இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் மற்றும் கலாசார நாயகனாக திகழ்ந்த (சிலர் மனிதகுல வரலாற்றிலேயே சிறந்த நாயகன் என்றும் சொல்வார்கள் ) மோகன்தாஸ் கரம்சந்த் ‘மகாத்மா’ காந்தி மீதான தாக்குதல்கள் இதற்கு முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வருகிறது.
வன்முறையில்லாமல் ஆங்கிலேய அரசை காந்தி எதிர்த்த போராட்ட முறை நெல்சன் மண்டேலா முதல் பராக் ஒபாமா வரை எல்லாரையும் ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது. நாடுகளின் எல்லைகளை கடந்து குறிப்பிடப்படுகிற கலாசார எடுத்துக்காட்டாக இருக்கிற அளவுக்கு அவர் புகழ் பெற்று இருக்கிறார். லோகோக்களில், டி.ஷர்ட்களில், ஏன் ஆடம்பரத்தின் அடையாளமான பேனாக்களில் கூட அவர் காணப்படுகிறார். அவரின் எழுத்துக்கள்90 பாகங்களை கடந்து இருக்கின்றன. அவை தொடர்ந்து விளம்பரப்படுத்துகிற அளவுக்கு பரவலாக கவனம் பெற்றிருக்கின்றது.
பின்னர் ஏன் அவரை வெறுக்க வேண்டும் என்று நமக்கு தொடர்ந்து சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது ? புக்கர் பரிசு வென்ற எழுத்தாளரும்,இந்தியாவின் தீவிர விமர்சகருமான அருந்ததி ராய் சமீபத்தில் காந்தியின் அதிதீவிர விமர்சகராக உருவெடுத்து இருக்கிறார். காந்தியை கூர்மையாக விமர்சிக்கும் அவரின் சமீபத்திய கட்டுரையை வாசிக்கும் கூட்டத்தில் ஏன் இந்தியா மற்றும் உலகம் முழுக்க காந்தி நேசிக்கப்படுகிறார் என்கிற கேள்விக்கு இகழ்ச்சியாக ,”கடவுளுக்குத்தான் தெரியும் !” என்று ஏன் சொன்னார் ? ஏன் சமீப காலங்களில் காந்தி நிறவெறி பிடித்தவர் என்றும்,அவர் சாதியவாதி என்றும்,முதலாளிகளை நேசித்த கபடமும்,தந்திரமும் மிகுந்த அரசியல்வாதி என்றும் குறிக்கப்படுகிறார். இவை அவரை புனிதராக காட்டும் தேசப்பிதா என்கிற அழைப்பதற்கு முழுவதும் மாறானதாக இருக்கிறது இல்லையா ?
இதை ஏன் என்று புரிந்து கொள்ள,சில விஷயங்களை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். காந்தியை தீவிரமாக விமர்சிப்பவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லது மிகவும் ஆக்ரோஷமாக காந்தியை எதிர்ப்பவர்கள் பெருமையோடு தங்களை மார்க்சிஸ்ட்கள் என்று அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். (அதாவது அவர்களின் சித்தாந்தம் இடதுசாரி அரசியல் சார்பு உள்ளது ). காந்தியின் மிகத்தீவிரமான விமர்சகர்களான எழுத்தாளர்கள்,அறிவுஜீவிகள் இந்த வகையான அரசியல் பின்புலத்தில் இருந்தே வருகிறார்கள்.
ஏன் இடதுசாரிகள் காந்தியை எதிர்க்கிறார்கள் ?ஆயுதமயமாக்கலுக்கு எதிரான அகிம்சைவாதியாக,இனபேதங்கள் அற்ற சமத்துவத்துக்கு தொடர்ந்து அயராது பாடுபட்டவருமாக இருந்ததற்காக அவரை இடதுசாரிகளில் பல பேரே கடந்த காலங்களில் நாயகனாக நேசித்திருக்கிறார்கள். இப்பொழுது அப்படி நேசிப்பவர்கள் இல்லை. மேற்கின் நவ தாராளவாத மற்றும் 2008பொருளாதார மந்தநிலைக்கு பிந்தைய முதலாளித்துவத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக போராட வந்த இவர்கள் காந்தியை தந்திரமான,பாலியல் வெறி பிடித்த காரியவாதியாக சித்தரிக்கிறார்கள்.
