நண்பர்களே, வாசிப்பு என்பதை நான் அறியாத ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடந்த சிறிய நிகழ்ச்சி இது. சவுதி தலைநகர் ரியாதிலிருந்து துபாய் வழியாக சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். டாக்ஸிக்காரன் விமான நிலைய வாசலில் இறக்கிவிட்டுச் சென்றான். அங்கிருந்து உள்ளே நுழைந்ததும் ஒரு திருச்சி மரக்கடைத்தெருவில் நுழைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. (மரங்கள் வரிசையாக அடுக்கப்பட்டாலும் அங்கே இடிபாடுகள்தான் இருக்கும்!)
டிக்கெட்டைக் காட்டி நான் என் உடைந்த ஆங்கிலத்தில் விசாரிக்க, அவன் அரைக்கால் வீச ஆங்கிலத்தில் ஏதோ சொன்னான். ஏதும் புரியவில்லை என்றாலும், அவன் கண்ணும் கையும் காட்டிய அடையாளம் வைத்து, இந்த முனையம் இல்லை, அடுத்ததாக பன்னாட்டு புறப்பாடுக்காக இன்னொரு முனையம் இருக்கிறது என்று புரிந்தது. சரி நடந்தேன். வழியில் சிலரிடம் விசாரித்தேன். ஒன்றும் புரியவில்லை. மருந்துக்கும் போர்டுகள் இல்லை. இருந்த போர்டுகளிலும் ஆங்கிலம் இல்லை. அல்லா விட்ட வழியும், உன் விழியும் இருக்கையில் என்னத்துக்கு ஆங்கில போர்டு என்று ஒரு முல்லா தாடியை நீவிக்கொண்டு கேட்பது போன்ற உணர்வு எனக்கு.
நல்ல காலம் ஒரு இந்தியர் கண்ணில் பட்டார். சகலசேமமாக பன்னாட்டு முனையத்தில் நுழைந்து வரிசையில் நிற்கலாம் என்று யோசித்த போதுதான், இது தலைநகர் விமான நிலையமா என்று வியக்கும் வண்ணம் (குழம்பிய வரிசைகள், பெட்டி பெட்டியாக அல்ல, சாக்கு சாக்காக சுமைகள், சுமை நகர்ந்தும் பெல்ட்டுகளில் சர்வ சாதாரணமாக நடந்த பணியாளர்கள், 20 ரியால் குடு, வரிசையில் வராம முன்னாடி கொண்டு போய் விடுகிறேன் என்கிற குறுக்கு உழவு வாதிகள், சுத்தமாக நகராத வரிசை இத்யாதிகள்) இருந்தது. விமானத்தை விட்டு விடுவோமோ என்கிற பதபதைப்பில், முல்லாக்கள் கூட்டத்தில் முழுவதும் நனைந்திருந்த வேலையில், சக வயதுடைய ஒரு இந்தியன் முன்னால் நின்றிருந்தான். வரிசைகளும், மணிக்கணக்குகளும் விரைவில் மறைந்தன. எனக்கு ஒரு மகிழ்ச்சி ஒரு இந்தியனைக் கண்டோம் என்பதே. விமானம் ஏறும் வரையிலும் சக உரையாடல்கள் தொடர்ந்தன.
எந்த நூலுக்கும் இன்றி இந்த நூலுக்கு இவ்வளவு முன்னுரை எழுத காரணம், நான் அவனை இந்தியனாகப் பார்த்தேன். அவன் என்னையும் இந்தியனாகத்தான் பார்ப்பான் என்றும் நம்பினேன். இந்த செய்தி இந்த நூலை வாசிப்பதில் முக்கியம் என்று படுகிறது.
காஷ்மீர்
அரசியல் – ஆயுத வரலாறு
ஆசிரியர் – பா. ராகவன்
பதிப்பு – கிழக்கு பதிப்பகம், முதல் பதிப்பு 2010
பிரிவு – அரசியல்
ISBN 978-81-8493-576-9

காஷ்மீர் பிரச்சினை என்பது என்ன, அதன் பரிணாம மாற்றங்கள் என்னென்ன? இதை விட ஒரு நூல் என்னைப் போன்ற எளிய வாசக அனுபவமில்லாத பாமரனுக்குக்கு விளக்க இயலாது. இது இவ்வளவுதான் என்று பிட்டுப் பிட்டு வைக்கும் கலை பா.ராவுடையது. இவருடைய முந்தைய நூல்களிலும் இதனையே கண்டிருக்கிறோம்.
275 பக்கங்களில் காஷ்மீர் வரலாற்றை அடக்குவது என்பது எளிதானதல்ல. இன்றளவும் நடந்திருக்கும் வன்முறைகளைத் தொகுத்தாலே 15 தலையணை அளவிற்குப் பக்கங்கள் பெருகிவிடும். எனவே ரத்தினச்சுருக்கமாக அளந்து தந்திருக்கிறார்.
