ஜெயமோகன் சிறுகதைகள்


இந்த நூலைப் பற்றிச் சொல்ல ஒரு சுவாரசியம் உண்டு. எனக்கு இதைப் பறிந்துரைத்தவர் என் நண்பர் சிவான் நினைக்கிறேன். அவர் தந்த பரிந்துரைகளில் 99சதவீதம் படிக்கவேஏஏஏ இல்லை. நூலாசிரியர் ஜெ இரு வாரங்களுக்கு முன்னர் சிங்கை வந்திருந்தார் (இந்தப் பதிவை எழுதத்தொடங்கியது மார்ச் 9). சரி ஏதாவது கிடைக்கிறதா என்று நூலை இணைய தளத்தை அலசியதில், இது கிடைத்தது. ஆனால் நம்ம பேட்டையில் இல்லை. அடுத்த பேட்டையில் இருந்து நம்ப பேட்டைக்கு வரவழைக்கவேண்டியிருந்தது. ம்ம்.. என் ஊரிலும் இது போன்ற ஒரு வசதியிருந்தால்…. (பொறாமை மூச்சு)

ஜெயமோகன் சிறுகதைகள்
கிழக்குப் பதிப்பகம்
முதல் பதிப்பு டிசம்பர் 2011
ISBN 978-81-8493-501-1

ஜெயமோகன் சிறுகதைகள்
ஜெயமோகன் சிறுகதைகள்

சரி, இனி நூலனுபவம்.

கோடானு கோடி(!) வாசகப்பெருமக்களே, பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரமான சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 57 கதைகள், 597 பக்கங்களில்). கேட்கும்போதே கொட்டாவி வந்தா, நீங்களும் என் இனமே!!

இந்த நூலில் மன எழுச்சியை உண்டு பண்ணக்கூடிய கதைகள், சரித்திரக் கதைகள், படிமங்கள், அமானுடங்கள் என்று நிறைய ‘ஐட்டங்கள்’ இருந்தாலும், பாமர மக்களின் மொழி பேசும் கதைகளை நான் விரும்பிப் படித்திருக்கிறேன். என் மனக்கண்ணில் இன்னும் தெரிவது ‘மாடன் மோட்சம்’ சிறுகதையே!

அது என்றைக்கும் நிலைத்து நிற்பதாக. ஆம், அப்படியே ஆகுக 😉

சிறுகதைப் பட்டியல்

நதி– (இறுதி மரியாதை செய்யும் கதை)

வீடு – (பேய் வீடு!)

பல்லக்கு (குந்தித் தின்னும் மேனோன் கதை. எனக்குப் பிடித்திருந்தது).

கண் (கலங்கிவிட்டது😵 ப்ப்ப்ப்பா)

வலை (சுவை)

தரையில் அந்தச் சிறு கல் மட்டும் கிடக்காமல் இருந்திருந்தால், இந்தத் திசையே வேறு. இது மிகவும் அசட்டுத்தனமான சிந்தனை என்று எனக்குப் பட்டது. இருந்தால் என்று பட்டியலிடப் போனால் எத்தணை கோடி சாத்தியக் கூறுகள் – மனம் பிரமித்து உறைகிற பிரம்மாண்டமல்லவா அது!

படுகை (அணை)

கோபம் கொண்ட பேச்சி காட்டுக்குள்ளே செம்பன் துரையை வழிமறித்தாள். யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்து, மலை மேலே கால் வைத்து, மேகத்திலே தலை வைத்து, கொடும் பல்லும், விஷ நாக்கும், கனல் கண்ணும், இடிச்சிரிப்புமாய் விஸ்வரூபம் கொண்டு நின்றாள். விழுந்த அருவி மலை மேலே தொங்க, காடெல்லாம் நடுநடுங்க, வானமெல்லாம் எதிரொலிக்க இடிபோல் குரல் எழுப்பி, மின்னல் போல பல்காட்டி பேச்சி கேட்டாள். ‘எந் தலமுடிய வெட்டியதுக்கா வந்தே மக்கா? எனக்க மொவளக் கெட்டியதுக்கா மலைகேறி வந்தே மக்கா’

சவுக்கு (சுரீர்..)

‘நீ வட இந்தியா இல்லையோ’
‘ஆரு சென்னா’ என்றான் அவன் தூய சேரித்தமிழ் உச்சரிப்பில்.
‘உங்கப்பா நேற்று சொன்னாரே’
‘தாளி, சும்மா செல்லுதான்’

வனம் (தத்துவார்த்தம்!!)

