ஆண் பெண் இருவருடைய உளவியலிலும் இரு வகையான தீமைகள் அவர்களின் இயல்பிலேயே கலந்து உள்ளன. அவர்களின் ஆக்கத்திலேயே உறைபவை அவை. ஆணின் இயல்பான தீமையை கன்னியாகுமரி நாவலில் ஓரளவு சித்தரிக்க முயன்றிருக்கிறேன்.
-ஜெயமோகன் – (ஒரு வாசகர் கடிதத்தில்)
கிளுகிளுப்பாகத் தொடங்கியது கன்னியாகுமரி. மலையாளத் திரைப்படத்தில் ஒரு ஹிட்டு கொடுத்து அதன் பிறகு தோல்விப் படங்களைக் கொடுத்து, இன்னுமொரு வெற்றிப் படம் இல்லையென்றால் சினிமா கலை வாழ்க்கை அழிந்து போகும் என்கிற ஒரு திரைப்பட இயக்குநர் ரவிதான் இதன் கதாநாயகன். தீவிர தாழ்வுமனப்பான்மையும் கோழைத்தனமும் தந்த போலி முகங்களை அணிபவன். கல்லூரி கால காதலியைக் கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்று தனித்திருக்கையில், அவன் கண்ணெதிரிலேயே ரௌடிகளால் அவள் வன்புணர்வுக்கு ஆளாவதை, தடுக்க வழியின்றிப் பார்க்கும் நிலைக்கு ஆளாகிறான். தொடர்ந்த தோல்விகள், அதை மறைக்க குடி, அதில் வரும் வெறி, வற்றிப்போன கற்பனை, பாலியல் சுரண்டல்கள் என்று தரித்திரத்தின் மொத்த வடிவம் இந்த ஹீரோ.
கன்னியாகுமரி
ஆசிரியர் – ஜெயமோகன்
பதிப்பு – கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு பிப் 2006
பிரிவு – புனைவு – நாவல்
விக்கி – கன்னியாகுமரி (புதினம்)
கன்னிமாராவில் முன்பதிவு செய்ய – http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=349419
NLBயில் முன்பதிவு செய்ய – http://www.nlb.gov.sg/newarrivals/item_holding.aspx?bid=12772575
Related Link – கன்யாகுமரி- கடிதம்
முதல் பத்து அத்தியாயங்களில் வெளுத்து வாங்குகிறான். பிறரை நக்கலடிக்கிறான். பாதிக்கப்பட்டாலும் தன் வாழ்க்கையை சீர் செய்துகொண்டு வாழும் முன்னாள் காதலி விமலாவைப் பார்த்து பொறாமையில் புகைகிறான். அது பொறாமை என்று எளிதில் சொல்லிவிட இயலாது. அது ஒரு தீது நிறைந்த குரூரம். எப்படியாவது அவளை வெல்ல வேண்டும் என்கிறான். பிட்ச் பிட்ச் என்று சதா அவன் உதடு அவளை இகழ்ந்து, அவன் ஈகோவை சாந்தப்படுத்துகிறது. நடிக்க வரும் பிரவீணாவைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுகிறான். ஆனாலும் தனக்கென்று ஒரு வாழ்க்கை உண்டு, குறிக்கோள் உண்டு என்று அவனைவிட தான் உயர்ந்தவள் என்று அனைத்து வகையிலும் காட்டியே வருகிறாள்.
பிரவீணா நாவல் முழுக்க வருகிறாள். ஒரு குண்டூசியின் நுணி போல பளபளக்கிறாள். அவள் பேசும் சொற்கள் ஒவ்வொன்றிலும் அதே குண்டூசி நுனியின் கூர் ஜொலிக்கிறது. அவனை அறியாமல் அவன் மனதை முழுமையாக அறிகிறாள். வாத விவாதங்களில் அவனை வெல்ல வைப்பதாக விட்டுக்கொடுத்து ஒவ்வொரு கணத்திலும் அவனை அவள் வென்று வருகிறாள். வெறும் நடிகை. இவளை வெல்ல முடியவில்லையே என்று வெறுக்கிறான். வெறுப்பு தீவிர ஆணாதிக்க வெறியெழுந்து அவளையும் வெறுக்கிறான். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு முதல் 10 அத்தியாயங்களில் பதுங்கி பதுங்கி வரும் பிரவீணா கடைசி ஓவரில் பந்தைப் பறக்கவிடும் தோணி போல இறங்கி ஆடுகிறாள். பேயாட்டம்!
