அஞ்சலை – கண்மணி குணசேகரன்


உங்களைப்போன்ற ஒரு நண்பர் பரிந்துரைத்த நூல் இது. விழுப்புரம் சுத்துபத்து கிராமத்தில் நடக்கும் வெகு இயல்பான, ஆனால் துணிச்சலான சமூக சுயவிமர்சன நாவல் இது. நண்பர் ஒருவர் இந்த நாவலைக் கையில் வைத்துத் திணித்துவிட்டுச் சென்றார். கதை நெடுக, வெறுப்படைந்திருக்கிறேன், கண் கலங்கியிருக்கிறேன். இப்போது திளைத்து இதை எழுதிக்கொண்டிருக்கிறேன

IMG_1526

அஞ்சலை
கண்மணி குணசேகரன்
தமிழினி

படாச்சிகள் கோலோச்சும் கார்குடல் ஊரில், தாழ்த்தப்பட்ட வகுப்பில் கணவனை இழந்த பாக்கியத்திற்கு மூன்று மகள்கள், ஒரு கடைசி பையன். மூன்றாவது பெண் அஞ்சலைதான் நாவல் முழுக்க வருகிறாள். மிகத்துணிச்சலான, வலுவுள்ள இளம்பெண். அவள் அறுவடை செய்வது ‘கதிர் வயலுக்குள் கீரி புகுந்தது மாதிரி’ விரைவாக இருக்கிறது. ஆண்களை விட உறுதியாக தாளடிப்பேன் என்று மிரட்டுகிறாள்.

வயதிற்கே உரிய வெகுளித்தனமாக படாச்சி மகனுடன் வாயாடப் போக, ஊர் அலர் தொடங்குகிறது. 320 பக்கங்களிலும் ஊர் ‘அலரி’க் கொண்டே இருக்கிறது. ஊருக்குப் பயந்து அஞ்சலைக்கு மாப்பிள்ளை பார்க்க சின்ன மருமகனான ஒன்று விட்ட தம்பியை அணுகுகிறாள். அவனோ அஞ்சலையைத் தனக்கு ரெண்டாம் தாரமாக கேட்கிறான். இரு மனைவியரையும் வேலைக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் உட்கார்ந்து சாப்பிட நினைக்கிறான்.

அது நடக்காமல் போகவே, ஆள் மாராட்டம் செய்யும் மணக்கொல்லை கும்பலுடன் சேர்ந்து, அண்ணனை மாப்பிள்ளை எனக் காட்டி நோஞ்சான் தம்பிக்குக் கட்டி வைத்து வஞ்சம் தீர்த்துக் கொள்கிறான் இந்த சொந்தக்காரன்.

“இந்த புள்ள யாரு”
“மண்ணாங்கட்டி பொண்டாட்டி”
“யாரு நசுக்கான் மறுமொவளா…”
“ஆமா, அவன் மொவன் சின்னவன் இல்ல கருப்பா ஒல்லியா இருக்க மாட்டான். அவன் பொண்டாட்டி…”
“ஆங், கணேசனா, அவனுக்கா இந்த மாதிரி புள்ள! குடுத்து வைச்சவந்தான் அவன். சும்மாவா கத இருக்கு. வத்தலுக்கு ஒரு தொத்தலு. தொத்தலுக்கு ஒரு வத்தலுன்னு.”
“கணேசன்தான் பேரு. மண்ணாங்கட்டிதான் கூப்புடுறது!”
“இருந்தாலும், பொண்ணு எப்படி அவனக் கட்டிக்கச் சம்மதப்பட்டது. அவனுக்கும் இதுக்கும் ஏணி வைச்சாலும் எட்டாது போல்ருக்கு, ஏதாவது ஒண்ணுக்கும் வக்கி இல்லாதவன் ஊட்டுப் புள்ளயா, இவனுக்குப் போயி இதக் குடுத்துருக்கானுவோ.”

ப 68

போன இடத்தில் உண்மை தெரிந்து வெகுண்டு போகிறாள் அஞ்சலை. அம்மா வீட்டுக்கு வரும்போது இருமுறை தூக்கு மாட்டிக் கொள்கிற அஞ்சலையை பாக்கியம் பாப்பாற்றுகிறாள். ஒருவனை மனதில் நினைத்து விட்டு இன்னொருவனிடம் எப்படிப் படுப்பது என்று மருகுகிறாள். அவன் அண்ணன்காரனே கணவனாய் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று அப்பவும், நிறைவேறாத காமத்தினால் புகைகிறாள். ஆனால் அவன் உதாசீனத்தைக் கண்டு சீறுகிறாள்.