‘உனக்குத் தெரியுமா இந்த நதியைப் பற்றி? ஆனைக் கண்டி மலைகளில் சென்றுபார். இவள் செதுக்கிய கோடி கோடி பாறைச் சிற்பங்களை! இவள் கரையில் அன்று மாநகரங்களாக இருந்தவை சுடுகாடுகளாக மாறிவிட்டிருக்கின்றன. தரிசுகள் காடுகளாகின்றன. பாலை வனங்களில் கட்டிடங்கள் எழுகின்றன. அழிவு, ஆக்கம், அழிவு. இவள் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறாள். மந்தகாமினி, ஓயாத பிரவாகம். …….. எல்லா நதியும் கங்கைதான் என்கிறது மகாபாரதம். வசந்தகால அழகி. சில சமயம் வேகவாகினி. சிலசமயம் பிரளய காளி. கங்கையென்று கொண்டால் கங்கை. துங்கை என்றால் துங்கை’

யாரிடமாவது இந்தக் கதையைப் பற்றிப் பேசவேண்டும். (புரியனும்ல!)

போதி (அவிசுவாசம்)

‘ஹிந்து மதமா? ஹெஹெஹெ… ஹிந்து மதம் என்று ஒரு மதம் உண்டா?எங்கே? நான் பார்த்ததே இல்லையே. ஹெஹெஹெ… இதோபார். ஒப்பிட்டால் ஒரே மதம்தான் சரியான மதம். அது சைவ மதம். விவேகானந்தன் உண்மையை உணரமுடியாத வெறும் பண்டிதன்’

ஜகன்மித்யை (எட்டர்னல் ரெகரன்ஸ்)

புராண காலத்துக் கதாபாத்திரம் ஒன்று, நவீன நாடகம் போல, சம்பந்தமில்லாமல் வந்து நின்று முழிக்கிறது. என்னவென்று விசாரித்தேன். நம்பூதிரி என்னை சர்வ அலட்சியமாய்ப் பார்த்து, தன் பெயர் மேலைமங்கரம் அப்பன் நம்பூதிரிப்பாடு என்று அறிமுகம் செய்து, டீ வாங்கித் தரும்படி ஆசையிட்டார். அந்தத் தோரணையும் எனக்குப் பிடித்திருந்தது.

இதில நம்பூதிரியையும் பரமுவையும் பிடித்திருந்தது 😆

மாடன் மோட்சம் (கிணத்துக்குப் பயந்து..)

‘அது என்ன லேய் ஸ்பீக்கறு’
‘காலம்பற பாட்டு போடுயதுக்கு. அதுக்க சத்தமிருக்கே, நூறுபறை கொட்டினா வராதுவேய். …… ஒரு கூட்டம் ஏமான் பெயவ காக்கி டவுசரு இண்டோண்டு கசரத் எடுக்கணும். டவுசரு இட்டனுவ அறெஸ்ஸூ. மத்தவனுவ இந்துமின்னணி.’
‘அங்க கோளி உண்டோவ்?’
‘அரிஞ்சுப் புடுவேன் பாத்திக்கிடும். நான் இஞ்ச மினக்கட்டு யோசனை செய்யுதேன். நீரு கோளியிலே இருக்குதீராக்கும்.’

படு ஜோரான கதை! சூடான கதையும் கூட.

ஜெயமோகன் சிறுகதைகள்
ஜெயமோகன் சிறுகதைகள்

திசைகளின் நடுவே (குருதி வாடை)

மீண்டும் அவன் தன் கப்பரையை நீட்டியபோது அர்ச்சுனன் கோபத்துடன் ஓரடி முன்னால் வந்து, ‘என்ன வேண்டும் உனக்கு?’ என்றான்.
‘பிட்சை.’
‘கொடுத்த நாணயங்களை ஏன் கொட்டினாய்?’
‘அவற்றில் உதிரவாடை வீசுகிறதே’

மகாபாரதப் பின்புலம் கொண்ட சிறுகதை

சிவமயம் (சிவா சிவா)

பொழுது போக்கான கதை

சந்திப்பு (வவ்வால் கீதம்)

‘…..உடலை உலுக்கியபடி ஓர் உதை. நான் மேல் நோக்கி விழுந்தேன்’

அவ்ளோதான் சொல்வேன். அப்புறம் உங்க இஷ்டம் 🙂

நிழல் (ஞான பூனைக்கண்)
😨

காலை (நாட்டுக்கோழி)

மிகச் சிறிய, ஆனால் புன்னகைக்க வைக்கும் கதை. ஊசிப்பட்டாசு மாதிரி.