(பிரவீணா) “கன்னியைத் தேடிப்பிடிக்கப் போறீங்களா?”
(அவன்) “இல்லை. தேவியை…”
“எல்லாம் ஒரு பாவம்தானே?”
அவன் அவ்வரியால் தீவிரமாகப் பாதிப்படைந்து “உண்மையாகவா” என்றான்.
“ஆமா”
“உன்னால அந்த பாவத்தை அடைய முடியுமா? அதாவது நிஜம்மா…”
“நானே கன்னிதான்” என்றாள் அவள் திடமாக. அவன் கண்களைப் பார்த்தபடி
அவன் ஆழத்தில் ஒரு பெருஞ்சுழிப்பு நிகழ்ந்து ஓய்ந்தது.
“பதறிட்டீங்களா” என்றபடி அவள் சிரித்தாள்.
“நீ பிறவி நடிகை” என்படி அவனும் சிரித்தான்
இடையினிலே, சினிமா என்கிற பொய் உலகின் நிதர்சனங்களை கிண்டலாக சொல்லிப்போகிறார்.
கோமாளிகளாக மாறாது பொது இடத்தில் வர முடிந்த சினிமாக்காரர்கள் குறைவு. “இங்கயே இப்படின்னா தமிழ்லயும் தெலுங்கிலயும் என்னடா கதி? யோசிச்சா பரிதாபமா இருக்கு. ஊட்டில ஒரு தடவை ஒரு தமிழ் நடிகனைப் பார்த்தேன். அந்தியிருட்டிலகூட அந்த அப்பாவியால கூலிங்கிளாஸை கழட்ட முடியலை.” ஜார்ஜ் ஒரு முறை சொன்னார்.
இதுதான் என் குறிக்கோள் என்று கூறுகிறாள் பிரவீணா. பெண்ணுக்கு, அதுவும் ஒரு நடிகைக்கு என்ன குறிக்கோள் இருக்கமுடியும் என்று மனதிற்குள் மறுக்கிறான் நம்ப ஹீரோ. அதை உணரும் பிரவீணா ஊசியை ஏற்றுவது போல அவனிடம் பதிலுரைப்பது சூடு!
“பின்னாடி பெரிய ஆளா வருவான் (வேணு). ஒரு கொக்கி போட்டுக்க” என்றான் (ஹீரோ)
“பெரிய ஆளா வரட்டும், பார்க்கலாம்” என்று சிரித்தாள் (பிரவீணா)
“ஏன் நம்பிக்கையில்லையா?”
“அப்படி வரச் சாத்தியம் உள்ளவங்க நூறு பேராவது எனக்குத் தெரிய இருக்காங்க. அவ்வளவு கொக்கிக்கு நான் எங்க போறது?”
…
“இப்ப அவன் பொம்பிளைன்னு வச்சுக்குங்க. அவன் எங்க இருப்பான்?”
“எங்க”
“இந்தக் கட்டில்ல.”
அவள் மீது கொலைவெறி கொண்டான் அவன்.
“அவன் ஒரு தூண்டில் போட்ருக்கான். நான் ஒரு தூண்டில் போட்டிருக்கேன். தூண்டிலும் தூண்டிலும் மாட்டி ஒருத்தொருக்கொருத்தர் இழுத்துக்கிடறதுக்கா? படத்தை அவன் டைரக்ட் செய்றான்னா வேற கதை”
“நீ ஒரு தேவிடியா. பக்கா தேவிடியா.”
“தேவிடியாக்களில் பக்கா நாழின்னு தனித்தனி உண்டா என்ன?”
அவளை இழுத்து அறைந்து மிதித்து துவைத்து அவள் கதறியபடி தன் காலில் விழுந்து மன்றாடுகையில் எற்றி எறிவதாகக் கற்பனை செய்தான் அவன்.
ஒரு வாசகர் கேள்விக்குப் பதில் சொல்லும்போது ஆண் தீமை என்கிற ஒரு சொல்லைப் போடுகிறார் ஜெயமோகன். இந்த வகை ஆண்களை குரங்கிற்கு உருவகப் படுத்துகிறார். அடுத்தடுத்து வளர்ந்து வரும் பெண்களை, தன் திழ்வு மனப்பாண்மை தரும் குரூரத்துடன், வார்த்தையால் வதைப்பதும், அதன் மூலமாக அவர்களை வெல்ல நினைப்பதுமான படு கலீஜான ஹீரோ.
