பாமாவின் சித்தப்பாரு செய்த கூத்தின் காரணமாக நிச்சயம் செய்யப்பட்ட கிருஷ்ணன் – பாமா திருமணம் நின்று போகிறது. ‘என் அப்பாவைப் பார்த்து கன்யா சுல்கம் கொடுத்து என்னை அழைத்துச் சென்றால் மட்டுமே வருவேன்’ என்று பாமா அமைதியாக ஆனால் உறுதியாகத் தெரிவித்துவிட்டு ஆயர் குடி திரும்புகிறாள். தவறு என்று தெரிந்தும் பாமாவின் தந்தையாருக்கு தம்பியைத் தட்டிக்கேட்க முடியவில்லை. சியமந்தகம் படுத்தும் பாடு. ஜராசந்தருக்குத் மணத்தூது விடுகிறார் சித்தப்பாரு. தூது நிராகரிக்கப்படுகிறது. இறுதியாக, சிசுபாலன் பாமாவை மணக்க சம்மதிக்கிறான் சில டிஸ்கிளைமர்களுடன்.
வெண்முரசின் கன்னித் தெய்வங்கள் வரிசையின் மூன்றாவது பதிவு இது
- அம்பை – வெண்முரசு கன்னித் தெய்வங்கள் – 1
- பாமா – சப்தமாதரும் பாமாவும் – வெண்முரசு கன்னித் தெய்வங்கள் – 2
சிசுபாலனின் மண ஏற்பு டிஸ்கிளைமர்கள்

- பட்டத்து அரசி பட்டம் எல்லாம் கொடுக்க முடியாது
- இருக்கிற அரசிகள் எண்ணிக்கையில் இன்னொருத்தியா சேர்ந்துக்கட்டும்
- சியமந்தக மணியைக் கொடுத்துவிடவேண்டும்.
- மணம் முடித்து வைக்கும் களிந்தக அமைச்சர் சத்ய சீலருக்கு 12000 பொன்! (Brokerage fee)
- அரண்மனை கொடுப்போம். கொடி கொடுப்போம். வேணும்னா யாதவர் அவையில் சேர் போட்டு உட்கார்ந்து கொள்ளட்டும்!
அமைச்சர் லட்சுமணர் கொதித்துப் போகிறார். இதற்குத்தான் பட்டத்தரசியாகும் துவாரகையின் மண ஏற்பை ரத்து செய்தோமா என்று வினவுகிறார்.
பிரசேனர் தலைவணங்கி அவை நீங்கும்போது அவருக்குபின்னால் வந்த லட்சுமணர் வெறுப்பால் மின்னிய சிறிய விழிகளுடன் “நானறிந்த அரசியலாடல்களில் இதைப்போல இழிந்த ஒன்று இல்லை. என்ன செய்துகொண்டிருக்கிறோம்? எதன்பொருட்டு நாம் இளைய யாதவரின் உறவை மறுத்தோம்? இப்போது சியமந்தக மணியையும் இழந்து இவனுடைய அரண்மனைச்சேடியாக நம் இளவரசியை அளித்து…” என்றதுமே பிரசேனர் திரும்பி உடைவாளில் கையை வைத்தபடி “வாயை மூடும். இல்லையேல் இக்கணமே…” என்று கிட்டித்த தாடையுடன் சொன்னார்.
“என்ன செய்வீர்? பிராமணனை கொல்வீரா? கொல்லும்… உம் தலைமுறைகளை பிரம்மஹத்தி என தொடர்ந்து வருகிறேன்” என்றார் லட்சுமணர். மூச்சிரைக்க பிரசேனர் உடல் தளர்ந்தார். பற்கள் இறுக, கண்களை சுருக்கியபடி “நீர் இதற்காக வருந்துவீர்” என்றார் . “உண்மையை சொல்லும்பொருட்டே பிராமணன் மண்ணில் பிறக்கிறான். நெறிநூல்கள் நால்வருணத்தின் தலைமேல் எங்களை அமரச்செய்வது அதற்காகவே” என்றார் லட்சுமணர். “என்ன உண்மை? சொல்லும் என்ன உண்மை?” என்று பிரசேனர் மீண்டும் குரலெழுப்பினார். “உம் நெஞ்சறிவது…” என்று லட்சுமணர் சொன்னதும் “சொல்லும் என்ன உண்மை?” என்று பிரசேனர் தொண்டை உடையும்படி கூவினார்.
