இந்த நூலைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் பதிவிலிருந்து அறிந்து, ஆன்லைனில் இரு மாதங்கள் முன்பு வாங்கினேன்.
பால்ஸாக்கின் கதைகளைப்புரிந்துகொள்ள அன்றைய வாசிப்புமுறையையும் அறிந்திருக்கவேண்டும். அக்காலத்தில் புத்தகங்கள் பெரும்பாலும் படித்தவர்கள் மற்றும் உயர்குடியினருக்குரியவை. அன்றைய முக்கியமான பொழுதுபோக்கு வாசிப்பே. நவீன இலக்கியம் என்ற வடிவமே உயர்தரக்கேளிக்கை என்ற நோக்குடன் உருவானதுதான். பண்டைய இலக்கியங்கள் ஞானப்பகிர்வுக்கும் நவீன இலக்கியங்கள் உல்லாசத்துக்கும் உரியவை என்ற நம்பிக்கை இருந்தது. நாவல், ரொமான் போன்ற பெயர்களே அதைத்தான் சுட்டுகின்றன. – ஜெயமோகன்
மொழிபெயர்ப்பு நூல்களில் இதுதான் எனக்கு முதல்போனி. வெகு இயல்பாக வாசிக்கும் நடையில் இருந்ததாலும் இதை வாசிக்க எனக்கு இரண்டு நாட்கள் ஆனது. ஸ்பெயின், ஃபிரான்ஸ் இடங்களும், கதாபாத்திரங்கள் மற்றும் தெருப் பெயர்களும் ஆங்காங்கே வேகத்தடையாக இருந்தாலும் சுவாரஸ்யத்தைக் குறைக்கவில்லை.
செந்நிற விடுதி
ஆசிரியர்: பால்ஸாக்
தமிழில்: ராஜேந்திரன்
பதிப்பு: தமிழினி, முதல்பதிப்பு மே 2013
பிரிவு: புனைவு
ISBN: –
மொத்தம் 4 குறுநாவல்கள் அல்லது சிறுகதைகள். நான்குமே உங்கள் மனதைத் திறந்து நினைவில் வியாபித்துக்கொள்ளும் என்பதற்கு நான் கியாரண்டி.

1. பாலைவனத்தில்
எகிப்திய படையெடுப்பின்போது தென்ஃபிரான்சைச் சேர்ந்த படைவீரனை அரேபியப் படைவீரர்கள் பிடித்துக்கொள்கின்றனர். பாலைவனச்சோலையில் அவர்கள் இளைப்பாறும்போது தப்பி, ஒரு சிறுத்தையின் குகையில் மாட்டிக்கொள்ளும் போர்வீரனது கதை. அங்கே ஒரு போர்வீரனையும் புலியையும் காணவில்லை. மாறாக, ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவாடல்கள் மற்றும் தான் என்கிற எண்ணத்தையும் காணலாம். சிறுத்தையை வீரன் மெது மெதுவாக நெருங்குவதும், சிறுத்தையை ஒரு பூனையாகவும், ஒரு அழகியாகவும் என் மனதில் உருவகப்படுத்திக்கொள்ளும் தருணம் எனக்கு இந்தக் கதை மிகவும் பிடித்துப்போயிற்று. சிறுத்தை பொறாமை கொள்ளும் தருணம் கிளாசிக். ஆனால் அப்படி ஏன் முடிவு என்று எனக்கு விளங்கவேயில்லை. அந்தக் காலத்து லைப் ஆஃப் பை!
2. செந்நிற விடுதி
சற்றே நீளமான குறுநாவல். தங்கும் விடுதியில் நிகழும் கொலை, அதைப் பிரசங்கம் செய்யும் பாணியில் நேர்த்தியாகச் சென்று கடைசியில் ஒரு சிக்சர் அடித்து முடிந்திருக்கும். மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் கைதியின் கடைசி இரவில் மனதில் கனமானது.
3. லா க்ராண்ட் பெர்தெஷே
மர்மமாளிகையாக நம் அகக்கண் முன் விரிகிறது இந்த வீடு. இரண்டரை பக்கங்களுக்கு இந்த வீட்டைப் பற்றிய வர்ணணையில்தான் இந்தக் கதை தொடங்குகிறது. பக்கா! இறுதிக் கட்டத்தைப் பற்றிச் சொல்லி உங்கள் அட்ரினலில் மண்ணைப் போட நான் விரும்பவில்லை. கணவன் மனைவி என்கிற இருவரின் ஈகோ விளையாட்டு. விடுதியில் ஒவ்வொருவரிடமிருந்தும் உண்மையை வரவழைக்கும் பாணி அசத்தல்! இந்தக் கதையின் கிளைமேக்ஸே எனக்குப் பிடித்த இடம்.
4. நாத்திகரின் பூசை
last but not least கதை இது. இந்தக் கதை ஆரம்பிக்கும் இடத்தில் பெரிதாக ஈடுபாடில்லை. ஆனால் பக்கங்கள் நகர நகர அசுரத்தனமாக என் மனதில் உள்ளே உட்கார்ந்த கதை இது. சொல்லப்போனால் மேற்கண்ட 3 கதைகளைவிடவும் அதிகமாக மனஎழுச்சியைப் பெற்றது இந்தக் கதையிலேயே. ஒருவேளை நீங்கள் உங்கள் வாழ்வில் இளம்பிராயத்தில் வரும் கடினமான காலங்களைக் கடக்க உதவும் ஒரு patronஐப் பெற்றிருந்தால் இந்தக் கதை உங்களை அப்படியே விழுங்கிவிடும். மேற்சொன்ன கதைகளைவிட எளிதான கருதான் என்றாலும் இந்த நூலிலேயே இந்தக் கதைதான் எனக்குப் பிடித்ததென்பேன்.

நிறைவு
வாழ்க்கையின் சில நிகழ்வுகளைப் பற்றி அழுத்தமாக உரையாடும் கதைகள் – செந்நிற விடுதி
நம் வாழ்க்கையின் கஷ்டகாலங்களைக் கடக்க உதவும் மனிதர்கள்தான் கடவுள் அவதாரங்கள் என்கிற நம்பிக்கை நான் உள்ளிட்ட சக நண்பர்கள் ஒத்துக்கொள்ளும் ஒரு விசியம். அப்படிப்பட்ட ஒரு patron உங்களுக்கு இருந்தால் “நாத்திகரின் பூசை” கதையில் நீங்கள் ஆழ்ந்து போவீர்கள்.
கணவன் மனைவிக்கிடையிலான ஈகோ உரசலின் உச்சம் “லா க்ராண்ட் பெர்தெஷே”
செய்யாத தவறுக்கு மரணதண்டனை பெறுபவனின் கடைசி இரவின் வலியை உணர்த்துவது “செந்நிற விடுதி” (கிளைமேக்ஸ் பத்தி சொல்லமாத்தேன் போ!)
தப்பித்த படைவீரனும், அவனுடைய சிறுத்தைக் காதலியும் – “பாலைவனத்தில்”
படிக்கவேண்டிய நூல் நண்பர்களே. நானும் மறுவாசிப்பு செய்வேன். குறிப்பாக, ஆசிரியர் குறிப்பிடும் இடங்கள், ஊர்கள், ஆறுகளைப் பற்றித் தேடுவதற்காவது இனியொருமுறை படிக்கவேண்டும்.
மீண்டுமொரு புத்தக அனுபவத்தில் சந்திப்போம் நண்பர்களே.
வெல்க பாரதம்