சரி. காஷ்மீர் பிரச்சினை என்ன? பாகிஸ்தான் தீவிரவாதமா? மதப்பிரச்சினையா? இந்திய அரசு இதையெல்லாம் குண்டு போட்டு அழிக்காமல் ஏன் விட்டு வைத்திருக்கிறது. தனித்தமிழ்நாடு கேட்ட திராவிட சிகாமணிகளே ஐந்து வருசத்துக்கொருமுறை நீ பாதி நான் பாதி என்று ஆண்டுகொள்ளும் கலையைக் கற்றுவிட்டார்கள். இவர்களுக்கெல்லாம் என்ன கேடு?? இதெல்லாம்தான் பொதுமக்கள் பார்வையில் காஷ்மீர் பிரச்சினைக்கான எதிர்வினைகள்.
இந்தப் புத்தகம் தெளிவாக இவற்றுக்குப் பதில் சொல்கிறது.
கன்னியாகுமரியில் கிளம்பி பஞ்சாப் வரைக்கும் போய் விரல் சூப்புற குழந்தையைக் கேட்டாலும், சூப்பற விரலை எடுத்திட்டு இந்தியன்னு சொல்லிட்டு திரும்ப விரலைச் சூப்பும். காஷ்மீரில் மட்டும் என்ன வித்தியாசமா? ஆம் வித்தியாசம்தான். மூன்று கோணங்களை பிசிறு இல்லாமல் காட்டுகிறார் ஆசிரியர்.
இந்தியா – இந்தாப்பா. காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அரசியல் சட்டப்படி. ஹரிசிங் போட்ட கையெழுத்து இருக்கு. கையெழுத்துப் போட்டுக்கிட்டு ஒன்னா சேந்தப்புறம் என்ன அங்க சத்தம்?
பாகிஸ்தான் – கையெழுத்துப் போட்டா ஆச்சா. உள்ள இருக்கறவனக் கேக்க வேண்டாம்? இஸ்லாமியன்-இஸ்லாமியன் பாய் பாய். அவர்கள் இந்தியாவில் இருந்து விடுபடவேண்டும், பாகிஸ்தானில் இணையவேண்டும்
இவர்கள் குரல்கள் உரக்க ஒலிக்கிறது. நடுவில் ஹீனமான ஒரு குரல்.
காஷ்மீர் – நான் பேச வேண்டிய டயலாக் எல்லாம் இவிங்க பேஸ்றாய்ங்கே. இந்தாப்பா! இது எங்க பூமி. அந்தக் காலத்தில இருந்து இந்தக் காலம் வரை நாங்க எங்க மன்னர், எங்க மலை, எங்க பிரச்சினை, எங்க ஆப்பிள் என்று சுகமாக இருந்தவர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எல்லாம் நாங்க பங்கு கொண்டதில்லை. பாகிஸ்தான் உடன் போவது பற்றி நாங்கள் எண்ணிக்கூடப் பார்க்க இயலாது. நாங்கள் காஷ்மீரிகள். காஷ்மீர் தேசம் எங்களது கனவு!

இந்திய சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தொடங்குகிறது இந்த நூல். முக்கியமாக பாகிஸ்தான் காஷ்மீருக்கான போர்கள் பற்றியும் கூறுகிறார். அவற்றை எல்லாம் நாம் முன்பே பாகிஸ்தான் அரசியல் வரலாறு நூலில் அவர் சொன்னதை நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன். அதன் பிறகு அப்துல்லாவின் எழுச்சியும், மாநாட்டுக் கட்சியின் தொடக்கமும் பற்றி 50 வருடத்திற்கு முந்தைய காஷ்மீரைப் பற்றிக் கூறும்போது நூல் விரிவடைகிறது.
நல்ல உறவில் இருந்த நேரு – அப்துல்லாவின் உறவு பின்னாளில் பரஸ்பரம் நம்பிக்கையின்மையின் அடிப்படையில் கசந்து, இது காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்லாம், இந்து, பௌத்தம் என்று எல்லாம் கலந்து கட்டின கலவையாக இருக்கும் காஷ்மீர் மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறது. எல்லாம் நடந்ததெல்லாம் பின்னாளில்தான். இந்துத்துவா இயக்கங்கள், தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற ஆடிய தகிடுதத்தங்கள், அதன் விளைவாக காஷ்மீர் இஸ்லாமியர்கள் பெற்ற இந்திய எதிர்ப்பு உணர்வு, இந்திய எதிர்ப்பு உணர்வாக மாறி இந்துக்கள், டோக்ராக்கள், சீக்கியர்கள் என அனைவரின் மீதான வன்முறைகள் என்று சுதந்திரத்திற்குப் பிறகு காஷ்மீரில் இந்திய ஜனநாயகம் வெகுவாக சரிய ஆரம்பித்திருக்கிறது. தனி நாடு தாகம் கொண்டிருந்த அவர்களுக்கு ‘தாங்கள் ஏமாற்றப்பட்டோம்’ என்கிற நினைப்பு வந்தபொழுது அதைச் சரியாக அணுகாமல் தனது தகிடுதத்தங்கள், மட்ட ரக அரசியல் என்று காங்கிரஸ் ஒன்றன் பின் ஒன்றாக காஷ்மீர் மீது அடுக்கடுக்கான இம்சைகளை ஏவியிருக்கிறது. அதற்கு இந்த தேசமே கொடுக்கும் கைமாறுதான் காஷ்மீர் பிரச்சினை. இதுதான் வேர்.