இந்திர நீலம் 18
வெகு விரைவில் எல்லோரும் சிசுபாலன் கட்சிப் பக்கம் மெதுமெதுவாக வந்துவிடுகிறார்கள், பாமாவின் செவிலித்தாய் ஒருத்தியைத் தவிர. எந்த ஒரு செய்தியையுமே காதில் வாங்கிக் கொள்ளாதவளாக நீலனைப் பற்றிய எண்ணமாகவே இருக்கிறாள் பாமா.
சிசுபாலன் பெண் பார்க்கும் காட்சி

சிசுபாலன் பாமாவைப் பெண் பார்க்க வரும் காட்சியைக் கண்முன் நிறுத்துகிறார் ஜெயமோகன். இந்த அத்தியாயத்தை லிட்டில் இந்தியாவிலிருந்து புகித் பாஞ்சாங் செல்லும் பசுமை நிறைந்த சாலையில் பயணித்துக்கொண்டே படித்துக் கொண்டிருந்தேன். எனவே பசுமையான ஆயர்குடியின் இந்த நிகழ்வு அப்படியே மனதில் பதிந்து போனது.
சிசுபாலன் வருகிறான். அவன் முதன்மை படைத்தலைவன் சித்ரகர்ணன் வருகிறான். அமைச்சர்கள் வருகிறார்கள். அனைவரும் ஒரு இகழ்ச்சி கலந்த புன்னகையுடன் யாதவர்கள் தரும் மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்கள். பதில் மரியாதை செய்வதைத் தவிர்க்கின்றனர். வேறு வழியின்றிதானே வாழ்க்கைப்படப் போகிறாள்!
“தாங்கள் தங்கி இளைப்பாற அனைத்து ஒருக்கங்களும் செய்யப்பட்டுள்ளன” என்றார் சத்ராஜித். “ஆனால் இங்கே அரண்மனை ஏதுமில்லை, புல்வீடுகள்தான் என்று செய்தி வந்ததே?” என்றான் சிசுபாலன். சத்ராஜித் தலைவணங்கி “களிந்தகத்தில் அரண்மனை உள்ளது திரும்பும்போது அங்கு தங்கலாம். குலமூத்தார் இங்கிருப்பதனால்…” என்று சொல்லத்தொடங்க இடைமறித்து “நான் செல்லும் வழியில் மகதத்தின் மாளிகையில் தங்கலாமென எண்ணுகிறேன்… களிந்தகத்தின் கோட்டையை வரும்போது பார்த்தேன். மண்சுவர் என்று தோன்றியது” என்றபின் “செல்வோம்” என்றான். சத்ராஜித் தலைவணங்கி “ஆம்” என்று சொல்லி அவன் பின்னால் நடந்தார்.
இந்திர நீலம் 18
துவாரகையின் மணமுறிவுக்குப் பின் பாமா தன் வழக்கமான பணிகளில் ஈடுபடுகிறாள். கன்று மேய்ப்பது, பசு பராமரிப்பு, புல் அறுப்பது என. துவாரகையின் அரசி என்று மெய்சிலிர்த்துக் கூவிய அதே யாதவர்கள் ‘துவாரகையின் அரசி.. பசு புறக்கிறாயா. புல் வெட்டிவிட்டாயா’ என்று நகையாடுகிறார்கள். ஆனால் நீலன் அன்றி பிரிதொன்று எண்ணாத அவளை ஏதும் பாதிக்கவில்லை. இந்நிலையில்தான் சிசுபாலன் வருகிறான்
“இங்கா இளவரசி இருக்கிறாள்? இங்கு அவள் என்ன செய்கிறாள்?” என்றான் சிசுபாலன். சத்ராஜித் தயங்கி “இங்கு அவளுக்குரிய அனைத்தும் உள்ளது” என்றார். சிசுபாலனின் இதழ்கள் இளநகையில் வளைந்தன. “இங்கு அவள் என்ன செய்கிறாள்? பசுபுரக்கிறாளா?” என்றபடி சித்ரகர்ணனை நோக்கினான். அவன் புன்னகைசெய்தான்.
