இந்தியாவிற்கு மூன்று பயணங்களை மேற்கொண்டேன். தொலைதூர கிராமங்களையும், கொள்ளையர் பயம் மிகுந்த பகுதிகளையும், அசாதாரண மனிதர்களின் சந்திப்புகளையும் உள்ளடக்கியதாக இந்தப் பயனங்கள் அமைந்தன. ருசிகரமான நிகழ்வுகள், ஆனால் நிறைய ஏமாற்றங்கள் இருந்தன. கிட்டத்தட்ட சுங்கப் புதர் வேலியின் அனைத்து தடையங்கள் மற்றும் நினைவுகளும் அழிந்துவிட்டதாகவே தோன்றியது, 1998ல் மேற்கொண்ட கடைசிப் பயணம் என் விடாமுயற்சிக்குப் பலன் கொடுக்கும் வரை.
-ராய் மாக்ஸம் http://www.roymoxham.com/page4.htm
இந்தியாவில் உப்புக்கு ஒன்றும் பஞ்சமில்லை. சாதாரணமாகக் கிடைப்பது அது. மூன்று பக்கம் கடல் இருக்கிறது. உப்பு ஏரியான சம்பர் இருக்கிறது. தவிர பாறை உப்பு எளிதில் கிடைத்தது. அதிகம் மனித உழைப்பு தேவைப்படாமல் ஓரளவு தரமான உப்பு இந்தியாவில் கிடைத்து வந்தது. மக்களுக்கு உப்பு என்பது ஒரு பெரிய சுமையாக இருந்தில்லை. ஆனால் அந்த உப்பு ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் வரிக்கு உட்படுத்தப்பட்டு, எப்படி ஏழை மக்களைச் சுரண்டி, பஞ்சத்தில் தள்ளி, லட்சம் லட்சமாக இறக்க வைத்தது என்று இந்த நூல் சொல்கிறார். பார்க்க ஒரு பயண நூல்தான். ஆனால் அது தரும் பதபதைப்பு அதிகம். தமிழ் சமூகத்திற்கு முக்கிய நூல் இது.
ஜெயமோகன் முதலில் இந்த நூலைப் பற்றி முன்னர் அறிமுகம் செய்து வைத்தார்.
பார்க்க –
உலகின் மிகப்பெரிய வேலி
பின்னர் அவரது தளத்திலேயே தமிழ் பதிப்பின் வெளியீட்டு விழா பற்றி அறிவித்தார்.

உப்பு வேலி – The Great Hedge Of India வின் தமிழ் மொழிமாற்றம்
ஆசிரியர் – ராய் மாக்ஸம்
மொழிபெயர்ப்பு – சிறில் அலெக்ஸ்
பதிப்பு – எழுத்து
நூலக முன்பதிவு – NLBயில் இந்த நூல் இன்னும் வரவில்லை. கன்னிமாரா நூலக தளம் திறக்கவே இல்லை (வலிமையான தமிழகம் கன்னிமாராவிலா இருக்கிறது?)
வேலி குறித்த தேடல்
ஒரு பயண நூல் என்று சாதாரணமாக இதை ஒதுக்கிவிட முடியாது. குறைந்த செலவில் தங்கள் விடுமுறையைக் கழிக்க மாமல்லபுரம், மதுரை, அலங்காநல்லூரில் திரியும் வெள்ளைக்காரர் இல்லை ஆசிரியர். பழைய புத்தகக் கடையில் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் வசூல் செய்யப்பட்ட உப்பு வரியையும், உப்பு கடத்தலைத் தவிர்க்க போடப்பட்ட கடுமையான முள் புதர் வேலி பற்றியும் அறிகிறார். அதைத் தொடர்ந்து பல நூல்கள், தரவுகளைச் சேகரித்து, கைவிடப்பட்ட அந்தப் புதர் வேலியின் மிச்சத்தைக் கண்டு பிடிக்க இந்தியாவிற்குப் பலமுறை வந்து போகிறார்.
