நண்பர்களே,
கடந்த ஆண்டின் நினைவுகள் சுவையானவை. அவற்றை புத்தாண்டு அன்றைக்கே தொகுத்திருக்கலாம். எனது கெட்ட நேரம். உங்க நல்ல நேரம். அன்றைக்கு அலுவலகம் செல்லவேண்டியதா போயிற்று. ஆனா, கெரகம் சும்மா விடலை. இதோ இந்த ஆண்டு அறிக்கை. கடந்த ஆண்டில் எழுதியதை எடுத்துப் பார்த்தேன். அதற்குள் ஒரு வருடம் போயிற்றா என்று ஆச்சரியமாக உள்ளது.
வீட்டுப் பக்கம்
பள்ளி செல்லும் மாணவர் என்கிற தகுதியைப் பெற்ற எனது வாரிசு இந்த வருடம் அப்பன் இணையத்தில் ஆடுவது போதாது என்று பள்ளியில் ஆடினார்.
தமிழ் கைபேசி
என்னது, இந்த வருசமுமா என்று ஏற்கனவே வீட்டில் வசை விழுந்தது. சிங்கை வந்து ஒப்பந்த அடிப்படையில் குறைந்த விலையில் கிடைத்ததால் இந்த ஆண்டு புதிய கைபேசி தாதாஸ்து செய்த வருடத்திற்கு நன்றி.
மூக்கு சிந்திய மை பேனா
பால் பாயிண்டு பேனாவிலிருந்து மைபேனாவிற்கு மாறியதைத் தம்பட்டம் அடித்தேன். ஆனால் அதன் மறுபக்கத்தை எதிர்கட்சிகளின் ஏளனத்திற்குப் பயந்து மறைத்துவிட்டேன். அதாகப்பட்டது, இந்த மைபேனாவை வைத்துக்கொண்டு கடந்த முறை சிங்கையிலிருந்து சென்னை திரும்பினேன். வழக்கம்போல குடியேறல் விண்ணப்படம் கொடுத்தார்கள். நான் கெத்தாக எனது மைபேனாவை எடுத்து நிரப்பத் தொடங்கியபோதுதான் ‘அது’ நிகழ்ந்தது. வீட்டு முகவரி எழுதும் இடத்தில் கிளுக்!! பேனா மூக்கைச் சிந்திவிட்டது.
அழகாக அகலமான வட்டமாக மை, விண்ணப்பத்தில் ஒளிர்ந்து நின்றது. ஜன்னலுக்கு வெளியே நாரத மகாமுனி வந்து த்சொ த்சொ என்று நையாண்டி செய்வது போல பிரம்மை ஏற்பட்டது. மீண்டும் சிந்துவதற்கு நான் தயார் என்று பேனா கூறுவதை உணர முடிந்தது. நிப் நுணியில் அடுத்த சொட்டு திரண்டிருந்தது. அலுங்காம குலுங்காம பேனாவை நகர்த்தி, தட்டின் (ட்ரே) ஓரத்தில் நிப்பை வைத்து, அங்கே கிளியர் செய்திட்டு (அப்புறமா சாப்பாடு வரப்ப தண்ணி தொட்டு பேப்பர் வெச்சி அழித்து மகராஜா ஏர்லைன்சில் டேபிள் துடைக்கும் பாக்கியம் பெற்றேன்) ஒரு வழியா நிரப்பி முடித்தேன்.

இத்தோட விதி விட்டதா? அதான் இல்லை.
பக்கத்தில் இருந்த ஆந்திர நண்பர் (அவர் நிஜமாகவே மூக்கு சிந்திக்கொண்டிருந்தார். சிங்கை ஃப்ளு) பேனா கொண்டு வரலைன்னும், அத கொஞ்சம் கொடுங்களேன்னு கேட்டார். ‘வேணாம் நாயுடு காரு. அவ்ளோதான் சொல்லுவேன்’ என்றேன். ‘அட பரவாயில்லை’ன்னு உரிமையா வாங்கினாரு. கொஞ்சநேரம் போயிருக்கும். என் விண்ணப்பத்தில் வட்டமாக விழுந்தது, அவரது விண்ணப்பத்தில் மையில் ஒரு தார் ரோடே போட்டு இருந்தது. அது போதாதென்று அவர் கை பூரா மை! இந்த முறை நானும் நாரதரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.
