வெண்முரசின் துரியோதனன்


வெண்முரசின் இந்திர நீலம் நாவல் 92 அத்தியாயங்கள் மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு இந்த வாரம் நிறைவடைந்துள்ளது. ஏற்கனவே வந்த நாவல் நீலம் கிருஷ்ணன், ராதை, கம்சன், வசுதேவர் ஆளுமைகளைக் காட்டியது. உள்ளே புகுந்து கொள்ள சற்று நம்மை ஆசுவசுப்படுத்திக்கொள்ள வேண்டி வந்தது. இந்திர நீலமும் கிருஷ்ணனைப் பற்றியதுதான் என்றாலும் இதன் பார்வைக் கோணம் என்பது வேறு.

  • துவாரகை நகரம் – எழுச்சியும் தோற்றமும்
  • துவாரகையின் வணிகம்
  • துவாரகையின் அரசியல்
  • அரசியலும் காதலும் கலந்த 8 திருமணங்கள் – பெண் எடுத்தல், பெண் கவர்தல் என்று ஒவ்வொன்றும் தரும் உறவும் பகையும்
  • சியமந்தகம் போடும் ஆட்டமும் முடிவும்
  • அரசிகளுக்கிடையேயான ‘நீ முந்தி நான் முந்தி’ பொறாமைகளும் அதன் முடிவும்.

நிறைவுற்றது என்னவோ கிருஷ்ண காதை என்றாலும், நான் இக்கணம் எழுத விளைவது இது வரை வந்த துரியோதனன் பற்றியே. இப்போது எழுதுவது சரியானதாகவும் இருக்கும் ஏனென்றால் இன்னும் இந்திரப் பிரஸ்தம் எழவில்லை. எழுந்த பின் வஞ்சமும் சூதும் வந்த பின் இதே பதிவை திரும்பப் படிக்க சுவையாக இருக்கலாம்.

Duryodhana (c) respective artist
Duryodhana (c) respective artist

மித்திர விந்தையின் மணத் தன்னேற்பில் இருந்து தொடங்குவோம். மிந்திர விந்தையைத் துரியோதனனுக்கு மணம் செய்ய விரும்புகிறார்கள் அவளது சகோதரர்கள். துரியோதனன் மட்டும் வெல்லும் வண்ணம் கதாயுத போருக்கு ஏற்பாடு செய்கிறார்கள். கதையில் துரியோதனனை வெல்லும் வல்லமை படைத்தவர்களுக்கு தாமதமாக அழைப்பு சேரும் வண்ணம் கிசும்பு வேலை செய்கிறார்கள்.

அழைப்பைத் தாமதமாகப் பெற்ற துவாரகை என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறது. மித்திர விந்தையை கிருஷணன் மணமுடித்தாகவேண்டும். ஆனால் இருக்கும் கொஞ்ச நாட்களுக்குள் உஜ்ஜயினி சென்று மணந்தாகவேண்டும் என்று அக்ரூரரும், பலராமரும் சொல்ல, சுபத்திரையைக் கூட்டிக்கொண்டு அவந்தி நாட்டுக்கான பயணத்தை மேற்கொள்கிறார் கிருஷ்ணர்.

அங்கே தகிடு தத்தங்களை ஆடிவிட்டு சுபத்திரையை விட்டு மித்திர விந்தையைக் கவர்ந்து மன்றுக்கு வந்து சவால் விடுகிறார். எப்படி? கதாயுதப் போர்தானே. எனக்குப் பதிராக என் தங்கை சுபத்திரை கதாயுதப் போட்டியில் பங்கு பெறுவாள். அவளை எதிர்ப்பவர்கள் எதிர்க்கலாம் என்று மறைமுகமாக துரியோதனனை நோக்கி அறைகூவல் விடுக்கிறார்.