தனிமையும் இருட்டும் (எலிக்குட்டிதான் மிச்சம்)

மலம் (வீச்சம்😵)
அழுக்குப் புன்னகைக் கதை

நூல் அரங்கம்

மூன்று சரித்திரக் கதைகள்

 • மாபெரும் கம்பளம் பற்றிய கனவு (பழைய குமரி மாவட்ட, கேரளக் கதை பிண்ணனி)
 • சவக்கோட்டை மர்மம் (பழைய குமரி மாவட்ட, கேரளக் கதை பிண்ணனி)
 • பதிமூன்று விதங்களில் சொல்லப்பட வேண்டிய கதை (இந்தக் கதையும் ஜெயமோகன் குறுநாவல்கள் நூலில் உள்ள பரிணாமம் நெடுங்கதையும் தொடர்புடையவை)

குறுகிய சுவையான (உண்மை & புனைவு?)கதைகள்

இரணியன் (எம்டன் மகன்)

‘வாடா பேசாமல்’ என்று அப்பா தாழ்ந்த குரலில் சொன்னார். அண்ணாந்து அவர் கண்களைப் பார்த்தேன். மனம் நடுங்கியது. அப்பா விடுவிடுவென்று நடந்தார். …. இதுவரை நான் செய்த ஒரு திருட்டுத்தனம்கூட அப்பா கண்ணிலிருந்து தப்பியதில்லை. கடவுள்கூட எனக்குத் துணையில்லை. அதெல்லாம் கதையில்தான் போலிருக்கிறது.

புன்னகையை வர வைத்த கதை

ஆயிரம் கால் மண்டபம் (கெட்டவங்க)

‘உனக்கு வயித்து வலியா சித்துட்டி?’
‘இல்லடா’ என்றபடி சித்திக்குட்டி அவள் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டாள். ‘அதோ பாத்தியா? அந்தத் தூணிலே செலை இல்லை. உடஞ்சு போயிருக்கு. அதான் சித்தி அழுதேன்.’

பாவம்…

நாகம்

நாகம் நா பறக்க அவளைப் பார்த்தது. ‘உஸ்ஸ்’ என்று சீறியது.

‘உனக்கு என்ன வேணும் இப்பம்? சொல்லிப்போடும். குடுத்துக்களிச்சிடுதோம். நீரு சாமியில்லை. எங்கிளுக்க கொலத்துக்கு விழுந்த சாபம்…..’

ஆடு பாம்பே

தேவகிச் சித்தியின் டைரி

அம்மா உள்ளே எட்டிப்பார்த்தாள். ‘கரிதான் மிச்சம். கைகாரி’ என்றாள்.

சித்தி மூச்சு வாங்கினாள். கண்ணீர் உலர்ந்த முகத்தில் இமையின் மயிர் ஒன்று ஒட்டியிருந்தது. அமைதியாக இருந்தாள். வாந்தி எடுத்து முடித்துவிட்டவள் போலத் தெரிந்தாள்.

பழமை, பொறாமை வென்றது

ரதம் (சூரியனார் ரதம்)

சூரியனார் ரதத்தினூடே உளவும் கலைஞனின் பார்வை

அன்னை (கெட்ட கனவு)

எதிரே புதரின் கீழே ஈரச் சொ தசொதப்பில் ஒரு கரிய காட்டுப்பன்றி உட்கார்ந்திருந்தது. அதன் வயிற்றுக்குக் கீழே முண்டியடித்தபடி மென்மையான பன்றிக் குழவிகள் பால் குடித்தன. அதன் வால் சேற்றில் பாம்புபோல நெளிந்தது. அதன் வாய் சிவப்பாக இருந்தது. அது தன் குட்டிகளிலொன்றை மென்று தின்று கொண்டிருந்தது

அப்பாவும் மகனும்

அவள் எட்டிப் பார்த்து, ‘தோப்புக்கரணத்தை எப்ப வச்சுக்கலாம்?’ என்றாள்.

அவளைப் புறக்கணித்து, ‘அப்பா – சொல்லு’ என்றேன்.

