உலோகம் – ஜெயமோகன்


தமிழினத்திடம் இந்த நாவல் நல்ல பெயரெடுத்திருக்க வாய்ப்பில்லை. தமிழினத்தின் முக்கியப் பிரச்சினையான ஈழம் பற்றி எத்தணை பேரிடம் புரிதல் இருக்கும்? எத்தணை நூல்கள் படித்தால், எத்தணை பேரிடம் உரையாடினால் சரியான புரிதல் வரும்?

ஒரு அடியவர் குழாம் – அங்கு துதிகள் பாடப்படலாம், மிகைப்படுத்தப்பட்ட கதைகள் இருக்கலாம். உண்மைக்குமேலே அடர்ந்து படர்ந்த புகையை விலக்கி உண்மையைப் பார்ப்பது எப்படி?

இன்னொரு ஓநாய் குழாம் – இருக்கும் இடத்தையும், அதில் உள்ள குழப்பத்தையும் பயன்படுத்தி எப்படிக் மேலும் குழப்பத்தை விளைவிக்கலாம்?

இன்னொரு கழுதைப் புலி குழாம் – உண்டு முடித்த எச்சங்களோ அல்லது திருடிக்கொண்டுவந்த உணவையோ கவர்வதற்கு.

இவர்களுக்கிடையில் சக மனிதர்கள் போல அவர்கள் வாழ்வது என்னாளோ? லௌகீக வாழ்க்கையில் அவர்கள் சகஜமாக ஈடுபடுவது எந்நாளோ?

உலோகம்
ஆசிரியர் – ஜெயமோகன்
பதிப்பு – கிழக்கு பதிப்பகம் – முதல்பதிப்பு டிசம்பர் 2010
பிரிவு – புனைவு – சாகச எழுத்து (திரில்லர்)
கன்னிமரா – இந்தப் புத்தகத்தைக் காணோம் 😉
NLB – http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/FULL/EXPNOS/BIBENQ/3023370/525454,4
இணையத்தில் வாசிக்க – http://www.jeyamohan.in/?p=7221

விமர்சனங்கள் –

உலோகம் - ஜெயமோகன்

கன்னிநிலம் நாவலுக்கு (பார்க்க – கன்னிநிலம் – ஜெயமோகன்) அடுத்ததாக ஜெயமோகனின் இன்னொரு திரில்லர் – சாகச எழுத்தை இன்று வாசித்தேன். கன்னிநிலத்தில் மணிப்பூர் போராளிகளைப் போல, உலோகத்தில் ஈழப்போராளிகள்.

ஈழ அகதிகளின் வாழ்க்கை முறை பற்றி நேர்மையாக மிகைப்படுத்தாமல், மனமாச்சர்யங்களைக் கலக்காமல் சொல்வது என்பது ஒரு சவால். இது ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் மகிழ்வைக் கொடுக்காது. தவிர, ஈழப் பிரச்சினையில் இந்திய உளவுத்துறையின் பங்கு என்னது? பொதுவாக ஈழ ஆதரவாளர்களுக்கு அனைத்துமே இந்திய உளவுத்துறை செய்வதாகவோ, இலங்கை இராணுவத்தைச் செய்யவைப்பதாகவோதான் ஈழர்கள் நினைக்கின்றனர் என்று நான் வாசித்ததுண்டு. அதனைப் பற்றிய உண்மையும் புனைவும் கலந்த ஒரு நாவல்தான் உலோகம்.

சாகச எழுத்தின் இலக்கணப்படி, எடுத்தால் கீழே வைக்க விடாத ஜெயமோகனின் நடை. கன்னி நிலம் நாவலில் கூட அவ்வப்போது பெருமூச்சு விட நேரமிருந்தது. ஒருவேளை நாவலின் பின்புலம் ஈழம் என்பதன் காரணமாகவோ என்னவோ, விடாத மன எழுச்சியுடன் புத்தகத்தை கீழே வைக்கவே இயலவில்லை. முடித்ததும் இந்தப் பதிவையும் எழுதுகிறேன். (உங்களின் நலன் கருதி உடனே பிரசுரிக்காமல் ஷெட்யூல் செய்து வைக்கிறேன்).

சாத்தன் என்கிற சார்லஸ் – ஈழப்போராளி, அனேகமாக LTTE இயக்கத்தவராக இருக்கலாம். மற்றொரு இயக்கத்தின் தலைவரான பொன்னம்பலத்தாரைக் கொல்லும் assignmentஐக் கையிலெடுத்துக்கொண்டு இந்தியாவிற்கு அகதியாக வந்து இறங்குகிறான். யார் இயக்குகிறார்கள் என்று தெரியாது. இயங்குகிறான். இலங்கையில் ஒரு போரின் போது அவன் தொடையில் வந்து பதிந்த குண்டுதான் உலோகம். அப்பட்டமா ன உளவுத்துறை மற்றும் போராளிக்குழு விளையாட்டுக்களை, எழுத்தில் வைத்து சடுகுடு ஆடுகிறார் ஜெயமோகன்.

