காஷ்மீர் – முதல் யுத்தம் | ஆண்ட்ரூ வைட்ஹெட்


“வலுவான கதைகள், அற்புதமான பிரசார சாதனங்களாக விளங்கி வருகின்றன. பாரமுல்லா மீதான பழங்குடிகளின் தாக்குதல் பற்றிய விவரிப்புகள், அதைச் சொல்பவர்களின் பின்னணிக்கு ஏற்ப வண்ணங்களை ஏற்றிக் கொண்டுள்ளன.”

இந்த நூலின் கடைசியில் சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை. உண்மைதான். எந்த ஒரு வரலாற்று உண்மையோடு புனைவுகள் ஒட்டிக்கொண்டிருக்கும். மிகவும் சிக்கலாக்கப்பட்ட காஷ்மீர் பிரச்சினையும் அப்படித்தான்.  பல்வேறு பரிமாணங்கள் – 1947ல் காஷ்மீரில் என்ன நடந்தது? ஏன் இந்தியாவை பாகிஸ்தான் குறை சொல்கிறது? இந்தியா ஏன் வாக்கெடுப்பு நடத்தாமல் இருந்திருக்கலாம்? ஐ.நா அல்லது வேறு எந்த ஒரு வெளிநாட்டு மத்தியஸ்தையோ ஏன் இந்தியா நிராகரிக்கிறது? இந்தக் கேள்வி உங்களுக்கு ஆர்வத்தைத் தருவதாக இருந்தால் இந்தப் புத்தகம் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும்.

நூலாசிரியர் ஆண்ட்ரூ (பார்க்க வலைதளம் http://www.andrewwhitehead.net ) பிபிசியின் செய்தி தொடர்பாளராக 1992ல் வந்திருக்கிறார். வேறு ஒரு செய்தி தயாரிப்பிற்காகப் போன இவரை காஷ்மீர் மாயமோகினி தன் வலையில் வீழ்த்தியதாகத் தெரிகிறது. அதன் விளைவுதான் இந்தப் புத்தகம்.

இதற்கு முன் நான் பதிந்துள்ள காஷ்மீர் அரசியல் ஆயுத வரலாறு, பாகிஸ்தான் அரசியல் வரலாறு (இனிமேல் பதியவிருக்கிற ISIயும் சேர்த்து!!) நூல்களில் காஷ்மீர் பற்றிய செய்திகள் காணக் கிடைக்கின்றன. இவற்றில் எந்த விதத்தில் இந்தப் புத்தகம் வேறுபடுகிறது அப்டின்னா, அதுக்கு நாலு பதிவுகள் போடலாம், அவ்வளவு வேறுபடுகிறது!

முதலில் நூலாசிரியர் ஒரு வெள்ளைக்காரர் (வெள்ளைக்காரர் என்று மட்டும்தான் சொல்றேன். மேக்கொண்டு எதாவது கற்பனை பண்ணிக்கொண்டால் கம்பெனியை பொறுப்பாகாது). பல பார்வைகளின் ஊடாக காஷ்மீர் விரிகிறது. இவரது செய்திகளின் மூல தரவுகள் எவை என்று பார்த்தால் செவி வழிச் செய்திகள், சம்பவம் நடந்தபோது அங்கிருந்தவர்களின் பேட்டிகள், அவர்கள் எழுதிவிட்டுப்போன நாள்குறிப்புகள், அரசியல் தலைவர்கள் மற்றும் தீவிரவாதிகள் நேர்காணல் என்பன. குறிப்பாக இது வரை வெளியாகியிராத ஆதாரங்கள் (அவை எந்த அளவு நம்பகமானவை என்கிற கேள்வி எழுவது இயல்பு) நிறைய தகவல்களும் தருகின்றன. நிறைய உழைத்திருக்கிறார். கிடைத்த ஆதாரங்களுக்கிடையே உள்ள தொடர்பினைக் கண்டுபிடித்துள்ளார். இமாலய உழைப்பு.