பயல் ‘தூத்தூ மாணாம்’ என்றான் பிஸ்கெட்டை மென்றபடி.

பிஸ்கெட்டைப் பிடுங்கிவிட்டு ‘அப்பா’ என்றேன்.

பயல் கைநீட்டியபடி வீறிட்டு கால்களை உதைக்க ஆரம்பித்தான்

ரத்த பாசம்

வெள்ளம்

‘லேய் எட்டாண், இந்தப் புளுத்தானை ஏம்பிலே கூட்டிட்டு வந்தே?’ என்றான் ஒருவன்.

‘பாத்தா பன்னிக்குட்டி மாதிரி இருக்குதான்.’ மற்றவர்கள் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள்.

ஒருவன் கிண்டலுடன் ‘சாமி குளிக்கவா வந்தீய? செம்பு எங்கே?’ என்றான். அத்தனை பேரும் உரக்கச் சிரித்தார்கள்.

சுழி

தாண்டவம்

‘நாயீட மோனே’ என்று குழறிய குரலில் கூவியபடி துரட்டியை வீசினான். அடி துதிக்கை மீது பட்டது. யானை சட்டென்று உடலை நிமிர்த்தி, துதிக்கையை தேலே தூக்கிப் பிளிறியது. யானையின் குரல் அல்ல அது. அவன் அதுவரை கேட்டறியாத ஏதோ மிருகத்தின் ஒலி.

யானை கதை

பாடலிபுத்திரம்

பதறிய குரலில் ஏதோ புலம்பியபடி அஜாத சத்ரு விழித்துக்கொண்டான். அந்தப்புரத்து அறைகள் வழியாக ஓடினான். தன் மகனைத் தனக்குக் காட்டும்படி கெஞ்சினான். பெண் முகங்கள் எல்லாம் சதைப் பதுமைகளாக மாறின. சுவர்கள் உறைந்திருந்தன.

கலைந்த கனவு!

ஒன்றுமில்லை…

‘ஒன்றுமில்லை. நன்றாக இருக்கிறார்கள்’ என்றார்.
‘என்ன ஆயிற்று டாக்டர்?’ என்றேன்.

அடப்பாவி சண்டாளா!

நதிக்கரையில்

‘என்ன தர்மமும் அதர்மமும்!’ என்று திடீரென்று திருதராஷ்டிரர் சீறினார். ‘வெல்பவன் தர்மவான். தோற்பவன் அதர்மி. இதுதான் உலகநீதி. இதுமட்டும்தான். வேண்டாம். பசப்பாதீர்கள். . . . . . .
நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள் தந்தையே. இது பாண்டவர் புகழ்பாடும் பரணி அல்லவா? அவர்கள் செயல்களையெல்லாம் தர்மத்தை நிலைநாட்டும் முயற்சிகளைத்தானே நீங்கள் சித்திரித்துள்ளீர்கள். வெற்றியின் பொருட்டு அவர்கள் செய்த அதர்மங்களைப் போர் தந்திரங்களாக சித்தரித்திருக்கிறீர்கள்தானே?’

மகாபாரத பின்புலம் கொண்ட சிறுகதை. இந்தச் சிறுகதை ஜெயமோகன் குறுநாவல்கள் நூலில் வரும் பத்ம வியூகம் குறு நாவலும் ஒரே கதைக்களத்தைக் கொண்டவை. இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு அடிக்குறிப்பிற்காக பத்ம வியூகம் கதையிலிருந்து பின்வரும் பத்தியை முற்கோள் காட்டியிருக்கிறேன். இது சுபத்திரை சொல்வதாக அமைந்திருக்கிறார்.

இனி குருவம்சத்தில் யாரும் நிம்மதியாகத் தூங்கமுடியாது. ஒரு போதும் போர் இவர்களை விட்டு விலகாது. வெற்றி மாலையின் ஏதோ ஒரு மலருக்குள் பூநாகம் காத்திருக்கிறது. தோற்றவர்கள் நிம்மதிநாகத் தூங்கலாம். அவர்களுக்கு இழக்க ஏதுமில்லை. காண்பதற்குக் கனவுகளும் மிச்சம் இருக்கும்.

குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகான மக்களின் மன எழுச்சியைக் காட்டுகிறது. தாய் தந்தையர் உணர்வைக் காட்டுகிறது.

எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன்

நைனிடால்

படகோட்டி ஊகித்தவனாக ‘ஆழத்தைப் பார்க்கக்கூடாது மேம் சாப். மனம் கலங்கிவிடும். மனம் கலங்கி தினம் ஒருவராவது இதில் பாய்ந்து உயிரை விடுகிறார்கள்’ என்றான்.

மயக்கமா கலக்கமா கதை

மௌனராகம் மோகனையும் ரேவதியையும் பார்த்த மாதிரி இருந்தது. அடிச்சுக்காம தம்பதி சமேதரா வீடு போய் சேருங்கடே

வாரிக்குழி

அது மிகக் கவனமாக அஞ்சியஞ்சிக் காலெடுத்து வைக்கக்கூடியது. இப்போது சகஜமாக சதுப்புச் சேற்றில் நடந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அதை உண்ணி லட்சுமி என்று எண்ணுவது சையதுக்குக் கஷ்டமாக இருந்தது. அது வேறு ஏதாவது காட்டு யானையோ, தவறாகப் பின்தொடர்கிறோமோ என்று ஐயம் ஏற்பட்டது.

ஆணை தேடல்

செண்பகயட்சி

‘ஹாவ் எ சிப்.’

‘நோ நோ நோ. அது மட்டும்தான் இதுவரை பழக்கமாகலை. . .’ என்றாள் சிரித்தபடி.

‘வேற எல்லாம்?’ என்று அவளைக் கூர்ந்து பார்த்தான்.

பேரப்பாத்து ஆசையா படிச்சேன். ஆனா கடைசி வரைக்கும் பேயே வரலைங்கிறேன்!

அழியாத மலர்

‘இங்கே என்ன செய்கிறீர்கள் குரு? புத்தகம், ஓவியம், இசை எதுவுமே இல்லை. . .’

‘அதையெல்லாம் விட்டுவிட்டுத்தான் இங்கு வந்தேன்’ என்றார் குரு.

‘எதற்கு?’

‘சாவதற்கு’ என்றார் குரு மிக சகஜமாக.

சின்னஞ்சிறு கண் மலர், செம்பவள வாய்மலர்!

திருமதி டென்

திருமதி டென் குழந்தையை உற்றுப் பார்த்துவிட்டு ‘ஆரோக்கியமாகத்தான் தெரிகிறாள்’ என்றாள்.

‘அமைதியான பெண்’ என்றாள் மதர்.

திருமதி டென் பிறகு குழந்தையின் பக்கம் திரும்பவில்லை.

உனக்கு எல்லாம் எதுக்கு கொழந்தை?

என் பெயர்

‘உனக்கு உயர்நிலை விஞ்ஞானியாகப் பதவி உயர்வா? அப்படி என்ன கண்டுபிடித்தாய்?’ என்று ஒருவன் கேட்டானாம். ‘என் துறைத் தலைவரின் உடம்பில் சொறியப்பட வேண்டிய இடம்’ என்றானாம் வென்ற புத்திசாலி.

காடேற்றம்

மரணக் கூச்சலுடன் சந்திரிகை கீழே விழுந்தாள். வலிப்புக் கண்டவள் போல கை, கால்களை உதைத்தபடி முறுகி நெளிந்து துடித்தபடி, ‘கொளுத்தாதீங்க! கொளுத்தாதீங்க! அம்மா! அம்மா! போயிடுதேன்! அம்மாகிட்ட போயிடுதேன்…’ என்று அலறினாள்.

பாவப்பட்ட பேய்

விரித்த கரங்களில்

கண்ணன் எழுந்தான். அவன் கண்களில் அபூர்வமாகவே தெரியும் முடிவின்மையின் கூரிய ஒளி எழுந்தது. ‘காண்டிவத்தை எடு பார்த்தா!’ என்று குரல் முழங்கியது. ‘பிருகத்காய மகழிஷியின் அந்தரங்க நெருப்பை எண்ணி உன் அம்பை விடு’.

திரும்ப ஒரு மகாபாரத பிண்ணனி கொண்ட, கண்ணனின் ஆளுமையைக் காட்டக்கூடிய ஒரு கதை.

கரிய பறவையின் குரல்

‘நீ மடையன். பொய்யன்’ என்று வீரிட்டேன். ‘உன் விஞ்ஞானம் கொல்லன் உலைக்குத்தான் லாயக்கு. உனக்கு என்ன தெரியும் மனித உடல் பற்றி? டேய் முட்டாள், மனித உயிர் எல்லையற்ற சதை வடிவங்கள் வழியாகப் பயணம் செய்யும் ஒரு முடிவின்மை. முட்டாள், நீ ஒருபோதும் அதைப் புரிந்து கொள்ளமுடியாது.’

