தமிழ்பயணி குழுமத்திற்கான எனது மடல்.
இது எனது புரிதல். தவறாக இருக்கலாம். எந்த ஒரு பிரச்சினையையும் உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கும்போது பேசினால் உண்மையை விட உணர்ச்சியே அதிகம் பேசுகிறது, அது தவறான புரிதலை ஏற்படுத்திவிடுகிறது.
போர் நடந்த நேரத்தை ஒப்பிடும்பொழுது, இப்பொழுது தமிழகம் இந்திய அரசியலில் தனித்துவிடப் படுவதாகவே உணர்கிறேன்.
1. வடநாட்டார் பார்வையில் பிரபாகரன் இருக்கும்பொழுது கூட LTTEஐ அவர்கள் புரிந்து கொள்வதாய் தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை LTTE ஒரு கடத்தல்காரர்கள், ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் உட்பட அனைத்து சட்ட விரோத காரியத்திலும் ஈடு படுபவர்கள்
2. இந்தியா முழுமையும் பேசினாலும் சரி.. பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திராவில் இந்தி இருந்தாலும் இங்கே கால் பதிக்கவே விடமாட்டோம். இதோடு சேர்த்து தனித் தமிழக கோரிக்கையும் சேர்ந்து தமிழர்களுக்கு ஒரு அடிப்படைவாத முத்திரையைக் குத்தி இருக்கிறது. அது இன்றுவரை தொடர்வதாகவே கருதுகிறேன்.
3. இந்தி எதிர்ப்பு மிக மோசமான எதிர் வினையை ஏற்படுத்தி இருக்கிறது. தேவையான நேரத்தில் தேவையான லாபியிங் செய்ய அல்லது லாபியிங் செய்பவர்களை எதிர்கொள்ளத் தேவையான நபர்களை டில்லிக்கு அனுப்பத் தவறிவிட்டோமோ என்று தோன்றுகிறது.
4. மஹாராஷ்ட்ராவை சரத் பவாரை வைத்தும், கேரளாவை உம்மன் சாண்டியை வைத்தும், ஜார்கண்டை சிபு சோரனை வைத்தும்தான் பார்கிறோம். இப்படி இருக்கையில், தமிழகத்தை கருணாநிதி மற்றும் ஜெயாவை வைத்துமே மதிப்பிடுவது தவிர்க்க இயலாதது. நாம் இங்கு எழுப்பும் குரல்களையும் காட்சிகளையும் முக்கியமாக இலங்கைப் பிரச்சினையை திமுக, கருணாநிதி, 2ஜி, ஆண்டிமுத்து ராஜா, கனிமொழி என்ற பல கண்ணாடிகளைப் போட்டுக்கொண்டே பார்க்கிறார்களோ என்று நினைக்கிறேன். இது எனது கருத்து மட்டுமே.
5. ராஜிவ் கொலைக்குப் பின் டில்லிக்கு சிங்களர் நெருக்கமாவது கண்கூடாகத் தெரிந்தது. தமிழர்கள் மீதான பிம்பம் மேலும் உறுதிப் படுத்துவதாக ஆனது. ராஜிவ் கொலை என்பது தமிழ் தீவிரவாதிகளுக்கு, மாணவர் போராட்டக்காரர்களுக்கு எப்படியோ, வட நாட்டுப் பொது மக்களுக்கோ, தேசிய அரசியல்வாதிகளுக்கோ அல்லது இந்திய அரசுக்கோ சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாதது. தமிழ்நாட்டைப் பிரித்துக் கொண்டுபோனாலும் இதுதான் அவர்கள் நிலைப்பாடாய் இருக்கப் போகிறது.
6. போரில் நடந்தது மிகக் கொடூரமான கொலை, மனித உரிமை மீரல்கள். மனதை அறுக்கும் ஒரு செயல். அதில் மாற்றுக் கருத்து சற்றேனும் கிடையாது. இனவாத மனம் கொண்ட சந்திரிகாவையே கலங்க வைத்தது அதற்கு சாட்சி. போர் முடிந்தது. பிறகு என்ன செய்தோம் என்பதில் மிக மோசமாக தமிழர்களை ஏமாற்றி இருக்கிறோம். கனிமொழி, பாலு, திருமாவளவன் எல்லாம் இணைந்து இந்திய அரசை இறுக்கிப் பிடித்திருக்க வேண்டும், மாறாக சுஷ்மா தலைமையில் தமிழருக்குப் பயனில்லாத வகையிலும், இலங்கைக்குப் பயன் பயக்கும் வகையிலும் ஒரு பயணத்தை மேற்கொண்டார்கள். தரமான மற்றும் வேகமான மீள்குடியமர்வு, மத மற்றும் கலாச்சார மையங்கள் காப்பு, நிவாரணம் மற்றும் வாழ்வுத் தரம் உயர்வை உறுதி செய்யவதில் இறுக்கம் கொடுக்க நம்மாட்கள் சற்றேனும் முயற்சி செய்யவில்லை. அது அந்தக் காலத்தில் செய்திருக்க வேண்டியது. இதை நாம் அனுமதித்திருக்கலாம். உலகப் பார்வையில் இருந்து எப்படித் தப்பும்? உலகப் பார்வையில் வடநாட்டார் பார்வையும் உண்டே. எப்படி வாதம் செய்தாலும் வடநாட்டார் இவற்றைச் சொல்லி நம் வாயை அடைக்க முயல்கிறார்கள்.
