வெண்முரசு கன்னித் தெய்வங்கள் – 1


வெண்முரசு காட்டும் பெண்கள் வலிமையோடு நடமாடுகின்றனர். பல பெண்கள் பிறந்துள்ளனர். சிறுமியாக கன்னியாக இல்லாளாக மூதாட்டியாக இது வரை வாழ்ந்துள்ளனர். கன்னிமை காலத்து நிகழ்வுகளை அழகுற சொல்லும் சில இடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

கன்னிமை காலத்தைக் காத்து நிற்கும் தெய்வங்கள் மற்றும் தேவதைகளை வெண்முரசு காட்டும் ஒவ்வொரு தருணமும் இனம்புரியா ஒரு மன எழுச்சிக்கு ஆளாவது தவிர்க்க முடியாது போகிறது. அது தரும் அமானுட உணர்விலா, தினசரி பார்த்து வணங்கிய கன்னி தெய்வங்கள் கண் முன்னே வரும் உணர்விலா என்ற அறிய இயலாது.

வெண்முரசு முதல் முதலாக வலுவாக அதிர்ந்தது அம்பைக்காக. கனன்று கொண்டிருப்பவளைப் பற்றிச் சொல்வது வெண்முரசு – முதற்கனல். அதிலிருந்து ஒரு பகுதி. யாராவது இதை ஒரு நல்ல மேடை நாடகமாக ஆக்கமுடியும் என்றால் நான் பார்க்க வெகு ஆவலாக இருக்கிறேன்.

வெண்முரசின் கன்னித் தெய்வங்கள் வரிசையின் முதல் பதிவு இது

  1. அம்பை – வெண்முரசு கன்னித் தெய்வங்கள் – 1
  2. பாமா – சப்தமாதரும் பாமாவும் – வெண்முரசு கன்னித் தெய்வங்கள் – 2
  3. சிசுபாலன் – சிசுபாலனை எதிர் கொண்ட சப்த கன்னிகைகள்

Bhisma_fight_in_Swayamvara

அம்பை

சென்ற வருடம் முதற்கனல் வெளிவந்து கொண்டிருந்த சமயம், அம்பையின் கதை வெளி வந்து கொண்டிருந்த சமயம். பிற அரியணைக்கோ படுக்கை அறைக்கோ உதவாத பிள்ளைகளைப் பெற்ற சத்யவதி பிற ஷத்ரியர்களின் கழுகுப் பார்வையிலிருந்து அஸ்தினபுரியை மீட்டெடுக்க காசி நாட்டு இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாளிகை இளவரசிகளை தன் மகன்களுக்கு மனம் முடித்து வைக்க பீஷ்மரை நிர்பந்திக்கிறாள். சத்யவதியின் இந்த விளையாட்டில் பீஷ்மர், சத்யவதியின் மகன் விசித்ர வீரியன் மற்றும் மேற்சொன்ன இளவரசிகளும் பகடைக் காய்களாகின்றனர்.

கவர்ந்து வந்த பெண்களில், அம்பை கொதித்தெழுகிறாள். சால்வ மன்னனிடம் தான் கொண்ட காதலை பீஷ்மர் சுக்கு நூறாக நொறுக்கியது ஒரு புறம், தன் ஆணவம் சிறுத்த கொதிப்பு மறுபுறம். ‘இப்படியே என்னைக் கடத்திட்டுப் போய் கல்யாணம் பண்ணாலும் என்ன. கடைசியா பிள்ளை இருந்தாதானே வாரிசு. பிள்ளைகளைக் கங்கையிலேயே விட்ருவேன் பார்த்துக்க’ என் கோபத்தில் சூளுரைக்கிறாள். கங்கையில் பிள்ளையை விடுவதா என்று அதிர்ச்சி அடைந்த காங்கேயர் அவளை விடுவிக்கிறார். தன் காதலனான சால்வனைத் தேடிச் செல்கிறாள். அவன் கை விடுகிறான். கை விட்டாலும் பரவாயில்லை. அவளை மனந்தால் அஸ்தினபுரியின் பகை வரும். அதைச் சமாளிக்க இயலாது. வேண்டுமானால் அரசியாக அல்லாது மகளிர் மண்டபத்தில் இருந்து கொள்ளலாம் என்று சொல்ல ஏமாற்றமும் கோபமும் கொதிக்க பெற்ற வீடு திரும்புகிறாள். தந்தையும் ஏற்க மறுக்க நிற்கதியாகிறாள். மனம் வெறுத்து நீர் சுழலில் விழுந்து உயிரை மாய்க்க வரும் நேரத்தில் தான் அந்த தேவதைகள் தோன்றுகின்றன.

