“தலைவலி இப்போ இல்லை. சரியா போச்சு” என்ற அவளை அர்த்தமுடன் பார்த்து தன் படுக்கையைக் காட்டி “இப்படி வந்து உட்காரேன்” என்றான்.
சுமதி அவனை, அவன் கண்களைக் கூர்ந்து கவனித்தாள். அவன் கண்கள் விடுத்த அழைப்பைப் புரிந்து கொண்டாள்.
“வேணாம். நீங்க தூங்குங்க.”
“ஏன்?”
“வேணாம். எனக்கு வேணாம்.”
“கோவமா”
“நான் கோபப்பட முடியுமா? நான் உங்க சோத்தை சாப்பிடுகிறவள். உங்களுக்கு ஆக்கிப் போட்ட வீட்டைப் பார்த்துக்கிற வேண்டியவள். நான் எப்படி கோவப்பட முடியும்?”
சுமதியின் குரலில் இருந்த கடுமையும், சீற்றமும் அவனை நடுங்கச் செய்தன.
“நீ ஏதோ தப்பா புரிஞ்சிட்டு இருக்கே.”
“நான் எதையுமே புரிஞ்சுக்க விரும்பல”
இப்படியும் ஒரு சினேகிதி – பிரபஞ்சன்
விகடன் பிரசுரம் – டிசம்பர் 2014
நூலக முன்பதிவிற்கு –
தேசிய நூலக வாரியம் – http://www.nlb.gov.sg/newarrivals/item_holding.aspx?bid=201335321
தமிழக அரசு கன்னிமாரா தளம் வேலை செய்யவில்லை (எதுக்கு வேலை செய்யனும்?)
அலுவலகத்தின் அருகில் உள்ள வங்கிக் கிளையில் வேலை செய்யும் நவீனாவுடன் தொடுப்பு வைத்துக்கொள்கிறார் மணமான, ஒரு குழந்தைக்கு அப்பாவான எழுத்தாளர் மூர்த்தி. சகலமும் முடிந்த நிலையில் உறவினர் சேது குறுக்கிடுகிறார். நவீனாவும் அவரை மணக்க விரும்புகிறாள். இத்தணைக்குப் பிறகும் நட்பாய் தொடருவோம் என்று முடிவு செய்கிறார்கள், ஆனால் நவீனா விலகுவதைத் தாங்க இயலாத மூர்த்தி அவளைச் சீண்டப்போக, அவளது பழக்கம் சுத்தமாக நீன்று போகிறது.
இது அல்ல கதை. இரண்டாம் கதாநாயகி போன்று வரும் மூர்த்தியின் மனைவி சுமதி இறுதியில் பாயும் புலிப் பாய்ச்சலே கதை. இந்த சுமதி, பிரபஞ்சனின் பெண்ணீய ஐகான்களில் ஒருத்தி.
ஒரு வகையில் இப்படியாக ஒரு சினேகிதி என்கிற இந்த நெடுங்கதையை கன்னியாகுமரி (ஜெயமோகன்) குறுநாவலுடன் ஒப்பிடலாம். கதைக்களம் திரைப்படத்தைக் கொண்டது, வக்ரம் கொண்ட வில்லனைச் சுற்றி கதை போய் கொண்டிருக்கும். பிரபஞ்சனின் இந்தக் கதையைப் படித்துக்கொண்டிருக்கையில் ஜெயமோகனின் ப்ரவீணா நினைவில் வந்து கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் பிரவீணாவா சுமதியா என்று ஆகிறது. பிரவீணாவிற்குத் தடையாக இருந்தவன் ரவி. எனவே அவள் எளிதாக அவனை விட்டுப்போய்விட்டாள். சுமதிக்கு ஒரு குழந்தையும் இருந்து கொண்டிருப்பதால் சுமதி பிரவீணா அளவிற்கு ஓடமுடியாமல் போகிறது என்றாலும் – பிரவீணாவும் சுமதியும் போகும் திசை ஒன்றுதான்.
