இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு… பாகம் 1
ஆசிரியர் – ராமச்சந்திர குஹா
தமிழில் – ஆர்.பி. சாரதி
பதிப்பு – கிழக்கு பதிப்பகம், 2009
பிரிவு – அரசியல்
ISBN 978-81-8493-212-6
இணைய விற்பனை https://www.nhm.in/shop/978-81-8493-212-6.html
பரிந்துரை – தமிழ்பயணி
இந்தப் புத்தகத்தின் தமிழ் வெளியீடு பற்றி பத்ரியின் வலைப்பதிவில் படித்தேன். பிறகு இந்த புத்தகத்திற்குச் சிறந்த மதிப்புரைகளை ஏனைய எழுத்தாளர்களும் வெளியிட்டு இருந்தனர். நம்மால் படிக்க முடிகிறதா என்கிற ஒரு தன்னறி சோதனையில் இதுவும் ஒன்று.
இந்திய வரலாறு என்கிற பெயர் இருந்தாலும் அதனை கதைபோல எடுத்துச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இல்லையென்றால் இரண்டு பக்கம் கூட நான் தாண்டியிருக்க மாட்டேன்.
நிற்க,
பாகம் ஒன்று – இதில் மொத்தம் மூன்று பகுதிகள் உள்ளன. அதில் முதல் பகுதி பற்றி இங்கே பதிகிறேன்.
இந்தியாவின் வரலாறு என்பது சிந்து சமவெளி, மொகஞ்சதாரோ, அஜந்தா, எல்லோரா, பல்லவர், மூவேந்தர், மொகலாயர்கள், பிரிட்டிஷார்கள் என்று வந்து 1947ல் நின்று விடுகிறது என்கிறார் ஆசிரியர். நான் அனைவரும் ஒத்துக்கொள்ளவேண்டிய ஒன்று. ஆனால் 1947க்குப் பின்பு வந்த நிகழ்வுகளைத்தான் ஒருவர் உண்மையாக அறிந்துகொள்ளவேண்டும் என்கிறார் ஆசிரியர்.
இந்திய ஜனநாயகம் என்பது கலையப்போகிற தேன்கூடு மாதிரி என்று உலகம் முழுக்க அவநம்பிக்கை ஒலிகள் கேட்கும்போது இந்தியா சுதந்திரம் அடைகிறது. முழுதாக ஒரு தேசத்தைக் கட்டுமானம் செய்யவேண்டும் என்கிற ஆட்சியாளர்களின் மும்முறம். இந்தியாவின் நெஞ்சில் ஈட்டி இறக்க முயன்ற கலவரங்கள் என்று புயலில் படகாய் தத்தளித்த இந்தியா எவ்வாறு கரை சேர்க்கப்பட்டது? அதில் யார் யார் ஈடுபட்டிருந்தார்கள்? வெளிநாட்டவர்களா? உள்நாட்டவர்களா? அவர்களுக்கு நேர்ந்த சோதனைகள் என்னென்ன?
ஒரு பாராவில் அடுக்கிவிட்டேன். ஆனால் இவற்றை ஆசிரியர் சொல்லும்போது மனதில் பெரிய திரை விரிகிறது. மகிழ்ச்சியான தருணம் என்று நம் குடிமையியல் பாடங்களில் வர்ணிக்கப்படும் சுதந்திரம் நிகழ்ந்தபோது நிகழ்ந்த கலவரங்கள், அவை அள்ளித்தந்த உயிரிழப்புகள், மனித உரிமை மீரல்கள் என்று புத்தகத்தின் ஆரம்பமே நம் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொள்கிறது.
இந்திய மற்றும் புதிதாய் பிரிந்த பாகிஸ்தானின் தேசீயத் தலைவர்களின் ஆளுமை பற்றி சுருக்கென்ற வரிகளுடன் கதையாகச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். இந்தியாவின் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ஜின்னா ஒரு சரித்திர சாத்தான் அவதாரம் எடுப்பதாய் தெரிகிறது. தீவிர மத நம்பிக்கையோடு பிரிவினைவாதத்தை மிக அற்புதமாகத் தூண்டி விடுகிறார். கடுமையான பேரம் பேசி தனி நாடு வாங்கி குடிபோகிறார். அவருடைய ‘இஸ்லாத்துக்கு ஆபத்து’ என்கிற பிரச்சாரத்துக்கு அபரிமிதமான ஆதரவு.

