வெண்முரசு கலந்துரையாடல்


வெண்முரசு வந்த பிறகு facebook, கீச்சுலகம் என்று போக முடியாத நிலை வந்துவிட்டது. தவிர வேலை மாறுதல் வேறு. விளைவு. நண்பர்கள் வலைப்பதிவுகளுக்குக் கூட செல்ல இயலவில்லை. எனவே எழுத்தாளர் ஜெயமோகன் பதிவில் வந்த சிங்கை நிகழ்வு பற்றிய செய்தியையும் பார்க்கத் தவறிவிட்டேன். எதேச்சையாகக் கேள்விப்பட்டு வந்த நேற்று மாலை நேர புத்தக வெளியீட்டு விழாவிற்கும், இன்றைய ஜெ உடனான கலந்துரையாடலுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

image

ஜெ பேச்சைக் கேட்பது என்பது ஒரு பெரிய செய்தியாகக் கூற இயலாது. ஒவ்வொரு நாளும் வெண்முரசு வாயிலாகவும் தன் பதிவுகளின் வாயிலாகவும் தனது வாசகர்களுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் அவர் குரலில் அதே செய்திகளைக் கேட்பது என்பது அவர்தம் வாசகர்களுக்கு இனிய அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நான் அவரது தீவிர வாசகன் இல்லை. நண்பர் பரிந்துரையில்பேரில் சமீப காலமாக அவரைத் தொடர்கிறேன். சென்ற வருடம் புக்பாயிண்ட் புத்தக அரங்கில் நடைபெற்ற புத்தகவெளியீட்டு விழாவிற்கு வருகை தந்தவரின் பேச்சைக் கேட்க முடிந்தது. ஒரு நாவல் பற்றிய அறிமுகத்திற்கான உரை கொடுத்தார்.

சனிக்கிழமையும் புத்தக வெளியீட்டு விழாதான். உட்லண்ட்ஸ் நூலக அரங்கில் நடந்தது. சிறப்புரையாக இருந்ததால் அணைபோடாமல் இருந்தது பேச்சு. தவிர இரவுச்சாப்பாடு வேறு போடுவேன் என்று சொன்னார்களா.. நாலரை மணிக்கே சென்று அமர்ந்துவிட்டேன். (கடைசியில் ஜெ வாயைப் பார்த்துக்கொண்டு நின்றதால் பந்தியில் கூட்டம் முந்திவிட ஓட்டம் பிடித்துவிட்டேன்) அப்போது உள்ளே வந்து உலாவிச் சென்றவரைத் திரும்ப 7 மணிக்கு மேல்தான் மேடையேற்றினர்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் வசிக்கும் இடம் என்பதால் தமிழ்மொழியைப் பற்றியும் அதன் கடந்த காலம் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் தன் ஆதங்கத்தை முன் வைத்தார்.  அதன் ஒலிப்பதிவு என்னிடம் இருக்கிறது. ஆனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் வெளியிடும் வரை நான் காத்திருக்கிறேன். ஆனால் அவர் தன் உரையை முடித்த விதம் சிந்தணையைத் தூண்டுவதாக அமைந்தது. அவர் ஆற்றிய உரையை ஆ பக்கத்தில் காணலாம்.

ஞாயிறு காலை அங்மோகியோ நூலகத்தில் அவருடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். வெகு நேரத்துக்கு முந்தியே துண்டைப்போட்டு இடம் பிடிச்சேன். தவிர முதல் நாள் அறிமுகமான ஒரு நண்பரைக்கும் தப்புத்தப்பா வழி சொல்லி ஒரு வழியா வரவழைத்தேன்.

சரி கதை போதும்!

தத்துவார்த்தமானதாக அவரது பாணியில் விளக்கம் தந்து கொண்டிருந்தார். தனியில் செய்த விவாதம் என்பதால் அனைத்தையும் ஆவணமாக்க இயலாது. ஆனாலும் வெண்முரசு தொடர்பான இரண்டு கேள்விகள் எழுந்தன. இலக்கியம் படிப்பது இன்பம். அதைப் பற்றிப் பேசுவது இன்னொரு இன்பம் என்பார் சுஹாசினி. அவர் அங்க வரலைங்க. சிந்து பைரவி படத்தில சொல்லுவார். யாரோ எழுதிய இலக்கியத்தை யாரோ இருவர் தங்களுக்குள் உரையாடுவதே இன்பம் என்றால், அந்த இலக்கியத்தை எழுதியவர் வாய் வழியே கேட்பது என்பது என்னமாதிரியான ஒரு உணர்வு என்பதை அவரவர் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