“எனக்கு என்னாடா வழி சொல்ற? நீதான் மாப்ளன்னு வந்தன். ஒன்னப் பாத்துதான் சம்மதிச்சன். நீனும் ஏமாத்திட்ட. ஒப்பன் ஊரு சனம, எல்லாம் ஏமாத்திட்டுது. எனக்கு அவங்கூட படுக்க சம்மதமில்ல. எனக்கு என்டா வழி சொல்ற?””ஒம்பொண்டாட்டி வுடுவாளா, கொழந்தனாருக்குப் பொண்ணு பாக்க அனுப்புனாள, இப்ப வுடுவாளா ஏங்கிட்ட ஒன்ன? சொல்றா? வுடுவாளா? எப்பிடிடா நாங்க இருந்தம், என்ன இந்த மாதிரி நாசம் பண்ணிட்டிங்கள.”

ப87

எங்கே தன் கணவனைக் கவர்ந்து விடுவாளோ என்று ஒப்பிடியாக்காரி சாடை பேசுகிறாள், சண்டை வளர்க்கிறாள். அவளுக்கு ஒரே ஆதரவு வள்ளி. அவளும் திருமணமாகி செல்லும் போது உடைந்து போகிறாள். ஒரு சமயத்தில் அடிதடித் தகறாரு ஆகிடவே, மனம் வெறுத்து தாய்வீடு கிளம்பிவிடுகிறாள். இத்தணைக்கும் கணவன் மண்ணாங்கட்டி அவள் மேல் மரியாதை, பாசம் வைத்திருக்கிறான். ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாதது காலம் செய்த வினை.

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் கார்குடல் பேருந்துக்காக நிற்கையில், மூத்த அக்காளைச் சந்திக்கிறாள். சொந்த ஊர் செல்ல இருந்தவளை மறித்து தன் வீடு இருக்கும் தொளாருக்கு அழைத்துச் செல்கிறாள். தன் கொழுந்தனுக்கே இரண்டாவது திருமணம் செய்தும் வைத்து விடுகிறாள். அக்காளும் தங்கையும் ஒன்னா இருந்த எந்த குடும்பம் உருப்பிட்டிருக்கு? தன் கணவனுக்கும் அக்காளுக்கும் உள்ள தொடுப்பை அறிந்து கொள்ளும் போது திரும்ப அடுத்த புயல் ஆரம்பிக்கிறது. யாருமே துணைக்கு அல்லாமல் வெண்ணிலாவைப் பெற்றெடுக்கிறாள்.

“.. ஒடம்பு சரியில்லாத மாதிரி தெரியுது. சரியா சாப்புட முடியல. கெவுருமெண்டு ஆஸ்பத்திரி பக்கம்னாச்சும் காட்டிக்கிட்டு வரலாம்னு பாக்கறன். கையில ஒண்ணும் தோது இல்ல. அவனும் ஒண்ணும் கண்டுக்கமாட்டங்கிறான். அவ அதுக்கு மேல. அதனால ஒரு நாலு நாளைக்கி வேல வித்துக்குனாச்சும் போயி, ஒடம்ப முறிச்சிச் சம்பாரிச்சிதான் ஒடம்பக் காட்டனும்னு இருந்தா யாரால மாத்த முடியும்?”

என்று பக்கத்து வீட்டு ஆயாவிடம் அஞ்சலை புலம்புகிறதைப் படித்த போது மனம் கணத்துவிட்டது. ஒரு கணம் நூலை மூடிவிட்டு ஆசுவாசப் படுத்திக்கொண்டுதான் மேற்கொண்டு படித்தேன்.

பிறந்த வீடான கார்குடலுக்குப் போகிறாள். பாக்கியத்திடம் வெண்ணிலாவை விட்டுவிட்டு வேலைக்குப் போகிறாள் அஞ்சலை. பொறாமை, அலர், எல்லாவற்றையும் விட அவளை வளைத்துப் போட சுற்றும் சொந்த ஊர் ஆண்கள், திரும்பவும் நடு அக்கா கணவன்….. கொடுமை தாங்காமல் வள்ளியைப் பார்த்து புலம்பியாவது மனதை ஆற்றலாம் என்று வருகிறாள்.