நண்பர்களே, பெண் பிறக்கிறாள், சிறுமியாகிறாள். பிறகு கன்னியாகிறாள். ஒவ்வொரு பருவத்திற்கும் அவளுடன் உறையும் தேவதைகள் அம்பையைத் தடுக்கின்றன.

ஸ்வர்ணை என்று பொன்னிற தேவதை தோன்றுகிறாள். தன்னை மலர்களில் வாழும் தெய்வம் என்று அறிமுகப் படுத்திக்கொள்கிறாள். என்னை உனக்குத் தெரியுமடி என்கிறாள்.

தேவதைகள்

அம்பை அவளைப் பார்த்ததே இல்லை அல்லவா. எப்படி என்கிறாள். காலை ஒளி மொட்டுகளில் படும்போது விரிந்து நான் பூமிக்கு வருவேன். பெண்குழந்தைகளின் கனவில் மலர்கொண்டு காட்டுபவள் நான். என்னைக்கண்டுதான் அவை சிறுமலர்வாய் திறந்து கண்மூடிச்சிரிக்கின்றன என்கிறாள்.

“அம்பை, நீ படியிறங்கும்போதெல்லாம் நான் உன்னுடன் துள்ளிக்குதித்தேன். நீ பாவாடை தூக்கிச் சுழன்றாடியபோது உன்னுடன் இளங்காற்றாய் சுழன்றேன். நீ சேர்த்துவைத்த குன்றிமணிகளை, வளையல்துண்டுகளை, வண்ணவண்ண விதைகளை நானும் மீண்டும் மீண்டும் எண்ணினேன். நூற்றுக்கிழவியாகவும் முலையுண்ணும் மழலையாகவும் மாறிமாறிப்பேசி நீ உன் அன்னையை பரவசப்படுத்தியபோது அவள் தந்த முத்தங்களை எல்லாம் நானும் பெற்றுக்கொண்டேன். உன் செல்லச்சண்டைகளில், சின்னஞ்சிறு சோகங்களில், கண்கள்பூரித்த குதூகலங்களில் நானும் இணைந்துகொண்டேன். உன் பேதைப்பருவத்தை பொன்னிற ஒளிகொண்டவளாக்கியவள் நான். ஒவ்வொரு இலையும் பூவாக இருக்கும் தருணம் ஒன்றுண்டு தோழி. நான் அந்தப்பருவத்தின் தேவதை.’’

கண்களில் ஈரத்துடன் அம்பை “வணங்குகிறேன் தேவி. நீ மட்டும் இல்லை என்றால் பெண்ணெனப்பிறந்த என் வாழ்க்கையில் என்ன எஞ்சியிருக்கும்? நீ அளித்தவை அன்றி விண்ணும் மண்ணும் எனக்கு எதையும் அளித்ததில்லை. நீயே என் தெய்வம்” என்றாள்.

“ஆனால் நான் விலகிச்சென்றே ஆகவேண்டியவள். அனைத்தையும் அளித்தபின் ஒவ்வொன்றாக பறித்துக்கொள்வதே என் லீலை என வகுத்திருக்கிறான் பிரம்மன். நான் உனக்களித்த கடைசிப்பரிசை நீ நினைவுறுகிறாயா?” என்றாள் சுவர்ணை.

