‘அது உளிதானே’
‘சிவனுக்கு ஏது உளி? இது மளுவாக்கும்’
சிவனின் கால்களும் இடுப்பும் உருவாகி வந்தன. சிவனின் நெஞ்சுக்குழி மீது காளி தன் காலைத் தூக்கி வைத்திருந்தாள். கட்டைவிரலால் நெஞ்சுக் குழியை ஆழமாக அழுத்தியிருந்தாள். சிவன் இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியிருந்தார். கண்கள் மூடியிருந்தன.
‘உறங்குதாரா?’
‘ஏமான் அது தியானமுல்லா? தியானமில்லாம கலை உண்டுமா?’
‘காளி எதுக்கு சவிட்டுதாங்க?’
‘அது அனுக்ரமாக்கும்… சிவனுக்க நெஞ்சில குளியக் கண்டுதா? அங்கிணயாக்கும் அக்கினி இருக்கப்பட்டது.’
‘எங்க?’
வெண்கடல் – ஜெயமோகன்
வம்சி பதிப்பகம்
- NLB முன்பதிவு செய்ய – venkatal
- கன்னிமாராவில் முன்திவு செய்ய – காணோம்.
- இணையத்தில் வாசிப்பதற்கான தொடுப்புகளை இந்த பதிவின் ஒவ்வொரு கதைக்கும் கீழேயே கொடுத்துள்ளேன்.
பரிந்துரைக்கப்படவேண்டிய ஒரு சிறுகதைத் தொகுப்பு. அறம் சிறகதைத் தொகுப்பின் தொடர்ச்சி என்று பதிப்பாளர் குறிப்பு இருக்கிறது. அனைத்துக் கதைகளும் சிறப்பானதாக இருக்கிறது என்றாலும், வெவ்வேறு கதைக் களங்கள் என்பதால் வர்ணமயமான தொகுப்பு என்றும் சொல்லலாம்.
இந்த புத்தகம்னா தோன்றக்கூடிய கதைகள் என்ன என்று என்னையே கேட்டுக்கொண்டால் – பின்வருபவை தோன்றுகின்றன.
- அம்மையப்பம்
- கைதிகள்
- வெண்கடல்
- தீபம்
- வெறும் முள்
பிழை
இணையத்தில் வாசிக்க –
காசியில் சுத்தித்திரிபவனுக்கும், அங்கே புதிதாக வந்திருக்கும் ஒருவனுக்கும் இடையேயான உரையாடல். பரிபூரணம் என்பது ஒரு உணர்வு. அது தானாக அமைவது. இறைவன் விருப்பத்தினால் அமைவது என்றும் எடுத்துக்கொள்ளலாம். அந்த பரிபூரணத்தை வலியேக்க சமைப்பது என்பது எப்படி? இந்தக் கதையைப் படித்து முடிக்கையில் நாம் இவ்வாறு பரிபூரண மகிழ்ச்சியாக செய்த செயல்திட்டங்கள் தோன்றலாம். அந்த பரிபூரணத்திலும் ஒரு நெருடல் இருக்கத்தானே செய்யும்?
கைதிகள்
இணையத்தில் வாசிக்க – கைதிகள் [சிறுகதை]
இந்தக் கதையைப் படித்துவிட்டு பதிவின் பேஸ்புக் பக்கத்தில் நக்சலைட் ஜெயமோகன் என்று எழுதினேன். பதைபதைக்க வைக்கும் கதை. நம்மைப் போன்றே ஒரு சிறு குருவி பதைபதைக்கிறது. அங்கே சிட்டுக்குருவியாக வருவது ஜெயமோகனோ கதாபாத்திரங்களோ அல்ல, வாசிப்பவன்தான்.
இப்டி ஒரு பேரு அவனுக்கு இருக்குன்னா அவனுக்கும் இதே மாதிரி ஒரு பிரியம் இவங்க மேல இருக்கணும்டா… ஒரு வழி இருக்கு. அதுக்கு ஆப்பரேஷன் ஸ்மோக்குன்னு பேருன்னார். பாம்ப புடிக்கறதுக்கு இருளர் பயக்க பொந்திலே பொகை போடுவானுங்க இல்ல, அதே டெக்னிக்கு. நேரா நாலு நியூஸ் பயக்களை வரச்சொல்லி பேப்பரில தெனமும் வகை வகையா எளுதவச்சாரு. போலீஸ் கொடுமை, போலீஸ் சித்திரவதை,. அப்புவைத் தேடி போலீஸ் கிராமவாசிகளை அடிச்சு கொன்னிருக்காங்க. பொம்புளப் புள்ளைகளக் கொண்டு போயிக் கற்பழிக்கிறாங்க. பொச்சில ஆசிட்ட விடுறாங்க. தெனம் நியூஸுதான். பத்தே நாளு. நேரா வந்து நிக்கறான்…
அம்மையப்பம்
இணையத்தில் வாசிக்க –அம்மையப்பம் [புதிய சிறுகதை]
புன்னகைத்துக்கொண்டே படித்தேன் நண்பர்களே. என்ன ஒரு கதை. கதைக்குள் கதைகள். ஒரு நிமிடம் ஆசாரியை சிவனாகவும், ஓடிப்போன அவரது சம்சாரத்தை காளியாகவும் நினைத்துக்கொண்டேன். :-). அவர் செய்த ஏணியைப் பார்த்து வேலைக்காரி, ‘இது எதுக்கு சறுக்கி விளையாடுறதுக்கா’ என்று கேட்கும் ஒரு கேள்வியில் குபீர் என சிரித்துவிட்டேன்.
