குகைகளைத் தேடி


இந்தப் புத்தாண்டில் சூளுரைத்த அந்தப் பயணக்கட்டுரை இதுதான். வருசக்கணக்காக பெண்டிங்கில் உள்ளது. இது ஒரு சிறிய பயணம். இந்தியாவின் தவிர்க்க முடியாத மூன்று குகை குடைவறைகளைப் பற்றிப் பேசப்போகிறது இந்த சிறப்புத்தொடர். ‘அய்யோ, சிறப்புத் தொடராம்டா.. கொண்ருவாய்ங்கடா.. வாடா போயிரலாம்’னு பக்கத்தில இருக்கறவங்களையும் சேர்த்து இழுத்திட்டுப் போயிடக்கூடாது.

இந்தக் குகைக்கோயில்களைப் பற்றிய வரலாறு நாம் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை. எனவே இதில் கொஞ்சம் வரலாறு.. நிறைய கதை! ப்ரு காப்பியைப் போட்டுக்கிட்ட படிக்க உட்காரும் சகலகோடி வாசகர்களுக்கும் நன்றி. கீழ்கண்ட இடங்களுக்குப் போகனும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம். ஏனென்றால் நான் செய்த தவறுகளையும் சொல்லப்போகிறேன். திருத்திக்கொண்டு நீங்கள் செல்லலாம்.

  • எலிஃபெண்டா
  • எல்லோரா
  • அஜந்தா

குகைக்கோயில்னா.. பெரிய விசியமோ?

பின்னே..! பெரிய விசியம்தான். முக்கியமாகத் தமிழர்களுக்குப் பெரிய விசியம்தான். தமிழகத்தில் குகைக்கோயில்களுக்குப் பஞ்சமில்லை. எங்கூரிலயே திருமயம், சித்தன்னவாசல், நார்த்தாமலை, மலையடிப்பட்டி  உள்ளன. பின்ன ஏன் அவற்றைப் பெரிசு என்று சொல்லனும்? அளவுதான் காரணம். நம்மூர் பாறைகளில் செதுக்கப்பட்ட குகைக்கோயில்கள் அதிக பட்சம் 10க்குப் 10 பெட்ரூம் அளவில் இருக்கலாம். (ஒரு பேச்சுக்குத்தாம்பா. டேப் எடுத்துட்டு வந்து யாரும் தர்க்கம் பண்ணக் கூடாது. வரலாறு எழுதும்போதே கெண்டக்கால் ரோமம் எல்லாம் நட்டுக்கொள்கிறதே!) பெரிய குகைக்கோயில்கள், அதுவும் ஒன்றல்ல, ரெண்டல்ல.. வரிசையா….. குகை. பிரம்மாண்ட குகை. அரண்மனை போன்ற குகை. மாடி வெச்ச குகை, ஓவியம் வரைந்த குகை, ஒளி புகாத குகை, சிற்பங்கள் நிறைந்த குகை….. இத்தணையும் ஒரே இடத்தில் கிடைப்பதென்றால்?

ஒரே வரியில் சொல்லனும்னா, நம்ம ஊர்ல உள்ளவை குகைக்கோயில்கள். மேலே சொன்ன மூன்றும் குகை அரண்மனைகள்!

அவை தவிற அவை கலைப் பொக்கிஷங்கள். யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டவை. பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது. ஆனால் என் துரதிர்ஷ்டம். எனக்கு ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நாள்தான் ஒதுக்க முடிந்தது.

அதற்காக நான் நம்ப குகைக் கோயில்களையோ ஒரு கல் சிற்பங்களையோ குறைத்து மதிப்பிட்டால், “மகாபலி” என்னை நரபலி கொண்டு விடுவார்!

2007 நவம்பர்

மும்பைக்குச் செல்ல அவசரம் அவசரமாய் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய செயல்திட்டம் கொண்டுவரும் வேலை. கொஞ்சம் கலக்கத்துடன் மாலை 5 மணிக்கு அலுவலகத்தில் கிளம்பி, வீடு வந்து உட்காரக்கூட நேரமின்றி சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்து மூச்சு வாங்கிக்கொண்டேன். முதல் விமானப் பயணம். பட்டிக்காட்டானுக்குப் பல்லக்காட்டக்கூட மூடு இல்ல. பதபதைப்பு அனைத்தையும் விழுங்கிவிட்டது.  எனக்கு முன் போனவர்கள் என்ன செய்தார்களோ அதையே செய்ததும், ஒரு வழியாக விமானத்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்ததும், பக்கத்தில் ஒரு மும்பை பெண் உட்கார்ந்ததும், மும்பை வரை கதையடித்ததும் இந்தக் கட்டுரைக்குச் சம்பந்தமில்லாத விசியங்கள்!

