ஏன்? ஏசுவே ஏன்?
கேள்வியை முடிக்கக் கூட அவளுக்குத் துணிவு வரவில்லை. கிணற்றுக்குள் கிடக்கும் கல்லைப் போல, இதயத்தின் அடியில் கிடந்தது அது. ஏசுவே, ஒரு பெண்ணைக் காதலிக்க அவள் பாலுக்கு ஏன் இந்தத் தடை? காதல் எல்லோருக்கும் உரிமை. வேலையாட்கள், இடையர்கள், குருடர்கள், சிறையில் கிடக்கும் குற்றவாளிகள் யாருக்கும் அது உரிமை. அவள் குழந்தை பால் ஒருவனுக்குத்தானா அந்த உரிமை கிடையாது?
அன்னை – கிரேஸியா டெலடா
மொழி பெயர்ப்பு – தி ஜானகிராமன்
பதிப்பு – தமிழினி, மூன்றாம் பதிப்பு டிச 2014
ஆங்கிலத்தில் படிக்க – The Mother by Grazia Deledda (1871-1936)
நூலக முன்பதிவு
- NLB – An̲n̲ai / Kirēsiyā Telaṭā ; Tamil̲ākkam, Ti. Jān̲akirāman̲
- கன்னிமாரா – அன்னை, அன்னை
இந்த நாவல் முழுக்க தவிப்புகள் தாண்டவமாடுகின்றன. மதகுருவான தன் மகன் பாலின் நன்னடைத்தைக்காக அன்னையின் தவிப்பு, பால் தன் மதகுரு கடமைக்கும் அந்த ஊர் நிலச்சுவான்தார் குடும்பத்தைச் சேர்ந்த தன் காதலி ஏக்னிசிற்கும் இடையே கிடந்து தவிக்கும் தவிப்பு, தன் மனம் கவர்ந்தவன் தன்னை விட்டுப் போய்விடுவானோ என்கிற ஏக்னிசின் தவிப்பு…
ரிஷிகள், அவர்கள் மனைவிகள் என்று நமக்கு ஆயிரத்தெட்டு கதைகள் உண்டு. நிலம், பணம், உடல் எல்லா தேவைகளையும் கடந்து பழுத்து நிற்பவன்தான் குரு. குருபத்தினி என்பதே நம் நிலத்தில் புதிதில்லை. இதிலிருந்து இந்த நாவலைத் தொடங்குவது சிறப்பு.
“பாதிரிகள் கல்யாணம் செய்து கொள்ளாமலிருப்பதுதான் நல்லது என்று ஏன் பால் சொல்லுகிறானோ?” என்று தீனக்குரலில் கேட்டாள்.
“அவரே சொல்லாவிட்டால், வேறு யார் சொல்லப்போகிறார்கள்? அது நல்லது என்றுதான் அவர் சொல்லுகிறார். ஏன் உங்களிடமே சொலலியிருப்பாரே! பாதிரியை பக்கத்தில ஒரு மனைவியும் கையில் ஒரு குழந்தையுமாகப் பார்த்தால் ரொம்ப லட்சணமாகத்தான் இருக்கும்! கோயிலுககுப் பூஜைக்குப் புறப்படும் சமயம் பார்த்து ‘ஊ ஊ’ என்று ஒரு குழந்தை கத்தும். அதற்கு தாலாட்டு பாடிக்கொண்டிருக்கவேண்டும். வேடிக்கைதான் உங்களுக்கு.”
அடக்கப்பட்ட உணர்ச்சிகள் தன் வீரியத்தைப் பல மடங்கு பெரிதாக்கிக்கொள்ளும். தவறுகளும், குற்ற உணர்ச்சிகளும் அத்தன்மையை அடையவே செய்யும். மதகுருமார்கள் வானத்திலிருந்து குதித்து வந்தவர்களா? மனிதர்கள்தானே? சிறு பிள்ளைகள் விளையாடுவதும், இள வயதில் காமுறுவதும் திருமணம் முடிப்பதும், முதிய வயதில் பழுத்துக் கனிவதும் மனித வாழ்வில் இருக்கும்பொழுது, நான் அதை எதிர்த்து நின்றால்தான் சமூகத்திற்கும் கடவுளுக்கும் இடையே ஒருவன் முகவராகப் பணியாற்ற முடியும் என்பது எத்தணை குரூரத்தை அவன் வாழ்வில் கொண்டு வந்து விடுகிறது.