அம்பை ஒளிவிடும் முகத்துடன் “ஆம் ஒரு நீலநிற மயிற்பீலி….அது நான் விளையாடச் சென்றபோது நந்தவனத்தில் எனக்குக் கிடைத்தது. அதை பல்லாயிரம் முறை கற்பனையால் வருடி ஒருமுறைகூட தொடாமல் வைத்திருந்தேன்” என்றாள். “அது வானத்தைப் புணர்ந்து குஞ்சுபோடும் என்று சொன்னபோது நான் நம்பினேன்” அவள் முகம் சிரிப்பில் விரிந்தது.

“ஆம், வானத்தைப் புணரும் கனவுகள்… மயிற்பீலியைச் சுழற்றி உருமாறும் வண்ணங்களில் அதை நீ கண்டாய்… பிறகு ஒருநாள் உன் சுவடிக்கட்டுகளில் நீ அதை மீண்டும் கண்டெடுத்தாய். அப்போது அதை நீ கொண்டு சென்று ஒரு பொம்மைக்குழந்தையின் தலையில் வைத்து அலங்கரித்தாய்….அப்போது என் தமக்கை உன்னை என்னிடமிருந்து பெற்றுக்கொண்டாள். நான் பெருமூச்சுடன் உன்னிடமிருந்து பிரிந்துசென்றேன். ஒவ்வொரு கன்னியைப் பிரிகையிலும் நான் மௌனமாக கண்ணீர் விடுவேன். கடைசிவரை அவளைப்பார்த்தபடி பின்பக்கமாக காலடிவைத்து நகர்ந்து நகர்ந்து விலகிச்செல்வேன். உன்னைப்பிரிந்த நாள் எனக்கு மேலும் துயரமானது கண்ணே. நீ என் ஆன்மாவை அறிந்த குழந்தை அல்லவா?” என்றாள் சுவர்ணை.

குழந்தையான, சிறுமியான அம்பையிடம் இருந்தவள் ஸவர்ணை. அவள் கன்னியாக ஆகும் தருணத்தில் சோபை வருகிறாள்.

நூல் அரங்கம்

காலையொளி பொன்னிறத்திலிருந்து சுடரொளி ஆகும் வரை இருப்பவள் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். வர்ணங்களில், பறவைக் குரல் இசையில் வாழ்பவள் நான் என்கிறாள்.

உன் கன்னிப்பருவத்தில் வந்து உன்னை ஆட்கொண்டேன். உன் குருதியை இனிய மதுவாக ஆக்கினேன். அதன் வழியாக நுரைத்தோடிய அனைத்தும் நான் உனக்களித்தவை.”

அம்பை வெட்கி கன்னங்கள் சிவந்து “ஆம் நான் உன்னை அறிவேன். இரவின் தனிமையில் நீ என் போர்வைக்குள் புகுந்துகொள்வாய்” என்றாள். சோபை சிரித்து அவள் கன்னங்களைக் கிள்ளி “அந்தரங்கமானவைக்கெல்லாம் உள்ள குளிர் எனக்கும் உண்டு இல்லையா?” என்றாள். “என்னை மாயை என்றும் சொல்வதுண்டு. நான் உன்னுள் புகுந்து உன் அகங்காரத்தை அள்ளி என் கைவெம்மையிலிட்டு வளர்த்தேன். அவற்றைக்கொண்டு உன்னைச்சுற்றி ஒரு தனியுலகைப் படைத்து உனக்களித்தேன். அந்த உலகில் உன்னுடைய ஆடிபிம்பங்கள் மட்டுமே இருந்தன. நீ அறிந்த அனைத்தும் நீயே. உன் அன்னை தந்தை சோதரிகள் தோழிகள் சேடிகள் அனைவரும் உன் தோற்றங்களே” என்றாள் சோபை.

