ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்


“ஏந்துரை? அவர் கிறிஸ்துவரா மாறிட்டாரா?” என்று கேட்டான் துரைக்கண்ணு,

“இல்லை மம்மாதான் கிறிஸ்டியன். அவர் எப்பவும் போல இருந்தார். பிள்ளையார் கோயிலுக்குப் போவார். ஹிந்து பிரேயர் ஸாங்…. எல்லாம் பாடுவார். என்னைக் கூடக் கிறிஸ்தவன் ஆக்கணும்னு மம்மா சொல்லிச்சுது. ‘அதெல்லாம் அவன் இஷ்டத்துக்கே விட்டுடணும்’னு பப்பா சொல்லிட்டார். ஸ்டில் ஐ ஹாவ் நோ எனி ரிலிஜன். எனக்கு மதம் இல்லே.”

“ஆனா சாமி கும்பிடுறியே..” என்று குறுக்கிட்டான் துரைக்கண்ணு.

“எஸ் அதுக்கென்னா? சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்”

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்

மீனாட்சி புத்தக நிலையம்
முதல்பதிப்பு ஏப் 1973, 16ஆம் பதிப்பு 2013
NLBயில் முன்பதிவு செய்ய – http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/FULL/EXPNOS/BIBENQ/5840851/3131072,1
கன்னிமாரா தளமும், தமிழக நூலக தளங்களும் வழக்கம்போல திறக்கவில்லை

image

சிங்கை தேசீய நாள் அன்று காலை சாப்பிட போனபோது பொட்டிக்கடையில் இருந்த இந்த நூல் என்னை அழைத்தது. ‘சரி வாங்கிப் பார்ப்போம்’ என்று வாங்கி, ‘சரி வாசித்துப் பார்ப்போம்’ என்று வாசித்தேன்.

ஹென்றி ஒரு கிராமத்துக்குள் நுழைகிறான். தினசரி பயணம், வேலை என்று இருப்பவர்கள் மத்தியில் ஹென்றி சுத்தபத்தமாக அந்நியனாக இருக்கிறான். ஆக இவன் ஒரு மனிதன்

அந்த ஊரில் ஒரு பாழடைந்த வீடு உள்ளது. ஒரு காலத்தில் பிள்ளைவாள் வாழ்ந்த இடம். பிள்ளைவாள் ஒருநாள் ஊரை விட்டு ஓடிவிடுகிறார். அதன் பின்னர் ஒரு நாவிதன் அந்த வீட்டு உத்தரத்தில் தூக்குப் போட்டுக்கொள்கிறான். ஆக.. இது ஒரு வீடு.

ஹென்றியின் கதை வாத்தியார் தேவராஜன், அவன் அக்கா அக்கம்மா, அக்கம்மா வீட்டு எடுபிடி மண்ணாங்கட்டி, லாரி டிரைவர் துரைக்கண்ணு, கிளீனர் பையன் பாண்டு, – இதெல்லாம் ஒரு உலகம்.

என்று நான் நினைத்தேன்.  ‘மடையா அப்படி இல்லை’ என்கிறார் ஜெயமோகன். கீழே அவரது குறிப்பைக் கொடுத்துள்ளேன். கதையை நான் சொல்வதற்கில்லை. நீங்களே படிச்சிக்கிடுங்க.

எனக்குப் பிடித்த பகுதிகளை மட்டும் ஆர்வம் உள்ளவர்களுக்காக சொல்லிக்கொண்டு வருகிறேன்.

ஹென்றி – சுத்தபத்தமாக அந்த கிராமத்துக்குள் அந்நியனாக இருக்கிறான். தோற்றத்தில். நடை உடை பாவனை மற்றும் பேச்சில்.

“கிளியாம்பா. கிளியாம்பா.. நீ பாக்கலியே அந்தச் சட்டைக்காரனை? இந்த அக்கம்மாளோட தம்பிகாரன் இட்டுக்கிட்டு வந்திருக்கான். அவுங்க வூட்டுக்கு விருந்தாடியாம்.. ஏண்டி பொண்ணே, சட்டைக்காரருன்னா பறையரு பள்ளரு போலத்தான்!.. வூட்டுக்குள்ளே வுடலாமா?”

“அது என்னாவோ போ. எனக்குத் தெரியாது”

“ஆமா.. இந்தக் காலத்திலே இதெல்லாம் யாரு பாக்கறாங்க?  படிச்சிப் பிடறானுவ…… நம்பூட்டுப் புள்ளைங்க போலவே சட்டை …. சராய் போட்டுக்கறானுவ….. அந்மாந் தொலைவு ஏன் போவனும்? இந்தப் பள்டத்திலே கூட ரெண்டு வாத்தியாருங்க கூடப் பறையருங்களாமே! அதில ஒரு வாத்திச்சி கூடவாம்..”