இதற்கு அடிப்படைக்காரணங்கள் இருக்கின்றன. காந்தி இனரீதியான சமத்துவத்துக்காக தொடர்ந்து வரலாறு நெடுக பாடுபட்டார். அவரளவுக்கு இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக,அவர்களை இணைக்க தீவிரமாக பாடுபட்டவர்கள் வேறு யாருமில்லை. காந்தியவாதிகள் காந்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அவர்களை ஆதிக்க சாதியினரோடு ஒன்றிணைக்கவும் அப்படியே தீவிரமாக செயலாற்றினார் என்று சொல்வார்கள்.
ஆனால்,அவரின் விமர்சகர்கள் அதிலும் குறிப்பாக அற்புதமான பி.ஆர்.அம்பேத்கர் காந்தி விளிம்புநிலை மக்களுக்கு செய்தது வெகுக்குறைவானது மற்றும் வெகு தாமதமானது என்றும் வாதிட்டார்கள். காந்தி ஜாதியை பொறுத்தவரை இந்து சமூகத்தை சீர்திருத்துவது போதும் என்று எண்ணினார். அம்பேத்கரோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனி பிரதிதிநிதித்துவம் வேண்டும் என்று வாதிட்டார். இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பல நூற்றாண்டுகளாக ஒன்றாக இணைந்து வாழ்ந்ததற்கு காரணமான அவர்களின் நற்குணத்தை முன்னிறுத்துவதன் மூலம் அவர்கள் ஒற்றுமையாக இருப்பதை சாதிக்கலாம் என்று காந்தி எண்ணினார். இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை சாதித்த ஜின்னா மற்றும் காந்தியின் வாரிசும்,இந்தியாவின் முதல் பிரதமருமான நேரு ஆகிய இருவரும் ஒரு சமரசத்துக்கு வர முடியவில்லையென்றால் பிரிவினை தான் தீர்வு என்று எண்ணினார்கள். அவரின் வழிமுறைகள் சமயங்களில் அதீத நம்பிக்கை கொண்டதாக இருந்தாலும் அவற்றின் நோக்கங்கள் நல்லவையாக இருந்தன என்பதில் சிறிதளவு கூட சந்தேகமில்லாமல் சமீபகாலம் வரை இருந்தது.
காந்தியை புதிய வாசிப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இடதுசாரிகள் அவரின் நோக்கங்கள் தவறு என்றும் அவை ஒழிக்கப்படவேண்டும் என்றும் வாதிடுகிறார்கள். அவர் சமரசம்,அமைதி,அகிம்சை ஆகியவற்றுக்கு எப்பொழுதும் போராடவில்லை என்று நிறுவ முயல்கிறார்கள். ஆதிக்கஜாதி இந்துக்களின் நாடாக,இஸ்லாமியர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட ஜாதி மக்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு உள்ளாக்குகிற சமூகத்தையே அவர் கனவு கண்டார் என்று வாதிடுகிறார்கள். அவரை பிர்லா முதலிய முதலாளிகள் ஆதரித்ததால் அவர் தொழிலாளிகளுக்கு எதிராக முதலாளிகளோடு கூட்டுசேர்ந்து கொண்ட சதிகாரராக சித்தரிக்கப்படுகிறார்.