airsahara6ug

கதை தொடங்குவது, மும்பையிலிருந்து…

விமான நிலையத்தில் இறங்கி வெளியில் வரும்போது கொஞ்சம் பகீரென்ற உணர்வு வயிற்றைப் பிடிப்பது, நம் இந்திய விமான நிலையங்களுக்கே உண்டான ஒரு தனித்தன்மை. என்னவோ பாதுகாப்பு வளையத்திலிருந்து வலுக்கட்டாயமாக பிதுக்கித் தள்ளப்பட்டது போன்று. ஒரு பாதுகாப்பில்லாத உணர்வு வரும். இது மாதிரியான உணர்வு வரும் ஊர்களில் சுற்றுலா வளரும் என்று எனக்குத் தோன்றவில்லை. சரி, மும்பை – முதல் முறை, வெளியே கருப்பு மஞ்சள் டாக்சி. நான் வைத்திருந்த முகவரியைப் படித்துவிட்டு, ‘எனக்குத் தெரியும் போலாம்’ என்றார் ஓட்டுநர். என் நேரம். வெளியே விமான நிலையமே வெற்றுக்காடாய் இருந்தது. மணி இரவு 12க்கு மேல்! ஒழுங்காய் கொண்டு போவானா என்கிற பதைப்பு, நாளைய செயல்திட்ட சந்திப்பு எப்படி இருக்குமோ என்கிற உணர்வை விஞ்சியது.

மஞ்சக்காட்டு மைனா
மஞ்சக்காட்டு மைனா

‘என்னா இவன். இவ்ளோதூரம் கொண்டு போறான். மும்பைன்னு சொன்னானுக. இவன் அடுத்து குஜராத்ல கொண்டு போய் இறக்கிவிடுவான் போல. ஏம்பா இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?’ ஏதோ இந்தியில் பதில் சொன்னான். மருந்துக்கும் புரியலை. அப்போதிருந்த மனநிலையில் மும்பையின் கும்மிருட்டும், டாக்சி முகப்பு விளக்கில் ஒளிரும் நெடுஞ்சாலை பலகைகளும் ரசிக்கும்படியாக இல்லை. இரவு 1 மணிக்கு அலுவலக விருந்தினர் விடுதியில் கொண்டு போய் இறக்கினார். நன்றி மிகுந்தவனானேன். உண்மையில் சாந்தாகுருசிலிருந்து போரிவளி 16 கிலோமீட்டர்!

அடுத்த ஓரிரு நாட்கள் அலுவலகத்திற்கு ஆட்டோவில் போனாலும், பேருந்து பிடித்துச் செல்லத் தொடங்கிவிட்டது நமது திராவிட இயக்கத்தின் இந்தி எதிர்ப்புக் கொள்கைக்கு முரணானது. போ… ரி… வ… ளி… என்று எழுத்துக்கூட்டி வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அந்தோ பரிதாபம்! ஒரு முறை கிழக்கு போரிவளி பேருந்துக்குப் பதிலாக மேற்கு போரிவளி பேருந்தில் ஏறி பாதி வழியில் இறங்கி லொங்கு லொங்கினேன். இந்தி எதிர்ப்புக் கொள்கையுடன் திராவிட தலைவர் நகைத்திருப்பார்.

ஆனால் அங்கதான் திரைக்கதையில் ஒரு ‘டுஷ்டு’! லொங்கு லொங்குவின் நடுவில் ஒரு லோக்கல் டிராவல்ஸ் பார்க்க நேர்ந்தது. அதீத ஆவலுடன் மும்பை சவாரிக்கு முன்பதிவு செய்து கொண்டேன். வார இறுதிக்கான திட்டம் ரெடி!

முதல் சனிக்கிழமையில் மும்பை தரிசனம்.