தத்துவம் பக்கத்திலிருந்த அவரை வெண்முரசு பக்கம் இழுத்தே ஆகணும் என்கிற எனது சதித்திட்டம்தான் எனது கேள்வி. தெரிந்தே கேட்கும் கேள்வி என்பார்களே. ஆனால் பதற்றத்தில் என்ன கேட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் சரியாகவே புரிந்து கொண்டார். என் உடன் அமர்ந்திருந்த சக சான்றோர்கள் மற்றும் நண்பர்கள் அதற்காக என்னைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

முதற்கனல் நாவலைப் படித்தவர்கள் யாருடைய நெஞ்சிலும் அந்தக் கங்கு இன்னும் அணையாமல்தான் உள்ளது. தவிர பீஷ்மர் என்கிற ஒரு பெரியதொரு கதாபாத்திரம் அதில் வந்தாலும், அம்பை மற்றும் சத்யவதி பற்றிய விவரணைகளில் மனிதர் மனதைப் பொங்க வைத்துவிடுகிறார். அம்பை பற்றிப் பேசும்போதெல்லாம் உள்ளுக்குள் தீ எரியும். இதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதில்லை.

பீஷ்மர் மீது அம்பை கொண்டுள்ள கோபம் என்பது அனைவருக்கும் தெரியும். சிகண்டியைத் தட்டிவிட்டு விட்டு தீ புகுந்துவிட்டாள் அவள். அவன் வெறி கொண்டு ஒரு பக்கம் அலைகிறான். ஆசிரியரின் புனைவில் ஒரு காட்சி வருகிறது. ஓர் மழைக்கால இரவில் பீஷ்மர் ஒரு கிராமத்துக்குச் சென்று தங்குகிறார். அதிதி தேவோ பவ: அவரை உபசரிக்க வருகிறாள் உர்வரை.

பெரிய மண்கலத்தில் கொதிக்கும் நுரை எழுந்து விளிம்பில் படிந்த முறுகி வற்றிய எருமைப்பாலை ஊற்றி வலக்கைப்பக்கம் வைத்து “வில்வீரரே, தங்கள் உணவு” என்றாள். பீஷ்மர் புன்னகையுடன் “நான் வில்வீரர் என எப்படித் தெரிந்துகொண்டாய்?” என்றார். “தங்கள் தோள்களில் நாண்பட்ட தழும்பு உள்ளது” என்றாள் அவள் சிரித்தபடி. “ஆனால் அது கூடத் தேவையில்லை. எதையும் குறிபார்ப்பவராகவே நோக்குகிறீர்கள்.”

காலையில் கிராமத்துப் பெரியவர் உர்வரை பீஷ்மரை விரும்புவதாகவும், அவளைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே இருக்கவேண்டும் என்றும் வேண்டுகிறார். பீஷ்மர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று நமக்குத் தெரியும்தானே. ஆனால் கதை அங்க இல்லை. அவர் கிளம்பும் சமயத்தில் உர்வரை பீஷ்மரைச் சந்திக்கிறாள்.

சிறுவரப்பு வழியாக அவரை நோக்கி உர்வரை வருவதை அவர் கண்டார். அவள் நிமிர்ந்த நடையுடன் வருவதைக் கண்டபோது நாணேற்றிய கரிய வில் என அவர் நினைத்துக்கொண்டார். அவள் அவர் அருகே வந்து கரிய ஈறுகளில் வெண்கிளிஞ்சல் பற்கள் தெரிய புன்னகைசெய்து “கிளம்பிவிட்டீர்கள் என்றார்கள்” என்றாள். “ஆம்” என்றார் பீஷ்மர். “நீ என்னை மன்னிக்கவேண்டும் பெண்ணே…என் வாக்கு அப்படி. உனக்கு அனைத்து நலன்களும் கிடைக்கட்டும்.”