நெடுங்கதை தொடக்கத்தில் படிப்படியாக ஒரு சாகசச் கதையாக வேகம் பிடிக்கிறது.

“பரியாறி…. மீன்ஸ்…. பார்பர்… தானே? ” என்ற தனக்குத் தெரிந்ததையே தேவராஜனிடம் கேட்டுக்கொண்டான்.

“ஆமா, அவன் இந்த வீட்டுத் திண்ணையில்தான் எப்பவும் கெடப்பான்.. கொஞ்சம் பைத்தியம்.”

“ஹு இஸ் நாட் ‘கொஞ்சம் பைத்தியம்’ என்று லேசான சிரிப்புடன் அழுத்தம் தராமல் சொல்லிக்கொண்டான் ஹென்றி.

தொடர்ந்து ஹென்றியின் பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது. இவன் ஆத்திகனா நாத்திகனா? இந்துவா கிறித்தவனா? பிழைக்கத்தெரிந்தவனா பைத்தியக்காரனா? வாழ்வனுபவம் பெற்றவனா அரைகுறையா என்று நமக்குள் கேள்விகள் எழும்பிக்கொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

தேவராஜனின் நட்புக்காக குடிக்கிறான். அவன் வாழ்க்கைப் பிரச்சினை தெரிந்து நட்பு லட்சுமண ரேகை தாண்டாது  ஆலோசனை கூறுகிறான். சிறு பசங்களைக் கூட மதிக்கிறான். யார் வணககம் சொல்லும்போதும் கைகூப்பி வணக்கம் சொல்கிறான். சொத்து என்பது தேவையில்லை, என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறான். நிர்வாணமாக கிணற்றில் குளிக்கிறான். தானே முடி வெட்டிக்கொள்கிறான். ஒரு மகா உன்னத ஏகாந்தன்.

ஒன்றைக் கூறிக்கொள்ளவேண்டும். சென்னை சேரியோ, விளிம்பு நிலை மனிதர்களின் எதிர்மறை எண்ணங்களோ ஏதுமில்லை. எல்லாம் நேர்மறையாக நடக்கிறது இந்த கதையில்.

பளிச் என்று பிறரைப் பாராட்டுகிறான் ஹென்றி. ரொம்பவும் ஆங்கிலத்தனமாக நடந்து கொள்கிறான்.  எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிறான். ஓடுகிற ஆடு, கஞ்சா குடிக்கும் குப்பி, வெற்றுடம்புடன் குளிக்கும் நங்கை, இருண்ட பின் அமைதியாக இருக்கும் கிராமம், லாரி முன் சீட்டிலிருந்து ஓடும் சாலை, கிராமத்துப் பஞ்சாயத்து, பம்பரம் குத்தும் பசங்கள். எல்லாவற்றிலும் வேடிக்கைபார்த்துக் கொண்டே இருக்கிறான். இந்த நாவலின் முடிவில் இவன் திரும்ப கிளம்பிடுவான் என்பதே என் எதிர்பார்ப்பாக இருந்தது.

பிளாஷ் பேக்குகளாக வந்து போகும் ஹென்றியின் கதை இந்த நாவலிலேயே ஜோரான பகுதி. அவ்வப்போது சிறு சிறு பகுதிகளாக வந்து போகும் இந்தப் பகுதிகளை நான் ரசித்து ரசித்து வாசித்தேன்.

“எல்லாரும் இந்தியாவுக்கு ஓடி வந்தோம். மைக்கேலுக்கு நல்ல காயம். இவரை நான் முதுகுலே தூக்கிக் கிட்டேன். மம்மாவும் தலையில ஒரு பெரிய மூட்டையைத் தூக்கிக்கிட்டாங்க. எங்களை மாதிரி எவ்வளவோ பேர்.. ரயில், குட்ஸ், வண்டி, நடை எப்படியெல்லாமோ.. உயிர் பொழைச்சால் போதும்னு மனுஷங்க ஓடறப்போ அவன் எவ்வளவு நல்லவனா, அடக்கமானவனா, நெறைஞ்ச அன்பு உள்ளவனா இருக்கான் தெரியுமா…!”