துப்பாக்கி குண்டு உள்ளே துளைக்கும் போது என்ன மாதிரியான உணர்வு இருக்கலாம்? இந்திய அகதிகள் முகாமில் அகதிகளின் நிலை (குறிப்பாக கழிப்பறைகள் பற்றி சொல்லும்பொது ஒரு கணம் அருவெறுப்பில் விழுந்துவிட்டேன்), போராளிக்குழுக்களுக்கான நெட்ஒர்க், உளவுத்துறை விளையாட்டு என்று எல்லா புறநானூறு குணங்களுக்கு மறு குணமான போராளிகளின் காமம் அவற்றின் வடிகால் என்று அனைத்தையும் துள்ளியமாக கண்முன் வைப்பதில் இது ஒரு பலே படைப்பு.

ஜோர்ஜ் இன்னொரு போராளி – இன்னொரு போராளிக்கூட்டத்தின் ஆளாக இருக்கவேண்டும். ஜோதிகா பற்றியும்  தூள், திருப்பாச்சி, கில்லி படங்கள் பற்றியும் சிலாகிக்கிறான். சராசரியாக வாழவேண்டும் என்று எண்ணம் கொண்டவன் அல்பாயிசில் செத்துப்போவது கூட எனக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அவன் மரணத்திற்குப் பின், அவனது வீட்டுக்குள் இருந்து வீரராகவன் (இந்திய அதிகாரி) வருவதும், வீரராகவனும் சார்லசும் ரெஜினாவை (ஜோர்ஜின் மனைவி) பாலியல் ரீதியாக சுரண்டுவதும் கண்டு ஒரு வருத்தம் மேலோங்கியது. இத்தணைக்கும் ரெஜினா, சார்லசை முதலில் அண்ணன் என்று வேறு அழைக்கிறாள்!

தீவிரமான எந்த விஷயமும் ஆபத்தே என்று எண்ணும் மனநிலைக்கு எங்களுர் பெண்கள் வந்துவிட்டிருக்கிறார்கள். அவள் (ரெஜினா) அவனிடம் (ஜோர்ஜ்) என்னைத் தவிர்க்கும்படிச் சொல்லியிருப்பாள் என நினைக்கிறேன். அவன் பொருட்படுத்தியிருக்கவில்லை. நாங்கள்பேசிக்கொண்டிருக்கும்போது வெறுப்பால் சுளித்த முகத்துடன் அவள் அவ்வழியாக அடிக்கடி நடந்துசெல்வாள். நான் தனியாக எதிரே வந்தால் காறி தரையில் துப்புவாள். அவளை நான் ஏறிட்டே பார்ப்பதில்லை.  கருமையான நிறமும் சுருண்ட கூந்தலும் கொண்ட கன்னங்கள் ஒட்டிய பெண். அவள் வயதை விட அதிமகான வயது தெரியும். ஒரே முறை என் காதுபட ஏதோ சொன்னாள். பிள்ளைகுட்டி உள்ளவர்களின் வாழ்க்கையுடன் விளையாடவேண்டாம் என்று சொன்னதுபோல இருந்தது.

ரெஜினா மட்டுமல்ல, பொன்னம்பலத்தின் மகள் வைஜெயந்தி, அருண் செங்குப்தா, சிவதாசன், சார்லஸ் என்று அனைவரிடமும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்வதும் சொல்வது என்ன? போராட்ட சூழலிருந்து எப்படியாவது தப்பிக்க ஈழப் பெண்களான ரெஜினாவும்,  வைஜெயந்தியும் ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளை வேறு வழியில்லாமல் அனுமதிக்கிறார்கள் என்றோ, அல்லது தங்களது காம வடிகால்களுக்குப் போராளிகள் பெண்களைச் சுரண்டுகிறார்கள் என்றோ நினைக்கத்தோன்றுகிறது.

கவனம் கொண்ட கண்களுடன் ”நீங்கள் இயக்கத்திலை இருந்தியளோ?” என்றாள்.

”ஓம்” என்றேன். அவள் காத்திருந்தாள். ”துரோகி ஆயிட்டனான்” என்றேன். அவள் முகம் மெல்ல நெகிழ்ந்தது. புன்னகையுடன் ”அப்பா சொல்லுவாங்கள் ஒருநாளைக்கு மொத்த ஈழச்சனத்தையும் அவங்கள் துரோகி எண்டு சொல்லிப்போடுவாங்கள் எண்டு” என்றாள். ”இப்பவே அப்பிடித்தானே?” என்று கவனமில்லாமல் சொன்னேன்.

சாதாரண வாழ்க்கையை வாழவே முடியாதோ என்கிற ஏக்கத்தை பல இடத்தில் காணலாம்.

வானில் மின்னி மின்னி அணையும் விளக்குகளுடன் ஒரு விமானம் சென்றபோது என் சுரப்பிகளில் ஜிவ்வென்று அமிலம் ஏறி தசைகள் இறுகின. மறுகணம் இது வேறு நிலம் (இந்தியா) இங்கே விமானங்களுக்கு வேறு பொருள் என்று ஆறுதல் கொண்டேன். அந்தக்குழு முழுக்க உடல்தசைகள் தளரும் அசைவுகள் தெரிந்தன. ஆம், அத்தனைபேரும் வேட்டையாடப்பட்ட உயிர்கள்தான்.