இந்த ஒவ்வொரு குற்றச்சாட்டையும் தீவிரமாக மற்றும் கவனமாக வாசித்து பார்த்தால் காந்தியின் மனிதம் மற்றும் ஆளுமையே அவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் ஒளிர்ந்து இருக்கிறது என்பது புரியும். அவருக்கு தனிப்பட்ட எதிரிகள் மற்றும் போராட்டங்கள் இருந்தனவா ? ஆம் என்று காந்தியே ஒத்துக்கொள்கிறார். அவரின் மக்கள் பற்றிய பார்வை அவரின் வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டப்பயணங்களில் விரிவடைந்து கொண்டே போனது. இந்த தன்னுடைய பார்வையை நேர்மையாக ஒப்புக்கொள்கிற,திறந்த மனதோடு முன்னகர்கிற பார்வை தான் காந்தியிடம் நேசிக்கக்கூடிய ஒரு பண்பாக இருக்கிறது. அவர் தவறானவராக சில சமயங்களில் இருந்தாரா ? ஆமாம் ! ஆனால்,முழுமையாக மற்றும் முன்முடிவு இல்லாமல் அவரின் வாழ்க்கையை அணுகுகிறவர்கள் அவரின் குறைகளை அவரின் நற்பண்புகள் மற்றும் கருணை வென்றுவிடுகிறது என்பதை உணர்வார்கள்
அவர் வியாபார சமூகங்களில் இருந்து உதவிகள் பெற்றார். ஆனால்,அவர் அறங்காவலர் முறை என்று அதை தெளிவாக விவரித்தார். இதுவே நிலையான மற்றும் யதார்த்தமான முதலாளித்துவத்துக்கு அடிப்படை-இந்த மாதிரியில் தன்னுடைய தொழிலாளிகளுடன் நல்ல உறவை பேணாத அமைப்புகள் தேவையில்லை என்று அவர் வலியுறுத்தினார். சிந்தனையாளர் ரஜினி பக்ஷி எழுதியது போல ,”காந்தி மனிதர்களின் வாழ்க்கையை மாற்ற முன்னெடுக்கப்படும் எந்த முயற்சியும் அறக்கட்டமைப்பு மற்றும் உயர்ந்த நோக்கங்களை பொருள் சேர்ப்பு மற்றும் இன்பத்துக்கு மேலானதாக வைக்காமல் போனால் அவை தோல்வியே அடையும் !” என்று தீவிரமாக வாதாடினார்.
அவர் ஒருமுறை இரண்டு இளம்பெண்களுடன் நிர்வாணமாக உறங்கி அறசுத்தம் கொண்ட பிரம்மச்சரியத்துக்கு தான் கொண்டிருந்த அர்ப்பணிப்பை சோதித்தார் என்பதும் உண்மை. ஆனால்,காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும்,முக்கியமான வரலாற்று ஆசிரியருமான ராமச்சந்திர குஹா வாதிடுவது போல ,”இந்த ஒரு தருணத்தில் காந்தி பெண்களை துஷ்பிரயோகம் செய்தார் என்பதைக் கொண்டு அவரை விமர்சிப்பவர்கள் அவர் வாழ்நாள் முழுக்க பெண்களின் விடுதலைக்காக போராடியதை இணைத்தே பேசவேண்டும். காந்தி வாழ்நாள் முழுக்க சதி மற்றும் குழந்தைத்திருமணத்துக்கு எதிராக இயங்கினார். அவர் பெண்களை பர்தாவை எறிந்துவிட்டு கல்வியை பற்றிக்கொள்ள சொன்னார். அவர் தென் ஆப்ரிகா மற்றும் இந்தியாவில் அரசியல் இயக்கங்களில் பெண்கள் கலந்து கொள்வதை ஊக்கப்படுத்தினார் .
நாற்பதுகள் மற்றும் ஐம்பதுகளில் இங்கிலாந்து,அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி முதலிய தேசங்களில் பொதுவாழ்வில் இருந்த பெண்மணிகளின் எண்ணிக்கை வெகுகுறைவாக இருந்தது. இதற்கு நேரெதிராக,இந்தியாவிலோ அதன் விடுதலைக்கு பிந்தைய ஆரம்ப காலங்களில் பெண் கவர்னர்கள்,கேபினெட் அமைச்சர்கள்,பெண் துணை வேந்தர்கள் இருந்தார்கள். சரோஜின் நாயுடு,கமலாதேவி சட்டோபாத்யாயா,ராஜகுமாரி அம்ரீத் கவுர்,விஜயலட்சுமி பண்டிட்,அனுசுயா மற்றும் மிருதுளா சாராபாய்,அனீஸ் கித்வாய்,ஹன்சா மேத்தா முதலியோர் விடுதலைப்போர் மற்றும் தேசத்தின் கட்டமைப்பில் முக்கியமான பங்களிப்புகள் தந்தார்கள். இவர்களில் ஒருவர் கூட விதிவிலக்கில்லாமல் காந்தியால் உத்வேகம் பெற்றவர்களாக இருந்தார்கள். பெண்களை பொதுவாழ்வுக்கு கொண்டு வருவதற்கு எந்த இருபதாம் நூற்றாண்டு அரசியல்வாதிவை விடவும் காந்தி அதிகமாகன பங்களிப்பை தந்தார். மாவோ,லெனின், சர்ச்சில்,டி கால் ஆகியோரை விட அதிகமாக பெண்களை அவர் பொது வாழ்வுக்கு அழைத்து வந்தார்.