கண்களில் சினம் மின்னி மறைய பிரசேனர் “ஆம் அரசே, பசுபுரத்தல் யாதவர்களின் தொழில்” என்றார். சிசுபாலன் திரும்பி அவரை நோக்கிவிட்டு “அவள் என் மாளிகையில் பசு புரக்க முடியாது. சேதிநாட்டு அரசியர் செய்ய வேறுபல பணிகள் உள்ளன” என்றான். சித்ரகர்ணன் உரக்க சிரித்தான். பிரசேனர் ஏதோ சொல்ல வாயெடுக்க சத்ராஜித் வேண்டாம் என்பதுபோல கண்களை விழித்தார்.
இந்திர நீலம் 19
மணஏற்பு நிகழும் இடத்தில் சிசுபாலனின் இகழ்ச்சியம், சத்ராஜித்தின் கையாலாகதனம், எப்படியோ கல்யாணம் நடந்தா சரி என்று பிரசேணரும், எதையுமே உணராத கனவுலகில் மிதந்து கொண்டு அணி செய்து கொள்ளும் பாமாவும் வெண்முரசின் இந்த அத்தியாயத்தில் வருகின்றனர்.
முழுதணி கொண்டு பாமா உள்ளறை வாயிலில் வந்து நிற்கிறாள். அவள் வந்திருப்பது தெரிந்தும் சிசுபாலன் கண்டு கொள்ளாதவனாய் பேச்சில் மும்முரமாக உள்ளதாகக் காட்டிக்கொள்கிறான். பொண்ணு வந்திருச்சு என்று சொன்ன பிறகு, திரும்புகிறான். புழக்கடை ஒளியில் சுவரில் விழும் பாமாவின் நிழலை முதலில் பார்க்கிறான் சிசுபாலன்.
சப்த மாதர் காட்டும் அவதாரக் காட்சிகள்

சுவரில் விழுந்த நிழலில் தோன்றுகிறாள் வராகி.
ஒரு கணம் அவளை பக்கவாட்டில் நோக்கிய சிசுபாலன் நெஞ்சில் குளிர்ந்த ஈட்டி துளைத்ததுபோல் உணர்ந்தான்.
நடுங்கும் விரல்களுடன் அவன் திரும்புவதற்குள் அந்த நிழல் எதிர்ச்சுவரில் பேருருவத்துடன் எழுந்து மெல்ல உறுமியது. கன்னங்கரிய உடல். பன்றிமுகத்தில் மின்னும் மதங்கொண்ட சிறியகண்கள். அறைக்குள் கடுங்குளிரும் அழுகல் நாற்றமும் நிறைந்தது. வலக்கையில் மேழியும் இடக்கையில் முசலமும் அசைந்தன. “தேவி!” என்று அவன் கைகூப்பினான். “சேதி நாட்டு தமகோஷனின் மகனாக சுருதமதியின் கருவில் நீ பிறந்த அவ்வறையில் எழுந்த தெய்வம் நான். காற்றில் வீசிய கடும்நாற்றமாகவும் திரையசைவில் தெரிந்த நிழலுருவாகவும் என்னை உன் அன்னைமட்டுமே அறிந்தாள். பிறர் அறியாத மந்தணமாக அதை தன்னுள் மறைத்துக்கொண்டாள்.”
“கேள் இளையோனே, மண்ணில் புதைந்தவை அனைத்தும் சென்றுசேரும் அதலம் என்னும் அடியுலகில் வாழ்ந்த திரயம்பகன் என்னும் முக்கண் தெய்வம் உன் வடிவில் மண்ணில் எழுந்தது. நீ மாளாத பொறாமையால் ஆனவன். எனவே ஒவ்வொரு அங்கமும் உள்ளூர அழுகிக்கொண்டிருப்பவன்” என்றாள் வராஹி. “சத்திய யுகத்தில் ஹிரண்யாக்ஷன் என்னும் அரக்கன் புவியை தன் கைப்பந்தென எடுத்துக்கொண்டு இருண்ட அடியிலியில் சென்று மறைந்தான். தேவர்குரல் கேட்டு விழிமலர்ந்த விண்ணவன் புவியன்னையை காக்க பேருருவம் கொண்டு எழுந்தார்.“
“….இருளலைக்கு அடியில் ஒற்றைமீன் என நின்றிருந்த அவனை அணுகி தன் முகக்கொம்பால் குத்திக்கிழித்தார் இறைவன். புவிமகளை தன் நீள்முகத்தில் ஏந்தி மேலே வந்தார். புவிமகளின் உடலொளியில் அவரது நிழல் இருளின் திரையில் விழுந்து உருவானவள் நான்” என்றாள் வராஹி.