ஒவ்வொரு முறையும் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கிறார். தேடி அலைகிறார். எல்லா இடத்திலும் ஏமாற்றம் அடைகிறார். திரும்ப இங்கிலாந்து திரும்பிப் போகிறார். கடுமையாக உழைத்து விபரங்கள் சேகரித்து திரும்ப அடுத்த விடுமுறைக்கு இந்தியாவிற்கு விமானம் ஏறுகிறார். ரயிலில் பயணிக்கிறார். ஓடிப்போய் அரசு பஸ்சில் ஏறுகிறார். குதிரை வண்டி, டெம்போ, டிராக்டர் என்று எதையும் விடவில்லை. இறுதியாக ஓரிடத்தில் சிறிது வேலி காணக்கிடைக்கிறது. அருகில் இன்னொரு கிராமத்தில் கொஞ்ச தூரம் அடர்த்தியான பழைய சுங்கப் புதர்வேலி எச்சங்களைத் திரும்பக் காண்கிறார். தன் தேடலில் வெற்றியும் பெறுகிறார்.
வேலி ஏன் முக்கியம்?
வேலி போட்டது சங்க காலத்தில் இல்லை. புத்தகத்தின் கணக்குப் படி நான் பிறந்த வருடத்திலிருந்து சரியாக 100 வருடங்களுக்கு முன்பு வேலியை கைவிட்டுள்ளது ஆங்கில அரசு. 100 வருட வரலாறு தெரியாதவர்களா நாம் ‘கல்தோன்றி முன்தோன்றி’ லாவனியைப் பாடுகிறோம்? ஆம், இந்த வேலி பின் வருவனவற்றுக்கு முக்கிய சாட்சியாகத் திகழ்கிறது.
- ஏழைகளை வதைத்துச் சாறு பிழிந்தது ஆங்கில உப்பு வரி வசூல் – ஒரு விவசாய கூலிக்காரன் தனது வருட வருமானத்தில் இரண்டு மாத வருமானத்தை உப்புக்காக செலவழிக்க வேண்டியிருந்தது
- பஞ்ச காலத்தில் உப்பு இழப்பின் காரணமாக லட்சக் கணக்கான மரணங்கள் – வயிற்றுப் போக்கால் பல லட்சம் பேர் மாண்டதாக ஆங்கிலேய அரசின் கணக்கில் உள்ளது. வயிற்றுப் போக்குக்கான எளிய மருந்து சர்க்கரை-உப்புக் கரைசல். அதற்குக் கூட வழியின்றி கொத்து கொத்தாக இந்தியர்கள் மடிந்த போது உப்பின் மீது வரியை அகற்ற மறுத்தது ஆங்கில அரசு. தவிர உப்பு செய்ய வழியில்லாத பிரிட்டனுக்கு உப்பை ஏற்றுமதி செய்தது.
- பஞ்ச காலத்திலும் ஆங்கிலேய கம்பெனி ஆட்சிக்கு வருமானம் வந்துள்ளது.
- இந்திய நிலச்சுவான்தாரர்கள் நிலவரியிலிருந்து தப்பிக்க உப்பு வரியை உயர்த்த ஆதரவாயிருந்தனர் – இந்த நூல் வெளியீட்டு விழாவின் போது நான் சென்னையிலிருந்தேன். அதனால் நூல் வெளியீட்டு விழாவிற்கும் சென்றேன். – அப்போது ராய் மாக்ஸம் குறிப்பிட்டது ‘இந்தியர்களை இந்தியர்களை விட யாரும் மட்டமாகப் பேசிவிட இயலாது’.
- பல பிரச்சினைகளை முன்னெடுத்திருக்கலாம். ஆனால் காந்தி ஏன் உப்பு சத்தியா கிரகத்தை முன்வைத்தார்?
- இந்திய தேசிய காங்கிரஸை நிறுவிய ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் சுங்க வேலி ஆணையராக இருந்திருக்கிறார்
- பஞ்ச காலத்தில் இந்தியாவைக் கட்டிப்போட்ட இந்த வேலிபற்றி ஆவணமாக்கப்படவே இல்லை – யாருக்கும் ஏதும் தெரியவில்லை. ஆங்கிலேய அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டுவிட்டோம் என்றாலும் இன்னும் அந்த அடிமைத்தனம் பெற்ற அரசியலமைப்பு ஆங்கிலேயர்களுக்கு எதிரான எதையும் குறைந்த பட்சம் ஆவணமாக்கக் கூட தயாரில்லை.
- ஆங்கிலேய கம்பெனி ஆட்சியிலேயே ஊழல் எக்கச்சக்கமாய் நடந்திருக்கிறது – இராபர்ட் கிளைவ் மீது ஊழல் விசாரணை ஏவப்படுகிறது. பார்க்கவேண்டியவர்களைப் பார்த்துச் சரிகட்டுகிறார்.