“…….. அப்பாடான்னு மூச்சு விட்டோம். அவ்வளவுதான்… மறுபடியும் குண்டு விழுந்தது.”

“… மைக்கேல் அந்த நிலையிலே கூட உன்னைக் கொஞ்சினாரு.. நாங்க இந்தியாவுக்கு வந்து நீ நான் மம்மா மைக்கேல் நாலு பேருமா ஒரு குடும்பமா வாழறதுன்னுதான் வந்தோம். ஆனால் மைக்கேல் வழியிலேயே செத்துப் போயிட்டார். நல்ல மழை. எந்த ஊர்னு கூட தெரியாத இடம். நம்ப மாதிரி ரொம்ப பேர் அங்கே ஒ பாழடைஞ்ச வீட்டில தங்கியிருந்தாங்க. நாங்களும் போயி அங்க ஒதுங்கினோம். பாஷை, ஜாதி, தேசம்கிறது எல்லாம் எவ்வளவு அற்பமானதுன்னு தெரிஞ்சுது. அன்புதான் மகனே முக்கியம். ”

எவ்வளவு இலக்கிய நயமான நிகழ்வுகள் இருக்கட்டும். சாமான்ய மனிதர்களின் நட்புணர்வு மிகுந்த சம்பாஷனைகளை விட பெரிய சுவாரசியம் வேறில்லை. அது போன்ற ஒன்றுதான் சர்க்கரை வள்ளிக்கிழங்கு விற்கும் பெண்ணும் ஹென்றியும் உரையாடும் இடமும். அது ஒரு ரெண்டு பக்கம் போகும். இல்லை என்றால் அதனை முழுவதும் தட்டச்சு செய்துவிடுவேன். 🙂

“ஏந்துரை? அவர் கிறிஸ்துவரா மாறிட்டாரா?” என்று கேட்டான் துரைக்கண்ணு.

“இல்லை மம்மாதான் கிறிஸ்டியன். அவர் எப்பவும் போல இருந்தார். பிள்ளையார் கோயிலுக்குப் போவார். ஹிந்து பிரேயர் ஸாங்…. எல்லாம் பாடுவார். என்னைக் கூடக் கிறிஸ்தவன் ஆக்கணும்னு மம்மா சொல்லிச்சுது. ‘அதெல்லாம் அவன் இஷ்டத்துக்கே விட்டுடணும்’னு பப்பா சொல்லிட்டார். ஸ்டில் ஐ ஹாவ் நோ எனி ரிலிஜன். எனக்கு மதம் இல்லே.”

“ஆனா சாமி கும்பிடுறியே..” என்று குறுக்கிட்டான் துரைக்கண்ணு.

“எஸ் அதுக்கென்னா? சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்”

இது மாதிரி பேசறப்பவெல்லாம் ஹென்றிக்குள்ள ஜெயகாந்தனின் ஆவி வந்து புகுந்து கொள்ளும்.

துரைக்கண்ணு மொரட்டு சுபாவமாக தெரிவது போல் இருக்கிறான். நல்லவனாக, நல்ல அப்பனாக, நல்ல கணவனாக, நல்ல சகோதரனாக வந்து போகிறான்.

ஹென்றிக்கு அடுத்தபடியாக கதை முழுக்க தேவராஜன் வருகிறான். அவன் அவன் மனைவி அவன் பிரச்சினை என்று ஒரு டிராக் ஓடுகிறது.

பேபி – எண்ணி நான்கு இடங்களில்தான் வருகிறாள். சித்தபிரம்மை பிடித்து, ஆடையின்றி யார் கண்ணிலாவது தென்படுவாள். சட்டை செய்யாது மறந்துவிடுவாள். அவளுக்காக இரக்கப்படுகிறான் துரைக் கண்ணு. ஆனால் அவனது உதவியைக் கொள்ளும் அளவிற்கு அவளுக்கு நினைவு தெளிவில்லை. ஆனால் ஹென்றி பேச்சை மட்டும் கேட்கிறாள். பேபியின் அத்தியாயம் என்பது வாசிப்பவனை கற்பனைக்குள் தள்ளிவிட்டு முடிந்துவிடுகிறது. ஏன் அவள் அப்படிச் செய்தாள். ஆம். ஹென்றி நினைப்பது மாதிரி. அப்படி செய்யாதிருந்தால்தான் ஆச்சரியம்.