ஆம். சால்வனை விரும்பினேன். ஆனால் இப்போது தன்னுடைய எந்தக் கீழ்மை அவனை விரும்பியது என்று தெரியவில்லை என்று வருந்துகிறாள். அது உனது ஆணவம் என்கிறது சோபை.

எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன்

உனக்கு வருபவன் இப்படித்தான் வரவேண்டும் என்று நினைத்தாய் நீ. நீ விரும்பியது உன்னை பீடத்தில் வைத்து வழிபடும் பூசகனை மட்டுமே. அவனைக் கண்டு கொண்டதும் அந்தக் காதல் கசந்தது என்று உடைக்கிறாள் கன்னி தேவதை.

படகில் பீஷ்மர் மூன்று சகோதரிகளைக் கவர்ந்து செல்கிறாள் என்று மேலே பார்த்தோம் இல்லையா. அதில் வாதாடி மீண்டு வருகிறாள் அம்பை. அந்த தருணத்தை நினைவு படுத்துகிறாள் சோபை. ‘நீ படகில் இருந்து இறங்கினாய். பிறகு பீஷ்மரை ஒரு கணம் திரும்பி நோக்கினாய். பெண்ணே, அந்தக் கணத்தில் மின்னல் போல நான் உன்னிடமிருந்து மறைந்து போனேன்’ என்கிறாள்.

அந்தத் தருணத்தில் அம்பையை சோபையிடமிருந்து விருஷ்டி என்கிற பச்சை நிற தேவதை பெற்றுக் கொள்கிறாள்.

“நான் விதைகளுக்குள் வாழும் தேவி. வேர்களையும் மகரந்தங்களையும் ஆள்பவள். விண்ணையும் மண்ணையும் இணைப்பவள். பெருங்கடல்களின் கருணை. எட்டுவகை ஸ்ரீதேவியராக நானே அறியப்படுகிறேன்.” புன்னகையுடன் அருகே வந்து “உண்மையில் நான் மட்டுமே இருக்கிறேன். சுவர்ணை என்றும் சோபை என்றும் வடிவெடுத்து நான் ஆடுவது ஒரு லீலை” என்றாள்.

“உன்னை நான் அறிந்ததில்லையே” என்றாள் அம்பை. “பெண்ணென நீ அறிந்தவை அனைத்தும் நானே. குழந்தையாக மண்ணில் தவழ்ந்து எழுந்து நீ முதன்முதலில் அமர்ந்தபோது மடியில் எடுத்துவைத்து மார்போடணைத்து முலையூட்ட முயன்ற மரப்பாவையை நினைவிருக்கிறதா? அப்போது நான் உன்னருகே இருந்தேன். நீ தாயாக அல்லாமல் ஒருகணமேனும் உன்னை உணர்ந்ததில்லை தோழி. அப்போது உன் மொட்டான கருப்பைக்குள் இருந்து உன்னை புளகமணியச் செய்தவள் நானே” என்றாள் விருஷ்டி.

அம்பை தலைகுனிந்தாள். “அனைத்தையும் முளைக்கவைப்பவள் நான்.சேற்று வயலிலும், கருவுற்ற மிருகங்களிலும், தலைவணங்கும் கதிரிலும் உள்ளது என் வாசனை. அதை நீ அறிந்த கணம் நான் உன்னை என் கைகளில் எடுத்துக்கொண்டேன். நீ பீஷ்மன் மேல் காதல் கொண்ட அந்த கணத்தில்.”

அவள் முடிப்பதற்குள்ளேயே தீச்சூடு பட்டவள் போல அம்பை துடித்து விலகி “சீ…” என்றாள். “என்னை சிறுமைப்படுத்துவதற்காகவே சொல்கிறாய்… என்னை என்ன நினைத்தாய்? பரத்தை என்றா?” என்றாள்.

