குருபீடம் – ஜெயகாந்தன்


மிகச் சிறந்த இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைப் பற்றி எழுத இருக்கிறேன். அதில் முதலாவதாக குருபீடம்.

உங்களைப் போன்ற வாசிப்பு ஆர்வம் மிகுந்த நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் இந்த நூலைப் பரிந்துரைத்தார். அவர் சொல்லி சில நாட்கள் போகவில்லை. ஒரு வாசகர் வட்ட சந்திப்புக்காக நூலகம் சென்றபோது அதே நூல் கண்ணில் பட்டது – குருபீடம்.

இதில் சில கதைகள் மதுரை செயல்திட்டத்தில் படிக்கக் கிடைக்கிறது.
பார்க்க – http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0204.html

குருபீடம்
ஆசிரியர்: ஜெயகாந்தன்
பிரிவு: புனைவு (சிறுகதைத் தொகுப்பு)
பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – பதினைந்தாம் பதிப்பு மே 2012
கன்னிமாரா:
http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=341212
http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=341232
http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=341573
NLB:
http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/FULL/EXPNOS/BIBENQ/2443374/44291995,1

நூல் அரங்கம்

சிறு, குறு மற்றும் நெடுங்கதைகளாக 9 படைப்புகள் இந்த நூலில் உள்ளன.

1. குருபீடம் (1970)

ஒரு வீணன். வெட்டியாகப் பொழுதைக் கழிக்கிறான். டீ வாங்கக்கூட வக்கில்லாத அவனுக்கு மடைப்பள்ளி சமையல்காரன் ஒருத்தன் சீடனாவதாக சொல்லிக்கொள்கிறான். பின்னொரு நாளில்தான் தெரிய வருகிறது, குரு என்று இருக்கும் இவன் சீடனாகவும், சீடனாக இருந்து இவனுக்கு அவன் கற்றுத்தருவதையும். புன்னகைக்க வைத்த ஞானோபதேசக் கதை!

நம்ப ஹீரோவின் அழுக்குத்தோற்றத்தையும், சோம்பலையும் கண்முன்னே கொண்டு வரும் காட்சி அபாரம்.

விரைவாக ஏறி வந்த வெயில் அவன்மீது மெதுவாக ஊர்ந்தது. அவன் தெருவுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு சுவர் ஓரமாகப் படுத்திருந்தான். சத்திரத்துச் சுவரின் நிழல் கொஞ்சங் கொஞ்சமாகச் சுருங்க ஆரம்பித்தது. முதலில் வெயிலின் விளிம்பு அவனது விலாவுக்கும் தரைக்கும் இடையே மெள்ள மெள்ளப் புகுவதை அவனது மதர்த்த தேகம் ரொம்பத் தாமதமாக உணர்ந்தது. வெயிலின் உறைப்பை உணரக்கூடிய உணர்ச்சிக் குறுகுறுப்பு மழுங்கிப் போனதால் ஒரு மலைப்பாம்பு மாதிரி அவன் அசிங்கமாக நெளிந்தான். அந்த வெப்பத்திலிருந்து – அந்த வெயிலின் விளிம்பிலிருந்து ஒரு நூல் இழை விலகுவதற்கு எவ்வளவு குறைவான, மெதுவான முயற்சி எடுத்துக் கொள்ளலாமோ, அவ்வளவே அவன் நகர்ந்து படுத்தான். சற்று நேரத்தில் மறுபடியும் வெயில் அவனைக் கடித்தது. அவனது அசமந்தம் எரிச்சலாகி அவன் தூக்கம் கலைந்தான். ஆனாலும் அவன் எழுந்திருக்கவில்லை. இன்னும் கொஞ்சம் நகர்ந்து சுவரோடு ஒட்டிக் கொண்டான்.

எதிரே இருந்த டீக்கடையிலிருந்து டீ அடிக்கிற சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தில் அவன் டீ குடிப்பது மாதிரி கற்பனை செய்து கொண்டான்.

மறுபடியும் வெயில் அவனை விடாமல் போய்க் கடித்தது. அதற்குமேல் நகர முடியாமல் சுவர் தடுத்தது. ஒரு பக்கம் சுவரும் ஒரு பக்கம் வெயிலும் நெருக்க அவன் எரிச்சலோடு எழுந்து உட்கார்ந்தான். அவனுக்குக் கண்கள் கூசின. ஒரு கண்ணைத் திறக்கவே முடியவில்லை. பீளை காய்ந்து இமைகள் ஒட்டிக் கொண்டிருந்தன.