மண்ணாங்கட்டி கணேசனின் நல்ல மனதை எடுத்துச்சொல்கிறாள். கார்குடல் பிரச்சினையிலிருந்து தப்பித்தால் போதுமென்று திரும்ப மணக்கொள்ளை போக முடிவெடுக்கிறாள். பார்க்க வேண்டியவரைப் பார்த்து, பஞ்சாயம் வைத்து, கணேசனை சாந்தப்படுத்தி, அவளை மறுபடி தாம்பத்தியத்துக்குள் நுழைத்துவிடுகிறாள் வள்ளி.

“இங்க பாரு அண்ணி, நாஞ்சொல்லி ஒன்ன வுட்டுடுவன். அதலாம் ஒண்ணும் தடங்கலும் இல்ல. ஆனா நம்ப சனம் சும்மா இருக்காது. ஒரு எடம் வேணாமுன்னு வேற எடத்துக்குப் போயி கையில ஒரு புள்ளையும் ஆயி, திரும்ப பழைய எடத்துக்கு வந்து வாழ்க்க நடத்தறது அம்மாஞ் சாமானியம் இல்ல. சப்பாத்தி முள்ளுமேல மொடங்கறமாதிரிதான். பாக்கறவங்களுக்கு கேவலமாதான் தெரியும். நொடிக்கு நூத்தி எட்டு சாட வைச்சிதான் பேசும். நாமதான் மணந்தாங்கிப் போவுணும். காலம்பூரா ஓட்டப்பந்தியத்துல ஓடறமாதிரி ஓடிக்கிட்டே இருக்க முடியாது. பாத்து நடந்துக்க. நம்பள பேசலன்னு போனாதான் பொழப்பு போவும் ஆமா.”

ப197

அங்கு ரெண்டு பெண் குழந்தைகள் பிறக்கின்றன, முதல் குழந்தை அம்மாவிடம். எதற்கெடுத்தாலும், நாடுமாறி, தேவ்டியா, சம்பாதிச்சவ என்று சாடைகள். வெறுத்துப் போகிறாள். பிள்ளைகள் வளர்ந்த பின், நிலாவைத் தன் தம்பிக்குத் திருமணம் செய்வான் என நம்புகிறாள். மூத்த அக்காள் தன் மகளை அவனுடன் பழகவிட்டு அதையும் கெடுக்கிறாள். நெடு காலமாக பேசாதிருந்த தம்பி காலில் விழுந்து மகளுக்காக மன்றாடுகிறாள்.

“எஞ்சாமி, ஒன்னத் தவுர வேற எங்க குடுத்தாலும் என்ன காரணங் காட்டி ஏம் புள்ளய கொத்தி புடுங்குவானுவோ சாமி. காலம் பூரா ஒங்கட்டு தெருவுல சாணியள்ளிகிட்டு கெடக்கறன். ஏம் புள்ளய வுட்டுடாதப்பா…”

“ஏங்கிட்ட கட்டியிருக்கற துணிதாம்பா இருக்கு. இல்லன்னா நீ கேக்கறத வாங்கி குடுப்பஞ் சாமீ. காசு பணத்தப் பாக்காதப்பா. ஏம்புள்ள நின்னு தெவைச்சிடும் சாமீ…”

நிலாவைப் படிக்க வைத்ததெல்லாம் என்ன கணக்கு என்று செலவுக் கணக்கு வைக்கிறான் உடன் பிறந்த தம்பி.

வெளிநாட்டு பவுசுக்கும், நகை, மோட்டார் சைக்கிளுக்கும் மயங்கியவன், மூத்த அக்காளின் மகளை மணந்து கொள்கிறான். வழி தெரியாமல் திகைத்து நிற்கும் நிலா, கார்குடல் விட்டு மணக்கொல்லை வந்து தாயிடம் சேர்கிறாள். மகள் வாழ்க்கையும் இப்படி ஆகிவிட்டதே என்கிற விரக்தியில் அஞ்சலை நொந்து போகிறாள். விடாமல் துரத்தும் ஊழ் அவளை சொத்துப் பிரச்சினையில் இழுத்து விடுகிறது. கர்வம் கட்டி வந்த ஒப்பிடியாவின் குடும்பம் அஞ்சலையைத் தெருவிலேயே அடித்துத் துவைத்து விடுகிறது. எல்லாவற்றையும் விட, கணேசணே, அவளைத் தேவ்டியா, நாடுமாறி என்று ஏசப்போக, கடைசி பலத்தையும் இழந்து ஓடிப்போய் தூக்கு மாட்டிக் கொள்கிறாள். அப்போது நிலா துறத்தி வந்து அவளைக் காப்பாற்றி, அவளை முதுகிலேயே சாத்தும் இடம் மறக்க முடியாதது நண்பர்களே.