அவள் இமைகள் அரைக்கணம் சிட்டின் இறகுகள் என தாழ்ந்து மேலெழுந்தன. தெளிந்த விழிகளால் அவரை நோக்கி “நான் எனக்காக உங்களை மணம்புரிய விரும்பவில்லை” என்றாள். “நான் நேற்றிரவு ஒரு கனவுகண்டேன். எங்கள் ஊர்மூலையில் கோயில் கொண்டிருக்கும் வராஹியின் கருவறையில் இருந்து கனத்த உறுமலுடன் ஒரு பெரும் கரும்பன்றி வெளியே வந்தது. அது எங்கள் முற்றத்துக்கு வந்தபோது நீங்கள் அங்கே நின்றுகொண்டிருந்தீர்கள். உங்கள் கையில் வில்லோ வாளோ ஏதுமில்லை. அது உங்களை நோக்கிப் பாய்ந்து உங்கள் உடலை மோதிச் சிதைத்தது. நீங்கள் குருதியில் மண்ணில் கிடந்தீர்கள். உங்கள் நெஞ்சைக்கிழித்து இதயத்தைக் கவ்வி எடுத்துத் தின்றபடி என்னைத் திரும்பிப்பார்த்தது. அதன் வாயில் இருந்த வளைந்த பற்களால் அது புன்னகைசெய்வதுபோலத் தோன்றியது.”

பீஷ்மர் மெல்லிய புன்னகை செய்தார். “பெரிய ஆபத்து உங்களை நோக்கிக் கிளம்பிவிட்டது. வராகம் தடுத்து நிறுத்தப்படவே முடியாதது என்பார்கள்” என்றாள் உர்வரை. “நான் உங்களை என்னுடன் சேர்த்துக்கொள்ள விரும்பினேன். என்னுடன் இருந்தால் நீங்கள் தப்பிவிடுவீர்கள் என நினைத்தேன்.” http://venmurasu.in/2014/02/11/

ஆச்சா..

காட்சி அக்னிவேசரின் பயிற்சிப் பட்டறைக்குத் திரும்புகிறது. மாணவர்களின் வீரத்திற்கும் கோப தாபத்திற்குமான லிட்மஸ் சோதனை செய்து கொண்டிருக்கும் அத்தியாயத்தில் சிகண்டியின் ஆக்ரோஷம் தெரிகிறது.

அவன் கண்களை நோக்கி அக்னிவேசர் கேட்டார் “நீ நேற்று என்ன கனவு கண்டாய்?”

சிகண்டி கண்களைத் திருப்பியபடி “ஒரு சிறிய கிராமம். நீரோடைகளால் சூழப்பட்டது. மென்மழை அங்கு பெய்துகொண்டிருந்தது. நான் ஒரு சிறிய கூட்டுக்குள் இருப்பதாக உணர்ந்தேன். அங்கிருந்தபோது ஒருவனைப் பார்த்தேன். அவன் என் எதிரி என்று தெரிந்தது…”

“அவன் முகம் தெரிந்ததா?” என்றார் அக்னிவேசர். “இல்லை. நான் பார்த்தது அவனுடைய மார்பை மட்டுமே. அப்போதுதான் நான் ஒரு கரிய பன்றியாக இருப்பதை உணர்ந்தேன். உறுமியபடி பாய்ந்து சென்றேன். மலையிலிருந்து இறங்கும் கரும்பாறைபோல. அவன் மார்பை முட்டி அந்தவேகத்திலேயே தோலையும் தசையையும் கிழித்து எலும்புகளை உடைத்து சிதைந்த மாமிசத்தில் இருந்து அவன் இதயத்தை கவ்வி பிய்த்து எடுத்தேன். செந்தாமரை மொட்டு போலிருந்தது. மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. வெம்மையான குருதி அதிலிருந்து வழிந்தது. அதை என் வாயிலிட்டு மென்று உண்டேன். அப்போது ஒரு மூச்சொலி கேட்டுத் திரும்பிப்பார்த்தேன். சங்குவளையல்களும் கிளிஞ்சல்மாலையும் அணிந்த கரிய பெண் ஒருத்தி என்னை நோக்கிக் கொண்டு நின்றிருந்தாள். அக்கணமே நான் விழித்துக்கொண்டேன்.”

……..

அக்னிவேசர் “நான் நேற்றிரவு துயிலவில்லை” என்றார். “அதிகாலையில்தான் நான் உன்னிடம் ஒன்றை கேட்டிருக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது.” சிகண்டி வெறும் பார்வையாக நின்றான். “சொல், நீ கண்ட அந்தக் கனவில் வந்த கிளிஞ்சல்மாலையணிந்த கிராமத்துப்பெண் எப்படி இருந்தாள்?” சிகண்டி பார்வையை விலக்கி சில கணங்கள் நின்றான். அவன் கை நாணை நெருட சிறு ஒலி எழுந்தது. பின்பு “என் அன்னை அம்பாதேவியைப்போல” என்றான்.