குருபீடம் - ஜெயகாந்தன்

2. டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும் (1969)

பட்டிணத்தில் நல்ல வேலையிலிருந்த வேதகிரி முதலியாருக்கு வேலை போகிறது. துக்கம் விசாரிக்க வரும் நண்பர்கள் தொல்லையிலிருந்து தப்பிக்க தன் கிராமத்திற்கு வந்து தாயுடன் தங்குகிறார். பட்டிக்காடா பட்டணமா என்று சீர்தூக்கி நல்ல முடிவு எடுக்கிறார்.

செருப்பைக் கழற்றினாலே கால் கூசும் முதல் பகட்டு பட்டிணப் பழக்கத்தையும், கிராமத்து மக்களுக்கு முன் தன் சிரம் தாழ்ந்துவிடக்கூடா என்கிற இரண்டாவது பட்டிணப் பழக்கத்தையும் புன்னகையுடன் இங்கே காண்பீர்.

எதிரே ஆள் வராவிட்டாலும் இந்த நிழலில் போட்டிக்கு ஒரு நாய் வருகிறது. சாதாரண கிராமத்து நாட்டு நாய்தான். ஊர் வழக்கப்படி அதைச் சொன்னால் இப்போதெல்லாம் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள். ‘பறை, பள்ளூ’ என்கிற வார்த்தைகள் மனசால் கூடத் தீண்டப்படாததாக மாறிவிட்ட பிறகு நாயைக்கூட அப்படிப் பட்டம் கட்டி அழைக்க முடிவதில்லை. ஆனால் இது சரியான ஹரிஜனப் பகுதி நாய்தான். நிழலை மறித்துக்கொண்டு அது நிற்கிறது. அது நிச்சயம் வழிவிட்டு விலகாது. விலகப் போவதில்லை என்கிற தீர்மானம் அதன் திடீரென உயர்ந்த காதுகளிலும் ‘உம்’மென்று வயிற்றுக்குள் அடங்கி ஒலிக்கும் பொருமலிலும் தெரிகிறது. காரணம், நடுவில் இலை கிடப்பதுதான்.

அப்போதுதான் நினைத்தார் வேதகிரி முதலியார்: பொறப்படும் போதே அந்தக் கெழம் – அம்மாதான் – சொல்லிச்சு, ‘குடையை எடுத்துக்கிட்டுப் போடா, வெயில் கொளுத்துது’ன்னு…

பட்டணத்திலிருந்து கிராமத்துக்கு வந்திருக்கும் இந்த மூன்று மாத காலமாக வேதகிரி முதலியார் வெளியே போவதற்குப் புறப்படுகிற போதெல்லாம் அவரது தாயார் செல்லத்தம்மாள் குடை எடுத்துச் செல்லுமாறும் வெயிலின் கொடுமை குறித்தும் ஒரு பாட்டுப் பாடாமலிருப்பதே இல்லை. சில சமயங்களில் அவளே கொண்டு வந்து அவரிடம் கொடுப்பாள். இருப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்பு திருக்கோவிலூருக்கு திருவிழாவுக்குப் போனபோது ஆறு ரூபாய்க்குத் தான் அந்தக் குடையை வாங்கினதையும், அதற்குப் பிறகு ஐந்து வருஷத்துக்கு முன்னால் ஒரு கம்பியும் புதிசாக மேலே வெள்ளைத் துணியும் போட்டுத் தைப்பதற்குத் தான் மூணு ரூபாய் செலவழித்ததையும் குறைந்தது ஒரு பத்துத் தடவையாவது இதுவரை சொல்லி இருப்பாள்.

சரி, நாய்க்குப் பயந்து எத்தனை நாழி இப்படியே நிற்பது? ஒன்று இவர் வெயிலைப் பொருட்படுத்தாமல் ஒதுங்கிப் போக வேண்டும், அல்லது அதை விரட்டி விட்டு இவர் தன் வழியே தொடர்ந்து நடக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் இவர் நின்றிருந்தால் அதுவும் நின்றிருக்குமா என்ன? அதுவோ நாய், அதுவும் காய்ந்து வரண்ட சேரி நாய். எதிரே இலை, இவர் விரட்டமாட்டார், தயங்குகிறார், பயப்படுகிறார் – என்று தெரிந்ததும் அது இவரை விரட்டுகிற தோரணையில் கொஞ்சம் குரலெடுத்து லேசாகப் பற்களை வெளிக்காட்டி ‘உர்’ரென்கிறது.

