கடந்த கோடைகாலப் பயணத்தின் இனிய நினைவுகளைச் சுமந்தவாறே இந்த வருட தாய்நாட்டுப் பயணம் தொடங்கியது. வெறுமனே பயணக்கதையைச் சொல்வதால் உங்களுக்கு என்ன ஆகப்போகிறது. எனவே நான் அறிந்த இன்னொரு செய்தியையும் உங்கள் காதில் போட்டு வைக்கிறேன்.
2014க்கான எனது பயணத்தைப் பதியவே இல்லை. சரி போகட்டும். 2013க்கான பயண ஒளிப்படங்கள் இங்கு உள்ளன
வருடா வருடம் இந்தப் பயணம்தான் மனதை கார்ப்பரேட் உலகில் இருந்து மனிதர் உலகிற்கு மாற்றிவிடுகிறது. சற்றேனும் தளிர் இலைகள் வந்தால்தானே மரம் வளர்கிறது என்று பொருள்!
இந்த முறை கவனித்த ஒரு செய்தி – சிங்கையிலிருந்து சென்னை செல்லும் அனைத்து இந்திய விமான கம்பெனிகளும் தத்தம் இரவுச் சேவையை நிறுத்திவிட்டன. பைத்தியக்காரத்தனமான முடிவுதான். நாமென்ன செய்ய முடியும் சொல்லுங்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று கூகிளையும் சில forumகளையும் அராய்ந்தால் சில செய்திகள் நம் கவனத்திற்கு வருகின்றன.
இரு நாடுகளுக்கிடையில் இருநாட்டு விமானங்களும் பறக்கும் போது, இந்த நாட்டு விமான நிறுவனங்களுக்கு பாதி பங்கும், நம் நாட்டு விமானங்களுக்குப் பாதிப் பங்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும். நண்பர்களே, உன்னிப்பாகக் கவனித்தால், அயல் நாட்டு நிறுவனங்கள் மட்டுமே தம் ஒப்பந்ததைப் பயன்படுத்தி இயன்றவரை இலாபம் ஈட்ட முயன்றிருக்கும். ஆனால் இந்திய விமான நிறுவனங்கள் தம் பங்கை என்றுமே சரிவர செய்ததில்லை. விபரத்திற்குக் கீழே பார்ப்போம்.
ஆறுக்கு மூணா? நாலுக்கு மூணா?
மொத்தம் 6 பிளைட்டு விடுறோம். உனக்கு 3 எனக்கு 3 என்று பேசியிருக்கிறார்கள் என்று வைப்போம். அவர்கள் பக்கம் 3 வண்டிகளை இயக்கி நம் பக்கமும் 3ஐ இயக்கினால் ஆளுக்கு 50 சதம் என்று வைக்கலாம். மாறாக. அவர்கள் 3 வண்டிகளை விட்டு, நாம் ஒரு வண்டிதான் விடுகிறோம் என்றால் 6க்கு 3 என்கிற அவர்கள் பங்கு 4க்கு 3 என்று அதிகரித்துவிடுகிறது அல்லவா. மறைமுகமாக நம் பங்கைக் குறைத்து அவர்கள் பங்கை அதிகரிக்க நாமே விட்டுக்கொடுக்கிறோம் அல்லவா.
முதலில் சென்னையிலிருந்து துபாய் செல்லும் வழித்தடத்தைப் பார்ப்போம். இந்த வழித்தடத்தில் இயங்கும் 6 வண்டிகளில் 4 அரபு நாட்டு வண்டிகள். அதில் எமிரேட்ஸ் மட்டும் ஒரு நாளைக்கு 3 முறை பறக்கிறது. இதில் எமிரேட்ஸ் இயக்குவது போயிங் 777 ஜம்போ. 226 எகானமி, 50 பிசினஸ் வகுப்பு, 8 முதல் வகுப்பு டிக்கட்டுகள் அளிக்கலாம்.
ஆக ஒரு வண்டிக்கு 284 பேர்.
ஒரு நாளைக்கு 3 வண்டி போனால், 852 பேர். ஒரு வாரத்திற்கு 5964
தவிர 737 இயக்கம் flydubai வண்டி வாரத்திற்கு மூன்றுமுறை வந்து போகிறது. ஒரு முறைக்கு 210 பேர். வாரத்திற்கு 630.
ஆக துபாய் நிறுவனங்களால் வாரத்திற்கு 6594 டிக்கட்டுகள் விற்க முடியும்.
சரி இப்ப இந்திய நிறுவனங்களுக்கு வருவோம்.
மகராஜா (ஏர் இந்தியா) இயக்கும் ஏர் பஸ் ஏ321 மூலம் 210 பேர்.
இண்டிகோ இயக்கும் ஏர்பஸ் ஏ320 மூலம் 210 பேர் என்று வைத்துக்கொண்டாலும் ஒரு நாளைக்கு 410 பேர். வாரத்திற்கு 2870. கிட்டத்தட்ட துபாய் நிறுவனங்கள் விற்கும் டிக்கட்டுகளை விட பாதிக்கும் குறைவு.
(சீட்டு எண்ணிக்கைகள் பொதுவான அந்தந்த விமான கம்பெனிகளின் விபரத்திலிருந்து எடுத்திருப்பதால், ஏறக்குறைய கொடுத்துள்ளேன். சென்னை விடுத்து ஏனைய நகரங்களுக்குச் செல்வதினாலாவது நம் பங்கைப் பெறுகிறோமா என்று பார்த்தால் இல்லை)
இத்தகைய நிலைதான் ஏனைய வழித்தடங்களிலும் நீடிக்கிறது. இத்தணை வருமானம் துபாய் கம்பெனிகளுக்குத் தருகிறோமே. துபாய் எர்போர்டில் இந்தியர்களை நடத்தும் விதம் இருக்கிறதே. இந்தியர்களில் காசு மட்டும் வேண்டும். மற்றபடி அனைவரும் கூலிக்காரர்களாகத்தான் நடத்துவோம் என்கிறார்கள் இந்த நல்லவர்கள்.
இதன் விளைவாக இந்தியர்களின் சர்வதேச போக்கு வரத்துகளில் ஒட்டு மொத்தமாக வெளிநாட்டு கம்பெனிகள் காசை அள்ளுகின்றன. முதல் நிலை நகரங்கள் விடுத்து திருச்சி, விசாகப்பட்டிணம், கொச்சி போன்றவற்றிற்கு ஏற்கனவே சிங்கப்பூரின் SIA விமானங்களை இயக்குகிறது. நம்புங்கள் நண்பர்களே. இவற்றில் திருச்சி தவிர யாதொரு நகரங்களிலிருந்தும் சிங்கப்பூருக்கு எந்த ஒரு இந்திய விமானமும் பறப்பதில்லை. திருச்சியிலிருந்து பறக்கும் விமானமும் அகால நேரத்தில் கிளம்புவதால் பெரும்பாலானவர்கள் அதைத் தவிர்த்துவிடுவார்கள். SIA மேலும் புனே மற்றும் மதுரைக்கு அனுமதி கேட்டுள்ளாக படித்திருக்கிறேன்.
இதனால் என்ன ஆகிறது, ஐரோப்பா, கிழக்கு அமெரிக்கா செல்லும் இந்தியப் பயணிகளால் வளைகுடா ஏர்லைன்சுகள் இலாபமீட்டுகின்றன. தெற்காசியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்தியா செல்லும் இந்தியப் பயணிகளால் தெற்காசிய ஏர்லைன்சுகள் இலாபமீட்டுகின்றன.
சென்னை துபாய் வழித்தடம்
சென்னை சிங்கப்பூர் வழித்தடம்
சரி பயணக்கட்டுரையில் போய் ஏன் இந்த தகவல்கள் என்றால், மகராஜா எர்லைன்சின் தாமதம்தான். இத்தணை தத்தளித்தாலும் கூசாமல் அரை மணியாவது தாமதமாக இயக்குவது மகராஜாவிற்கு வழக்கமாகிவிட்டது. வியாபார நிமித்தமாகச் செல்பவர்கள் யாரும் மகராஜாவைச் சீந்துவது குறைவு. அவர்களின் நேரம் தவறாமை அப்படி. ஏதோ பொத்தாம் பொதுவாக ஊதிவிட்டுப் போகவில்லை. கூகிள்காரனே அப்படித்தான் சொல்கிறான்.
இருக்கும் தாமதத்தைச் சரிப்படுத்தாமல் ட்ரீம்லைனர் விடுவதால் மட்டும் என்ன சாதிக்கப்போகிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை.
தொடர்புடைய கட்டுரை – ஏர் இந்தியாவும் பிரபுல் பட்டேலும் ப்ளூம்ஸ்பெரி பதிப்பகமும்
சிங்கை – புதுக்கோட்டை
இவ்வளவு இருந்த போதிலும் கூட இன்னும் மைனாரிடியான மகராஜா ரசிகர்கள் என்னைப் போன்று இருக்கத்தான் செய்கின்றனர். சொல்லி வைத்தார் போன்று நான் கிளம்பிய அன்று 45 நிமிட தாமதம். இவர்கள் திருந்தப் போவதில்லை.
ஆனால் ட்ரீம் லைனர்களின் இன்டீரியர்கள் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். சர்வதேச விமானங்களில் ஆகச் சிறந்த விமானம் இது. பளீரென்ற திரையுடன் டிவி, தானாக வர்ணம் மாறும் ஜன்னல், சத்தம் குறைந்த பயணியர் கேபின் என்று கவர்ச்சி காட்டுகின்றனர்.