காந்தியுடன் இடதுசாரிகளில் இருக்கும் சிக்கல்கள் அவரின் அரசியலில் இருந்து வரவில்லை ,மாறாக கலாசாரத்தில் இருந்தே அது எழுகிறது. காந்தி தீவிரமான இந்துவாக இருந்தவர் ;காங்கிரஸ் என்கிற வீழ்ந்து கொண்டிருந்த இயக்கத்துக்கு சிறந்த மற்றும் அடிப்படையான இந்து கலாசாரத்தில் இருந்து அவர் உயிரூட்டினார். அதே சமயம் அசைக்க முடியாத மற்றும் மாறாத அர்ப்பணிப்போடு அவர் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு பாடுபட்டார் ; ஒடுக்கப்பட்ட மக்களை சென்றடைய முயன்றார். அவரின் இவ்வாறான திசையில் பயணித்த செயல்பாடுகள் அவர் ஒரு ஹிந்து வெறியனால் கொல்லப்படுவதற்கு காரணமானது. இது இடதுசாரிகளுக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. இந்த மனிதரின் வாழ்க்கை இடதுசாரி சித்தாந்தமான மதம் மற்றும் கலசாரம் ‘மக்கள்திரளின் போதைப்பொருள்’ என்கிற சித்தாந்தத்தை பொய்யாக்குகிறது. ஆதிக்கவாதி என்று எளிதாக நிராகரிக்க முடியாத ஒரு ஆளுமை அவர்கள் முன் நிற்கிறார். அவர் தன்னுடைய வாழ்வை பன்முகத்தன்மை மற்றும் மதசார்பின்மைக்காக இழந்தார் என்பதால் அவரை ஒதுக்கிவிட முடியாது. அவரோ தன்னுடைய வாழ்க்கையின் மதசார்பின்மைக்கு இந்து மதம் மற்றும் அதன் கலாசாரத்தை காரணமாக குறிப்பிட்டார்.
கிறிஸ்துவ மிஷனரிக்கள் மற்றும் சுல்தான்கள் ஆகியோருக்கு இருந்த அதே சிக்கல் இடதுசாரிகளுக்கும் உள்ளது. இந்து கலாசாரம் என்பதை முழுமையாக உடைக்கவோ,வெல்லவோ,மாற்றவோ முடியவில்லை. (எண்ணற்றோர் இந்து மதத்தை விட்டு மதம் மாறினாலும் பெருவெற்றி என்கிற அளவுக்கான எண்ணிக்கையை அது தொடவில்லை என்பதை சொல்ல வேண்டும் ). இந்த மண்ணின் இந்த உள்ளார்ந்த கலாசாரமே இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவத்தை இந்திய சூழலில் தனித்துவமானதாக ஆக்குகிறது. இந்த கலாசாரத்தில் சிக்கல்கள் இல்லையா ? நிச்சயமாக இருக்கிறது. இதில் சீர்திருத்தங்கள் தேவையில்லையா ? அவசியம் தேவை. அதுவே காந்தியின் கனவும் கூட ! ஒட்டுமொத்த ஒழிப்பு அவரின் நோக்கமில்லை,சீர்திருத்தமே அவரின் இலக்கு. இடதுசாரிகள் இந்த கலாசார ஒழிப்பை விரும்புகிறார்கள். பல்வேறு சமூகங்களில் உலகம் முழுக்க அடுத்தடுத்து அவர்கள் அந்தந்த கலாசார வேர்களை அழித்தாலே இடதுசாரி சிந்தனைகள் வேர்விட முடியும் என்பது புலப்பட்டது.
குறிப்பாக மாவோ அவர்கள் சீனாவில் எண்ணற்றோரை கொன்று நிகழ்த்திய கலாசார புரட்சி சீனகலாசாரம் மற்றும் வரலாற்றில் இருந்த எல்லா நல்லதையும் அழித்து சாதித்தது. இந்த கலாசார மதிப்புகள்,ஆன்மீக நம்பிக்கைகள் ஆகியவற்றை அழிக்காமல் இடதுசாரி கொள்கைகள் உயிர்த்திருக்கவோ அல்லது வேர்விடக்கூட முடியாது. இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் வெல்வதற்கு கடவுளின் சொல்லின் மார்க்ஸ் அல்லது அவர்களின் நாயகர்களின் சொற்கள் பெறவேண்டும். அது எப்பொழுதும் நிகழவில்லை.