வேதகிரி முதலியாருக்கு நிஜமாகவே உதறல். மிகுந்த மரியாதையோடு பத்து அடி நிழலிருந்து விலகி வீதியின் நடுவே வெயிலில் வந்து அரைவட்டமாக ஒதுங்கி நாயைக் கடந்து மீண்டும் நிழலில் ஏறி நடந்தார். தான் நாய்க்குப் பயந்து இப்படி வந்ததை யாரும் பார்த்திருப்பார்களோ என்று திரும்பிப் பார்த்தார். ம்ஹீம் யாருமில்லை. அந்த நாய்கூடப் பார்க்கவில்லை. பார்த்தால் என்ன? ‘பட்டணத்துக்காரன் நாயைக் கண்டு பயப்படறான்’ என்று பரிகாசம் பண்ணுவார்களே என்கிற பயம் வேதகிரி முதலியாருக்கு.

அதிலும் அந்த சுப்பராம ஐயர் இருக்கிறாரே, சமயத்தில் அவர் பண்ணுகிற பரிகாசத்தில் முதலியாருக்குக் கோபம் கூட வந்துவிடுகிறது. கோபத்தைக் காட்டிக் கொண்டால் இன்னும் மானக்கேடாகப் போகும். அவரோடு சேர்ந்து கொண்டு முதலியாரின் தாயாரும் சிரிக்கிறாள்.

3. நிக்கி (1970)

சேரியில் நாய் குட்டி போடுகிறது (சேரி, சென்னை என்றால் இவரது விளையாட்டைக் காண கண் கோடி வேண்டும்). தாய் நாய் காணாமல் போய்விட அனைத்து குட்டிகளையும் அவரவர் எடுத்துச் சென்றுவிடுகின்றனர். எஞ்சிய ஒரு பெட்டை நாய்தான் நிக்கி. பல கை மாறி திரும்ப தன் தாய் நிலைக்கு வந்து ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா’ என்று சொல்கிறது.

அந்தக் குடிசைக்குச் சொந்தக்காரி இந்த நாயைக் கண்டு, அதன் மீது பூசிக் கிடக்கும் சேறும் சகதியும் அதற்கே சொந்தம் போன்றும், அது அந்தத் திண்ணையின் மூலையை அசுத்தப்படுத்துகிறது என்றும் கோபித்து, விளக்குமாற்றால் குப்பையைக் கூட்ட வந்தவள் நாயையும் சேர்த்துக் கூட்டித் திண்ணையிலிருந்து தெருவுக்குத் தள்ளினாள். அது கத்தி அலறியவாறு தலைகீழாகப் புரண்டு திண்ணையிலிருந்து தெருவில் வீசி விழுந்தது.

நான் மேலே சிகப்புக் கலரில் கொடுத்துள்ளதைப் படித்திட்டீர்களா. ரைட். அடுத்து….

 

4. ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது (1969)

எளிமையான கரு கொண்ட மனதைத் தொட்ட கதை. திருடிவிட்டு ஒரு காலணிக்குள் சுவர் ஏறிக் குதிக்கும்போது மாட்டிக்கொள்கிறான் திருடன். ஜெயிலுக்குப் போறான். திரும்ப அதே காலணியில் குடி வரான். அவ்ளோதான். ஆனால் அதை படு ஜோராக முடித்துள்ளவிதத்தில்தான் இந்தக் கதை சிறப்புப் பெறுகிறது. இந்த நூலில் எனக்குப் பிடித்த கதை. தொடை நடுங்கி குஞ்சுமணி அய்யர் படு ஜோர்!

“நீதான் இங்கே திருட வந்திருக்கிற புது மாமாவா?… உன்னைப் பார்க்கக் கூடாதுன்னு அம்மா அறையிலே போட்டு மூடி வச்சிருந்தா… அம்மா கூடத்துலே படுத்துத் தூங்கிண்டிருக்கறச்சே நான் மெதுவா வந்துட்டேன். எனக்கு மிட்டாய் வாங்கித் தரயா? திருடிண்டு வந்துடு… அந்தப் பொட்டிக் கடையிலே நெறைய இருக்கு…”

அவன் சிரித்தான். அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தொட்டபொழுது அவனுக்கு அழுகை வந்தது. அவசர அவசரமாக உடம்பைத் துடைத்துக் கொண்டு இடுப்பில் கட்டிய துண்டோ டு பெட்டிக் கடைக்குப் புறப்பட்டான்.