“நினைத்தேன்” என்றபின் அக்னிவேசர் “உன் தேடல் முழுமையடையட்டும்!” என்று வாழ்த்திவிட்டு திரும்பிச்சென்றார்.

http://venmurasu.in/2014/02/12/

இது என்ன மாதிரியான காட்சி அமைப்பு என்பது என்னுடைய அறிவுஜீவித்தனம். எழுத்தாளர்களிடம் இது போன்று கேட்கக்கூடாதோ. அவரே சொன்னார். சரி அவரிடமிருந்தே வெண்முரசைக் கேட்க இதை விட்டால் வேறு என்ன வழி?

வெண்முரசின் சில காட்சிகளை விளக்கிய போது (கதை கேட்ட போது)…

பீஷ்மரைக் கொல்ல அம்பை சிகண்டியைத் தயார் செய்துவிட்டாள்.

அம்பை தீபுகும் முன்னர் சிகண்டியிடம் பீஷ்மரைக் கொல்லவேண்டும் என்கிறாள்.

அவன் கொல்கிறேன் என்கிறாள்.

அம்பை திடுக்கிட்டு, “அவர் யாரெனத் தெரியுமா?” என்கிறாள். “யாரா இருந்தா என்ன. நீ சொல்லிட்டே இல்ல. நான் கொல்றேன்” என்கிறான். “ஆம், நீ அதைச்செய்வாய். ஒற்றை இலக்குக்காக மட்டுமே வாழ்பவன் அதை அடைந்தாகவேண்டுமென்பது பெருநியதி”

ஆக கடும் வெறியுடன் சிகண்டி சுற்றி்க்கொண்டிருக்கிறான். அவனைத் தடுக்க யாராலும் முடியாது. இப்பவாவது என்னை நீ திருமணம் செய்து கொண்டால், அவனிடமிருந்து உன்னைக் காக்க முடியும். இல்லைன்னா சிகண்டி உன்னைக் கொன்றுவிடுவான்.

இது அம்பைக்கு பீஷ்மர் மீதான காதலைக் காட்டுவது. ஒருவர் மேல் பிரியம் இருக்கிறதானே அவரிடம் பெறும் கோபம் வருகிறது. யாரோ ஒரு மூன்றாம் நபர் வெறுத்தால் எதற்கு வருத்தப்படப் போகிறோம். அந்த கோபம்தான் அம்பைக்கு வருகிறது என்பதை விளக்கினார்.

tean age தேவதைகள் அம்பை மனதை மாற்றும் காட்சியை அவர் விளக்குவது அழகு. அதை நான் திரும்ப சொன்னால் அழகு கெட்டுவிடும்.

ஆனால் அதை விட உச்சம் பீஷ்மர் மற்றும் அம்பையினிடையில் நடந்த கடைசி உரையாடலை திரும்ப அவர் காட்டியது ஒரு நல்ல அனுபவம். பார்க்க http://venmurasu.in/2014/01/16/

நீங்க என்ன வேணா நினைச்சுக்கங்க. முதற்கனல் நாவலின் அந்த அத்தியாயத்தைப் படித்து உங்கள் இரத்த அழுத்தம் எகிரலைன்னா…………. இத்தோட நான் எனக்கு கோடான கோடி வாசகர்கள் இல்லைங்கிறத ஒத்துக்கிறேன்!!! மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியாது. ஆனால் என் வாசிப்பில் அந்த அத்தியாயம் முதல் நாவலின் உச்சமாக இருக்கப்போகிறது.

பீஷ்மர் தன்னைச் சுற்றி சில அரண்களைக் கட்டிக்கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனால் இந்த அத்தியாயத்தில் அம்பை அவரது அரண்கள் ஒவ்வொன்றாக உடைத்து உள்ளே வருகிறாள். மேலும் மேலும் நெருங்கி வரும் அம்பையைச் சமாளிக்க இயலாமல் பீஷ்மர் தடுமாறும் காட்சியை இந்த அத்தியாயத்தில் எழுதும்போதும் சரி, அன்றைக்கு விளக்கிய போதும் சரி…. அகம் நிறைந்தது.

ஒவ்வொன்றாகக் கடந்து வரும் அம்பையை ஒரு கணத்தில், இவளைக் காயப்படுத்தினால்தான், இவளை வாதத்தில் வென்றால்தான் நம்மை விட்டு நீங்குவாள் என்கிற எண்ணம் பீஷ்மருக்கு வருகிறது.