ஆனால் இத்தகைய பத்திரிகையாளர்கள் தரும் தரவுகள் ஏராளம். உள்ளே புகுந்து வருவதற்குள் மூச்சுமுட்டிவிடுகிறது!! கொஞ்சம் நிதானமாகப் படிக்கவேண்டிய நூல்.

தமிழில் மொழிமாற்றமும் தரமாக உள்ளது.

காஷ்மீர் – முதல் யுத்தம்
ஆசிரியர்: ஆண்ட்ரூ வைட்ஹெட்
தமிழாக்கம்: BR மகாதேவன் – பார்க்க மூலநூல் A Mission in Kashmir.
பதிப்பு: கிழக்கு பதிப்பகம், முதல் பதிப்பு நவம்பர் 2011
ISBN 978-81-8493-206-5
கிழக்குப் பதிப்பகம் தரும் அறிமுகம்: http://www.badriseshadri.in/2011/11/blog-post_28.html

காஷ்மீர் முதல் யுத்தம்
காஷ்மீர் முதல் யுத்தம்

காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய மதம் மட்டுமா காரணம்? அதன் புவியியல் காரணங்களும்தான். காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தபோது, பாகிஸ்தானுக்குத்தான் நல்ல சாலை வழி இணைப்பு இருந்திருக்கிறது. பாகிஸ்தானுடன் தினசரி வணிகம், பிரயாணம் என்பதில் அவர்கள் பழகியிருந்தனர். அவர்களுக்கு இந்தியாவுடன் இணைப்பு என்பது மனதளவில் சாத்தியமில்லாத ஒரு நிகழ்வு என்கிறார்.

பாரமுல்லா (பாரமுல்லா ஆக்கிரமிப்பு பற்றி அறிய இந்தப் பதிவிற்குச் செல்லலாம்) மடாலயத்தில் தொடங்குகிறது இந்தப் புத்தகம். பாகிஸ்தான், இந்தியா, காஷ்மீர் (அப்துல்லா) என்று இத்தளத்தில் விளையாடுபவர்களின் நிலைபாடுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது இந்நூல்.

பாகிஸ்தான் குற்றம் செய்தது ஆனால் இந்தியாவும் உண்மையை மறைக்கிறது என்பது இவர் பார்வை. சமஸ்தான இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆன் பின்னரே தாக்குதல் தொடங்கினோம் என்று இந்தியா என்பது பொய் என்று அடித்துச் சொல்கிறார். வேண்டுமானால் தாக்குதல் தொடங்கி சில மணிநேரங்களில் கையெழுத்து ஆகியிருக்கலாம் என்கிறார். பாரமுல்லா பஞ்சாயத்து பற்றி வரலாறு அறியும், மிலிட்டரி வேணும் என்று மகராஜா அனுப்பிய கடுதாசி உள்ளது. மிலிட்டரி ஸ்ரீநகரில் இறங்கிய செய்தி வந்தால்தான் டெல்லியிலிருந்து போவேன் என்று அமர்ந்திருக்கிறார் காஷ்மீர் மந்திரி. எனக்கு அதில் எந்த அளவு உண்மையோ பொய்யோ. அப்படி நிகழாமல் போய் இருந்தாலும் இந்திய அரசாங்க எந்திரத்தில் நெழிவு சுழிவுகள் சகஜமே. அதும் எந்த ஒரு கெட்ட செயலுக்கும் போகவில்லை என்பது இந்தியரின் நிலைப்பாடு.