இந்த தீவிர இடதுசாரி புரட்சி இப்பொழுது அதிதீவிரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதன் நீட்சியாக இந்தியாவின் இதயத்தில் பல நூறு பேர் மாவோயிஸ்ட் கிளர்ச்சியில் இறந்துகொண்டிருக்கிறார்கள். இந்த கிளர்ச்சிக்கு தேவையில்லையா ?கண்டிப்பாக இருக்கிறது. பல வருடங்களாக சுரண்டிக்கொண்டிருக்கும் அரசாங்கம் மற்றும் கருணையற்ற பெருநிறுவனங்கள் இந்தியாவின் பழங்குடியின மக்களை வன்முறையை நோக்கி செலுத்தி இருக்கிறது. மிகக்குறைந்த பட்ச வளர்ச்சியை கூட காணமுடியாமல் அவர்கள் அரசுக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்தி போராடுகிறார்கள்
இந்த சிக்கல்களை தீர்க்க உடனடியாக இயங்கவேண்டும். அதை சாதிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால்,இந்த புரட்சியின் தலைவர்கள் -தீவிர இடதுசாரி கொரில்லாக்கள் இந்தியாவின் எதிரி நாடுகளுடன் தொடர்புகள் கொண்டும்,சர்வதேச ஆயுதக்குழுக்களுடன் இணைந்தும் இயங்குகிறார்கள். அவர்கள் தீர்வை விரும்பவில்லை. இந்தியாவை விட்டு பிரிவதையே விரும்புகிறார்கள். இந்திய கூட்டமைப்பை துண்டுகளாக உடைப்பதே தங்களின் கனவு என்று முழங்குகிறார்கள். இந்த தலைவர்களை சாதாரண பழங்குடியின மக்களிடம் இருந்து வேறுபடுத்தி பார்க்க வேண்டும். அந்த மக்கள் அரசு மற்றும் மாவோயிஸ்ட்கள் ஆகியோருக்கு இடையே ஆன போரில் அநியாயமாக இறந்து போகிறார்கள். அவர்கள் ஏதேனும் ஒரு பக்கத்தை எடுக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள் (சமயங்களில் துப்பாக்கி முனையில் அது நடக்கிறது )
இந்த கோட்பாட்டை வெற்றி பெற செய்ய பெரும்பாலான இந்தியர்களை இணைக்கும் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். எண்பது சதவிகித மக்கள் இந்துக்கள் என்பதால் அது இந்து மதம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதன் கலாசாரம் மற்றும் நாயகர்களை அழிப்பதற்காக இந்திய சமூகத்தின் ஒவ்வொரு பிளவையும் (ஹிந்து/முஸ்லீம் அல்லது ஆதிக்க/ஒடுக்கப்பட்ட ஜாதி சிக்கல்களை அவர்கள் (அதை நிவர்த்தி செய்யவோ.சிகிச்சை கொடுக்கவோ முயலாமல் )பயன்படுத்திக்கொள்கிறார்கள். வன்முறைக்காயங்களை உண்டாக்கி இந்த தேசத்தை துண்டாட முடியும் என்று எண்ணுகிறார்கள்.
இந்த தீவிர இடதுசாரிகள் தொழில்முனைவோர் பிரிவில் முன்னெடுக்கப்படும் அற்புதமான பணிகளையோ.தலித் இயக்கத்தின் செயல்பாடுகளையோ முன்னெடுப்பதே இல்லை. அவர்கள் சந்திர பான் பிரசாத் முதலிய அறிஞர்களின் வாதங்களைப்பற்றி மூச்சுவிடுவது கூட இல்லை. அவரின் உலக அளவில் புகழ்பெற்ற ஆய்வுகள் தொழில் அமைப்புகள் மற்றும் வேலை உருவாக்கங்களை தீர்வாக முன்வைக்கிறது. அதன் தீர்வுகளில் இப்படிப்பட்ட வாசகங்கள் உள்ளன : ” முதலாளித்துவத்தில் தான் ஒரு தலித் மெர்சிடஸ் வாங்க முடியும் ; பிராமணரை தன்னுடைய கார் ஓட்டுனராக ஆக்க முடியும். சோசியலிசத்தில் இல்லை.” மற்றும் “பீட்சா டெலிவரி ஜாதி பார்ப்பதில்லை !”