இந்தப் பிரச்சினையை ஆக்கப்பூர்வமான முறையில் சிந்திக்க, தீர்க்க அரசாங்கத் தரப்பில் எது ஆகணுமோ அதைச் செய்யவில்லை. விளைவு, ஆயுதம் தாங்கிய குழுக்கள், இஸ்லாமியர்கள் ஒருங்கிணைந்து இந்திய எதி்ப்பை இந்து எதிர்ப்பாகக் காட்டி, கொலை கொள்ளை தீவைப்பு என்று காஷ்மீர் பண்டிட்டுகள் உள்ளிட்ட இந்துக்களை ஒட்டு மொத்தமாக மாநிலத்தை விட்டோ, உலகத்தை விட்டோ அனுப்பியிருக்கிறார்கள்.
பகைவனுக்குப் பகைவன் நண்பன் என்கிற முறையில் பாகிஸ்தானின் இடைவிடாத கொம்பு சீவல்கள், காஷ்மீரிகளை அவர்கள் பக்கம் சாய வைத்துவிட்டது. இன்று காஷ்மீர் பிரச்சினை என்பது இந்திய பாகிஸ்தான் பிரச்சினையாகவே மாறிவிட்டது.
வாக்கெடுப்பு, காஷ்மீர் தீவிரவாதக்குழுக்கள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் தீவிரவாதக் குழுக்கள் என்று அழிக்க வரம் வாங்கி வந்தவர்களின் செயல்பாடுகள் மற்றும் வெறியாட்டங்களைப் பதிவு செய்திருக்கிறார்.
சுடும் உண்மைகளாக இந்த நூலில் புதிதாகத் தெரியவந்தவை
- அப்துல்லா ஏமாற்றப்பட்டோம் என்று பேசினாலும், காஷ்மீர் தன்னாட்சிக்காக படை திரட்டினாலும் பாகிஸ்தான் பக்கம் போவோம் என்று கூறியதில்லை. ஆனால் போய்விடுவார் என்று இந்திய அரசு (காங்கிரஸ் நம்பியது)
- நேரு அப்துல்லா உறவு நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அப்துல்லாவை முதல்வராக்கி, ஹரிசிங் மகனை அவருக்குக் கீழ் வைத்தது (நண்பனுக்குப் பக்கத்தில் ஒரு ஒற்றன்)
- இந்தியாவிடம் பிரச்சினையாவது செய்து பார்க்கலாம். எதிர்ப்பைக் காட்டலாம். பாகிஸ்தானுடன் சேருவது என்பது தற்கொலைக்குச் சமானம் – அப்துல்லா
- 60 ஆண்டுகாலம், POK (அ) ஆஸாத் காஷ்மீரில் உள்ளவர்கள் பாகிஸ்தானுக்குப் பழகிவிட்டார்கள். அப்படிப் பார்த்தால் இந்திய காஷ்மீரில் உள்ளவர்கள் ஏன் இந்திய ஜனநாயகத்துக்குப் பழகவில்லை? அதில் காங்கிரஸ் அயோக்கியத்தனத்தின் பங்கு என்ன? காஷ்மீரிகளின் மன அடைப்பு என்ன?
- பாகிஸ்தான் இவர்கள் பிரச்சினையில் குளிர் காய விரும்புகிறது என்பது கண்கூடு. ஏன் அந்தத் தீவிரவாதிகளை தனக்காகப் போராட வந்ததாக காஷ்மீரிகள் நினைக்கிறார்கள்
- மதம் என்பது முக்கியக் காரணமா. இஸ்லாமியர்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்று பாகிஸ்தான் சொல்வது உண்மையாக இருந்தால், பங்களாதேஷ் ஏன் பிரிந்து போனது?
- இது எல்லாவற்றுக்கும் மேலாக, காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசு செய்யவேண்டியது என்ன?
மிகச் சிறப்பான நூல்.
நண்பர்களே, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். ஆனால், அவர்கள் மனதளவில் இந்தியாவை ஏற்க ஆக்கப்பூர்வமானதைச் செய்வதுதான் சிறந்தது. அதைச் செய்யாததால்தான், இலங்கை கூட இந்தியாவில் வாக்கெடுப்பைக் கேட்டு மிரட்டும் கேவல நிலைக்கு காங்கிரஸ் நாட்டை இழுத்துவிட்டு இருக்கிறது.
ஜெய்ஹிந்த்.