இந்த வி.பி.மேனன் சொல்வது பொய்.
இந்த பிரேம் சங்கர் ஷா சொல்றத நம்ப முடியல…
மானெக்‌ஷாவின் வாக்குமூலம் கூட அப்படித்தான்…
பிரிகேடியர் போகி சொல்வது உண்மையான்னே தெரியல…

இப்படி விளக்கெண்ணெய் விட்டு ஆராய்ந்த ஆசிரியர், பாகிஸ்தான் பக்கமும் அனைவரையும் ஆராய்ந்திருந்தால் பாகிஸ்தான் மண்ணும் மிதிபட்டிருக்கும். பழங்குடி ஆதிவாசிக்கு இல்லாத கேள்வி இவர்களுக்கு எதுக்கு?

பதான் பழங்குடியினரைப் பற்றியும், அவர்களின் பின்புலம் பற்றியும் விரிவாக செய்திகள் உள்ளன. ஆதிவாசிகளைக் கிளப்பிவிட்டதைப் பற்றியும், அந்தப் பகுதியில் கிடைப்பதற்கு அரிதான பெட்ரோல், வாகனங்கள் தடையின்றி பாகிஸ்தானால் தரப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறது இந்த நூல்.

பாரமுல்லா மடாலயத்தில் பலாத்காரம் நடந்ததா சொல்றாங்க. ஆனா வலுவான சாட்சியில்லை அப்டின்னு சொல்ற இடம் சிக்சர். உடைந்து நொறுங்கிய யேசு சிலையைப் பார்த்ததும் பதான்களுக்கு ஞானஸ்நானம் கிடைத்துவிட்டது என்று நாம் புரிந்து கொள்ளனும்! தவிர, பாதிரியார் ஷாங்க்ஸ் டைரியை வலுவான சாட்சியாக முன் வைக்கிறார். மடாலயத் தாக்குதல் கட்டுரை படிக்கையில் எனக்குத் தோன்றியது ஒன்றுதான். கன்யாஸ்த்ரீகள், சுப்பீரியர் உட்பட்ட பெண்கள் தாக்கப்பட்டபோது  இந்த பாதிரியார் ஷாங்க்ஸ் எங்க இருந்தார் என்பதுதான். பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஹயாத்கான் வந்து கன்யாஸ்த்ரீகளைக் காத்தபிறகுதான் உள்ளே வரார். தவிரவும், கன்யாஸ்த்ரீகள் பதான்களுக்குச் செய்த மருத்துவ சேவையில்தான் இந்த பாதிரியார் முதற்கொண்டு, எஞ்சியோரும் உயிர் பிழைத்துள்ளனர் என்று கருதத் தோன்றுகிறது.

இந்நூலைப் படிக்கையில் எழும் இன்னொரு கேள்வி, மடாலயமும் கன்யாஸ்த்ரீகளும்தான் மனிதர்களா என்ன? பல கிராமங்கள், முஸாஃபராபாத் மற்றும் பாரமுல்லா சூறையாடப்பட்டன; தீ வைத்துக்கொண்டு கொளுத்தப்பட்டன; எதிரில் வருவோர் வெட்டப்பட்டனர்; துப்பாக்கியால் சுடப்பட்டனர்; சீக்கிய, இந்து, முஸ்லீம் பெண்கள் வல்லுறவிற்கு ஆட்பட்டனர். அப்போது கடத்தப்பட்ட பெண்கள், சிறுவர்கள் பின்னர் மீளவே இல்லை. POKயில் இறக்குமதி செய்யப்பட்டு ‘பேகம்’களாகவும், ‘ஷேக்கு’களாகவும் மாறிவிட்டனர். அவர்களுக்கில்லாத கவனம், இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது விந்தைதான். ஆனால், புத்தகத்தின் கடைசி சாப்டரில் இதே கேள்வியை ஆசிரியரும் கேட்டுள்ளார். மடாலய கத்தோலிக்கர்களுக்குப் பிரச்சினை இருந்தது. ஆனால் பிரச்சினையின் உச்சியில் இருந்தவர்கள் யார்? வீடு வாசல் இழந்தோர், உடமைகளை இழந்தோர், வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களோடு பொருட்களாகக் கடத்திச் செல்லப்பட்டவர்கள்!

மடாலய மக்கள் தாங்கள் பதுங்கிக்கொள்ள அமைத்த பதுங்கு குழிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பறித்தனர். பழங்குடிப் படை மடாலய மக்களை ஒரு மனித கேடையமாக இருந்திருக்கலாம். இருந்தும் இந்திய விமானங்கள் அவர்கள் அமைத்த சிலுவைப் பக்கம் குண்டு வீசவில்லை. ஒருவர் கூட வான் தாக்குதலில் கொல்லப்படவில்லை என்பதைப் பதிவு செய்கிறார். ஆனாலும் சக மடாலய கிறித்தவர்கள் பழங்குடியினர் பக்கம் நியாயம் கற்பிக்கின்றனர். அந்த முரடர்களை ஏவிவிட்டது பாகிஸ்தான். ஆனால் பாகிஸ்தான் அவர்களை மீட்டதைப் பெருமையுடனும் பதிவு செய்கின்றனர். புன்னகைத்துக்கொள்ள வேண்டியதுதான்!

ஏன் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதற்கான இவரது ஊகங்கள் நியாயமானவையே.

‘புனைவுகளை உருவாக்குதல்’ என்கிற கட்டுரை அனைவரும் ரசிக்க வைக்கும். உண்மை என்பது ஒன்று. ஆனால் அதை எப்படி தங்கள் சுயநலனுக்காக மடாலயம், பாகிஸ்தான், அப்துல்லா, ஆங்கில புனைவெழுத்தாளர்கள், செய்தியாளர்கள், இந்தியா என்று அனைத்துத் தரப்பினரும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டார்கள் என நல்லதொரு பார்வை. இந்தியாவின் இந்த செயலை ஒரு positive reaction என்றுதான் சொல்வேன். அது பொது நலன்.

இந்தப்புத்தகம் முதல் யுத்தத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறது. எனவே பிற பிரிவினைவாதக்குழுக்களைப் பற்றி மிகச்சில செய்திகளையே சொல்கிறது. தவிற, காஷ்மீர் என்பது இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சினைக்குரிய பகுதி என்று சொல்கிறார்? இது இந்தியர்கள் மற்றும் காஷ்மீரிகளின் நிலைப்பாடுகளுக்கு முரணானது.

ஒருவேளை லஷ்கர்கள் கொலை கொள்ளைகளில் ஈடுபடாமல் ஸ்ரீநகர் சென்று விமான நிலையத்தைக் கைப்பற்றி இருந்தால் காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தான் வசம் போயிருக்கும் என்கிற கற்பனையையும் மறுக்கிறார். இந்தியா அப்பவும் ஜம்மு வழியாக துருப்புக்களை அனுப்பியிருக்கும் என்பது இவரது நம்பிக்கை.

காஷ்மீருக்குத் தேவை அமைதி, கல்வி, பொருளாதார வளர்ச்சி. அதைப் பாகிஸ்தான் தருமென்று அவர்கள் நம்பியிருந்தால் பாவம். பாகிஸ்தானிலிருந்து பிரிந்த பங்களாதேஷின் பண மதிப்பு பாகிஸ்தானை விட அதிகம். வெட்டி நாயம் பேசி, அடுத்த ஊர்காரனை வைத்து உள்ளுரில் விளையாட விட்டால் அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதன்றி வேறென்ன?

பாவம், இதைக்கொண்டு காஷ்மீர் மக்களுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் சரி.

காஷ்மீர் முதல் யுத்தம்
காஷ்மீர் முதல் யுத்தம்

ப 37

பன்முகத் தன்மையும் அரவணைத்துச் செல்லும் பண்பும் கொண்டது காஷ்மீர் கலாச்சாரம் (காஷ்மீரியத்)………. சூஃபியிஸத்தின் தாக்கம் பொண்ட மிதமான ஆன்மிக, மனிதாபிமான இஸ்லாம் அதன் மையத்தில் இருக்கிறது. பெரும்பான்மையானரான இஸ்லாமயர்கள், சிறுபான்தையினரான இந்து பண்டிட்டுகள் ஆகிய இரு தரப்பையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தையே ‘காஷ்மீரி’ என்ற பெயர் குறிக்கிறது.

காஷ்மீர் அடையாளம் என்ற தனித்த ஒன்றை முன் வைக்கும் இயக்கங்கள், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்குக்கு மாறாக இஸ்லாமின் ஒற்றைப்படைத் தன்மையை முன் வைத்தே வளர்ந்துள்ளன.

ப 38

பெண்கள் பர்தா அணியவேண்டும் என்ற கட்டளையை தீவிரவாத இயக்கங்கள் அவ்வப்போது விதிப்பதுண்டு. அதைக் காஷ்மீரி இளம்பெண்கள் பொதுவாக எதிர்த்தே வந்திருக்கின்றனர்.

பிரிவினைவாத இயக்கம் மதவெறி மிக்கதாக ஆனது காரணமா அல்லது அப்படியான ஒரு தோற்றத்தைத் தரவேண்டும் என்று மாநில ஆளுநர் ஜக்மோகன் பெருமளவு இந்துக்களின் வெளியேற்றத்தை ஊக்கு வித்தது காரணமா என்பது கசப்பான விவாதத்துக்குரிய விஷயம்.

ப39

காஷ்மீர் அரசியல் களத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மிர்வாய்ஸ் குடும்பத்தினர் எடுத்து வந்துள்ளனர். இருந்தபோதிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவான ஆயுதக்குழுவினர்தான் அவருடைய படுகொலைக்குக் காரணம் என்றே ஸ்ரீநகரில் பரவலாக நம்பப் படுகிறது.

ப40

காஷ்மீரி மொழியை ஒரு பிரதான போராட்ட அம்சமாகப் (காஷ்மீர தேசியவாத அமைப்புகள்) பயன்படுத்துவதில்லை. இந்த அமைப்புகள், தமது கொள்கைப் பிரசுரங்களில்கூட அந்த மொழி எழுத்துக்களைப் பயன்படுத்துவதில்லை.

காஷ்மீர் இந்தியாவுடன் இணையவேண்டும் என்ற ஷேக் அப்துல்லாவின் விருப்பத்திற்குப் பெரும்பாலான காஷ்மீரிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் அரை நூற்றாண்டுக்குப் பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
-சோஃபி குலாம் முகமது

ப43

மலை நதியின் குடைவின் ஊடாக அமைக்கப்பட்ட ஜீலம் நெடுஞ்சாலையைக் கட்டி முடிக்கப் பத்தாண்டுகளுக்கு மேல் ஆனது. 1890ல் டோமெலுக்கும் பாரமுல்லாவுக்கும் இடையிலான பாதை திறக்கப்பட்டது…… அதைத் தொடர்ந்து காஷ்மீரின் அரசியல் ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் தனிமைப் படுத்தப்படுவது வெகுவாகக் குறைந்த்து.

ப71

‘அவர்களுக்கு (காஷ்மீரிகளுக்கு) உதவவே அங்கு போனோம். அவர்களுடைய விருந்தாளிகள் நாங்கள். காஷ்மீர் மக்கள் எங்களை வெகுவாக மதிக்கிறார்கள். நாங்கள் காஷ்மீரிகள் அல்லர். எங்களுக்கு இந்த ஊரின் அமைப்பு குறித்து எதுவும் தெரியாது. அவர்கள் தான் எங்களுக்கு வழிகாட்டுவார்கள். இந்திய ராணுவ முகாம்கள் எங்கு இருக்கின்றன, அவற்றுக்கு எப்படிப் போகவேண்டும் என்று வழிகாட்டுவார்கள். இந்திய ராணுவம் அவர்களை அங்கு ஒடுக்கி வைத்திருந்தது. நாங்கள் ராணுவத்தினரை விரட்டி அடிக்க அங்கு போனோம். அவர்கள் கொலைகாரர்கள். உலகின எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் கொலைகாரனுக்குத் தண்டனை மரணம்தான்’
அப்துல்லா முண்டாசர், லஷ்கர்-ஏ-தொய்பா

காஷ்மீரி அல்லாத ஒருவர் ஏன் இன்னொருவருடைய சுதந்திரத்திற்காகப் போராடவேண்டும் என்று நான் அவரிடம் கேட்டேன். இதே கேள்வியை நான் பல ஆயுதக்குழுத் தலைவர்களிடமும் கேட்டிருக்கிறேன். அனைவரிடமிருந்தும் ஒரே விதமான பதில்தான் கிடைத்திருக்கிறது. அகண்ட இஸ்லாமியப் பார்வை!

ஆனால் அப்துல்லாவிடமிருந்து வித்தியாசமான பதில் கிடைத்தது. ‘……. 1948ல் ஒரு கால கட்டத்தில் எங்கள் கிராமத்தில் ஓர் ஆண்கள் கூட இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. இருந்த அனைத்து ஆண்களும் இந்தியாவிற்கு எதிரான சண்டையில் பங்கெடுக்கப் போய்விட்டனர்’.

ப85

‘…. அவர்களுடைய (பதான்கள்) கொள்ளையடிப்பு முஸ்லிம்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோர் என்று அவர்கள் எந்தப் பாகுபாடும் பார்க்கவில்லை….. அவர்கள் இப்படிச் சூறையாடியது படுமோசமான முட்டாள்தனம்
சர்தார் இப்ராஹீம் கான், முஸ்லிம் கான்ஃபிரன்ஸ் கட்சி

ப97

‘பழங்குடிகள், காஷ்மீரைப் பாலாறும் தேனாறும் ஓடும் பகுதியாகவே காண்கின்றனர். கொள்ளையடிக்க அருமையான வாய்ப்பு என்பதோடு, முஸ்லிம் சகோதரர்கள் துன்புறுத்தப் படுகிறார்கள்
என்ற செய்தியும் சேர்ந்துவிட்டால் அவர்களை யாராலும் தடுக்கவே முடியாது.
சி.பி. ட்யூக், தற்காலிக துணை ஹை கமிஷனர், லாஹூர்.

ப99

லியாகத் அலி கான் ஒரு கொள்கையை வடிவமைத்தார். அது அன்று தொடங்கி, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. காஷ்மீரில் பாகிஸ்தான் நேரடியாக அன்றி, மறைமுகமாகவே போரில் ஈடுபடும் என்பதே அது!

ப146

‘அவருடைய (டாக்டர் க்ரெட்டோ ப்ரெட்டோ) நிதானத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இந்தப் பெண்ணின் கணவர் ஒரு மணி நேரத்துக்கு முன்னால்தான் அவர் கண் முன்னாலேயே சுடப்பட்டு இறந்திருக்கிறார். கண்களில் நீர் வற்றிய அவர், உயிருடன் இருப்பவர்களைக் காப்பாற்றத் தன் பணியைத் தொடர ஆரம்பித்துவிட்டார்’
-பாதிரி ஷாங்ஸ்

ப149

‘வாசிரிஸ்தானில் இருந்து வந்த வாசிர்களும் மசூதுகளும் கொள்ளையடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் என்னை மிகவும் வேதனைப் படுத்தியது எது தெரியுமா? இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாமியச் சகோதரர்களை விடுவிக்க வந்த கூட்டத்தினர், முஸ்லிம் பெண்களைக் கூட விட்டு வைக்காமல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டதுதான்’
-சர்தார் ஷேர்பாஸ் கான் மஸாரி

நூல் அரங்கம்ப152

நடந்தது எதுவாக இருந்தாலும், மடாலயத்திலோ மருத்துவமனையிலோ இருந்த பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் நடந்ததற்கான நம்பத் தகுந்த, தெளிவான ஆதாரங்கள் இல்லை.