சுபத்திரை துரியோதனரை நோக்கி நின்றாள். அவர் தன் மடியில் இரு கைகளையும் வைத்தபடி விழிஅசையாமல் அமர்ந்திருந்தார். “ம்ம்” என்று சுபத்திரை மீண்டும் அறைகூவினாள். அவ்வொலியால் உடலசைவுற்ற துச்சாதனர் தன் தமையனை நோக்கிவிட்டு அவளை நோக்கினார். காற்றில் கலையும் திரைஓவியம் போல பெருமூச்சுடன் எழுந்த துரியோதனர் தன் சால்வையை தோளில் சீரமைத்துக்கொண்டு கைகூப்பி “யாதவ இளவரசியை வணங்குகிறேன். கதாயுதநெறிகளின்படி நான் பெண்களுடன் போரிடுவதில்லை” என்றார். “மேலும் தாங்கள் என் ஆசிரியரின் தங்கை. இங்கு இப்பெருங்கதையை தாங்கள் தூக்கிய முறைமை எனக்கு மட்டுமே என் ஆசிரியர் கற்றுத்தந்தது. சுழற்சிவிசையை ஆற்றலென்றாக்கும் வித்தை அது.”

சுபத்திரை தலைவணங்கினாள். “தங்கள் பாதங்களை என் ஆசிரியருக்குரியவை என்றெண்ணி வணங்குகிறேன் இளவரசி. அவையில் தாங்கள் வென்று முதன்மை கொண்டதாக அறிவிக்கிறேன்” என்றார் துரியோதனர். துச்சாதனர் எழுந்து “எந்த அவையிலும் என் மூத்தவர் சொல்லே இறுதி. இளவரசி வென்றிருக்கிறார்” என்றார். மறுகணம் மன்றென சூழ்ந்திருந்த மானுடத்திரள் ஒற்றைப்பெருங்குரலென ஆயிற்று. “வெற்றி! யாதவ இளவரசிக்கு வெற்றி. அவந்திமகள் அரசியானாள். குலமே எழுக! சூதரே சொல் கொள்க!” என எழுந்தன வாழ்த்தொலிகள்.

சுபத்திரை கதாயுதத்தை சுழற்றி மண் அதிர தரையில் வைத்தாள். “மூத்த கௌரவரே, என் ஆசிரியரின் முதல் மாணவரென எனக்கும் நீங்கள் நல்லாசிரியர். தங்கள் கால்களை பணிகிறேன். தங்கள் வாழ்த்துக்களால் நானும் என்குலமும் பொலிவுறவேண்டும்” என்றாள். கைகூப்பி அருகணைந்து துரியோதனரின் கால்களைத் தொட்டு வணங்க அவர் திரும்பி தன் தம்பியை நோக்கினார். துச்சாதனர் பரபரக்கும் கைகளால் கச்சையிலிருந்து எடுத்து அளித்த பொன்நாணயங்கள் மூன்றை அவள் தலையில் இட்டு வாழ்த்திய துரியோதனர் “நீங்கா மங்கலம் திகழ்க! நிகரற்ற கொழுநரையும் அவரை வெல்லும் மைந்தனையும் பெறுக! என்றும் உம் குலவிளக்கென கொடிவழியினர் இல்லங்களில் கோயில்கொண்டமர்க!” என்றார்.

87வது அத்தியாயத்தில் வரும் இந்த சுவையான நிகழ்வை வாசிக்க இங்கே தட்டலாம் –
நூல் ஏழு – இந்திரநீலம் – 87 – பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 12

நண்பர்களே, தான் வெல்லவேண்டிய கதைப் போட்டியில் கிருஷ்ணன் தன் தங்கையை விட்டு சண்டை போட வைப்பது எத்தணை சரி எத்தணை தவறு என்பதே வாதத்திற்குரியது.

கிருஷ்ணன் பயன்படுத்தும் சக்கராயுதமும் வாதத்திற்குரியதே. நிகரென உள்ள இருவர்களுக்கிடையே நடப்பதே போட்டியும் போரும். சக்கராயுததைத் கிருஷ்ணன் மட்டும் வைத்திருந்திருந்து எதிரில் வருபவர்களுடன் மோதாமல் ஒரே அடியாக சீவுவது என்பது முறையா? War Engineering Ethics படிக்காதவர் கிருஷணன் என்று சொல்லிக்கலாம் அல்லவா 🙂

அது போகட்டும், ஏற்கனவே எழுதிய வெண்முரசு பதிவுகளிலும் பதிந்தது போல, ஒரு Gentleman கணக்காகவே துரியோதனன் இதுவரை படைக்கப்பட்டுள்ளான்.

எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன்

குந்தி தருமனை நாடாளவைக்கவேண்டும் என்று சபையில் வாதிடும் இடம் வெண்முரசு நாவலின் முக்கிய கட்டங்களில் ஒன்று. ‘என் மகன் நாடாளவேண்டும் என்பதற்காக கேட்கவில்லை. ஆனால் மறைந்த கணவரிடம் நீ தற்காலிய மன்னன் என்றே சொல்லப்படவில்லை. தான் மன்னன்தான் என்ற நினைவுடன்தான் அவர் இறந்திருக்கிறார்’ என்று தர்க்கப்பூர்வமாக வெல்கிறாள். உண்மை என்ன என்று திருதராஷ்ட்ரனுக்கும், பீஷ்மருக்கும் ஏன் குந்திக்கும் கூட தெரியும். இருந்தாலும் இது சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி வெல்வதுதானே. துரியோதனனுக்கு உள்ள அல்வா போன்ற வாய்ப்பு தகர்ந்து போனதில் துரியோதனனுக்கும், அவனது அன்னை மற்றும் சித்திகளுக்கும் கோபம் வருவது இயற்கை. அப்படி கோபம் வந்து சித்தி ஒருத்தி கூக்குறளிடுகிறார். ‘யார் திரையை விட்டு வெளியே வந்து இனி ஒரு சொல் சொன்னாலும் அவள் தலையைய வெட்டி வீழ்த்து’ என்கிறார் திருதராஷ்டிரர். உடன் வாலை உருவுகிறான் துரியோதனன். சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்துவது சிறந்த ஆளுமையா, மனைவியை வெட்டு என்று கணவன் சொல்வது சிறந்த ஆளுமையா, அன்னையென்றும் பாராமல் வெட்ட வாளெடுப்பது சிறந்த ஆளுமையா என்கிற கேள்வியை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.

துரியோதனன் பானுமதி திருமணத்தை எடுத்துக்கொள்வோமே. பானுமதிதான் தன்னைக் கவர்ந்து செல்ல துரியோதனனுக்குத் தூது விடுகிறாள். அதன் பொருட்டு அவளைக் கவர கர்ணன் மற்றும் பூரி சிரவசுடன் வருகிறான் துரியோதனன். அங்கு வந்து இடை மறித்து, பூரி சிரவஸ் பராக் பார்க்கும் ஒரு சில நேரத்தில் பீமன் அவனைத் தாக்கி பானுமதியின் தங்கையைக் கவர்கிறான் (பானுமதிக்காக வந்தவன்தான், அவள் தங்கையுடன் திரும்பினான்).

சகதேவனுக்காக பேசியுள்ள பெண்ணைக் கவர்ந்து வந்து மணமுடித்துக்கொள் என்கிறான் கர்ணன். துரியோதனன் மறுக்கிறான். கவர முடியாது என்பதற்காக அல்ல. பானுமதி மேல் உள்ளள பிரியத்தினால். பானுமதி இருக்க எதற்காக இன்னொருத்தி என்பது அவனது மறுப்பின் காரணம். என்றாலும், கர்ணன் துரியோதனனின் அரசியல் எதிர்காலத்ததை முன்னிட்டு, துரியோதனனின் விளைவாகவே திருதராஷ்டிரனிடம் இந்த பெண் கவர்தலைப் பற்றிச் சொல்ல- அங்கே ஒரு சிறு பூசல் நிகழ்கிறது. ‘பாண்டவனுக்காக பேசப்பட்ட பெண்ணைக் கவரவேண்டும் எப்படி நினைப்பாய்’ என்று வெகுண்ட திருதராஷ்டிரர் துரியோதனன், துச்சாதனன், கர்ணனைத் துவைத்துப் போடுகிறார் (அரக்கு மாளிகை உண்மை திருதராஷ்டருக்குத் தெரியும். அதன் கோபத்தைத்தான் இப்படிக் காட்டுகிறார் என்று மறைமுகமாக ஜெயமோகன் சொல்லிச் செல்கிறார்). ஆக, அவன் விளையாத பெண்ணுக்காகவும் தந்தையிடம் அடி வாங்கும் தருணத்திலும் – வாங்கிக்கொள்கிறான்.