“இங்கு பிறந்ததை நீ எய்துவாய் என்றறிக! ஆகவே வேள்விமுடிவில் எரியேறும் தூண் என நின்றெரிக! ஓம் அவ்வாறே ஆகுக!” என்று அருள்புரிந்து மறைந்தாள்.
ஹிரண்யாக்ஷனாகப் பிறந்த அவனை வதம் செய்ய வராக வடிவம் எடுத்த கதையை வராஹி சொல்கிறாள்.
தொடர்ந்து வந்த சாமுண்டி ஹிரண்யகசிபுவாகப் பிறந்த அவன் குடல் கிழிக்க நீலன் எடுத்த நரசிம்ம அவதாரத்தைச் சொல்கிறாள்.

மாபலியைப் பிறந்த அவனனப் பாதாள உலகம் அனுப்பிய வாமன அவதாரத்தை வைஷ்ணவி சொல்கிறாள்.
செந்நிழலாட்டமாக கருடன் மேலேறி சங்குசக்கரமேந்திய கைகளுடன் வைஷ்ணவி அவன் முன் தோன்றினாள். “இனியவனே, முன்பொருமுறை நீ இப்புவியில் மாபலி என்னும் மன்னனென பிறந்தாய். விண்ணவர் அஞ்ச மண்புரந்தாய். உன்னை வெல்ல மூன்றடி மண்கோரிவந்த வாமனன் அவன். விண்ணளந்த கால்தூக்கி உன் தலைமேல் வைத்தான். நீ மூன்றாவது அடியுலகாகிய சுதலத்தை அடைந்தாய். அங்கே மாபெரும் வேர்ப்பின்னலாக விரிந்து நிறைந்தாய். உன் வேர்களில் ஒன்று கவ்வியது மண்ணிலெழுந்து நின்ற கடம்பமரம் ஒன்றை. அதன்மேல் சாய்ந்து நின்று குழலூதினான் ஒரு சிறுவன். சுதி விலகியதால் சினந்தெழுந்து குழல்தாழ்த்தி என்னை எவரென்றறிவாயா என்றான் நீலன். ஆம் அறிவேன், ஆனால் நீ விண்ணளந்து எழுந்தபோதும் நான் அஞ்சவில்லை, இன்று மீண்டும் சிற்றுருவம் விரித்து விண் நிறைத்தாலும் அஞ்சேன் என்றாய்.”
ராவணனாகப் பிறந்து அவளைக் கவர்ந்தாய் என்று மகேஸ்வரி சொல்லும் தருணம் அழகுடன் மிளிர்கிறது.
எருதின் இளஞ்சீறல் ஒலியுடன் எழுந்து வந்தாள் மகேஸ்வரி. “மைந்தா, நீ முன்பொருமுறை இங்கே பத்துதலைகொண்ட இலங்கைவேந்தனாக பிறந்தாய். அவன் நெஞ்சமைந்த திருவை கவர்ந்துசென்று சிறைவைத்தாய். அவன் குரங்குப்படைசூழ வந்து உன் கோட்டையை வென்றான். அருள்கொண்டு அவனிட்ட வாளி உன் நெஞ்சை துளைத்தது. உன் விழிநிறைத்து அகம்புரந்த அத்திருமகளை மறுமுறைகாணலாகுமா என்று எண்ணி ஏங்கி உயிர்துறந்தாய்” என்றாள் தேவி. “தணியாத பெருங்காமம் தலாதலம் என்னும் அடியுலகில் விதைகளாகின்றது என்றறிக! அங்கே யுகங்களாக நீ செய்த தவத்தால் இன்று இவ்வடிவம் கொண்டாய். இவ்வில்லத்தில் அத்திருமகளை நாடி வந்து அமர்ந்திருக்கிறாய். உன் விழிநிறைத்து அவள் எழுவாள். நீ நிறைவாய்!”