ட்ரீம் லைனரில் நான் உணர்ந்தவை –
- நவீன இண்டீரியர்
- பயணிகள் கேபினில் ஒலி குறைவாகவே வரும் என்கிறார்கள்
- நல்ல legspace
- எப்பவாவது காணப்படும் foot restகள் அனைத்து வண்டிகளிலும் உள்ளன
- மேஜிக்கல் ஜன்னல்
- USB சார்ஜர்
- நவீன டிவிக்கள்
ஆனால் இது எதுவுமே மகராஜாவுக்குத் தேவையில்லை. அதற்குத் தேவையானது –
- நேரம் தவறாமை
- அந்நிய நாடுகளுக்கான நேரடி விமானங்கள்
- பொருத்தமில்லாத நேரத்தைத் தவிர்த்து peak hour விமானங்களை இயக்குதல்.
- ஏர் இந்தியாவின் வழித்தடத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்காமல் இருப்பது.
இந்திய விமான சந்தை இலாபமற்றது என்று ஒரு கருத்து நிலவுகிறது. இலாபம் இல்லாத துறைக்கா இவ்வளவு அந்நிய விமான கம்பெனிகள் போட்டி போடுகின்றன? நான் நம்பவில்லை. நமது பொறுப்பில்லாத்தனம் ஒரு பெரிய காரணமாக என் இருக்கக் கூடாது?
காலை விமானம் என்பதால் விடிகாலையில் எழுந்து, பஸ் பிடித்து வந்து, தாமதம் காரணமாக காத்திருந்து, கடுமையான பசி வந்துவிட்டது.