ப167

மறுநாள் காலை, மேனன் இந்திய கேபினட் குழுவுக்கு, ‘மகராஜாவிற்குப் பைத்தியம் பிடிக்கவில்லையே தவிர, கிட்டத்தட்ட முழுவதுமாகக் குலைந்து போயிருக்கிறார்’ என்ற செய்தி அனுப்பினார்

இத்தகைய சீர்குலைவை என் வாழ்நாளில் ஒருபோதும் கண்டதில்லை. மகாராஜா ஒவ்வோர் அறையாக இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தார். என் வாழ்நாளில் நான் இத்தனை நகைகளை ஒருசேரப் பார்த்ததே இல்லை. முத்துமாலைகள், நவரத்தினம் பதித்த நகைகள் என எல்லாம் ஓர் அறையில் குவிந்து கிடந்தன….. மகாராஜா ஒவ்வோர் அறையாகச் சென்று, ‘நல்லது, இந்தியா உதவிக்கு வரவில்லை என்றால், நானே நேராகப் படையுடன் சென்று போரிடுவேன்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
லெப். கெர்னல் சாம் மானக்ஷா, இந்திய இராணுவம்

ப173

அக் 26 அன்று மேனன் ஜம்முவுக்கு சென்று சேரவில்லை. எனவே, அவர் தன் புத்தகத்தில் விளக்கியுள்ளதுபோல் மகராஜாவிடம் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியிருக்கவில்லை.

ப178

ஒருவேளை இந்தியப் படைகள் கால் பதித்த சில மணி நேரங்கள் கழித்த பிறகு கையெழுத்து இடப்பட்டிருக்கலாம். ஆனால் முதல் கட்டத் தாக்குதலை ஆரம்பித்த சீக்கிய ரெஜிமெண்டுகள் அங்கே கால் பதித்தபோது, காஷ்மீர் இந்தியப் பகுதியாக இருந்திருக்கவில்லை.

ப183

ஸ்ரீநகரில் இருந்த பிரிட்டிஷ் குடிமக்களை விமானம் வழியாக வெளியே கொண்டுவர பிரிட்டிஷ் ஹை கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான பணிகள் சில வாரங்களுக்கு முன்பிருந்தே மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த அளவுக்கு தீர்க்க தரிசனம், அரசியல் தளத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஊருக்கே தெரிந்ததில் என்ன தீர்க்க தரிசனமோ!!

ப260

இரு பாதிரியார்களும் பழங்குடியினரிடம் நன்மதிப்பைப் பெற, அவ்வப்போது அவர்களிடம் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று மாறி மாறி முழக்கங்கள் செய்து வந்தனர். …. அவர் (பழங்குடி) பட்டென்று, கொஞ்சம் சரியாகவே, நீங்கள் யாரும் பாகிஸ்தானின் நண்பர்கள் கிடையாது’ என்று முகத்தில் அறைந்தார் போல் சொல்லிவிட்டார்.

ப277

கராச்சியிலிருந்த பிரிட்டிஷ் ஹை கமிஷனர், பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுக்கு கடிதம் எழுதி, டைக்ஸ் தம்பதிகளையும் மடாலயத்தில் இருந்த பிறரையும் கொன்றவர்களை அடையாளம் கண்டுபிடித்துத் தண்டிக்கும்படி கேட்டுக்கொண்டார். ‘தாக்குதல் நடந்த பகுதி பாகிஸ்தானைச் சேர்ந்ததல்ல என்பதால், பாகிஸ்தான் அரசு இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்கமுடியாது‘ என்று பிரதமர் பதில் எழுதினார்.