முற்றிலும் திறந்தவராக அவள் முன் நின்ற பீஷ்மரின் பழகிய அகந்தை சுண்டப்பட்டு கீழே விழும் நாணயம் இறுதிக்கணத்தில் திரும்புவதுபோல நிலைமாறியது. அதை தன் தோல்வி என்றே எடுத்துக்கொண்டார். தன்னை தோல்வியுறச்செய்து மேலே எழுந்து நிற்கும் பெண்ணை திடமாக ஊன்றி நோக்கி அவளை எது வீழ்த்தும் என சிந்தனை செய்தார். குழந்தையின் உள்ளும் புறமும் அறிந்த அன்னையாக அவள் நின்றுகொண்டிருந்தாள். அந்நிலையை எதிர்கொள்ள அவர் தன்னை ராஜதந்திரியாக ஆக்கிக்கொண்டார்.

…..

“ஏனென்றால் நீங்கள் ஒரு பெண்ணல்ல. இப்படி காதலுக்காக வந்து கேட்டு நிற்பதே பெண்ணின் இயல்பல்ல. பெண்ணுக்குரிய எக்குணமும் உங்களிடமில்லை” என்றார் பீஷ்மர். அம்பை உதடுகளை இறுக்கியபடி “என்னை அவமதிக்க நினைக்கிறீர்களா?” என்றாள்.

……

இதோ இதோ இன்னும் ஓரடி. இன்னும் ஒரு விசை. இன்னுமொரு மூச்சு. இந்தக்கோபுரம் இக்கணமே சரியும். சதுரங்கத்தில் நான் வெல்லும் மிகப்பெரிய குதிரை. “…இளவரசி நீங்கள் கேட்டகேள்விக்கு இந்த பதிலே போதுமென நினைக்கிறேன். ஆணை வெற்றிகொள்பவள் பெண், பெண்மை மட்டுமே கொண்ட பெண்.”

தன்னைக் காயப்படுத்தவே பீஷ்மர் இதைச் சொல்வதாக அம்பை அறிகிறாள்.

“நீங்கள் இச்சொற்களை உங்கள் வன்மத்திலிருந்து உருவாக்கிக் கொண்டீர்கள் என எனக்குத்தெரியும்….உலகம் மீது வன்மம் கொண்டவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களையே வதைப்பார்கள்” என்றாள்.

“…… எனக்குத் தேவையானவள் ஒரு பேதை. நான் என் கண்ணயர விழைவது ஒரு பஞ்சுமெத்தையில், கூரிய அம்புகளின் நுனியில் அல்ல” (கடைசியில் அம்புப் படுக்கையில்தான் விழுந்தார் – இது ஆசிரியரின் கமெண்ட்!) சொல்லிமுடித்ததும் அவரது உடல் நடுங்கத் தொடங்கியது. எய்யப்பட்ட அம்புக்குப்பின் அதிரும் நாண் போல.”

……

கழுத்து வெட்டுண்ட சடலம்போல துடித்துச் சுருண்டவளாக அம்பை சிலகணங்கள் நின்றபின் மெல்ல திரும்பினாள். அங்கேயே விழுந்து இறந்துவிடுபவள் போல மெல்ல திரும்பி நடந்தாள். அவளுக்குப்பின்னால் சிதையில் இதயம் வேகும்போது எழுந்தமரும் பிணம்போல பீஷ்மர் மெல்ல அசைந்தார். அதன் ஒலியிலேயே அனைத்தையும் உணர்ந்தவளாக அம்பை திரும்பினாள். காதல் பெண்ணில் உருவாக்கும் அனைத்து அணிகளையும் அணிந்தவளாக, அவளுடைய கன்னியழகின் உச்சகணத்தில் அங்கே நின்றாள். கைகள் நெற்றிக்குழலை நீவ, கழுத்து ஒசிந்தசைய, இடை நெகிழ, மார்பகங்கள் விம்ம, இதோ நான் என.

ஆணெனும் சிறுமையை பிரம்மனே அறிந்த கணம்போல அவர் உதடுகளில் ஒரு மெல்லிய ஏளனச்சுழிப்பு வெளிப்பட்டது. அதைக்கண்ட அக்கணத்தில் வெண்பனி நெருப்பானதுபோல, திருமகள் கொற்றவையானதுபோல அவள் உருமாறினாள்.