தன் மகன் பாலை மதகுரு ஆக்குகிறாள் ஏழை அன்னை மரியா மதலினா. ஒரு கிராமத்தில் இறை ஊழியம் செய்யப்போன இடத்தில், அந்த கிராமத்தின் நிலாச்சுவான்தார் வீட்டு பெண்மணியின் வசம் காதலில் விழுகிறான். அதற்காக இரவில் யாருக்கும் தெரியாமல் அவளுடன் தனித்திருப்பதும், பிறகு அதை நினைத்து குற்ற உணர்ச்சியில் தவிப்பதும், ஊருக்குத் தெரியாமல் மறைப்பதும் என்று தவித்துப் போகிறான் பால். மனித உணர்ச்சிகள் மதகுருவிற்கு வருவது தவறு என்று அன்னை அவனை மீட்க முயல்கிறாள். எது சரி எது தவறு என்பதை நாமே முடிவு கொள்ள விட்டுவிடுகிறார் ஆசிரியர்.
160 பக்க நாவல்தான் என்றாலும், கிரேஸியா தந்திருக்கும் சூழல வர்ணனைகளைப் படிக்க நமக்கு ஆவலாக இருக்கிறது. தி. ஜானகிராமனின் மொழிமாற்றம் வெகு சிறப்பு. தனிமையான வீடும், காற்றின் ஓலமும், நிலவின் ஒளியும் கண்முன்னே கொண்டு வர இந்த வர்ணனைகள் உதவுகின்றன. துரதிருஷ்டமாக ஓரிடத்தில உட்கார்ந்து இதை வாசிக்க முடியவில்லை. தினசரி அரை மணி நேரம் என்று ரயிலிலும் பேருந்திலுமே வாசிக்க இயன்றது.
பால் ஊர் காரர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு வேட்டைக் காட்சி பேசப்படுகிறது. முயலுக்கு பொறி வைக்கிறான் வேட்டைக்கார நிகோடிமஸ். முயலின் கால் சிக்கிக்கொள்கிறது. விடுவிக்க போராடுகிறது. காலை இழுத்து இழுத்து சதையெல்லாம் குதறிப்போய்விடுகிறது. படிக்கும்போது நமக்கும் சுறுக்கென்று தைக்கிறது. பாவம் பால்.
பால் முதல்முறை காதல் வயப்படுகிறான், அனேகாக தன் பதின் பருவத்தில். மரிலீனா என்கிற தன்னை விட வயதிற்கு மூத்த பெண்ணிடம். இடையில் மதக் கல்வியின் போது மரியா பாஸ்கா என்கிற வேசியின் பால். திரும்ப ஏக்னிஸிடம். பால் செய்வது குற்றம் என்று வாசிக்கும் நமக்குத் தோன்றவில்லை. ‘என்னடா கஷ்டம். இவன் யாரையாவது திருமணம் செய்து கொண்டால் என்ன’ என்று நமக்குத் தோன்றிவிடுகிறது.
எல்லாவற்றிலும் பற்று போகவேண்டும் என்றால் தடை விதித்தால் போய்விடுமா என்ன? காவிரிக்கரையிலுள்ள ஊரின் பிரபலமான கிறித்தவ கல்லூரியில் மாணவிகளிடம் அத்து மீறிய பாதிரியை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன். சமீபத்தில் கூட அதன் விவகாரம் ஒன்று கிளம்பி வெடித்தது. தவிர நாவல் நெடுக நாம் வாசிக்கும்போது இத்தகு செய்திகள் நம் மனதில் வந்து தோன்றிக்கொண்டுதான் இருக்கிறது. பிரமச்சரிய விரதம் கொள்கிற இந்து சாமியார்கள் மட்டும்?
அனுபவித்து சலித்து அதைக் கடப்பவனுக்கு உள்ள ஞானத்திற்கும், அதைத் தவிர்த்து அதைக் கடக்க நினைப்பவனுக்கும் உள்ள வித்தியாசம் இந்த சுவையான சிறிய நாவலைப் படித்தால் தெரியும்.
“நீ சொல்வது சரியாக இருக்கலாம் – நான் ஏழை, பேதை. ஒன்றும் அறியாதவள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். கடவுள் எங்களைக் கