[மீள்பதிவு] The Portrait of a Lady! – குஷ்வந்த் சிங்


ஒரு பெண்மணியின் பிரதிபிம்பம்!

குஷ்வந்த் சிங்

(மொழி பெயர்ப்பு ஆசிரியரின் விபரம் இப்பதிவின் இறுதியில் உள்ளது)

என்னுடைய பாட்டி எல்லோரையும் போல ஒரு வயதான பெண் தான். அவருடைய மூப்பும் முகச் சுருக்கங்களும் எனக்கு இருபது வருடங்களாகப் பரிச்சயம். சிறு வயதில் அவர் மிகவும் அழகாக இருந்ததாகவும் அவருக்கு ஒரு கம்பீரமான கணவர் உண்டு என்றும் பலர் கூறக்  கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி இருக்கமுடியுமா?  என்ற கேள்வி எனக்குள் எழும் போதெல்லாம் சிரிப்புத்தான் வரும். நம்ப முடியவில்லை.

அதோ, தாத்தாவின் ஒரு புகைப்படம் புத்தக அலமாரிக்கு மேலே தொங்குகிறது. பெரிதாக தலைப்பாகையும் தளர்ந்த சொக்காயும், மார்பை மறைக்கும் வெண்மையான நீண்ட  தாடியுமாக அவரைப் பார்க்கும் போது அவருக்கு நிச்சயம் நூறு வருடம் இருக்கும் என்று அடித்துச் சொல்லலாம்! அத்தனை மூப்பு!

அவருக்கு ஒரு மனைவியும் குழந்தைகளும் இருந்திருப்பார்களா?

Khushwant-Singh

பாட்டி இளமையாகவும் வசீகரமாகவும் இருந்ததாகச் சொல்வது உண்மைக்குப் புறம்பாகச் சொல்வது போலப் புலப்படுகிறது.  சிறு வயதில் பாண்டியும் பல்லாங்குழியும் விளையாடியதாகச் சொல்வது சிந்துபாத் கதை படிப்பது போல் வேடிக்கையாக இருக்கும்.

குட்டையான சற்றே கூன்விழுந்த வளைந்த உருவம். முகத்தின் எல்லா பக்கத்திலும் வளைந்து நெளிந்து ஓடும்  சுருக்கங்கள். இப்படியே இருபது வருடங்களாகப் பார்த்துப் பழகிய கண்களுக்கு அவருடைய இளமை உருவத்தை, ஊஹூம்… கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. ஒரு கையை இடுப்பில் தாங்கலாக வைத்துக் கொண்டு, மற்றொரு கையில் ஜப மாலையும், உதட்டில் முணுமுணுப்புடன் அவர் வீட்டை வலம் வருவது வழக்கம். எப்போதுமே அமைதியையும் தன்னிறைவையும் கொண்ட அவருடைய வெண்மையான முகத்தை பனி படர்ந்த குளிர் கால மலைக்கு ஒப்பிடலாம்.

நானும் பாட்டியும் நெருங்கிய நண்பர்களைப் போலப் பழகினோம். நகர வாழ்க்கைக்கு அடிமையான என்னுடைய அப்பாவும் அம்மாவும் என்னைப் பாட்டியிடம் கிராமத்தில் ஒப்படைத்து விட்டனர். அப்போது முதல் பாட்டி தான் எனக்கு எல்லாம். காலையில் வெகு சீக்கிரம் எழுப்பி விடுவது முதல் என்னை பள்ளிக்கு அனுப்பத் தயார் செய்வது வரை எல்லாவற்றையும் அவர் தான் செய்வார். என்னைக் குளிக்க வைத்து, ஆடை அணிவித்து, அலங்காரம் செய்யும் போதெல்லாம் அவர் உதடுகள் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டே இருக்கும். எனக்கும் ஆசை தான், அந்தப் பாடல்கள் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்ய வேண்டுமென்று.  அந்த இனிய குரலில் மயங்கிய பின் மற்ற எல்லாமே மறந்து போய்விடும். சிலேட்டு, பல்பம், சிவப்பு நிற பேனா, மை இத்தனையும் ஒன்றாக சேர்த்துக் கட்டி  மறக்காமல் பையில்  போட்டு விடுவார்.  காலையில் வெண்ணை சேர்த்த சப்பாத்தியை சர்க்கரையோடு ஊட்டி விடுவார்.   பள்ளிக்குச் செல்லும் வழியில் தெரு நாய்களுக்கு மறக்காமல் நேற்றைய இரவு மீதி சப்பாத்தியைப் போடுவார்..

எனது பள்ளியும், கோவிலும் அடுத்தடுத்து இருந்ததால் பாட்டி தினமும் என்னுடன் பள்ளிக்கு வருவார். நாங்கள் வராந்தாவில் பாடங்களைப் படிக்கும் போது பாட்டி ஆதிக்கிரந்தங்களை வாசித்துக் கொண்டிருப்பார்.   நாங்கள் இருவரும் வேலைகளை முடித்துவிட்டு வாசலுக்கு வரும் போது, எங்களுக்காகத் தெரு நாய்கள் காத்துக் கொண்டிருக்கும். சற்று முன் சாப்பிட்ட சப்பாத்திக்காக வாலை ஆட்டிக் கொண்டும் குரைத்துக் கொண்டும் வீடு வரை தொடர்ந்து வரும்.

ஆயிற்று. அப்பா சொந்தமாக டெல்லியில் ஒரு வீடு வாங்கி விட்டாராம். எங்கள் இருவருக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது உடனே கிளம்பி வரச் சொல்லி.

அதை என் வாழ்வில் ஒரு திருப்புமுனை என்று தான் சொல்ல வேண்டும். நானும் பாட்டியும் ஒரே அறையில் தான் தங்கினோம். பாட்டி வழக்கமாக என்னுடன் பள்ளிக்கு வரவில்லை. என்னை ஒரு ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பிவிட்டனர். அருகில் கோவில் கிடையாது. பள்ளி விட்டு வெளியே வரும் போது தெரு நாய்களும் கிடையாது என்னுடன் துணைக்கு வர. இப்பொதெல்லாம் பாட்டி  வெளி முற்றத்தில் காத்திருக்கும் சிட்டுக்குருவிகளுக்கு அரிசியையும் கோதுமையையும் அள்ளி வீசுவார்.  அது மட்டுமேஅவருடைய தினசரி வழக்கமாகிவிட்டது அந்தப் புது வீட்டில்.

வருடங்கள் ஓடிவிட்டன. இப்போதெல்லாம் பாட்டியைப் பார்ப்பதும் பேசுவதும் அரிதாகி விட்டது. டெல்லிக்கு வந்த சில நாட்களுக்கு அவர் தான் என்னை எழுப்பி பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த உடன் பாட்டியிடம் அன்றைய தினம் பள்ளியில் சொல்லிக் கொடுத்த ஆங்கில வார்த்தைகளையும்,  புவி ஈர்ப்பு சக்தியையும் ஆர்கெமெடிஸ் தத்துவத்தைப் பற்றியும் பிரதாபிப்பேன். அதைக் கேட்டவுடன் அவர் முகத்தை சோகம் கவ்வும்.

இது என்ன படிப்பு வேண்டிக் கிடக்கிறது. அங்கே கடவுளைப் பற்றியும் கிரந்தங்களயும் போதிக்க மாட்டார்களா? என்று முணுமுணுப்பார்.

“பாட்டி, இன்றைக்கு பள்ளியில் ‘மியுஸிக்’ கற்றுத் தந்தார்கள்” என்றேன்.

அதை கேட்ட பின் பாட்டி ரொம்பவுமே பாதிக்கப்பட்டதாகத் தெரிந்தது. அவரைப் பொறுத்த மட்டில் மியுஸிக் ஒரு விரசமான சமாசாரம். ‘ அது எதுக்கு உனக்கு. . பிச்சைக் காரனுக்கும், போக்கத்தவனுக்கும் தான் அது ஒத்து வரும்.’  என்பது அவருடைய ஆழமான கருத்து. நம்பிக்கையும் கூட. அதற்குப் பிறகு என்னிடம் அவர் அதிகம் பேசவேயில்லை.

ஆயிற்று. பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்குச் செல்லத் தயாராகிவிட்டேன். எனக்கென்று தனியாக ஒரு அறை ஒதுக்கப் பட்டது. அங்கே தான் எங்கள் நட்பில் சிறிது தேக்கம் ஏற்பட்டது.  பாட்டி அந்தப் பிரிவை வேதனையுடன் ஏற்றுக் கொண்டார்.

இப்போதெல்லாம் பாட்டி சதா சர்வ காலமும் ராட்டினத்தில் நூல் சுற்றுவதிலும் பிரார்த்தனையிலும் காலத்தைக் கழித்தார். அதை விட்டு நகருவதில்லை. மதிய நேரத்தில் முற்றத்தில் உட்கர்ந்து கொண்டு சிட்டுக் குருவிகளுக்கு கோதுமை மணிகளை வீசுவதில் சிறிது நேரத்தைக் கழித்தார். அந்த நேரத்தில் நூற்றுக் கணக்கான குருவிகள் பறந்து வந்து வராந்தாவை முற்றுகையிடும்.   சில பறவைகள் பாட்டியின் காலைக் கீறும். சில உரிமையுடன் அவர் தோளில் அமரும். தலையையும் விடுவதில்லை. அந்த நேரத்தில் பாட்டியின் முகத்தில் புன்னகை அரும்பும். ஒரு போதும் அவைகளை அவர் விரட்டியதில்லை.

அந்த முப்பது நிமிடத் துளிகள் தான்  அவருடைய அன்றைய சந்தோஷமான தருணங்கள்.

கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு இப்போது வெளி நாடு செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. மேல் படிப்பு படிக்க வேண்டிய கட்டாயம். ஐந்து வருடங்கள் பாட்டியையும் பெற்றோரையும் பிரிந்து இருக்க வேண்டும் நிச்சயம் பாட்டிக்கு நான் வெளி நாடு செல்வது பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். என்னை வழி அனுப்ப ரயில் நிலையம் வரை வந்தார். புறப்படும் முன்  நெற்றியில் ஒரு அழுத்தமான முத்தம் கொடுத்தது ஆழமான அதிர்வைத் தந்தது.

இது தான் அவருடன் ஏற்படும் கடைசி ஸ்பரிசமோ என்று நினைக்கத் தோன்றியது. சே என்ன இது அசட்டுத்தனமான சிந்தனை!

நல்ல வேளை !அது ஒரு அசட்டுத்தனமான சிந்தனையாகவே முடிந்து விட்டது.

ஆம்.. ஐந்து வருடங்கள் கழித்துத் திரும்பி வந்த போது ரயில்  நிலையத்தில் வரவேற்கக் காத்திருந்தார்.  என்னைக் கைகளினால் தழுவினார்.

காலங்கள் மாறினாலும் அவருடைய பழக்கங்கள் மாறவில்லை. மதிய நேரத்தை வழக்கம் போல் அவர் சிட்டுக்குருவிகளுடன் கொண்டாடிக் கொண்டிருந்தார்.  அவருடைய கைகளில் அமர்ந்து கோதுமையைக் கொத்துவதும், பாட்டியின் மேல் முழுவதுமாகப் படையெடுப்பதும்..அப்பப்பா..!

அதென்னவோ தெரியவில்லை. புதிய மாற்றம் தெரிந்தது அவரிடம் அன்று மாலையில். அவருடைய உதடுகள் பிரார்த்தனை செய்யவில்லை.  மாறாக, அக்கம் பக்கத்து பெண்மணிகளைச் சேர்த்துக் கொண்டு தாள வாத்தியத்துடன் பாட ஆரம்பித்துவிட்டார்.  அந்த கோஷம் நீண்ட நேரம் நீடித்தது. அவர் விடுவதாக இல்லை. எல்லோருமாக சேர்ந்து அவரை வேண்டிக் கொண்ட பின் அவர் கோஷத்தை நிறுத்தினார்.  அந்தப்  பிரார்த்தனை.. ஊஹூம்.. உதடுகள் அசையக் காணோம்.

அடுத்த நாள் காலையில் பாட்டி எழுந்திருக்கவில்லை. இலேசான ஜுரம். டாக்டர் வந்து பார்த்து விட்டுப் போனார். ‘பயப்படவேண்டாம். சீக்கிரம் குணமாகிவிடும்’ என்று கூறி விட்டுப் போனார். ஆனால் பாட்டி அப்படி நினைக்கவில்லை.