டாக்டர் என் கோபத்தை எதிர்பார்க்கவில்லை. ‘டாக்டர்’ என்று பதறியபடி நர்ஸ் ஓடிவந்தாள்.

‘கிடைத்ததா?’ என்றார் டாக்டர்.

‘காம்போஸ்தான் கிடைத்தது. டைசோபாம்’ என்றாள் நர்ஸ்.

‘மூன்று சி.சி போடு.’

மரணப்படுக்கையில் இருப்பவனின் மனப் பிறழ்வு. இன்னும் ரெண்டு பக்கம் அதிகமா இருந்தா நாமளே எழுந்து போய் அவனைக் கொன்னு இருப்போம்.

இந்தச் சிறுகதையைக் குறிப்பிடும் பதிவு ஒன்று – http://solvanam.com/?p=34441

வாள்

‘உங்கள் ஐயங்கள் என்ன என்று கூற முடியுமா?’
‘திட்டவட்டமாகக் கூறுவது சிரமம். பொதுவாக ஒரு சந்தேக நிலை எனலாம்.’
‘அதாவது..’
‘நான் எல்லாவற்றையும் சந்தேகிக்கிறேன்.’
‘எல்லாவற்றையுமா? எந்த அடிப்படையில்?’
‘எல்லாவற்றையும் சந்தேகிக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான்’

ஏன்டா.. ஏன்.. 😭

முகம்

‘ராஜப்பாவா? யார் அவர்?’

‘உன்னைக் கொண்டு வந்துவிட்டாரே அவர்தான்.’

‘வந்து …. அது ரோபோ இல்லையா?’

அறிவியல் புனைவு. பெரிதாக ரசிக்கவில்லை! சாரி!

விரல்

புதிய சொற்கள் மூலம் சைதன்யா தன் இயற்கையை ஒழுங்கு பண்ண ஆரம்பித்தாள். ‘மம்மு’ என்றால் உணவு. ‘அம்மா’ என்றால் மானுட குலம் மொத்தமும். காக்காவும் பூனையும் தங்கள் பெயர்களைச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டன. ‘மியா’ என்றால் பூனையின் தலைமையில் வரும் பிரபஞ்சத்தில் வாழும் நான்கு கால் பிராணிகள் எல்லாம். ‘கா’ என்றால் சிறகுள்ள ஜீவன்கள்…..

இந்தக் கதை முடியும் வரை புன்னகத்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொரு அப்பாவி அப்பன்களும் படிக்கவேண்டிய கதை!

வேறு ஒருவன்

கொச்சப்பி அவன் பலபிம்பங்களாகப் பிரிந்து பரவுவதாக உணர்ந்தான். ஒருவன் அந்தக் கதவை இழுத்து உடைத்து அவளைச் சுவர் மூலையில் வைத்து மிதித்துக் கூழாக்கினான். ஒருவன் அவளைக் கை வலிக்க அறைந்து முடியைப் பற்றி சுருட்டித் தூக்கி அடி வயிற்றிலிருந்து பீறிடும் வசைகளுடன் சில கேள்விகளைக் கேட்டான். ஒருவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவளை அறைந்து வெளியே தள்ளி கதவைச் சாத்தினான். ஒருவன் எழுந்து இருட்டு விலகாத ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து மறைந்தான்.

களவு கற்றாள். கற்றபின் மறப்பாளா!

மாபெரும் பயணம்

ஒரு மாடு வாழ்வில் எத்தனை தூரம் நடந்திருக்கும்? அதன் கால்களில் ஒரு மீட்டர் பொருத்திப் பார்க்க வேண்டும். தேசங்களை வலம் வரும் தூரம். குட்டிகள் நடப்பதேயில்லை. துள்ளிக் கொண்டேயிருக்கின்றன. அதற்காகவே பிறந்ததுபோல. அய்யோ மறந்து விட்டேனே என்று நினைவுகூர்ந்து மீண்ணும் ஒரு துள்ளல்.

அடிமாட்டு சாசனம்

தொழில்

‘ஆரு இங்க மாதேஸ்?’ என்றார்.