- இந்தியா என்பது ஆங்கில அதிகாரிகள் ஊழல் செய்து தனியே சொத்து சேர்க்கும் இடமாகப் பார்க்கபட்டது
- கம்பெனியின் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு காரணமாகத்தான் பிரிட்டன் அரசு நேரடியாக இந்திய ஆட்சியை எடுத்துக்கொள்கிறது
- சுங்க வேலி குறித்த பயங்கரமான தரவுகள்
இப்படி பல தகவல்களை அள்ளித் தெளிக்கிறது இந்த நூல். அதனாலேயே இது தமிழ் உலகில் முக்கியமாகிறது. ஏகாதிபத்திய ஆட்சியில் இந்தியாவின் நிலை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளவேண்டியது இன்னும் இருக்கிறது என சொல்லும் நூல்.
சில சுவையான பதிவுகள்
பயணக் கட்டுரையாக இருப்பதால் பல ருசிகரமான பதிவுகள் இருக்கின்றன.
- முதல் மூன்று பயணங்களில் இருமுறை வேலை நிறுத்தத்தை எதிர் கொள்கிறார் ஆசிரியர்
- ஸ்டேட் பாங்கிற்கு பயணர் காசோலை மாற்றச் செல்கிறார். 11 மணிக்கு மேல்தான் திறக்கின்றனர்
- வரிசையில் நின்று ரயில் டிக்கட் வாங்குகிறார். இறுதி முறை irctc மூலம் ஆன்லைன் டிக்கட்டே பெற முடிகிறது
- நூல் முழுக்க சாதாரணமான மக்கள் (அல்லது கிராம மக்கள்) இவருக்கு ஆதரவாக இருக்கின்றனர். ஆறுதலாகப் பேசுகின்றனர். தங்க இடம் தருகின்றனர். ஆபத்தான இடம் குறித்து எச்சரிக்கின்றனர். வேலி குறித்த தடையங்களைக் காட்டுகின்றனர். சப்பாத்தி பருப்பு வெண்டைக்காய் கறி தருகின்றனர் 🙂
- சொல்லி வைத்தார் போல மேல்குடி மக்கள் தங்கள் மேட்டிமைத்தனத்தை வெளிப்படுத்துகின்றனர். உதாரணமாக ரயிலில் ஆங்கில நூல் படிக்கும் பெண், முன்பதிவு செய்யப்பட்ட முதல் வகுப்பு சீட்டுகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் அரசியல் பிரமுகர்கள், முறையிட்டும் அதைக் கண்டு கொள்ளாத டிடிஈ
- இந்தப் புதர் வேலியைக் கண்டுபிடித்துத் தரமாட்டியா என்று சிவன் கோவிலில் கும்பிட்டு வேண்டிக்கொள்கிறார். பிறகு என்ன இப்படி ஆகிட்டோம் என்று தன் குடும்பத்திற்காகவும் தன் நண்பர்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறார்.
- பிரிதொரு பயனத்தில் ஒரு அரச மரத்தடியில் இன்னொரு சிவன் கோவிலில் வழிபடுகிறார். (பெரியார் பஜனை என்றும் மேற்கத்திய தாக்கம் என்றும் பிரச்சாரம் பண்ணும் கூட்டத்தை ஒரு நிமிடம் நினைத்துக் கொண்டேன்)
சரளமான நடையில் மொழி பெயர்த்திருக்கும் சிறில் அலெக்ஸ் வாழ்த்துகளும் நன்றிகளும்.

- உலகின் மிகப்பெரிய வேலி – ஜெயமோகன்
- நூல் வெளியீட்டு விழா வீடியோ
- உப்பு, வரி, வேலி – பத்ரி சேஷாத்ரி
- எனது இந்தியா! (உப்பு வேலி ) – எஸ். ராமகிருஷ்ணன்….
- வல்லார்க்கு உப்பும் ஓர் ஆயுதம் – இந்திரா பார்த்தசாரதி
- மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும் – தமிழ் தி இந்துவில் சிறில் அலெக்ஸின் கட்டுரை
- ராய் மாக்ஸம் நேர்காணல் – சொல்வனம்
வளர்க பாரதம்.
நன்றி நண்பர்களே, இன்னொருமொரு இனிய பதிவில் சந்திப்போம்!