
அரசு அலுவலர்கள் நிறைய, பெரிய தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் கொஞ்சம், சொந்தத் தொழில் – சிறுதொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் கொஞ்சம். இதுதான் புதுக்கோட்டை. பிறந்தது 30 கிலோமீட்டர் தள்ளி காரசூரான்பட்டி என்கிற கிராமம் (குடுமியாமலை அருகில்). ‘மூணாப்பு’ படிக்கையிலேயே புதுகைக்கு ஜாகை மாறினாலும் இன்னும் உள்ளுர அந்த கிராமத்துச் சிறுவனே நான். ஒவ்வொரு நாளும் என் பிறப்பிடம் பற்றி எண்ணாமல் இருந்ததே இல்லை (நிஜம்ங்க!). வெயில் வரட்சியாகட்டும், மழைச் சதுப்பிலாகட்டும் வெள்ளாறு, குளத்தங்கரை, வயல்காடு என்று டிபிகல் பாரதிராஜா படம் பாணியில் அமைந்த குழந்தைப் பருவத்தைச் சற்றும் கருணையே இல்லாமல் பிடுங்கியதால், ஒரு காலத்தில் புதுக்கோட்டை என்றாலே எனக்கு ஒவ்வாமை.

பன்றிகள் அலையும் சாக்கடை, கச பசவென வீடுகள், மலம் நிறைந்த சந்துகள்… நரகமாகவே அறிமுகமானது இந்த ஊர். யாதொரு நாட்டுப்புறத்தானுக்கும் எந்த ஒரு நகரத்தைப் பார்த்தும் அத்தகைய உணர்வுதான் வந்திருக்கவேண்டும்.
ஆனால் சில வருடங்கள் கடந்து, அமைந்த நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த ஊரின் பால் ஒரு ஈடுபாட்டினை உருவாக்கினர். படித்த அரசுப் பள்ளியாகட்டும், தனியார் கல்லூரியாகட்டும் அமைந்த நண்பர்கள் இன்றளவும் நீடித்து வந்திருக்கின்றனர். இன்றும் நினைத்துப் பார்க்கும் அளவில் ஆசிரியர்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு 3 ஆண்டுகள் அந்த ஊரிலேயே பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் புதுக்கோட்டை என்பது தொல்லியல் சுரங்கம் என்று தெரிய வந்தது. சித்தன்னவாசல், கொடும்பாளூர், சித்தன்னவாசல், நார்த்தாமலை, திருமயம் என்று ஊரைச் சுற்றி தொல்லியல் சுரங்கமாகவே இருந்தது புதுகை. இன்றும் வாய்ப்புக் கிடைக்கையில் மேற்சொன்ன இடங்களுக்குச் சென்று இனிய பொழுதைப் பெற்றுவருவது எனது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இவ்வளவு இருந்தும் சில வருத்தங்கள் உண்டு. இருக்கும் இடத்தில் ஒரு நல்ல தொழில் வாய்ப்போ, வேலை வாய்ப்போ இல்லாதிருப்பது. காலத்தின் கையில் விட்டுவிடலாம்!
——
இந்தப் பதிவு சக பதிவர் திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்காக. போனமாசமே இந்த தொடர்பதிவிற்கு அழைத்தார். ஊரு சுத்திக்கொண்டிருந்ததாலும், ஆணி அதிகம் பிடிங்கிக்கொண்டிருந்தததாலும், தவிற ‘குகைகளைத்தேடி..’ முடியாமல் இழுத்துக்கொண்டிருந்ததாலும்… ஏற்பட்ட தாமதத்தைப் பொருத்தருளும் கனிவு கொண்டவர் அவர். அவருக்கு இந்த ஒரு பதிவு பத்தாது. www.pudukkottai.org என்று எங்கள் தளத்தையே கொடுத்துவிடுகிறேன். என்னையும் அழைத்ததற்கு நன்றி!