அநாதையாய் நிற்கிற வெறி, கோபம், ஆத்திரம், வெறி கொண்ட மாதிரி ஓடி எட்டி அஞ்சலை மயிரைப் பிடித்து, வளைத்துப் போட்டு அடிக்கிறாள். வஞ்சம் தீரக் குத்துகிறாள். உதைக்கிறாள்.

“நாடுமாறி, நீ ஏண்டி சாவப் போற? நீ பண்ணனதுக்கு நாந்தாண்டி சாவனும்”

“..அவனுவ பண்ணானுவளோ, நீனா போனியோ, போனதுன்னு ஆயிப்போச்சி. ஒரு தடவ சொன்னாலும் அதான். ஓராயிரம் தடவ சொன்னாலும் அதான். செத்துட்டா மட்டும் அழிஞ்சிடவா போகுது. பொறந்தது பொறந்தாச்சி. என்னா ஆயிடுங்கிற? இதுவுமில்லாம இப்ப, நானும் வேற கூட வந்திருக்கன். இன்னம் பத்துப் பொழுது, இந்த சனங்ககிட்ட இருந்து, என்னா ஏதுன்னு வாழ்ந்து பாக்காம, செத்துப் போறதுதானா பெரிசு? ஏந்திரு… சாவப் போறாளாம் சாவ…”

ப319

முழுக்க நம்பிக்கை இழந்த அஞ்சலை, தன்னைத் தாங்கிப் பிடித்திருக்கும் நிலாவின் கைத்தெம்பில் எழும் இடத்தில் நாவல் முடிகிறது.

IMG_1527

நண்பர்களே, தேவையற்ற விவரணைகள், ஜோடனைகள் ஏதுமே இல்லாத கதையின் ஓட்டம் இந்த நாவலை பிசிறு தட்டாத இயல்பான இலக்கியமாக இதை ஆக்கிவிடுகிறது. விழுப்புரம் மாவட்ட பேச்சு வழக்கிலேயே சமயத்தில் கதை போகிறது.

‘ஒரு ஆம்பளைய ஏறெடுத்துப் பார்த்தாலே எல்லாம் கெட்டுப் போவுதுன்னா, இங்க எவ ஆம்பளைய பாக்காம இருக்கறா? அப்பிடிப் பாத்தா இங்க இருக்கற பொம்பளைவோ எல்லாம அவுசாரிவுளா, எவளுமே பத்தினியில்லையா? இதெல்லாம் வெறும் கத. இப்டிலாம் பார்த்தா எப்பிடி வாழ முடியும்?’

கடைசியில் சொல்லிக்கொள்வாள். நாம பத்தினியோ, தேவுடியாளோ, ஆனா நாம வவுறு எறிஞ்சி உடற வாசாங்கு, சாபம் எப்பயா இருந்தாலும் கேக்காம வுடாது.’

ப149

 • தனக்கு இரண்டாம் தாரமாய் தரவில்லை என்று அக்கா கணவன், அஞ்சலையை ஏமாற்றி கல்யாணம் செய்து வைக்கிறான்.
 • மணியாருக்கு தேள் கொட்டுகிறது. தாலியைக் கழற்றி, கொட்டிய இடத்தில் வைக்கிறாள். ஊரோ இவளை சந்தேகம் பிடித்துப் பார்க்கிறது. மணியாருவோ சந்தனி சாக்கில் இவள் மாரைத் தொட்டு சில்மிசம் செய்ய நினைக்கிறான்.

இதெல்லாம் சாரமான பெண்ணீய செருப்படிகள். வாங்கிக்கொள்வோம்.

 • குடிச்ச தண்ணிய தீட்டு கழிச்சுப் எடுத்துக் கொண்டு போகிறார்கள். ஒரே பைப்படியில் மட்டும் எதையும் பார்க்காமல் நெரித்துத் தள்ளும் படாச்சி வீட்டுப் பெண்களைப் பற்றி பேசுகிறார்கள் காலணி பெண்கள்

சாதி வெறிக்குச் செருப்படிகள்.

 • கருவுற்று இருக்கும் பொழுது அவ்வப்போது ஐம்பது ரூபாயை விட்டெரியும் மூத்த அக்கா கணவன்,
 • தன் கணவன் தங்கை வாழ்வை நாசப் படுத்திட்டானே என்று பரிவு காட்டும் இரண்டாவது அக்கா,
 • பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து திரும்ப குடும்பத்திற்குள் தள்ளும் வள்ளி –

ஒட்டு மொத்த நாவலில் அஞ்சலைக்கு மட்டுமல்ல, நமக்கும் அவர்கள் மட்டுமே ஆறுதல்.

இதைப் படித்துக் கொண்டிருக்கையிலேயே, ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு நினைவிற்கு வந்தாள். அது dramaticஆன உச்சம் கொண்டது. அஞ்சலை முழுக்க முழுக்க இயல்பான முறையில் நம்மைக் கவர்கிறாள்.

இன்னொரு நல்ல நூல் அறிமுகத்தில் சந்திப்போம் நண்பர்களே!

வெல்க பாரதம்.

Advertisement

5 thoughts on “அஞ்சலை – கண்மணி குணசேகரன்

  1. தங்களின் தொடர்ச்சியான உந்துதலுக்கு நன்றி பாவாணன் ஐயா.

 1. இங்க நீங்க எழுதினத படிக்கறப்பவே தாங்க முடியலியே! எப்படி முழு கதையைப் படிக்கிறது?
  இந்த புஸ்தகம் வேண்டாம் சாமீ! வேற சொல்லுங்க, ப்ளீஸ்!

  1. 🙂
   வாருங்கள் அம்மா. உண்மைதான், ஒரு வாரமாகியும் இன்னமும் விடுபட இயலவில்லை. ஒரு இனிய வாசிப்பனுபவத்தைத் தந்தது. தவிர, கிராமத்தில் வாழ்ந்து வந்தது போன்ற உணர்வு. இந்தக் காலத்திலும் நான்கு பதிப்புகளைக் கண்டுள்ளது இந்த நாவல்.

   /////என்னுடைய ‘கண்ணீரைப் பின் தொடர்தல் ‘ என்னும் நூலில் இந்திய நாவல்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பெண்களின் கடலளவு துயரையும் மலையளவு தியாகத்தையும் வெளிப்படுத்துபவையாக அவை இருப்பதை கவனித்து எழுதியிருந்தேன். இந்தியப் பெருங்காவியங்களிலிருந்தே இம்மரபு இங்கே இருக்கிறது. சீதை, கண்ணகி என… நாட்டார் காவியங்களில்கூட காவியநாயகியர் பேரூவத்துடன் எழுந்துவருகிறார்கள், உதாரணமாக என் மனதில் வருவது மலையாளக் காவியமான’ மதிலேரிக்கன்னி ‘பின்னர், இந்தியா நவீன இலக்கியம் உருவாகி வந்தபோது மீண்டும் மீண்டும் பெண்களின் கதைகளே எழுதப்பட்டன. முதல் நாவலெனக் கருதப்படும் பங்கிம் சந்திராரின் ‘துர்கேச நந்தினி’ முதல் எத்தனை கதாபாத்திரங்கள். பலவிதமான குணநலன்கள் கொண்டவர்களாயினும் தாய்மையே தனியடையாளமாகக் கொண்டவர்கள். வாழ்க்கையின் நெருப்பில் வெந்து தணிந்தவர்கள், நீறிலிருந்து முளைத்து எழுந்தவர்கள்.எண்பதுகளில் இந்திய அளவில் தலித் இலக்கியம் உருவானபோது மீண்டும் அதே நாயகியர் முற்றிலும் புதிய ஓர் அடித்தட்டு வாழ்க்கையிலிருந்து எழுந்துவருவதையே கண்டோம். களம் மாறியது கண்ணீர் மாறவில்லை. தமிழ் தலித் இலக்கியத்தில் ஆனந்தாயி [ஆனந்தாயி -சிவகாமி] மாடத்தி [ தூர்வை,- சொ.தர்மன்] ஆரோக்கியம் [கோவேறு கழுதைகள்- இமையம்] ஆகிய கதாபாத்திரங்கள் வாசக மனதில் அழுத்தமாகப் பதிந்தவை. இவ்வரிசையில் வைக்கத்தக்கதும், இவற்றில் முதன்மையானதும் என நான் எண்ணுவது கண்மணி குணசேகரன் முன்வைக்கும் அஞ்சலையின் முகம்தான்///// -ஜெமோ, 2007.

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s