கண்ணாடி ஏதும் தலையில் விழுந்து தொலைக்கப் போகிறது என்ற பயத்துடனேயே சென்னை விமான நிலையத்திற்குள் உலாவ வேண்டியுள்ளது. 5 நிமிடங்களில் குடிவரவுகாரர்கள் விட்டுவிட்ட போதிலும் வெளியே வரும்போது வரை படிவத்தைத் தராது படுத்தினார்கள் சென்னை சுங்கத்துறை தூங்குமூஞ்சிகள். அதனால் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு வெளியேறும் வாயிலில் ஒரே குழப்பம். முன்னே சென்றவர்கள் பின்னே வர முயல. பின்னால் வருபவர்கின் டிராலியில் அவர்கள் மோதிக்கொள்ள, சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களுக்குரிய பாணியில் நம்மை வரவேற்றனர்.
சென்னையில் கண்ணன் என்னுடன் சேர்ந்து கொண்டான். அர்த்தராத்திரி திருச்சி செல்லும் மகராஜாவில் நேரத்திற்குக் கிளம்பினோம்.
திரிசூலம் ரயில் நிலையத்தில் சீனமொழி கற்றுத்தரும் விளம்பரம் எங்கள் கவனத்தை ஈர்த்தது. look east policy திரிசூலம் வரை வந்ததைக் காண மகிழ்ச்சியே.

செக்கின் கவுண்டருக்கு முன்னதாகவே நாங்கள் சென்றுவிட்டதால் வரிசையில் யாருமே இல்லை. Where are you going? என்று கேட்ட புக்கிங் கிளார்க்கிடம், திலுச்சி என்று பதிலளித்தான் கண்ணன். இன்னும் ர வரலையோ என்று புன்னகைத்தார். அதைக் கண்டு கொள்ளாமல் ‘சுங்கப் படிவத்தை என்னிடம் கொடு’ என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.
‘எனக்கெல்லாம் குளுராது’ என்று மேட்டிமைத்தனம் பேசியவன், விமான நிலையத்திற்குள் புகுந்ததுமே இழுத்துப் போர்த்திக்கொண்டான்.