இதைப் பற்றி விவரிப்பது தேவையில்லாதது. ‘இதா பாருப்பா. இதான் மெரீனா பீச்சு. கடல்லாம் இருக்கும்’ என்கிற ரகம்தான். ஆனால் ஊர் பழக வேறு வழியிருக்கவில்லை. போரிவளி கிழக்கில் துவங்கிய ஒரு டப்பா பேருந்து (இந்தியன் படத்தில FC போட வருமே அது மாதிரி பேருந்து), நேரே இந்தியா கேட்டில் இருந்து, சித்தி விநாயகர் கோயில், மகாலக்ஷ்மி மந்திர், மலபார் ஹில், வான்கடே ஸ்டேடியம், மரைன் டிரைவ், ஜுஹூ பீச்… இப்படி போனது. சக பயணிகளைப் பார்த்தபோது அன்பே சிவத்தில் கமலும் மாதவனும் ஒரிசா பார்டரைக் கடந்து வருவார்களே, அத்தகு மண் மணம்!

சுந்தரா டிராவல்ஸ்!
சுந்தரா டிராவல்ஸ்!

 

இந்தியா கேட்
“நீ ஒரு காதல் சங்கீதம்!”
அப்போதைக்கு கல்பனா சாவ்லா விபத்தில் இறந்ததில் உலகம் அதிர்ந்ததல்லவா. அனைவரும் அவரது panel இருக்கும் இடத்தில் நின்று செய்திகளைப் படித்தனர் (நேரு விக்ஞான் சென்டர் – அந்தூரு பிர்லா கோளரங்கு!)

பக்கத்தில் ஒரு குஜராத்தியன். சம வயதுடையவன். அறிமுகப்படுத்திக்கொண்டான். “தென்னிந்தியர்கள் ஆங்கிலத்தைப் பற்றிக்கொண்டு, தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னேறிவிட்டார்கள். இந்தி அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. வட இந்தியனைப் பார். இந்தியைக் கட்டி அழுதுகொண்டிருக்கிறான்” என்று அங்கலாய்த்தான்.

மகாலக்ஷ்மி மந்திரில் டீ குடிக்கையில், கோவை இளைஞர்கள் அறிமுகமானார்கள். ஹை.. பை!

ஜுஹுவில் மாலைச் சூரியன்
ஜுஹுவில் மாலைச் சூரியன்

இந்த சவாரியை முடித்துக்கொண்டு இரவில் படுக்கும்போது சிந்தையில் இருந்தது….. மாதுங்கா!

மாதுங்கா

இணையத்தில் உலாவி ஏற்கனவே மணி ஹோட்டலின் முகவரியைக் குறித்துக்கொண்டிருந்தேன். ஞாயிறு காலை குளித்து முடித்து சுத்தபத்தமாய் ரயிலேறிவிட்டேன். போரிவளியிலிருந்து நேரே சர்ச் கேட். அங்கிருந்து மத்திய ரயிலைப் பிடித்து மாதுங்கா வந்து இறங்கியிருந்தேன். இறங்கியதும் புரிந்தது…. ‘தத்தா நமர்‘. தமிழ் சினிமா பாடல்கள், சுவரொட்டிகள்.

“அண்ணே, மணி ஐயர் ஹோட்டல்.”

“ரைட்ல போய் முதல் லெப்ட்ல திரும்புங்க”

Mani's Lunch Home. Photo (c) http://www.manislunchhome.in/
Mani’s Lunch Home. Photo (c) http://www.manislunchhome.in/

மும்பை போய் அப்படி ஒன்னும் என் நாக்கு செத்துவிடவில்லை. அலுவலகத்தில்தான் வரட்டிக்கு வர்ணம் அடித்தது போல் சாப்பாடு இருந்தது. மற்றபடி விருந்தினர் இல்லத்தில் நல்ல சாப்பாடு என்பதை அறையில் எதிரொலித்த என் ஏப்பம் சொன்னது! இருந்தாலும், நம்மூர் சாப்பாடுன்னா சும்மாவா. ஒரு பிடி பிடித்துவிட்டு, திரும்ப அறைக்கு வந்தபின்…… வேறென்ன.. தூக்கம்தான். அன்று மாலை முழுக்க, மாதுங்காவில் இருந்த நம்மூர் பூக்கடைகளும், சரமாகத் தொங்கி்க்கொண்டிருந்த ரோஜா மாலைகளும், சரசரவென பூக்களைக் கட்டிக்கொண்டிருந்த தமிழர்களும் மனதை நிரப்பியிருந்தனர். “வேலு நாயக்கர்” மட்டும்தான் மிஸ்ஸிங்!

வருவது ஒரு முறை. திரும்ப வருவது சந்தேகமே என்று மனம் மிக வேகமாகக் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தது. அதனால் அடுத்த வாரம்…… திட்டம் வார நாட்களில் ரெடியாகியிருந்தது!

சந்திப்போம் நண்பர்களே!

தொடர்ச்சி –

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s