பெண்ணுரிமை சார்ந்து தீவிர இடதுசாரிகள் மகாபாரதம் மற்றும் ராமாயணத்தை வன்முறைக்காப்பியங்களாக வாசிப்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அவற்றில் இருக்கும் அறம் சார்ந்த உரையாடல்கள், நன்னெறி காட்டும் பாடங்கள், ஆன்மீக கருத்துக்கள் அவர்களுக்கு தெரிவதில்லை. அவற்றின் பகுதிகளை எடுத்துக்காட்டி அதை வைத்து அது ஆணாதிக்கமானது,பெண்களுக்கு எதிரானது,உயர்ஜாதி மனோபாவம் கொண்டது என்று முற்றாக நிராகரிக்கிறார்கள். கடவுள்கள் வில்லானாக மாறுகிறார்கள் ; கச்சிதமான,வளர்ந்த அறப்பாடங்கள் நவஉளவியல் மற்றும் ஒற்றைப்படையான பார்வையின் மூலம் அவற்றின் அர்த்தங்கள் மற்றும் பார்வைகள் முழுமையாக சிதைக்கப்படுகின்றன. இது அந்த காவியங்களை விமர்சிக்கவே கூடாது என்பதாக அர்த்தமாகாது. ஆனால்,பண்டைய இந்திய ஏடுகளில் வெறுமை மட்டுமே இருக்கிறது என்கிற இந்த இடதுசாரிகளின் வாதம் பெரிய பொய். பெண்களின் உரிமைகள் சார்ந்த உரையாடலில் எதிர்மறையாக மட்டுமே பேசும் இவர்கள்,ஆணாதிக்க சமூகத்துக்கு எதிராக சவால் விடக்கூடிய முன்னெடுப்புகள் இங்கே பல்வேறு வகைகளில் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது என்பதை இணைத்து பதிவு செய்ய மறந்துவிடுகிறார்கள்.
எல்லாமே கருப்பு என்கிற அவர்களின் அணுகுமுறையில் தான் சிக்கல் இருக்கிறது. அதில் நுட்பமில்லை. இந்த பரந்த தேசத்தின் சிக்கலான வேறுபாடுகளை பற்றிய புரிதல் இல்லை. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட,வேறெங்கும் இல்லாத வித்தியாசமான பயணத்தை பாராட்டுவதே இவர்களால் செய்யப்படுவது இல்லை. அது பெற்ற வெற்றிகளைப் பற்றி இவர்கள் மூச்சுவிடுவதே இல்லை.
இந்த எல்லாம் கருப்பு வாசித்தலில் காந்தியே அவர்களின் இறுதிப்பரிசு. அவர்கள் வெறுக்கும் எல்லாவற்றின் ஒட்டுமொத்த உருவமாக காந்தி இருக்கிறார். காந்தியை அவரைக்கொன்ற நாதுராம் கோட்சே வெறுத்ததை போலவே இவர்களும் வெறுக்கிறார்கள். அவன் இந்தியா இவர் இருந்தால் இணைந்திருக்காது என்று நம்பியதை போல காந்தியின் சிந்தனைகள் இருந்தால் தங்களின் புரட்சி பிழைக்க முடியாது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பே இறந்து போன காந்தி இப்பொழுது இன்னமும் குத்தப்பட்டு,பல முறை சுடப்பட்டு,தூக்கில் தொங்கவிடப்பட்டு, அவரின் பண்புகளை கேள்விக்குள்ளாக்கி இழுத்து செல்லப்பட வேண்டும்.
வாழ்வதால் காந்தியின் சிந்தனைகளே இந்தியா உடையாமல் காக்கிறது. ஆகவே தான் வேறொரு தூதரின் சீடர்கள் காந்தியை வெறுக்க நமக்கு சொல்லித்தருகிறார்கள்
(கட்டுரை ஆசிரியர் : இந்தோல் சென்குப்தா,Fortune India இதழின் ஆசிரியர்.ஓட்டளிப்பதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய,விவாதிக்க வேண்டிய நூறு விஷயங்கள் எனும் நூலின் ஆசிரியர் )
https://twitter.com/HindolSengupta
தமிழில் : பூ.கொ.சரவணன்