7. மேலே சொன்ன அனைத்தும் தமிழக மீனவர் தாக்குதல்களுக்கும் ஒத்துப் போகும். இதற்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டியது தமிழக தலைவர்கள்தான். செத்துப் போன காங் அல்ல. 500 மீனவர் செத்தாலும் சரி, 500மீனவரைக் காப்பாற்றினாலும் சரி. காங்கிரசுக்கு ஒரு ஓட்டும் விழப் போவதில்லை. அனால் நம் தலைவர்களால் நெருக்கடி கொடுத்திருக்க இயலாதா? போர் முடிந்த பின்னும் நிகழும் தாக்குதல்கள் எல்லை, மீன் பிடி தொழில், இனவெறி தொடர்பானவை. இவற்றைச் சரியான விதத்தில் மத்திய காங் அரசோ, மாநில திராவிட அரசுகளோ தீர்க்கவில்லை. மாணவர் எழுச்சிக்கு இதுவும் காரணம். கலவரத்தைத் தூண்டி விடும் சக்திகளுக்கு இது அல்வா மாதிரி. இன்னமும் ஒரு ‘முறை-process’ஐ வகுக்காதது மிக மோசம். இந்தக் கடுப்பில் தமிழர்கள் இருக்கும்போது, “எல்லை தாண்டிப்போனா சாவுதான்” என்கிற ரீதியில் மத்திய அமைச்சர்கள் பேசுவது சமூக அமைதியைக் கெடுக்கும். கலகம் விளையும்.
8. இப்பொழுது நடக்கும் போராட்டங்கள் எந்த அளவிற்கு தமிழர் வாழ்விற்கு உதவும்? இது தமிழர் வாழ்விற்கானதா என்று பார்த்தேன். அல்ல. இது தமிழ் ஈழத்திற்கானது. சாகக் கிடக்கும் ஒருவனுக்கு வேண்டியது முதலுதவி. ருசிக்கு ஜவ்வரிசிப் பாயசம் அல்ல. இலங்கையில் குறிப்பிடத்தகுந்த அரசியல் மாறுதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் உயிரோடிருக்கும் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இதைத்தான் யோசிக்க வேண்டுமே தவிற தனி ஈழத்திற்கான கோரிக்கைக்கு இது நேரமே அல்ல.
9. தனி ஈழம் பெற முடியுமா? இப்போதுள்ள சூழல்களில் எனக்கு எதிர்மறையாகவே எண்ணத்தோன்றுகிறது. சேர்ந்து வாழ விருப்பமோ இல்லையோ, அரசியல் நிர்பந்தங்களுக்குட்பட்டு, சேர்ந்து வாழ்கிறோம் என்கிறார். ஆனால் சிங்களவருடனோ, முஸ்லிம்களுடனோ சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லாதது என்பது பிரச்சினையைத் தீர்க்காது, எஞ்சியிருப்பவர்களுக்கு நன்மை பயக்காது. பிக்குகள் மீதான தாக்குதல்கள், ஐபிஎல் குழப்பங்கள், தமிழகம் மீது இனவாத அடிப்படைவாத முத்திரை குத்தியுள்ளது. இது என்னை அஞ்ச வைக்கிறது. இது பிரச்சினையை திசை மாற்றிவிடும். இந்திய அரசை எரிச்சல் படுத்தும். விளைவு, இலங்கைக்கு டில்லி மீதான வீச்சு இன்னும் சுலபமாக அதிகரிக்கும். எதிர்மறை விளைவுகளைப் பெற்றுத்தர தமிழகம் பாடுபடுகிறது.
10. இந்திய அரசுக்கு வரி கொடுக்கக் கூடாது; தனி ஈழம் தோன்றும் வரை மத்திய அலுவலகங்களில் ஒரு வேலை நடக்கக்கூடாது; தனித் தமிழ்நாடு; தமிழ்நாட்டுக்கு என்று தனி இராணுவம்!! என்று தமிழகத்தில் தோன்றும் குரல்களை கலகக் குரல்களாகவே பார்க்கிறேன். முழுக்க நிராகரிக்கிறேன். தனித் தமிழகம் சாத்தியமும் இல்லை, அப்படியே அமைந்தாலும் ஆளப்போவது காமராஜர் இல்லை.
ஆக 500க்கும் மேற்பட்ட நாடுகளின் எல்லைகளை அழித்துப் பரந்த பூமியாக உருவானது இந்தியா. இதையே உலகின் மற்ற பகுதிகளில் செய்வது எந்த அளவிற்கு முடியும்? ஏதோ ஒரு ஓட்டுப் பொறுக்கும் கூட்டம் தவறு செய்தது; தவறான முடிவுகளை எடுத்த ஆயுதக் கூட்டம் தவறு செய்தது; காலத்தில் வந்த வாய்ப்பை ஓநாயாகக் கவ்விக் கொண்டது ஒரு இனவாதக் கூட்டம்.
இதற்காக தனித்துப் பெற்ற இத்தன்மையைத் திரும்ப குண்டு சட்டிக்குள் அடைக்க எனக்கு விருப்பம் இல்லை. மாறாக ராஜாங்க ரீதியில் தீர்வுகளைக் காண ஆட்சியாளர்களுக்கு நெருக்கம் கொடுக்க வேண்டும்.