(விமலா) “அன்னைக்கு அதில இருந்தவங்களில் ஒருத்தன் எங்கிட்ட அவனோட பேரு ஊர் அட்ரஸ் எல்லாம் சொல்லி வசதியா அவனை வந்து பார்க்கச் சொன்னான்… அதை என்னால் புரிஞ்சுக்கவே முடியலை”
(பிரவீணா) “நீங்க அதை யாரிட்டயும் சொல்லலையா?”
….
அவன் கண்கள் மின்ன அவளைக் கூர்ந்து பார்த்து, “அவன் ஏன் அப்படிச் சொன்னான்னு தெரியலையா உனக்கு?” என்று கேட்டான்
“அது அங்கயே முடிஞ்ச போயிடறது சரியில்லைன்னு அவனுக்குப் பட்டிருக்கணும். இவள் சொன்னது மாதிரி குற்ற உணர்வு…”
“இல்லை. அதில்லை. அவனுக்கு உன் மனசு புரிஞ்சிட்டது. நீ யார்ட்டயும் சொல்ல மாட்டேன்னு அவனுக்கு நல்லாத் தெரியும். நீ தேடி வந்தாலும் வருவேன்னு அவன் எதிர்பார்த்தான்”
“ரவி” என்று பிரவீணா சீறினாள். அவளுக்கு தன் மனவேகத்தில் நிற்கவே முடியவில்லை.
“ஓ ரவி, ஸ்டில் யு ஆர் எ ஃபூல். அப்ப நீ புண்படுத்தத்தான் அப்டி சொல்றேன்னு நினைச்சேன். நிஜமாகவே நம்பித்தான் சொல்லியிருக்கே. வாட் எ பிட்டி” என்றாள் விமலா நெற்றி சுருங்க.
“நடிக்காதே. இதான் உண்மை”
“ரவி, உன்னால பெண்களை வெறும் உடம்பாகத்தான் பாக்க முடியுது. அவங்களுக்கு சுய கௌரவம் உண்டு. ஈகோ உண்டு. அது ஏன் உனக்குப் புரியலை? ஒருவேளை அந்த ஆளும் உன்னைப்போல நினைச்சிருக்கலாம்..”
“இல்லை மாடம். இப்பக்கூடவா உங்களுக்குத் தெரியலை? இவரும் அந்தாளும் எல்லாம் ஒண்ணு. அதான்”
“சீ நிறுத்துடி…”
“ஆமா. அதான் உண்மை. நீங்க ஒரு பிளடி கிரிமினல். ஆனா கிரைம் பன்றதுக்கு தைரியமில்லை”
விமலாவை வன்புணர்ந்தவனை, மெனக்கெட்டு கண்டுபிடித்து, தன் மூலம் விமலாவை வதைத்து, அதன்மூலம் வெல்லப் பார்க்கும் கீழ்மையானவர்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கவே செய்கின்றனர். என்னதான் பழகினாலும், பேசினாலும் வன்புணர்ந்தவனுக்கும், இந்த ஹீரோவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று மண்டையில் சரக்கில்லாத ஈகோ பைத்தியங்களுக்கு சாட்டை அடி கொடுக்கும் நூல் இது.
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், காதலை ஒப்புக்கொள்ளாத பெண்கள் மீது ஆசிட் ஊற்றும் பரமாத்மாக்களுக்கும் இந்த ரவிகளுக்கும் யாதொரு வித்தியாசமுமில்லை. தீமையின் பர்சண்டேஜ் மட்டும்தான் வேறுவேறு!
இன்னொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே!
ஜெய்ஹிந்த்
Posted from WordPress for Android
பேசாமல் உங்கள் பெயரை ‘ஜெய’ பாண்டியன் என்று மாற்றிக் கொண்டுவிடுங்கள். ஜெயமோகனும், ஜெயகாந்தனும் என்று மாற்றி மாற்றி படித்துக் கொண்டிருக்கிறீர்களே!
😊😊 படித்தது மட்டுமில்லாமல் இப்படி நம்ப படிப்பனுபவத்தையும் எழுதி அவர்களைப் படுத்தி வருகிறோமே. பாவம். தமிழில் எழுத்தாளர்களாக இருந்தால் நம்பளை மாதிரி எவ்வளவைச் சகிக்கவேண்டி இருக்கிறது, பாருங்கள்! வருகைக்கும் பதிலுரைக்கும் மிக்க நன்றி அம்மா.
I read tholiku or kaditham by jeyamohan. It is very touching.
ஆம். அது ஒரு நல்ல பதிவு. வருகைக்கும் பதிலுக்கும் மிக்க நன்றி.