அவன் போகும்போது அவனது இடுப்புத் துண்டைப் பிடித்து இழுத்து ரகசியமாகச் சொல்லிற்று, குழந்தை: “அம்மா பாத்தா அடிப்பா… சுருக்கப் போய் அவனுக்குத் தெரியாம மிட்டாயை எடுத்துண்டு ஓடி வந்துடு! நான் உங்காத்திலே ஒளிஞ்சிண்டிருக்கேன்…”

அவனும் ஒரு குழந்தை மாதிரியே தலையை ஆட்டிவிட்டுக் கடைக்கு ஓடினான்.

ஒரு நொடியிலே ஓடிப் போய், கை கொள்ளாமல் சாக்லெட்டை மடியில் கட்டிக் கொண்டு அவன் வந்தான்.

திருடன் என்கிற ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு துணை கிடைத்து விட்ட சந்தோஷம் போலும் அவனுக்கு! ‘இது உன் வீடு’ என்ற உரிமையை இந்தச் சமூகமே அந்தக் குழந்தை உருவில் வந்து தந்துவிட்ட ஒரு குதூகலம் அவனுக்கு.

அந்த மகிழ்ச்சியில் ஓடி வந்த அவன், வீட்டுக்குள் குழந்தையைக் காணாமல் ஒரு நிமிஷம் திகைத்தான். ‘யாராவது வந்து அடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டார்களோ?’ என்ற நினைப்பில் அவன் நெஞ்சு துணுக்குற்றது.

“பாப்பா… பாப்பா” என்று ஏக்கத்தோடு இரண்டு முறை அழைத்தான்.

5. தவறுகள், குற்றங்கள் அல்ல (1969)

அந்தக் காலத்து தேஜ்பால் கதை!!

“டியர் மிஸ் தெரஸா” என்ற அவரது குரல் கேட்டு

“எஸ் ஸார்” என்று நிமிர்ந்தாள் தெரஸா.

“புட் டவுன்!  திஸ் இஸ் எ லெட்டர்”

6. அந்த உயிலின் மரணம் (1969)

மரணத் தருவாயில் இருக்கும் வேணுகோபாலன். தனது இறப்பின் துயரத்தைப் பகிர தனது இரண்டாவது மனைவிக்கு உரிமை பெற்றுத்தர துடிக்கும் கதை. எதிர்பாராத முடிவு கொண்டது.

அவரது மரணத்துக்காக அவள் வருந்துவதை விட, அந்த மரணத்துக்கான தன் துயரத்தைக் கூட அவள் பகிரங்கமாகக் காட்டிக்கொள்ள முடியாததற்கே வருந்துகிறாள் என்பதையும் அவர் உணர்ந்தார்.

7. விதியும் விபத்தும் (1969)

மாங்கொட்டை ஞானோபதேசக் கதை. எனக்குப் பிடித்திருந்தது.

பிரக்ஞையற்றுக் கிடப்பது சாவு என்று நினைப்பது பேதமை. பிரக்ஞையுமில்லாமல் வளர்ச்சியுமில்லாமல் கிடப்பதே மரணம். உயிரின் ரகசியமே பிரக்ஞையற்றுக் கிடக்கும் ஊமை நிலையில்தான் அடங்கிக் கிடக்கிறது. அந்த யோகத்தின் உள்ளே நிகழும் இயக்கம் நுட்பமானது, ஆரவாரமில்லாதது.

8. புதுச் செருப்புக் கடிக்கும் (1971)

புது மனைவியுடன் மனஸ்தாபம். நள்ளிரவில் கோபித்துக்கொண்டு பழைய சினேகிதியைச் சந்திக்கப் போகிறான் ஹீரோ. சமூகத்தில் ஒதுக்கப்பட்டவராக இருக்கும் அந்த சிநேகிதி இறுதியில் அப்படி ஒரு பிரமாண்டம் எடுக்கிறார். வ்வ்வாவ்! எனக்குப் பிடித்த கதை.