மித்திர விந்தையை மணக்கவேண்டும் என்கிற கோரிக்கை வரும்போதும், பானுமதி விரும்பினால் பார்க்கலாம் என்றுதான் சொல்வதாக கதை வருகிறது. அரசியல் காரணமாக பானுமதிதான் இதற்கு அனுமதி அளிக்கிறாள். அதைத் தொடர்ந்து மேலே சொல்லப்பட்ட மணத் தன்னேற்பு கூத்துகள் நடந்து முடிகின்றன.

துரியோதனன் சுபத்திரையின் அறைகூவலை மறுக்கும் இடம் அவனை உயர்த்திக் காட்டுகிறது. பீமனே அவனுடன் போர் புரிந்தாலும் நிகரென போட்டி முடிகிறது. ஆக சுபத்திரையை வெல்லும் வாய்ப்பு அவனுக்கு உள்ளது. என்றாலும் பெண் என்பதால் மறுக்கிறான். மறுப்பான் என தெரிந்துதான் கிருஷ்ணன் இந்த கேப் மாறித்தனத்தைச் (நல்ல தமிழில் – நெறிகளை மீறி) செய்கிறான்.

ஒவ்வொரு திருமணம் நிகழும்போதும், பானுமதியின் பால் துரியோதனன் கொண்ட அன்பு எனக்கு ஒரு கணம் மனதில் தோன்றி மறைகிறது. திரவுபதியை மணந்த பாண்டவர்கள் அனைவருமே இரண்டாவது மூன்றாவது திருமணம் செய்து கொள்கிறார்கள். பீமன் பானுமதியின் தங்கையைக் கடத்துகிறான். பீமன் கடத்தி வரும் இன்னொரு பெண்ணை தருமன் திருமணம் செய்து கொள்கிறான் (வெறுப்பேற்றுவதில் தருமனை மாதிரி ஒருவன் பிறந்து வரவேண்டும்!!!). திரவுபதியுடன் முதலிரவு நடக்கும் சில நேரம் முந்தி திரவுபதியின் தோழியுடன் புணர்கிறான் அர்ஜுனன். கிருஷ்ணன் கேட்கவே வேண்டாம் – அஷ்ட லட்சுமிகள்.

துரியோதனன் பிழை செய்யவில்லை என்று நாம் சொல்வதற்கில்லை. நடக்கும் ஆட்டத்தில் அவன் மனிதாபிமானம் உள்ளவனே. இன்னும் ஆட்டம் நடக்கப்போகிறது. பார்ப்போம்.

இன்றென் அருகில் இரு. இங்கு நீ மட்டுமென இரு. இனியேதுமில்லையென்றாகு. இவையனைத்தும் என மேவு. கடந்துறை. கரந்துள யாவையும் என நிறை. நீ இது. நீயே அது. நீயே இங்கு நின்று உன்னை நோக்கி விழிதிகைத்திருக்கிறாய். உன் சொற்கள் இறுதியொளியுடன் மறைந்த ஊமைத்தொடுவானில் செவ்வொளிக் கதிர்களுடன் தோன்றுகிறாய். நீலவட்டம் தகதகக்க ஏழ்புரவித்தேரில் எழுந்தருள்கிறாய். உன் கண்ணொளியால் புடவி சமைக்கிறாய். நீ நிறைத்த மதுக்கிண்ணத்தை எடுத்து நீயே அருந்துகிறாய். இங்குள யாவும் உன் புன்னகை.

வாழ்க பாரதம்

One thought on “வெண்முரசின் துரியோதனன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s