜீவ் மரணம் விடுதலைப் புலிகளுக்கு நேர் எதிரியாக காங்கிரசை மாற்றிவிட்டது. சர்வதேச அரசியல் தமிழர்களையும் எதிரி நிலையில் வைத்திருக்கும் வண்ணம் மாற்றிவிட்டது.
இறுதி யுத்தம் கடைசிக் கட்டுரையாகவும் அதன் பிற்சேர்க்கையாக யுத்தத்தின் முடிவும் வந்துள்ளது.
விடுதலைப் புலிகள் புத்தகத்தில் ஏனைய புத்தகங்களைப்போல் விவரணை தேவையில்லை. எனவே இத்துடன் நிறுத்துகிறேன்.
—
பிற்சேர்க்கை:
தாலிபன்களைப்போல விடுதலைப்புலிகளும் போராளிகள்தான். அவர்களைத் தீவிரவாதிகளாக விஸ்வரூபத்தில் காட்டியது என்கிற இயக்குநர் அமீரின் வாதத்தை நான் இப்படித்தான் பார்க்கிறேன்
- தனது தோல்வி அடைந்த படத்தைத் தூக்கி நிறுத்தும் முயற்சி
- தனது உள்ளத்தின் அடியில் இருந்து ஆட்டிப்படைக்கும் அடிப்படைவாத சாயலின் வெளிப்பாடு
- இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை வெகு தீவிரமாக சமூகத்தில் விவாதிக்கப்டும் நேரத்தின் போது “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்” என்கிற பச்சை சுயநலம்
இனவாதப் போரில் என்றைக்குமே தாலிபன்களுக்குக் கிடைத்ததைப்போல வெளிப்படையான சர்வதேச ஆதரவோ – எளிதான ஆயுதப்பரிசுகளை அள்ளிக்கொடுத்த ISIயோ அமெரிக்க ஆதரவோ புலிகளுக்குக் கிடைத்ததில்லை. அவ்வாறு கிடைத்திருப்பின் புலிகளின் திட்டமிடல்களுடன் சேர்ந்து இராணுவ ரீதியான தீர்வினை அவர்கள் என்றைக்கோ எட்டியிருப்பார்கள்.
வெற்றி கிடைக்காத பட்சத்திலும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள பகுதிகளில் இறையாண்மை மிக்க ஆட்சி நடத்தியவர்கள் புலிகள். மக்களின் தேவைகளை எப்படியாவது பூர்த்தி செய்தார்கள் – கடத்தலில் ஈடுபட்டாவது.
ஆழிப்பேரலையின் கோரதாண்டவத்திற்குப் பிறகு மக்கள் நலப்பணிகளில் புலிகள் ஈடுபட்ட விதம் சர்வதேச அளவில் அவர்களுக்கு நல்ல பெயரை எடுத்துத் தந்தது.
மாறாக,
தாலிபன்களைப் பார்ப்போம். (தாலிபன் புத்தக மதிப்புரை இங்கே)
ஆட்சிபீடத்தை அலங்கரித்த பின் போரினால் நொந்திருந்த மக்கள் நலம் பேணவில்லை. மக்களுக்கு குடிநீர் பைப் போடவில்லை. சாக்கடை நோண்டவில்லை. பள்ளிக் கூடம் திறக்கவில்லை. குழந்தைகளுக்கு சத்து மாவு போடவில்லை. மாறாக ஒஸாமா பின்லேடனைக் கூட்டி வந்து மலைக்குகையில் வைத்து அடை காத்தவர்கள் தாலிபன்கள்.
மக்கள் பரிதவித்துக்கொண்டிருந்தபோது அதைத் தீர்த்து வைக்காமல் இனப்போர் புரிந்தவர்கள் தாலிபன்கள்.
மக்களின் அடிப்படை வசதிகள் – எளிய ஆசைகளைக்கூட அடிப்படை வாத மதசாயம் பூசி கடுமையான தண்டனை கொடுத்தவர்கள் தாலிபன்கள்.
ஒரே கையெழுத்து மூலம் அனைத்துப் பெண்களையும் பணி இழக்க வைத்தவர்கள் இவர்கள். மாறாக போராளிகளில் கூட பெண்களை அமர்த்தியவர்கள் புலிகள்.
இலங்கைக்கு ஆழிப்பேரலை என்றால் காபூலுக்கு நிலநடுக்கம். வந்து உதவுங்கள் அய்யா என்று கர்ஸாய் உலக நாடுகளிடம் கெஞ்சிக்கொண்டிருக்கும்போதும் கூட குண்டுகளை வெடிக்க வைத்த புண்ணியவான்கள் இவர்கள்.
உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை அமீர் – உபத்திரம் செய்பவர்களைப் பூஜிப்பது உங்களது உள்ளக்கிடக்கையாய் இருந்தால் உங்கள் மனதுக்குள்ளேயே செய்து கொள்ளுங்கள். சமூகத்தைச் சொல்லவேண்டாம். பச்சை சுயநலத்திற்காக தோன்றியதை டீக்கடையிலும் இணையத்திலும் அள்ளிவிட நிறையபேர் உள்ளார்கள். அவர்களின் தரத்திற்கு ஒரு கலைஞர் இறங்கவேண்டாம். மாறாக அடிப்படைவாத முகமூடிக்குள் அமீர் ஒளிந்து கிடப்பாரேயானால் வருத்தம் அடைவதைத் தவிற நமக்கு வேறு வழியில்லை.
இயக்கத்தின் வேறுபாடுகள் – தீவிரவாத ஆதரவு எதிர்ப்பு – என்பன போன்றவற்றை விட பொது மக்களின் அமைதியான வாழ்வுக்கே முன்னுரிமை. கண்டதை பொதுவில் சொல்வதற்கு முன்னர் இதை எண்ணிப்பார்ப்பது முக்கியம்.
சுபம்
கடைசியில் அமீர் தான் யாரென்பதை, அதாவது தனது உண்மையான முகத்தைக் காட்டி விட்டார், அவ்வளவு தான்.
There are some stories published by mediablike savukku about him.
There are some stories published by ‘savukku’. If that is true, we need to be cautious on him.
Thanks for your comment.