“ஏன்? ஆணை பெண் விரும்புவதில் பிழை என்ன?” என்றாள் விருஷ்டி. “காதல் கொண்ட ஒருவனை தேடிச் செல்லும்போது உள்ளூர இன்னொரு ஆணை எண்ணும் கீழ்மகளா நான்?” என்று அம்பை கொந்தளிப்புடன் கேட்டாள். “இல்லை, நீ ஒரு பெண். உன் கருப்பை ஆசைகொண்டது. தீராத்தனிமையுடன் நின்றிருந்த மாவீரனைக் கண்டதும் அவன் முன் மண்டியிடவும், உன்னுடன் இணைத்துக்கொண்டு அவனை ஒரு குழந்தையாகப் பெற்று மடியில் போட்டுக்கொள்ளவும் அது விழைந்தது. அதுவே இப்பூவுலகை உருவாக்கி நிலைநிறுத்தும் இச்சை. நான் அதன் தேவதை” என்றாள் விருஷ்டி.

“இல்லை…இல்லை…நீ என்னை ஏமாற்றுகிறாய்..நீ என்னை அவமதிக்கிறாய்….என் கல்வி ஞானம் அகங்காரம் தவம் அனைத்தும் பொய்யே என்கிறாய். நான் வெறும் கருப்பை மட்டுமே என்கிறாய்.” மூச்சிரைக்க அம்பை கூவினாள். “ஏன் கருப்பை என்பது எளியதா என்ன?” என்றாள் விருஷ்டி.”தோழி, இதயம் மிகச்சிறியது, கருப்பையோ முடிவற்றது.”

‘உன் அகங்காரத்துக்குச் சரியான தீனி போடுபவனை நீ தேடினாய். அது பீஷ்மரே’ என்றும் ‘நீ அடையவேண்டியது அவரைத்தான்’ என்றும் சொல்கிறாள்.

நண்பர்களே, தேவதைகள் வருவதற்கு முன்பு வரை ஒரு வருத்தமான காவியம், பரபரப்பான சூழலில் அம்பையின் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தது வெண்முரசு. இந்த தேவதைகள் அவளை ஆற்றுப்படுத்திய அந்த அத்தியாயத்தில் நான் கட்டுக்கடங்காத உணர்ச்சியை அடைந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். அந்த சமயம் நான் ஊரில் இல்லை. 13 டிகிரி குளிரில் வியர்த்துக் கொண்டிருந்தேன். இந்த அத்தியாயங்கள் ஓடிக்கொண்டிருந்த அந்த வாரம் நான் தரையில் நடந்து கொண்டும், வேறு உலகத்தில் மிதந்து கொண்டுதான் இருந்திருக்கிறேன்.

இன்னுமொரு சுவையான நிகழ்வை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

பார்க்க –

4 thoughts on “வெண்முரசு கன்னித் தெய்வங்கள் – 1

  1. மிக மிக சுவாரஸ்யம். நான் இன்னும் வெண்முரசு படிக்கவில்லை. ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் இந்தப் பகுதி நீளமாக இருந்தாலும் படிக்க நன்றாக இருக்கிறது. அதிலும் அம்பையின் கதை மிகவும் பரிதாபத்திற்குரியது. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.
    நீங்களே நாடகம் எழுதிவிடுங்களேன், பாண்டியன்!

    1. அம்மா வணக்கம். கொற்றவை, விஷ்ணுபுரம், வெண்முரசு எங்கும் இது போன்ற காட்சிகள் மூலமாக நம் தொண்மங்கள் விரவிக்கடக்கின்றன. சிவனுக்குத் தரப்படும் சுயபலி, தலை கொடுத்தல் போன்ற நிகழ்வுகளில் எனக்குக் காய்ச்சல் காணாதது ஒன்றுதான் குறை. நாடகம் எழுத பயன்றவர்கள் கைவண்ணம்தான் சிறந்தது. நாட்டிய நாடகங்கள் நடத்தும் பரதநாட்டியக் குழுக்கள் சென்னையில் உண்டு. ஒருவேளை யாருடைய தொடர்பாவது கிடைத்தால் காதில் போட்டுவிடுங்கள். தொடர்ந்த ஊக்குவிப்பிற்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s