உலக வரலாற்றின் மிகப்பெரிய இடப்பெயர்தல் நடக்கிறது. அமைதியாக இல்லை. சொத்துக்களை விற்றுவிட்டோ அல்லது விட்டுவிட்டோ புலம் பெயர்ந்து செல்கின்றனர் மக்கள், போகிற இடத்தில் வாழமுடியுமா என்கிற நம்பிக்கையை விட இருக்கிற இடத்தில் இருக்க முடியாது என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இந்த நிலையை அனுபவித்தவர்களின் மன உளைச்சலை எண்ணிப் பார்க்கிறேன். மிகக் கொடிது. வெறும் இடப்பெயர்வு மட்டுமா? எத்தணை கலவரம்? பெரும்பான்மை இந்துக்களைச் சமாதானப்படுத்தி சிறுபான்மை நலன் காப்பவர்களாக அவதாரம் எடுக்கிறார்கள் நேருவும் காந்தியும். இந்தியாவின் பல்வேறு இடத்திலும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து அமைதிப்படுத்தி, பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களுக்கு நம்பிக்கையையும், இந்தியாவை விட்டுச் செல்கிறவர்களுக்கு தங்களால் இயன்ற பாதுகாப்புகளையும் வழங்குகிறார்கள். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இந்தியத் தலைவர்கள் அலைந்து கொண்டு இருக்கும்போது, மறுபுறம் பாகிஸ்தானில் லாகூருக்கு மட்டும் அரசு பாதுகாப்போடு வந்து பார்த்துச் செல்கிறார் ஜின்னா.

சுதந்திரம் பெற்ற ஒரே வருடத்தில் இரு நாட்டுத் தந்தைகளும் இறந்துபோகிறார்கள். அடுத்த நிலை தலைவர்கள் இந்தியாவை வெகு சிறப்பாகக் கொண்டு செல்வதை உணர முடிகிறது. காந்தியின் இறப்பு என்பது எளிதில் உடைந்துபோக இருந்த ஒரு நாட்டிற்குப் போடப்பட்ட மிக அத்தியாவசியமான ஒட்டுவேலை என்கிறார் ஆசிரியர். உண்மைதான். மன வேறுபாடுகளை மறந்து நேருவும் படேலும் கட்டிய கோட்டைதான் இன்று வரை நிலைத்திருக்கிறது. 500க்கும் மேற்பட்ட தேசத்திலிருந்து ஒன்று பட்டவர்கள் நாம் என்பதே நமக்குத் தெரியாமல் ஆக்கிவிட்ட சரித்திர சாதனையாளர்கள் அவர்கள். மிக முக்கியமாக இந்தியர்கள்.
பிரச்சினை, நம்பிக்கை இன்மை, அகதிகள், நாட்டை எடுத்துக்கட்டும் முயற்சி என்று இந்திய அரசியல் சக்கரம் பரபரப்பாக சுழல்வதை ‘சுதந்திரமும் உயிரிழப்பும்‘ மற்றும் ‘பிரிவினை‘ கட்டுரைகள் விவரிக்கின்றன.

முன்னர் கூறிய கட்டுரைகள் நேரு மற்றும் காந்தியின் ஆளுமையைக் காட்டும் கட்டுரைகளாக இருக்கலாம். ஆனால் அடுத்த இரண்டு கட்டுரைகளில் படேல் தன்னிகரில்லா ஆளுமையாகவும், மேனன் அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் இருந்து மிகக்குறைந்த உயிரிழப்புகளுடன் மிகப்பெரிய சாம்ராஜ்ஜிய எல்லைகளை அழித்து மிகப்பெறிய இந்திய நாட்டை செங்கல் செங்கலாக அடுக்குவதை வெகு சுவாரசியமாகக் கூறுகிறார் ஆசிரியர். நேருவால் இது முடியாது என்கிறார். நயந்து பேசுகிற இடத்தில் நயந்தும், அதட்ட வேண்டிய இடத்தில் அதட்டியும் சமஸ்தானங்களை ஒன்றிணைக்கிறார்.