இதை வாசித்து 3 வாரம் முடிந்துவிட்டது. ஆனால் இன்றுதான் எழுத முடிந்தது.  நாவல் என்றவுடன் நாம் பிரியப்படுவதன் காரணம் அது தரும் வாசிப்பு அனுபவம். கதை என்பது ஒரு புறம் இருப்பினும், கதை பின்புலங்கள் தருகிற விபரங்கள் ஒரு நாவலுக்கு மிக முக்கியம். அது தரும விவரணை அந்த வாழ்க்கைக்குள் நம்மைக் கொண்டு சொல்லும்.

ஆக கதை மட்டுமே இருந்தால் அதை நாவல் என சொல்ல முடியுமா என்ன? நெடுங்கதை என்று வேண்டுமானால் சொல்லிக்கலாம். அவ்வகையில் இது ஒரு நெடுங்கதை.

இப்படி எண்ணிக் கொண்டுதான் இந்தப் பதிவை எழுதி முடிக்கும் வரை எண்ணியிருந்தேன். ஆனால் பிரசுரிக்கும் முன் ஜெயமோகனின் பின்வரும் குறிப்பை வாசிக்க நேர்ந்தது. ‘எதுக்கு அந்த கதை அமைப்பிற்காக அலட்டிக்கொள்ளவேண்டும்? என்ன சொல்ல வருகிறார் என்று அல்லவா பார்க்கவேண்டும்’ என்று அவர் கேட்பது உரைக்கிறது.

ஒருமனிதன் ஒரு வீடு ஓர் உலகம் நாவலின் நடையை, சம்பிரதாயமான தொடர்கதை அமைப்பை ‘மன்னித்து விட்டு’ அதை வாசியுங்கள். அது ஒரு முக்கியமான கருத்துவிவாதத்தைத் தொடங்கிவைப்பதைக் காணலாம். பல்லாயிரமாண்டு பழைமையான இந்திய ஆன்மீகத்தின் முன் அது ஒரு புதிய ஆன்மீகத்தை முன்வைக்கிறது.

அந்நாவல் வெளிவந்த காலகட்டத்தை நீங்கள் பார்க்கவேண்டும். உலகமெங்கும் ஹிப்பி இயக்கம் வலுவாக உருவான காலம் அது. உலகப்போர்களின் சோர்வில் இருந்து அரசியலமைப்புகள், சமூகஅமைப்புகள் ,சிந்தனை அமைப்புகள் அனைத்திலும் நம்பிக்கை இழந்துபோன ஒரு தலைமுறை உருவாகியது. அவர்களுக்கான அராஜ இலக்கியமும், கட்டற்ற கலையும், பித்தெடுத்த இசையும் உருவாயின. அந்தத் தலைமுறையை நோக்கிப் பேசுகிறது அந்த நாவல்.

அதன் மகத்தான தலைப்பு அந்த தரிசனத்தைச் சொல்கிறது. ஒரு மனிதன் -> ஒரு வீடு – > ஓர் உலகம். ஆம் ஒரு மனிதனே ஓர் உலகமாக ஆகமுடியும். அவன் உலகை அவனே உருவாக்க முடியும். ஹென்றி ஒருவகை ஹிப்பி. ஆனால் கொஞ்சம்கூட எதிர்மறைப்பண்பு இல்லாத மனிதாபிமானியான ஹிப்பி. நம்பிக்கையும் பிரியமும் கொண்ட ஹிப்பி. அவனுக்குள் உள்ள ஒளியால் தன் உலகையே அவன் ஒளியாக்கிக் கொள்கிறான்

அன்றைய தலைமுறைக்கு ஜெயகாந்தனின் பதில் அது. காம்யூவின் அன்னியனுக்கும் காஃப்காவின் கரப்பாம்பூச்சிக்கும் ஜெயகாந்தன் வைக்கும் மாற்று ஹென்றி.

அந்த வாசிப்பு ஜெயகாந்தனை அப்படித் தவிர்த்துவிடமுடியாதென்பதைக் காட்டும். அப்படி மொழிநடையை, புனைவுமுறையைக் கற்பனையால் தாண்டிக் காலத்தால் அழியாமல் எஞ்சியிருக்கும் தரிசனத்தையும் கவித்துவத்தையும் கண்டுகொள்ளமுடிந்தால் மட்டுமே நீங்கள் உலகின் செவ்வியல் படைப்பாளிகளை வாசிக்கமுடியும்

ஜெயகாந்தன் பழையவராகிவிட்டாரா? –
ஜெயமோகன் – http://www.jeyamohan.in/35572#.VeHAvJekM-0

தொடர்புடைய பிற பதிவு –

சிலிகான் ஷெல்ஃப்

image

வாழ்க பாரதம்.

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s