‘அது உளிதானே’
‘சிவனுக்கு ஏது உளி? இது மளுவாக்கும்’
சிவனின் கால்களும் இடுப்பும் உருவாகி வந்தன. சிவனின் நெஞ்சுக்குழி மீது காளி தன் காலைத் தூக்கி வைத்திருந்தாள். கட்டைவிரலால் நெஞ்சுக் குழியை ஆழமாக அழுத்தியிருந்தாள். சிவன் இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியிருந்தார். கண்கள் மூடியிருந்தன.‘உறங்குதாரா?’
‘ஏமான் அது தியானமுல்லா? தியானமில்லாம கலை உண்டுமா?’‘காளி எதுக்கு சவிட்டுதாங்க?’
‘அது அனுக்ரமாக்கும்… சிவனுக்க நெஞ்சில குளியக் கண்டுதா? அங்கிணயாக்கும் அக்கினி இருக்கப்பட்டது.’
‘எங்க?’
கிடா
இனிய ஒரு காதல் கதை. குசும்பான தலைப்பு.
இணையத்தில் வாசிக்க – கிடா [புதிய சிறுகதை]
‘என்ன அங்க, கெடாகிட்ட ஒரு வீரம்?’
‘என்னது?’
அவள் சிரித்து ‘நான் பாத்தேன்…’ என்றாள். பற்கள் வெண்முல்லைச்சரம் போல பளிச்சென்று இருளுக்குள் மலர்ந்தன.
அவன் கோபத்துடன் ‘ஒண்ணுமில்ல’ என்றான்.
‘பயப்படாதீங்க. கெடாதான் முட்டவரும். கெடாக்கறி ஒண்ணும் செய்யாது’

தீபம்
எளிய கதை தரும் உணர்வெழுச்சியை அனுபவிக்க..
இணையத்தில் வாசிக்க – தீபம் [புதிய சிறுகதை]
‘உக்காந்திட்டுப் போலாமே’
‘இல்ல’
‘எப்பவாச்சும் வாறது. வந்தாலும் சரியாப் பாக்கக்கூட முடியறதில்ல’
‘நீங்க அங்க நின்னு பாத்துக்கலாம்… நாங்க எங்க பாக்கறோம்? எப்ப வந்தாலும் இருட்டயில்ல பாத்துட்டுப் போறம்…?’
‘சாமியக்கூட இருட்டிலதான் பாக்கறீய’
‘சாமிய வெளக்கு கொளுத்திக் காட்டுறாங்களே’
‘வெளக்குல காட்டினா கும்பிடுவீங்களாக்கும்?’
வெறும்முள்
இணையத்தில் வாசிக்க – வெறும்முள் [புதிய சிறுகதை]
படித்து முடிக்கையில் மனம் கணத்துக் கிடக்கிறது. ஐசக், அவனுடைய கிழிந்த துணிகள், பிளாஷ்பேக்கில் வரும் குழந்தை கொலைகள், கொலையுண்ட குழந்தைகளின் துணிகளுக்கான நஷ்ட ஈடு என்று தொடர்பற்ற சரடுகள், தொடர்புள்ளவையாக ஆக்கிக்கொண்டு வாசிப்பவனின் மனதை அசைத்துப் பார்க்கும். கதை முழுக்க ஒரு sepia வர்ணத்தில் என் மனதில் ஓடியது.
அதை பாதி முடித்திருக்கையில் கிறுக்கு ஐசக் வீக்கம் மண்டிய கால்களை இழுத்து இழுத்து வந்து மதுக்கடை வாசலில் நின்றான். அவன் உடம்பில் பாலைவனக் காற்று மரங்களில் கொண்டு சுற்றிய கந்தல் சுருள்களைப் போல கிழிந்த உடைகள் இருந்தன. கையில் ஒரு பெரிய துணிமூட்டை. அதற்குள் அவன் கையில் கிடைத்த கந்தல் துணிகளை எல்லாம் எடுத்துச் சேர்த்துக் கொண்டே இருப்பான். பிரம்மாண்டமான மூட்டை அது. அதைச் சுமந்தே அவன் கால்கள் வீங்கிவிட்டன. ஆனால் அவன் அதைக் கீழே வைப்பதில்லை. தூங்கும்போது கூட அவன் மடிமீது அது இருக்கும்.
குருதி
நிலத் தகறாரு. சேத்துக்காட்டார் விஸ்வரூபமாய் எழுந்து நிற்கிறார்.