சட்டை போடாத ஒரு கறுப்பு ஆள் முண்டி மோதி முன்னகர்ந்து ‘நாந்தான் சாமி’ என்றான்.

டாக்டர் அவனை ஏற இறங்கப் பார்த்தார்.

‘என்னய்யா தொழில் பன்றே?’

‘பன்னி சாமி’

‘என்னது?’

‘பன்னி மேய்க்கிறது…’

‘நெறய பன்னி இருக்கா?’

அந்த ஆள் விசித்திரமாகச் இளித்தபடி என்னைப் பார்த்தான்.

‘உன் பொஞ்சாதிக்கு மூளைக் காய்ச்சல். இறக்குமதி செஞ்ச மருந்து தரணம். ஒலு நாளைக்கு நாலு ரெஸ்பிரேட்டர் மாத்தணம். பத்து நாள் சிகிச்சை பண்ணினா, உயிர் பிழைக்க சான்ஸ் இருக்கு’

சமயோஜிதம். எனக்கு அந்த ஜோசியக்காரரைப் பிடித்திருந்தது!

தேவதை

‘அபாச்சா அந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பலர் முன்னிலையில் எதிர்பாராமல் அதைச் சொல்லியதை நீங்கள் மன்னிக்கவேயில்லை, இல்லையா?

நைஜீரியா சுதந்திரப் போராட்டம். அதனுள் ஒரு சுய பரிசோதனை.

இணைத்தில் படிக்க – http://www.jeyamohan.in/?p=6838

கண்ணாடிக்கு அப்பால்

அப்படி ஒரு பயங்கரமான நாட்டுராஜாவின் கதையை நானும் எதிர்பார்த்துத்தான் இருந்தேன். இனி ஒரு பெண்ணின் சோகக்கதை வரும். கோட்டைகள் முழுக்க அரண்மனைகள் முழுக்க ரத்தமும்
கண்ணீரும் நாறும் கதைகள்தான் நிரம்பியிருக்கின்றன.

😱😱😱😱😱

அமானுடக் கதை!

ஏறும் இறையும்

‘ஆரபியும் தேவகாந்தாரமும் இரட்டைக் குழந்தைகள் தெரியுமா?’

‘எனக்கு சங்கீதம் அவ்வளவா தெரியாது’

‘தெரிஞ்சிக்குங்கோ.’

‘கேட்கிறப்ப ஒரே மாதிரித்தான் இருக்கு.’

‘எங்க அண்ணாவுக்கு எப்படிப் பைத்தியம் புடிச்சது தெரியுமா?’

பாலச்சந்தரும் சிந்து பைரவியில் இதை அடிப்படையாக வைத்து ஒரு காட்சி வைத்திருந்தாரே!

பசும்புல்வெளி

‘ஆம்பிளை, அதுவும் சின்ன வயசுன்னா உனக்கு மனம் இளகிடுமே…’

‘ஏன் மேல சொல்றது? பாக்க கம்பீரமா இருக்கான். கல்யாணமும் ஆகலை. நல்லா பேசறான்…. என்ன?’

உயர்வு மனப்பான்மையும், பதவி போதையும்

கடைசி முகம்

மீண்டும் அவள் பின்னால் வந்தாள். ‘நீ தப்பப்போவதில்லை. அது எனக்கு உறுதியாகத் தெரியும். தாயின்மீது அதிகமான பாசம் கொண்ட எவரும் பெண்களிடமிருந்து தப்ப முடியாது.’

அசத்தலான அமானுடக் கதை. எனக்குப் பிடித்திருந்தது!

கூந்தல்

சற்று நேரம் கழித்து ஏதோ தீர்மானித்தவள் போலப் பாய்ந்து எடுத்து கண்ணாடி முன்பு சென்று கத்தரிக்கோலை எடுத்து தன் கூந்தலை வெறுப்போடு முன்னால் தூக்கிப் போட்டுக்கொண்டு குரோதத்துடன் பார்த்து நிற்கிறாள். ஓரிரு முறை கத்திரிக்கோலைப் பார்த்துவிட்டு சட்டென்று வேகத்துடன் அதை வெட்டுகிறாள்.

மசிறே போச்சு!