இப்படிப்பட்ட சூப்புகள் வாங்கினாலும் இந்த பிரிட்டிஷ் யோக்கியர்கள் பாகிஸ்தானுக்காக ஓட்டுப்போடுவார்கள்!!

ப284

எந்தக் காரணமும் இல்லாமல் இந்திய ராணுவம் கொன்றது.
சோஃபி குலாம் முகமது

காஷ்மீர் முதல் யுத்தம்
காஷ்மீர் முதல் யுத்தம்

ப297

பெயரளவில் ஆஸாத் காஷ்மீர் அரசு சுய அதிகாரம் கொண்னதாகச் சொல்லிக்கொள்கிறது. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை.

ப304

பாகிஸ்தான் தன்னை அறியாமலேயே ஷேக் அப்துல்லாவுக்குப் பதவியைக் கொடுத்திருந்தது. ஆனால் ஷேக் அப்துல்லா, தன்னைப் பதவியிலிருந்து இறக்கும் வாய்ப்பை பாகிஸ்தானுக்கு வழங்க ஒரு போதும் தயாராக இல்லை.

ப314

இருநாட்டு இராணுவங்களும் ஒரே பாரம்பரியப் பின்னணியில் வந்தவை தான் என்றாலும், கடந்த 60 வருடங்களில் இரண்டும் கடந்து வந்துள்ள பாதை ஒன்றுக்கொன்று வேறு பட்டதாக உள்ளது. பாகிஸ்தானில் பல்வேறு ராணுவப் புரட்சிகள், கலகங்கள் நடைபெற்றுள்ளன. ராணுவத் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்கும் நோக்கில் இந்திய ராணுவம் ஒருபோதும் செயல்பட்டதில்லை.

ப317

வலுவான கதைகள், அற்புதமான பிரசார சாதனங்களாக விளங்கி வருகின்றன. பாரமுல்லா மீதான பழங்குடிகளின் தாக்குதல் பற்றிய விவரிப்புகள், அதைச் சொல்பவர்களின் பின்னணிக்கு ஏற்ப வண்ணங்களை ஏற்றிக் கொண்டுள்ளன.

நான் இதை வைத்துத்தான் இந்தப் பதிவைத் தொடங்கியிருக்கிறேன் நண்பர்களே.

ப319

‘அப்போது, ஜெர்மனியிலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு வந்திருந்தேன். ஜெர்மனியின் தேக்கத்துடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் புத்துணர்ச்சியும் வேகமும் என்னில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்ததையொட்டி ஐரோப்பா பாரத்தால் அமிழ்ந்திருந்தது. இந்தியா புத்துணர்ச்சியுடன், பெரும் நம்பிக்கையுடன், புதியதொரு வாழ்க்கையை ஆரம்பிக்கவிருந்தது’
மார்கரெட் பர்க்-வைட், லைஃப் பத்திரிகை.

ப355

நோக்கத்தின் நியாய அநியாயங்கள் எதுவாக இருந்தாலும், பிரிவினைவாதப் போராட்டமானது இது வரையிலும் கல்லறைகளை அதிகரித்ததைத் தவிற உருப்படியாக வேறு எதையும் செய்துவிடவில்லை என்று மக்கள் நிறைப்பதாகப் பிரிவினைவாதத் தலைவர்கள் சிலரே சொல்லியிருக்கின்றனர்.

ப364

சமகால காஷ்மீர் குறித்து காஷ்மீரி முஸ்லீமால் எழுதப்பட்ட ஆணித்தரமான புத்தகத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.

அவசியம் படிக்க வேண்டிய நூல் நண்பர்களே!

பின் இணைப்புகள்

இந்த நூல் பற்றிய கிழக்கு பதிப்பகம் தரும் அறிமுகம்

 

A Mission In Kashmir – நூலாசிரியர் இணையதளம்

http://www.andrewwhitehead.net/a-mission-in-kashmir.html

 

ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s