கடல் மணல் திட்டில் அமர்ந்திருக்கும் மக்கள், முகாமை விடுத்து வெளியே வேலை தேடும் ஜோர்ஜ், ஐரோப்பாவிற்குத் தப்பியோட நினைக்கும் பொன்னம்பலத்தார், பொன்னம்பலத்தாரைக் கொல்வதற்காக சார்லசை தன் வலையில் வீழ்த்தும் அவர் மகள் வைஜெயந்தி என்று பல இடங்களில் சாதாரண வாழ்க்கை, யுத்தகளத்திலிருந்து விடுபடும் எளிய மனதின் ஏக்கமே மேலோங்கியிருக்கிறது.

“விமோசனமே இல்லை… இங்கேயே சாகணுமெண்டு விதியிருக்கு ….இப்டியே செத்து செத்து வாழுறதைக்காட்டிலும் சூசைட் பண்ணிக்கிட்டு போகலாம்… ஆனா என்ர பிள்ளை…” உதட்டைக் கடித்து அழுகையை அடக்கி அடக்க முடியாமல் விசும்பி ”என்ர பிள்ளை அனாதையா வளருது… ரோட்டிலே போறவள்லாம் பிள்ளைய நெஞ்சில அணைச்சுகிட்டு இருக்கா..என்ர பிள்ளைய என்னால தொடக்கூட முடியேல்ல….” – வைஜெயந்தி

யுத்தத்தின் ருசியை இளையவருக்குக் கற்றுக்கொடுத்துவிட்டால் அது எளிதில் அவரை விட்டு நீங்காது. என்கிறார். உண்மைதான். அதுவே அவர்களின் வாழ்வைக் கெடுப்பதற்கும், உயிரைக் குடிப்பதற்கும் அதுவேதானே காரணமாகிறது.

ஈழத்தவரை இலங்கை ராணுவமும் இந்தியாவும் மற்றும் சந்தேகிக்கவில்லை. ஒரு ஈழத்தவரே இன்னொரு ஈழத்தவரை சந்தேகக்கண்ணுடன்தான் பார்ப்பானோ, வேவு பார்ப்பானோ? கேள்வி எழும்.

முகாமில் எவரும் பொதுவாக அரசியலே பேசுவதில்லை. பிறருடைய அரசியல் என்ன என்பது எப்போதுமே ரகசியமானது. யாரையுமே நம்பக்கூடாதென்பதே இந்தப் போர் எங்கள் சமூகத்துக்குக் கற்றுக்கொடுத்த முதல்பாடம். நாக்கின் மீது இரட்டைதாழ் போடாத ஒரு ஈழத்தவரை நீங்கள் சந்திக்க முடியாது. நம்மிடம் ஒருவர் பேசும்போது அவரது கண்கள் சம்பந்தமில்லாமல் நம்மை வேவுபார்ப்பதைக் காணலாம். கண்கள் சந்தித்துக்கொண்டால் உடனே எதிர்முனைக் காந்தமுட்கள் போல விலகிக்கொள்ளும். ஒருபோதும் அவர் தன்னைப்பற்றிய முழு விவரங்களையும் சொல்வதில்லை, நம்மிடம் கேட்பதுமில்லை. பேச்சு நகர்ந்து நகர்ந்து ஓர் எல்லைக்குச் சென்றதும் நிறுத்திக்கொள்ளவேண்டிய இடம் இருவருக்குமே தெரிந்து கச்சிதமாகப் பின்வாங்கி விடுவோம்.

கதைக்களத்தின் காலகட்டம் என்ன என்று உறுதியாகத் தெரியவில்லை. ராஜீவ் கொலைக்கு அப்பறமாக நடக்கிறது. ஜோதிகாவைப் பற்றியும், தூள், கில்லி, திருப்பாச்சி படங்களைப் பற்றி ஜோர்ஜ் பேசுகிறான். செல்போன்கள் பயன்படுத்துகின்றனர்.

உலோகம் - ஜெயமோகன்

கடைசியாக உலோகம் (அதாவது குண்டு) யார்? – சார்லஸ் மற்றும் அவனையொத்த போராளிகள்.

குண்டுகளைச் செலுத்தும் துப்பாக்கிகள் யார்? அந்தத் துப்பாக்கிகளின் ட்ரிகளை அழுத்தும் நபர்கள் யார்? இதுதான் இந்த நாவல் நம்முன் வைக்கும் கேள்வி.

சிறப்பான நூல். வேறொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே!

ஜெய் ஹிந்த்.

2 thoughts on “உலோகம் – ஜெயமோகன்

    1. முயன்று பாருங்கள். NHMல் மலிவு விலையில் கிடைக்கிறது. 55 இந்திய ரூபாய் என்று நினைக்கிறேன். வருகைக்கும் பதிலுரைக்கும் நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s