அவர் முகத்தில் கரி பூசிய பேனாவை மாற்றினேன். புது பேனா கீழே உள்ளது. இதை ஒரு சாதனையாகவே குறித்துக்கொள்ள வேண்டும்.

காகித உலகம்
சென்ற வருடம் பாதியில் நிறுத்திய ‘இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு’ இந்த வருடம்……. தொடவே இல்லை. ஆனாலும் கூட பல தரமான நூல்களுக்கு என் கடைசி பெஞ்ச் உரை எழுதி என்னால் முடிந்த அளவு அவமானப் படுத்த முடிந்திருக்கிறது.
நூறு நாற்காலிகள் – ஒரு கலெக்டரின் உண்மைக் கதை
ஏழாம் உலகம் மற்றும் விஷ்ணுபுரம் வாசிப்பனுபவங்கள் எளிதில் மறக்கக்கூடியவை அல்ல. வெண்முரசு மிகவும் கவர்ந்திருக்கிறது. தினசரி காலை அதில்தான் விடிகிறது.
குறிப்பிடத்தகுந்த நிகழ்வாக எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கருந்தரங்கிலும், அவருடனான கலந்துரையாடலிலும் கலந்து கொண்டது, காகித உலகத்துடன் மேலும் உரையாட உதவியாக இருந்தது. குறிப்பாக குடும்பத்தைப் பிரிந்து இருக்கையில் இந்த சந்திப்பும் அது தொடர்பான வாசிப்புகளும் மனதிற்கு ஆறுதல் தருவதாய் உள்ளதை மறுக்க முடியாது.
திரைப்பட உலகம்
இந்த வருடம் பார்த்த திரைப்படங்களில் ஏதாவது நினைவில் நிற்கிறதா.. ஆம் இருக்கிறது.
தென்மேற்குப் பருவக்காற்று (பழசுதான். டிவிடி இப்பத்தான் வாங்க முடிந்தது!)
பயண உலகம்
வருத்தத்திற்குரிய வகையில் இந்த வருடமும் குறிப்பிடத்தகுந்த பயணங்கள் ஏதும் செய்யவில்லை. சென்னையில் தங்குதல் என்பது எப்பவுமே என் மனதிற்கு ஒவ்வாதது. ஒரு பயணம் போகவேண்டும் என்றாலும் அனைத்து சாலைகளும் நெரிசலானவை. இனிமையான பயணத்திற்கு உதவாதவை. ஆனாலும் வெகுவிரைவில் ஒரு பெரிய பயணக்கட்டுரை கொண்டு வர உள்ளேன். உங்க நன்மைக்காக இப்பவே சொல்லிட்டேன். நாளைப்பின்ன திடீர்னு சொல்லிட்டேன்னு யாருக்கும் நெஞ்சு வலி வந்திடக்கூடாது பாருங்க.
மீண்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே, பதிவர்களே.
ஜெய் ஹிந்த்.
உண்மையில் நிறையத்தான் செய்திருக்கிறீர்கள், பாண்டியன். உங்கள் படிப்பனுபவம் காதில் புகையை வரவழைக்கிறது! பாராட்டுக்கள். பயண அனுபவத்தைப் படிக்கக் காத்திருக்கிறேன். இப்போதுதான் வெண்முரசு படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
நிறைய குழந்தைகள் ஆடுகிறார்கள், பாண்டிய வம்ச வாரிசை எப்படிக் கண்டுபிடிப்பது?
தங்கள் பாராட்டுக்கு நன்றி அம்மா. வெண்முரசு படித்த ஆரம்பித்தமைக்கு வாழ்த்துக்கள். விதுரனின் எழுச்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது இப்போது. பாண்டியரின் வாரிசா.. வாய் நிறைய பல்லாக நடுவே நின்றிருக்கிறாரே அவர்தான் 😄😄. வருகைக்கும் பதிலுரைக்கும் நன்றி.
இந்த வருடம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்…
தங்களுக்கும் புத்தாண்டு இனிமையான வெற்றிகளைத் தர வாழ்த்துக்கள் தனபாலன் சார்.
பயணக்கட்டுரை படிக்கக் காத்திருக்கிறேன்
உங்க தலையெழுத்து அப்படி இருந்தா யாரால மாத்தமுடியும். சர்வம் ‘சிவா’ர்ப்பணம்.