ஒரு மானிடன் இறந்து போனான். தர்ம தீர்ப்புக்காக எமலோகத்தில் எமதர்மராஜன் முன்பு நிற்கிறான். அவனுடைய நியாய தர்ம விவகாரங்கள் பேசிக்கொண்டிருந்த போது எமதர்ம அவையின் பக்கத்தில் நிறைய விளக்குகள் (கிரிக்கெட் கிரவுண்ட்ல நைட்டு போடுவாங்களே அது மாதிரி) இருப்பதைப் பார்க்கிறான் நம்ப மானிடன். ‘இந்த விளக்குகள் எதுக்காக இங்க வெச்சிருக்கீங்க’ அப்டின்னு எமனைப் பார்த்துக் கேட்கிறான். ‘பூலோகத்தில் யாராவது ஒருவன் பொய் சொன்னால், இதில் ஒரு விளக்கு எரியும்’ என்கிறான் எமன்.
திடீரென அனைத்து விளக்குகளும் ஒரே நேரத்தில் எரியத்தொடங்குகின்றன. ‘என்னாச்சு. ஏன் எல்லா விளக்குகளும் எரிகின்றன’ என்று மரிசலாகிறான் மானிடன். ‘பயப்படாதே. பூலோகத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி துவங்கிவிட்டது’ என்றான் எமன்.
அமரர் தென்கச்சி கோ சுவாமிநாதன் சொன்ன சிறுகதை இது.
சிறிய கதைக்குள் பெரிய கருத்துக்களை ஒளித்துவைத்திருக்கும் கதைத் தொகுப்புதான் இந்த மிட்டாய் கதைகள். ஒரு வார இறுதியில் நூலகத்தில் அலசியபோது எதேச்சையாக கையில் சிக்கியது.
மிட்டாய் கதைகள்
ஆசிரியர்: கலீல் கிப்ரான்
தமிழாக்கம்: என். சொக்கன்
பிரிவு: புனைவு
பதிப்பு: மதி நிலையம் – முதல்பதிப்பு டிசம்பர் 2012
ISBN: –

இவற்றைச் சிறுகதை என்று கூட சொல்ல இயலாது. ஒவ்வொன்றும் ஊசிப்பட்டாசு அளவில் இருக்கின்றன. ஊசிப்பட்டாசு போலவே வெடிக்கின்றன. சில கதைகள் புன்னகைக்க வைக்கின்றன. சில கதைகள் வெடித்துச் சிரிக்க வைக்கின்றன. 50 கதைகளில் ஒன்று கூட சோடை போகவில்லை.
பல கதைகளை வாசிக்கும்போது வெவ்வேறு அரசியல் சூழலிலோ, அல்லது சக மனிதர்களின் குணங்களைப் பார்த்தோ எழுதியிருப்பார் என்று எண்ணத்தோன்றுகிறது.
- உதாரணமாக “போரும் சிறு நாடுகளும்” கதை அப்பட்டமான உலக அரசியல். உக்ரைன் அரசியல் நடந்து கொண்டிருக்கும் தற்பொழுது கூட இந்தக் கதை அற்புதமாக நவீன உலகிற்குப் பொருந்திப்போகிறது.
- “நீதி” என்றொரு கதை வருகிறது. கட்டப்பஞ்சாயத்து போன்ற நீதிமான்களைப் பற்றிய “செம” கிண்டல்.
- “பைத்தியங்கள்”, “ஒரு பைத்தியக்காரன்” போன்ற பைத்தியங்களைப் பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் சொல்லியிருக்காரு பாருங்க. ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்.
- “மதுவிலக்கு” கதை நிஜமாகவே நம்ப ஊருக்குச் சொன்னது போல இருக்கிறது!
- “கைதிகள்” என்று ஒரு கதை வாசித்தபோது கவிஞரின் “பரமசிவன் கழுத்திலிருந்து” பாடல் நினைவிற்கு வந்தது.

இந்த நூலை இலவச மின்னூலாகத் தருகிறார் என். சொக்கன் அவர்கள்.
http://nchokkan.wordpress.com/2011/04/27/gibran/
எனக்குப் பெரும்பாலும் அனைத்துக் கதைகளுமே பிடித்தது என்றாலும், ஓடும் நீரில் தக்கை மேல் பயணம் செய்யும் தவளைகளை வைத்துச் சொல்லப்படும் “ஞானம்” கதைதான் உடனே நினைவிற்கு வருகிறது.
உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கும் இந்த நூல் பிடிக்கும். இவ்வளவு நல்ல கதைகளை நல்ல தமிழில் தந்ததற்காக பாராட்டுக்களும் நன்றிகளும் திரு சொக்கன் அவர்களுக்கு!
இலவச மின்னூலுக்கான scribd தள சுட்டி கீழே இணைத்துள்ளேன்.
சந்திப்போம் நண்பர்களே!
ஜெய் ஹிந்த்
வணக்கம்
நல்ல புத்தகத்தை பற்றி தங்களின் பார்வையில் நன்றாக சொல்லியுள்ளீர்கள் இதோ தறவிறக்கம் செய்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் கவிஞரே.
தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், பதிவிற்கு விருப்பம் தெரிவித்தமைக்கும் நன்றி.