‘ஏர் இந்தியா நல்லாவே இருக்காது’ என்று ஒரு புறம் குறை கூறிக்கொண்டு, அதில் கிறுக்கி வைத்தால் நீயும் இந்தியனே. டிரிம்லைனரிலும் இது போன்ற கிறுக்கலைப் பார்த்தேன். ஏர் இந்தியா சேவை குறை பாடுள்ளது என்பதை நான் நிராகரிக்கவில்லை. ஆனால் அதற்காக அதன் பயணிகள் எல்லோரும் சிறந்தவர்கள் என்று நான் கருதவில்லை. புதிதாக வந்துள்ள ஒரு விமானத்தின் எதிர்த்த சீட்டில் பேனாவை வைத்து கிறுக்க ஒருவனால் முடிகிறது என்றால் அவனது மனநலத்தை சந்தேகிக்க வேண்டி உள்ளது. கீழ் கண்ட பயணிகளையும் ஏர் இந்தியா பொறுத்துக்கொள்ளவேண்டி உள்ளதே பரிதாபம்தான்.
- சீட்டுகளில் கல்வெட்டு வெட்டுபவர்கள்
- எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சாக்லெட் பேப்பர்கள், டிஸ்யூ பேப்பர்களை நுழைப்பவர்கள். ஆனால் ‘எல்லாவற்றையும் செய்துவிட்டு பராமரிப்பே சரியில்லை’ என்று பேசுபவர்கள்.
- செக்கின் செய்துவிட்டு பிராந்தி வாங்க வரிசையில் நின்று தாமதமாக ஏறுபவர்கள். ஆனால் ‘சிங்கப்பூர் ஏர்லைன் டான்னு கிளம்புவான் சார்’ என்று மேட்டிமைத்தனம் பேசுபவர்கள்.
- ஓசி டிக்கட்டில் பயணம் செய்து, ஏர் போர்ட் ஷாப்பிங்கில் தாமதப்படுத்தும் அரசியல் வியாதிகள். ஆனால் ‘என்னாய்யா வண்டி. டீசல் எஞ்சின் மாதிரி ஓட்டுறான்’ என்று அலுத்துக்கொள்பவர்கள்.
- கக்கூசை நாசப்படுத்துபவர்கள். ஆனால் ‘நாத்தம் குடலைப் பிடுங்குது. கக்கூசையே சரியா கழுவலை இந்த மோடி’ என்று அளப்பவர்கள்.
- உள்ளே தரப்படும் சாராயத்திற்காக ஏர் ஹோஸ்டசிடம் சண்டை போடுபவர்கள்
- சாப்பிட்டுவிட்டு தான் சிந்தியதைக் கூட சுத்தம் செய்யாது ட்ரே யை அப்படியே மூடுபவர்கள்

புதுக்கோட்டை – பனைய மங்களப்பட்டி
குட்டித்தூக்கத்தைப் போட்டவுடன் சகோதரர் அருளில் பனையமங்கலப்பட்டிக்கு பயணம். 4 நாட்கள் கூடவே இருந்தாலும் கண்ணன் மற்றவர்களிடன் பிசி. சமீபத்தில் மழை பெய்ததால் வயலெங்கும் புது மழைத் தண்ணீர். விளையாடத்தான் நேரம் கூடிவரவில்லை.




அடுத்து பழநிக்கு பயணம். கடுமையான வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. இன்னும் பழநி ஒளிப்படங்கள் வந்துசேரவில்லை.
திரும்பி சென்னை வரும்போது வெயில் மூர்க்கமானதாக ஆகியிருந்தது. கடுமையான வியர்வை. வேட்கை. ஆவ்வ்.
சென்னை – சிங்கை
திரும்ப கிளம்புவது என்பது மனபாரம் மிகுந்த காரியம். இந்த முறை சென்னையிலிருந்து நேரத்திற்குக் கிளம்பியது மகராஜா.



சரியான நேரத்திற்குக் கிளம்பினாலும் 10 நிமிடங்கள் தாமதமாகத்தான் சிங்கை வந்தார் மகராஜா. வரும் வழியில் எங்காவது டீ குடிக்க நிப்பாட்டியிருப்பார் போல!
Back to pavilion. பழைய குருதி கதவ திறடி.
இன்னும் நம்பிக்கை உள்ளது. மைனாரிடி மகராஜா ரசிகர்கள் சார்பில்…
Very Comedy indian liner will improve….Indian Air liners never come to lime light….the working mentality fully corrupted… dont waste your costly money to choose indian air liners. Gulf liners are better ….and safe….
Seshan / Dubai
Thanks for the comment, Mr Seshan.
அரசு நிறுவனம் என்பதாலேயே இந்த மெத்தனப்போக்கா?
உங்களது மெல்லிய நகைச்சுவை ஊசி போல குத்துகிறது. //வரும்வழியில் எங்காவது டீ குடிக்க நிப்பாட்டியிருப்பார் போல// சூப்பருங்கோ!
இலாப வழித்தடங்களை விற்ற காங்கிரஸ் அரசாகலாம். லேட்டாதான் வருவோம் என்கிற ஊழியர்களாகலாம். கடனாளியை ஓட்டாண்டி ஆக்கலாம் என்று கங்கனம் கட்டிச் செயல்பட்ட மாஜி அமைச்சராக இருக்கலாம். அட அவ்ளோ ஏன். எவ்வளவு ஏமாந்தாலும் இன்னும் நம்பிக்கை இழக்காத நம்மைப் போன்ற திருவாளர் பொதுஜனமாகவும் இருக்கலாம். 🙂 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.