இராணுவ உதவி சில இடங்களில் தேவைப்பட்டது. ஆனால் இராணுவ பலத்தால் அவை ஒருங்கிணைக்கப்பட்டதல்ல. ஆட்சியாளர்களுக்குத்தான் இராணுவ நடவடிக்கை. இந்தியா என்பதில் மக்கள் காட்டிய ஆர்வம், இராணுவத்துக்கு மக்கள் காட்டிய ஆதரவு படேலின் பணியை எளிதாக்கியது. அப்பவும் இடர்பாடுகளைச் செய்து கொண்டே இருக்கிறார் ஜின்னா. திருவாங்கூர் சமஸ்தானம் தனித்து இருக்கவேண்டும் – அதனுடன் வியாபார உறவுகளைப் பாகிஸ்தான் செய்து கொள்ளும் – ஐதராபாத் சமஸ்தானம் தனித்திருக்கவேண்டும் – என்று அவர் ஓட்டிய குறுக்கு உழவுகள் படேல் மற்றும் மேனனினிடமும், இந்திய யூனியனாக மாறவேண்டும் என்கிற மக்களின் சிந்தனைக்கும் முன்னே பலிக்காமல் போயிருக்கிறது என்பதை ‘கூடையில் சில ஆப்பிள்கள்‘ கட்டுரை சுவாரசியமாக சொல்கிறது.

காஷ்மீர் பற்றி சுருக்கமான உரையை பாகிஸ்தான் அரசியல் வரலாறு புத்தகத்தில் பார்த்தோம். ஆனால் இந்தப் புத்தகம் காட்டும் காட்சி மிக விரிவானது. ஹரிசிங்கின் கையாலாகாத்தனத்தையும் அப்துல்லாவின் எழுச்சியையும் காட்டுகிறது. இன்றளவும் ஏன் காஷ்மீர் ஏன் சர்ச்சையைத் தருகிறது என்று விளக்க முற்படுகிறார் ஆசிரியர். காஷ்மீர் விவகாரத்தில் ஐநா சபைக்குக் கொண்டு சென்றதற்காக வருத்தப்படுகிறார் நேரு. இன்றளவும் ஐ.நா சபை ‘வல்லான் வகுத்த சபை’. வல்லான் எந்தப் பக்கம் பேசறானோ அந்தப் பக்கம் சாயும். அவன் பாகிஸ்தான் பக்கம் பேசுகிறான். நாட்டைக் கட்டிக் காபந்து செய்ய திறனில்லாத பாகிஸ்தான் புலிகள் இந்தியாவைப் பிராண்டுவது இன்றளவும் தொடரவே செய்கிறது.’சிவந்த அழகிய பள்ளத்தாக்கு‘ கட்டுரை காஷ்மீர் இணைப்பு, பாகிஸ்தானின் படையெடுப்பு, ஷேக் அப்துல்லாவின் எழுச்சி போன்றவற்றைக் காட்டுகிறது.

பாகிஸ்தானிலிருந்து இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும் தத்தம் சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு (சிலர் பிரிவினை காலத்திற்கு முன்னரே சொத்துக்களைக் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு) செல்கின்றனர். முஸ்லிம்கள் விட்டுச் சென்றதை அங்கிருந்து வரும் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் கொடுக்கலாம் என்கிற நம்பிக்கையில் மண் விழுகிறது. வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை உணர்ந்து நிலம் எவ்வாறு பகிர்ந்து கொடுக்கப்பட்டது என்று விவரிக்கிறது ‘அகதிகளும் குடியரசும்’ கட்டுரை. அத்தியாவசியப்பொருட்களை மட்டும் எடுத்து வந்த அகதிகள் கூட்டத்திற்கென்றே முகாம்கள் தலைநகர் டெல்லியில் அமைக்கப்பட்டதைக் கூறுகிறார் ஆசிரியர். கூடாரங்கள், தண்ணீர் வசதிகள், உணவு வசதிகள், மன இறுக்கத்தைப் போக்க கார்டூன் படங்கள் என்று அகதிகளை அரவணைக்க இந்தியத் தலைவர்கள் எடுத்த முயற்சிகளைப் படிக்கும்போது இப்படிப்பட்டவர்கள் நம் மண்ணில் இருந்திருக்கிளார்கள் என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள நினைக்கிறோம்.