—
எந்த ஒரு கவுச்சியும், கலீஜும் இல்லாத ஆறு நெடுங்கதைகள். கதைகளைத் தொகுப்பாய் படிக்கையில் ஒரு துன்பம் என்ன என்றால் – படித்த கதையில் லயிப்பதா. அடுத்த கதை காத்துக்கொண்டிருக்கிறதே என்று விரைவதா என்பதே. ஆனால் இந்த சிறுகதை தொகுப்பில் லயிக்கலாம். அதனால்தான் வெறும் 200 பக்க சிறுகதைத் தொகுப்பிற்கு ஒரு வாரம் ஒருத்துக்கொள்ளவேண்டியதாகப் போய்விட்டது. அனேகமாக. ஒரு நாளைக்கு ஒரு கதை என்று 🙂
ஆறு கதைகளும் ஏதோ ஒரு வகையில் பணியிடத்தில் நிகழும் கதைகள். சுத்தபத்தமாக விரசமில்லாத எளிய கதைகள். அதனால் எளிதாக உள்ளே நுழைந்துவிடலாம். அனைத்து கதைகளிலும் பெண்ணீயம் தூக்கலாக நிற்கிறது (போனா போகுதுன்னு ஆணீயத்திற்கு ரெண்டு கதைகள். ஆண்களுக்கு 33 சதமாகவது கொடுத்திருக்கவேண்டும் அல்லவா!). ஜாதி, முதலாளித்துவம், மதம் பற்றிய சுறுக்கென்ற வாசகங்களை யாராவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
“இவ்வளவு பேசறேளே. உங்க பிள்ளை என்ன பண்றார்? பாட்டா விலே, வர்றவன் போறவன் காலைப் புடிச்சு செருப்பை மாட்டிண்டுதானே ஜீவனம் பன்றார்? பேண்டும் சர்ட்டும் போட்டுண்டா அது சக்கிலியன் வேலை இல்லேன்னு ஆயிடுமா? இதே சக்கிலியனை நாம தானே நாலு அடி தள்ளி நில்லுடான்னு சொன்னோம். இப்போ நாலு காசு கிடைக்குதுன்னு தெரிஞ்சப்போ, நாமதானே செருப்பை மாட்டி விடப் போறோம். பிராமணன் என்ன பிராமணன். நமக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?”
வர்க்கம் கதையில் காளிமுத்து வருகிறார். வேலை நிறுத்தத்தில் தொழிற்சாலை மூடப்பட்ட வறுமை காலத்தில், தனக்குக் கிடைத்த கோதுமை மாவை, சாசில்லாத தன் சகா வாசுதேவனுக்காக கொண்டு வந்து கொடுக்கும் இடமும், அதே வாசுதேவன் பையில் ஐம்பது ரூபாய் இருக்கும்போது, சங்கத்திற்கான சந்தா 5 ரூபாயை வலியுறுத்தி வாங்கிப்போகும் இடமும் – பிடித்திருந்தன.
குமாரசாமியின் பகல் பொழுது – படிக்க சுகமாக இருக்கிறது.
இப்படியாக ஒரு சினேகிதியில் வரும் வாசு, மூர்த்தியின் வீட்டிற்கு விருந்தாளியாக வரும்போது, சமையலறையில் புகும் இடம் மகளிருக்கு ரொம்பவே பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
“உங்களுக்கு எதற்கு சிரமம்?”
“சிரமமில்லை. சமைக்கிறது என்பது பொம்பளைங்க சமாச்சாரம் மட்டுமில்லை. முக்கியமாக அது ஆம்பளைங்க சமாச்சாரம். ஒரு பொம்பளை சமைச்சு ஒன்பது ஆம்பளைங்க சாப்பிடுவது பொம்பளைங்க சமாச்சாரமா என்ன?”
சுமதி சிரித்தாள். இப்படி ஆதரவான ஒரு வார்த்தையை அவள் என்றும் கேட்டதில்லை. அவள் நெகிழ்ந்து போனாள்.
…
“எது கேவலம்.. உயிர் வாழ்க்கைக்கு சோறு அவசியம். அப்படிப்பட்ட சமையல் கேவலமா? என்னைக் கேட்டா மூர்த்தி கதை எழுதுவதைக் காட்டிலும் சாம்பார் பண்ண உங்களுக்கு உதவுவது ரொம்ப முக்கியமானதுன்னு எனக்குத் தோணுது.”
சுமதி சிலுக்கென்று சிரித்தாள்.
“என்ன, சாம்பார்தானே வைக்கிறீங்க? தண்ணி சாம்பாரா, பருப்புச் சாம்பாரா? பச்சை மீளகாயைக் கிள்ளிப் போட்டு செய்ற சாம்பாரா அல்லது பருப்பை அரைச்சு விட்டுப் பண்ணும் சாம்பாரா?”
சுமதி வாயை மூடிக்கொண்டு சிரித்தாள்.
நாணல் மரங்கள் – சினிமாவைக் கதைக்களமாகக் கொண்ட கதை வெகு ஜோர். பிறகென்ன நடக்கும் என்பதை நம் கற்பனையிலேயே விட்டுவிடுவதால் பரிதாபமான நினைவுகள் எழுவதைத் தடுக்க முடிவதில்லை.