இணையத்தில் வாசிக்க – குருதி [புதிய சிறுகதை]
‘டேய், என்னடா மொறைக்கிறே’ என்றான் சங்கரப்பாண்டி
சுடலை பார்வையைத் திருப்பிக் கொண்டார். கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
அப்போது சேத்துக்காட்டார் எழுந்து வந்தார். ‘டேய் உன் சொந்த அவனுக்குக் குடுத்திட்டு அந்த சொந்த நீ எடுத்துக்க’ என்றார். நிதானமான கனத்த குரல்.
நிலம்
இதுவும் நிலம் பற்றிய கதைதானா என்று ஆரம்பத்தில் தோன்றும். ஆனால் முடிச்சை கடைசியில் வந்து பண்டாரம் அவிழ்ப்பார்.
இணையத்தில் வாசிக்க – நிலம் [புதிய சிறுகதை]
பின்பக்கம் பண்டாரம் மெல்லிய குரலில் ‘எலே , நீயும் அய்யனாரா? அரிவாளோட நிக்கே?’ என்றார்.
சேவுகப்பெருமாள் திரும்பிப் பார்த்தான்.
பண்டாரம் ‘அத வச்சுக்கிட்டுக் கும்பிடுலே…’
சேவுகப்பெருமாள் பேசாமல் கூர்ந்து பார்த்தான்.
‘அந்த நம்பிக்க இல்லேன்னா எதுக்கு அய்யனார கும்பிடுதே? அந்த அரிவாள நாட்டிக் கும்பிடுறதுதானே?’
நீரும் நெருப்பும்
காந்தியின் சுய மருத்துவ பரிசோதனை
பைராகி திரும்பியதும் பாபு மெலிந்த குரலில் ‘மகராஜ்’ என்றார். பைராகி திரும்பினார்.
‘இந்த தேசமும் என்னைப் போலத்தான் கிடக்கிறது. மரண விளிம்பில். அதை அழியாமல் வைத்திருப்பது ஒரு மெல்லிய ஏக்கம் மட்டும்தான். அல்லது ஒரு மங்கலான கனவு’
‘ஆம்… அதை சாம்பல் மூடிய நெருப்பு என்று சொல்வேன்’ என்றார் பைராகி. ‘இங்கே எழ வேண்டியது நெருப்புதான்… இந்த தேசம் ஒரு வேள்விக்குண்டமாக எழுந்து எரிய வேண்டும்…. இங்குள்ள அனைத்துக் கீழ்மைகளையும் தின்று தழல்கள் ஓங்கவேண்டும்….’
வெண்கடல்
சுவையான ஒரு நாட்டு மருத்துவ கதை, பெண்ணீயப் பூச்சுடன்.
இணையத்தில் வாசிக்க – வெண்கடல் [புதிய சிறுகதை]
‘பெண்ணடியாளுக்க வலியக் கண்டா ஆணாப் பிறந்ததே பாவம்ணு தோணிப் போயிரும்’ என்றான் குமரேசன்.
‘ஆணுக்கு அந்த மாதிரி வலி இல்லியா?’ என்றேன்.
‘இல்லியே… இருந்தா இந்த உலகம் இப்பிடி நாறக்கூதறயா இருந்திருக்குமா? ஒரு மரியாதியும் சினேகமும் எல்லாம் இருந்திருக்குமே’ என்றார் அப்பு அண்ணா.
விருது
எனக்கு இந்தக் கதையின் பின்புலம் சரியா விளங்கலை. யாரையாவது கேக்கனும்.
இணையத்தில் வாசிக்க – விருது [புதிய சிறுகதை]
‘ம்ம்?’ என்றபின் சதனம் ராமன் நாயர் எச்சிலை அங்கிருந்த கோளாம்பியில் துப்பி ‘வா’ என்றார்.
அப்பா சட்டென்று அப்படியே முன்னால் சரிந்து விழுந்தார். சீடன் திடுக்கிட்டு எழுந்துவிட்டான். அப்பா இரு கைகளையும் நீட்டி சதனம் ராமன் நாயர் கால்களைப் பிடித்துக்கொண்டார்.
‘என்ன இது? சேச்சே’ என்றார் சதனம் ராமன் நாயர்.
ஷண்முகன் ‘கொஞ்சம் அதிகமாகப் போய்விட்டது’ என்றான்.சதனம் ராமன் நாயர் சட்டென்று நிமிர்ந்து ஷண்முகனைப் பார்த்தார். ஒரு கணம் சிவந்த பெரிய கண்களில் அசுரபாவம் எரிந்து அணைந்தது.
அறம் தொகுப்பைப் படிக்க நேர்ந்தது. அருமையான மனதைக் கிளறும் கதைகள். உங்கள் குறிப்புகள் வெண்கடலைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன.
வருக ஏகாந்தரே. அறம் இன்னும் சென்னையிலேயே பிரிக்கப்படாமல் கிடக்கிறது. இனிமேல்தான். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
நல்ல தொகுப்பு. படித்திருக்கிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.