ஒரே சமயத்தில் தனித்தனிக் குடிகளில் வாழ்க்கையைத் தொடங்கியது இந்தியாவும் பாகிஸ்தானும். 1960களின் பாதி வரையில் அரசியலமைப்புச் சட்டம் என்கிற ஒன்றே பாகிஸ்தானில் கிடையாது. நேருவின் வழிகாட்டுதல், அம்பேத்கரின் தலைமை என்று நாடு செட்டில் ஆகும் முன்பே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குகிறார்கள். இத்தணை பிரிவுகள் – இதற்கு இன்னன்ன சட்டங்கள் என்று குழுக்களுடன் வாதப் பிரதிவாதம், நிலச்சீர்திருத்தம், இட ஒதுக்கீடு, தனிநபர் உரிமை காப்பு என்று இனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை விவாதித்து ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து சரிகட்டப்படுகிறது. சிறுபான்மையினர் நலத்துக்கு என்று தனிக்கவனம் செலுத்தப்பட்டதைக் காட்டுகிறார் ஆசிரியர். முன்னர் கலவரம் தந்த பாடம். முஸ்லிம்கள் தனித்தொகுதி கேட்கிறார்கள், பெண்கள் தனித்தொகுதி கேட்கிறார்கள். மறுக்கப்படுகிறது. பிராமணர்களின் ஆதிக்கம் குறைக்கப்பட்ட தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தனித்தொகுதி வழங்கப்படுகிறது. அரசுப் பணி வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உருவாகிறது. இது எல்லாம் எல்லாரும் அமைதியாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய விசியங்களா, மிகப்பெரிய வாக்குவாதங்களே நடந்திருக்கின்றன என்பதைக் காட்டுகிறது இந்தப் பகுதியின் இறுதிக்கட்டுரை ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம்’.
—
தேசத்தைப் பிரிக்க ஏராளமான காரணங்கள் இருந்தன. அவற்றுக்கு அப்படி இப்படி என்று சில குழுக்களின் ஆதரவும் இருந்தது. கொடுமைக்குரிய விசியமாக அவற்றைச் சேர்த்து வைக்க இந்திய ஆட்சியாளர்கள் மட்டுமே இருந்தார்கள். அவர்கள் பெரும்பாலான மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவர்களான இருந்தார்கள். இந்தியாவை ஒருங்கிணைத்து அவர்கள் தேசத்தைக் கட்டியது உலகில் ஒரு சிறந்த மாதிரி. முழுமையாக இது ‘Made In India’. பல வகை வடிகட்டலுக்குப் பிறகு உப்புச்சப்பில்லாது குடிமையியல் பாடத்தில் வைக்கப்படும் இந்திய வரலாறு பல உண்மைகளை மட்டுமல்ல, இந்தியர்கள் செய்த சாதனைகளையும் கூட சரியாக நினைவு படுத்துவதாய் இல்லை. அவை விட்டு வைத்த பெரிய ஓட்டைகளை இது போன்ற புத்தகங்கள் அடைப்பதாகவே நினைக்கிறேன்.
அடுத்த பகுதியில் சந்திக்கலாம்!
//ஆட்சியாளர்களுக்குத்தான் இராணுவ நடவடிக்கை. இந்தியா என்பதில் மக்கள் காட்டிய ஆர்வம்//
மேற்குறிப்பிட்ட வரிகளை வாசிக்கும் போது “நான் இந்தியன் டா” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன் பெருமையாக. இந்த புத்தகத்தை வாங்கி முதல் இரண்டு கட்டுரைகளை படித்துவிட்டு வைத்துவிட்டேன். மீண்டும் எடுத்து படிக்க வேண்டும். நமது வரலற்றை படிக்கும் தோறூம் மிகுந்த செயலூக்கம் பெறுகிறேன்
👍 வருக. வணக்கம் திரு சிவசங்கரன்