யாருங்கோ ‘வய்ஃபா’ இருக்கிறதுக்கு டிரென்ட் ஹாண்ட் கேக்கறாங்கோ? இப்ப சொல்றீங்களே – என்னையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்னு. அப்ப ஏங்கோ அது தோணலே? நான் ஏற்கனவே ‘ட்ரெய்ன்ட்’ங்கற ‘டிஸ்குவாலிஃபிகேஷன்’ தாங்கோ அதுக்குக் காரணம்!

இதை படித்தவுடன் யாருக்கு பிபி ஏறாது?

9. எங்கோ, யாரோ, யாருக்காகவோ.. (1970)

பாண்டிச்சேரிக்குச் செல்லும் இரு நண்பர்கள் ‘ஒரு வீட்டை விட்டு இன்னொருவனுடன் ஓடி வந்து, அவனிடமும் ஏமாந்த ஒரு பெண்ணிடம்’ (எவ்ளோ பெரிய மாத்ரே!) பழகுகிறார்கள். எனக்குப் பிடித்த கதை.

“டேய் கிளாஸை நல்லா கழுவிக் கொண்டா” என்று யாரிடமோ கூறினான் கள்ளுக்கடைக்காரன்.

“வேணாம் ஐயா. இதில வாங்கிக்கிட்டுப் போகத்தான் வந்திருக்கோம். இந்த ‘ஜக்’லே எவ்வளவு புடிக்குமோ அவ்வளவு ஊத்துங்க”

“இருக்கட்டும் ஸார். வாங்கிக்கினு போங்க. நான் வாணாம்னா சொல்றேன். நான் பிரியமா என் கையாலே ரெண்டு கிளாஸ் தரேன். எப்பிடி இருக்குதுனு சாப்பிட்டுப் பார்த்தீங்கன்னா எனக்கு அதில ஒரு சந்தோசம் – டேய்ங்கொக்காளா.. சீக்கிரம் கொண்டாடா” என்று அந்தப் பையனைச் செல்லமாகத் திட்டி அதட்டிக் கூவினான்.

….

இதுதான் வாழ்க்கை! இவர்கள்தான் மனிதர்கள்! நாம் நகரத்தில் பார்க்கிற வாழ்க்கை இந்த நாட்டின் வாழ்க்கை அல்ல. அந்த மனிதர்களும் இந்த நாட்டின் பிரதிநிதிகள் அல்ல. நான் எனது நாட்டின் வாழ்க்கையை இங்கேதான் சுவாசிக்கிறேன். ஸ்டேட்ஸில் நீக்ரோக்கள் மாதிரி இங்கே இவர்கள் இருக்கிறார்கள்! இவர்கள்தான் இந்த தேசத்தின் ஆத்மா!

இதில் வரும் கள்ளுக்கடைக் காட்சி வெகு அருமை. அதிலிருந்து ஒரு பகுதியைத்தான் மேலே கொடுத்துள்ளேன். தான் கொடுத்த கள்ளுக்குக் காசு வாங்க மறுக்கும் கள்ளுக்கடை முதலாளி, வெளியே சிகரட் விற்கும் இளம் விதவை, உள்ளே சாக்னாக்கடை வைத்திருக்கும் அலி, கள்ளுப் பிச்சை வாங்கும் வாலிபன், அட அவ்வளவு ஏன், வெளியே தென்னை மரத்தடியில் கள்ளைக் குடித்துக்கொண்டே சல்யூட் வைக்கும் குடிமகன் வரை, அந்த இடம் அவ்ளோ நேட்டிவ்!

இரண்டு சிறுகதைத் தொகுப்பு என்று சொன்னேனே. அடுத்த தொகுப்பை அடுத்த பதிவில் காண்போம். நண்பர்களே.

ஜெய் ஹிந்த்

Advertisement

3 thoughts on “குருபீடம் – ஜெயகாந்தன்

  1. வணக்கம் கவிஞரே.

   ஆம். இந்த நூலின் ஒவ்வொரு கதையும் ரத்தினக் கற்கள் போன்று அழகானவை.
   வருகைக்கும் தங்கள் பதிலுரைக்கும் நன்றி.

   மக்களிடையே தமிழ் இலக்கியப் போட்டிகளை நடத்தும் உங்கள் முயற்சியைப் பற்றி அறிந்தேன். நல்ல முயற்சி. தொடருங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s