“சீ, நீயும் ஒரு மனிதனா?” என்று தழலெரியும் தாழ்ந்த ஒலியில் அம்பை சொன்னாள். “இம்மண்ணிலுள்ள மானிடர்களிலேயே கீழ்மையானவன் நீ. உன் முன் இரந்து நின்றதனால் இதுவரை பிறந்தவர்களிலேயே கீழ்மகள் நான். ஆயிரம் கோடி முறை ஊழித்தீ எரிந்தாலும் இக்கணம் இனி மறையாது.” இடிபட்டெரியும் பசுமரம்போல சுருங்கி நெரிந்து துடித்த அவளுடலில் இருந்து சன்னதம் கொண்டெழும் மயான சாமுண்டியின் பேரோலம் கிளம்பியது. http://venmurasu.in/2014/01/16/

ஏளனச்சிரிப்பில் கொற்றவை ஆகிறாள். தினம் தினம் உணர்ச்சி மேலிட ஓலமிடுகிறாள். ஆனால் அப்பொழுதும் அவளது காதலின் காரணமாக பீஷ்மரை சிகண்டியிடம் காக்கவே உர்வரை அத்தியாயம் வந்ததாக நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

—–

ஆச்சா..

அடுத்து இன்னொரு நண்பர் கேட்டார்.

இது வரை சொல்லப்பட்ட கதைகளில் பீஷ்மர் ஒரு பிரமாண்டம் மிக்கவராகக் காட்டப்படுகிறார். ஆனால் வெண்முரசில் அப்படி இல்லையே!

சில கதாபாத்திரங்கள் வளராதவை. சிகண்டி இப்ப முடிந்துவிட்டான். இனிமே கிளைமேக்சிலதான் வரப்போறான். ஆனால் சில கதாபாத்திரங்கள் முழுமைக்கும் வருபவை. பீஷ்மர் அப்படிப்பட்டவர். முதற்கனலில் இருந்ததை விட தற்போது மழைப்பாடலில பீஷ்மர் கதாபாத்திரம் இன்னும் பிரமாண்டமாக விரிந்திருக்கும். போகப்போக இன்னும் வளர்ச்சி அடைந்து நாவல் முடியும் தருணம் நீங்கள் எதிர்பார்க்கும் பிரமாண்டத்தைப் பெறும்.

இவர் ஒரு ஆசிரியர் போல. எனக்கு எப்படி விளக்குவதென்று தெரியவில்லை. சனி இரவும், ஞாயிறு காலையும் நிகழ்ச்சி முடிந்து informal discussionல் அவர் மூழ்கியிருந்த போது நான் உட்பட சிலர் வெளியிலிருந்து உள்வாங்கிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு அவர் அறிமுகம் தேவையில்லை. ஆனால் தினசரி அவர் எங்களைப்போன்ற பல வாசகர்களிடம் பேசிக்கொண்டுதானே இருக்கிறார்.

வெண்முரசு தற்கால தமிழ் படைப்பின் உச்சமாக விளங்கப்போவது உறுதி.

ஜெய்ஹிந்த்

7 thoughts on “வெண்முரசு கலந்துரையாடல்

 1. தனிமடல். வெளியிட வேண்டாம்.
  வணக்கம்.நலமா?
  உங்கள் இடுகை அருமை. ஆனால் இந்த ‘தவிற’ தான் பாயசத்தில் இருக்கும் சிறு கல் போல…..
  தவிர என்று இருப்பதே சரி.
  பிழைபிடிச்சேன் என்று எண்ணாதீர்கள். மன்னிக்கணும்.

  1. வாவ். யாரும் படிக்கமாட்டாங்கன்னு நினைக்கிறப்ப பிழையைச் சுட்டிக்காட்டுவது எவ்வளவு சிறப்பு. சாயங்காலம் வீட்டுக்குப் போய் மாற்றி விடுகிறேன். வெளியிட்டுவிட்டேன். ஒன்றும் தவறில்லையே.

 2. அண்ணா உங்களுக்கு வெண்முரசு பைத்தியம் பிடித்துவிட்டது
  கொஞ்சம் நாள் முன்ன விபுரம் படிச்சுஅழைந்தேன்

  1. 😊 புனைவு எழுதுவது என்பது ஒரு திறன். ஆனால் அனைவரும் அறிந்த ஒரு கதையை இவ்வளவு mindblowing எபிசோடுகளாகத் தருவதில் எத்துணை கட்டுப்பாடுகள் உள்ளன! ஒன்னும் சொல்றதுக்கில்லை. எழுத வெறி கொண்ட இராட்சதனால் மட்டுமே அப்படிச் செய்ய முடியும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s