கார்த்தவீரியனாக அவன் வந்த கதையை இந்திராணி சொல்கிறாள். இப்பிறவியில் யாதவனின் வளைச் சக்கரத்தால் வெல்லப்படுவாய் என்று அருள்கிறாள்.
கம்ச வதம் என்பதை வாழ்க்கையில் அழகான ஒன்றாக வாசித்தது ஜெயமோகன் எழுத்துக்களில் மட்டும்தான். அதைப் பிறிதொரு சூழலில் சொல்கிறேன். கம்சனாக அவன் பிறந்த அவனை நீலன் வென்ற கதையை கௌமாரி சொல்கிறாள்.

தொடர்ந்து இறுதியாக வந்து சொல்லும் பிராமியின் அழகிய சொல் தொடர் ஒன்றைச் அளிக்கிறாள்.
“…எஞ்சிய அத்தனை விழைவுகளும் வஞ்சங்களும் சினங்களும் கனவுகளும் திரண்டு இங்கு வந்திருக்கிறாய். உன்னை சிசுபாலா என்று அவன் தன் மணிநாவால் அழைப்பதை இறுதியாகக் கேட்பாய். இங்கு மறைந்து அங்கு ஒளியுடன் எழுவாய். அவ்வாறே ஆகுக!”
இத்தணை கலேபரம் முடிந்ததும் ஒரே ஒரு கணம் பாமாவை சிசுபாலன் நோக்குகிறான். அந்தக் கணத்தை வாசித்து முடிக்கையில் மெய் சிலிர்த்துவிட்டேன்.
முலையுண்டு மகிழ்ந்த மகவின் இளநகை என செவ்விதழ் விரிந்த தாமரை மேல் பூத்திருந்தாள். செம்பொன்னிறப் பாதங்களில் பத்து விழிமணிகள் சுடர்ந்தன. பொற்பட்டாடையின் அலைகளுக்குமேல் எழுந்தன பொற்றாமரைக் குவைகள். வலதுமேல்கையில் வெண்தாமரை விரிந்திருந்தது. இடதுமேற்கையில் அமுதக்கலம். அருளி அணைக்கும் இரு மலர்ச்செங்கைகள். முலையூட்டி முடித்து குனிந்து மகவை முத்தமிடும் அன்னையின் கனிந்த விழிகள். அது சிரிப்பதைக் கண்டு மலரும் சிரிப்பு. செம்பொன் உருகியது போல் ஒளிவிடும் மேருமுடிகள் நடுவே சூரியன் என அவள் முலைகளுக்கு மேல் சியமந்தகம் நின்றது. அவன் ‘அன்னை’ என்றான். அச்சொல் எஞ்சியிருக்க நினைவழிந்து நிலத்தில் விழுந்தான்.
வெண்முரசு

தொடர்ந்து ஒன்னரை வருடங்களாக வெளி வரும் இந்த தொடரில் வெளிக் கொணரப்படும் படிமங்கள்தான் எத்தணை? திரு ஜெயமோகன் அவர்களின் புனைவு இதற்கு புதிய பரிமாணத்தையும், திரும்பத் திரும்ப வேண்டும் என்று நாம் இறைஞ்சுகிற சுவையையும் அளிக்கிறது என்றால் மிகையல்ல. பதிவுக்காக சொல்லவில்லை நண்பர்களே. சட்டென்று இரண்டு அத்தியாயங்கள் எனக்குத் தோன்றுகின்றன
- கிருஷ்ணன் கோகுலத்தில் நிகழ்த்தும் பூதனை வதம்
- கிருஷ்ணன் மதுராவில் நிகழ்த்தும் கம்ச வதம்.
பழைய கதைதான். ஆனால் இந்த அத்தியாயங்கள் தரும் இலக்கியச்சுவையை வாசித்தால்தான் உணர முடியும்
பிரிதொரு நல்ல நிகழ்வில் சந்திப்போம் அன்பர்களே.
வளர்க பாரதம்.