“என்னை முடிவு நெருங்கி விட்டது. என்னை பிரார்த்தனை செய்ய விடுங்கள். யாருடனும் பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்றார்.

நாங்கள் அனைவரும் ஒன்றாக எங்களது எதிர்ப்பைத் தெரிவித்தோம்.  அப்படி எதுவும் உங்களுக்கு நிகழாது என்றோம் ஆணித்தரமாக.

எங்களது எதிர்ப்பை பாட்டி அலட்சியம் செய்து விட்டு ஜப மாலையுடன் பிரார்த்தனையில் ஆழ்ந்து விட்டார். அவருக்கு என்ன ஆயிற்று என்று  நாங்கள் சந்தேகிக்கும் முன்பே அவருடைய உதடு அசைவது நின்றது. ஜப மாலை விரல்களிலிருந்து நழுவி தரையில் உருண்டது. அவருடைய மரணத்தை எங்களால் உணர முடிந்தது
.
முறைப்படி அவரை தரையில் கிடத்தி, சில மணி நேரங்கள் மெளன அஞ்சலி செலுத்தினோம். பின் அவருடைய இறுதி சடங்குகளுக்குத் தயாரானோம்.

சிறிது நேரம் வெளி முற்றத்தில் அவருடைய பிரேதத்தை கிடத்தினோம்.

திடீரென்று நூற்றுக் கணக்கான சிட்டுக் குருவிகள் பாட்டியின் பிரேதத்தின் முன் வந்து அமர்ந்தன. எந்த விதமான சப்தமோ, கோஷமோ இல்லை.

அந்தப் பறவைகளைக் கண்ட உடன் அம்மா  கோதுமையும், அரிசியும் கொண்டு வர ஓடினாள் சமையலறைக்கு. பாட்டி எப்படி அரிசியையும் கோதுமையையும் இறைப்பாரோ, அதே மாதிரி பறவைகளின் முன் இறைத்தாள். அவை அவற்றை லட்சியம் செய்யவில்லை.

பாட்டியின் பிரேதத்தை ஈமச் சடங்குக்கு எடுத்தவுடன் ‘விர்’ரென்று அனைத்தும் பறந்தன
.
மறு நாள் காலை, வீட்டைத் துப்புரவு செய்பவள் இறைந்து கிடந்த தானியங்களைத் திரட்டி குப்பையில் கொட்டினாள்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

The Portrait of a Lady!
தமிழாக்கம்.. வலைப்பதிவர் மற்றும் மொழிபெயர்ப்பு எழுத்தாளர் ஷைலஜா அவர்கள்

ஏப்ரல்  ‘இலக்கியவேல்’ இதழில்  பிரசுரமாகி  உள்ள  கட்டுரை இது. போர்ட்ரெயிட் என்பதை  தமிழில்  சித்திரப்பிரதிமை அல்லது ஓவியம் என்றால் சரியாக இருக்குமோ?  பிரதிபிம்பம்  என்று  தலைப்புவைத்து அனுப்பியபின்  அது சரியா தவறா  என்ற குழப்பம் இன்னமும்!
http://shylajan.blogspot.com/2014/04/the-portrait-of-lady.html

ஜெய் ஹிந்த்

4 thoughts on “[மீள்பதிவு] The Portrait of a Lady! – குஷ்வந்த் சிங்

  1. எனது வலைப்பதிவு தோழியின் மொழிபெயர்ப்பு இங்கே மீள்பதிவு செய்யப்பட்டதில் மிகுந்த பெருமையடைகிறேன், பாண்டியன். நல்லனவற்றைத் தேடி பிடித்து படித்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்கள் பெருந்தன்மைக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். தொடரட்டும் உங்கள் சேவை.

    1. வணக்கம் அம்மா. ஊர் பக்கம் போயிருந்ததால் உடனடியாக பதில் அளிக்க இயலவில்லை.

      ‘குஷ்வந்த் சிங் – வாழ்வெல்லாம் புன்னகை’க்காக இணையத்தில் மேய்ந்த பொழுது இந்தச் சிறுகதை கிடைத்தது.

      வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s