சிலந்திவலையின் மையம்

இருபதடி தோன்றியும் ஊற்றுப் பறியவில்லை. ‘அவளுக்கு கரிநாக்கு வேற என்ன? மூதேவி.’ அப்பா சொன்னார். ‘நாற் அப்பவே சொன்னேன்…’ என்று ஆரம்பிப்பதற்குள் அப்பா கையில் பனமட்டையுடன் பாய்ந்தோடி வந்தார். அவர் சமையலறைக்குள் புகுவார் என்று அம்மா எதிர்பார்க்கவில்லை. மண்டையில் ஓங்கி அடித்தபடி ‘சாகு சனியனே’ என்றார் அப்பா.

பிடிவாதக்கார அப்பா. தக்காளி இந்த ஆளைக் கண்டால் டார்த்தீனியம் அப்பா நினைவிற்கு வருகிறார்.

முடிவின்மையின் விளிம்பில்

பிரியமுள்ள சகோதரா, தயவு செய்து இந்நூலைப் படிக்காதே, இது பைத்தியத்தை உருவாக்கும் மாயநூல். இதில் ஒரு பக்கத்தை வாசித்தவர் முழு நூலையும் படிக்காமலிருக்கமாட்டார். முழு நூலையும் படித்தவர் மீண்டும் சமநிலைக்குத் திரும்பி வரமுடியாது. தலைமுறை தலைமுறையாகப் பைத்தியங்களை உருவாக்கி வரும் கொடூரமான நூல் இது.

சரித்திர பின்புலமுள்ள கதை. சொல்லப்போனல் கதைக்குள் கதை. இரண்டு கதை வருகிறது. எக்கச்சக்கமான ஒரு இறுதி முடிவுடன்.

சேறு

‘வல்லதும் வேவிச்சுதா?’ என்றாள் குருசி.
‘இல்ல.’
‘அய்யோ யேசுவே. அப்பம் பிள்ளியளுக்கு என்ன குடுத்தது?’
‘இங்க ஒண்ணும் இல்ல’
‘அய்யோ மாதாவே. பின்னிய குடலு வறண்டா இப்பிடி இருக்குதுக? இந்தாருங்க கொறெ கெழங்கு இருக்கு. உடன் வேவிச்சு குடுக்கணும்.’

காக்க காக்க.. மானம் காக்க..
ஆண்டு அடங்கிய குடும்பத்தின் கதை

ஊசல்

ஸ்ஸ்ஸ்ஸப்பா

நச்சரவம்

ஒரு கோயில் என்பது வினோதமான புராதனமான ஒரு நூல். அதன் அட்டையை மட்டுமே நாம் சாதாரணமாகப் பார்க்கிறோம். உள்ளே நாமறியாத எத்தணையோ விஷயங்கள் விபரங்கள் குவிந்து கிடக்கின்றன.

….

நான் மலையனைத் தேடிச் செல்வதும் குறைந்துவிட்டது. முக்கியமான காரியம் செலவுதான். மலையன் நான் அவருக்காகச் செலவு செய்வேன் என்பதை அறிந்து கொண்ட பிறகு புகையிலை, கருப்பட்டி, டீத்தூள் வாங்குவதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.

சும்மா நச்சுன்னு இருக்கு….

அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி நண்பர்களே!

ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android

Advertisement

6 thoughts on “ஜெயமோகன் சிறுகதைகள்

 1. யப்பா!
  ஒரு புத்தகம் முழுவதையும் அலசிவிட்டீர்கள்!
  நீங்கள் ஜெயமோகன் புராணம் பாடுவதைப் படித்துவிட்டு, இவரது கதைகள் நான் ஏதாவது படித்திருக்கிறேனா என்று யோசித்தேன். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. இந்தப் புத்தகம் pdf ஆக கிடைக்கிறதா?
  வெண்முரசு பற்றியும் எழுதியிருந்தீர்கள், ஏனோ படிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. என் சிற்றறிவுக்கு ரொம்பவும் அதிகமோ, இவரது எழுத்துக்கள்?

  1. அம்மா, நான் ஒரு கடைசி பெஞ்ச் வாசகன்! ஒழுங்காகப் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவை வைத்திருக்கறேன். இந்தப் புத்தகம் பிடிஎப் கிடைத்தால் சொல்கிறேன். தவிற ஜெமோ புகழ் மட்டுமல்ல. எந்தெந்த நூல் வாசிக்கிறேனோ, அந்த நூலாசிரியரின் புகழ் பாடிவிடுகிறேன். அதுதானே தமிழ் கூறும் நல்லுலகில் சிறந்தது. என்னநாஞ்சொல்றது!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s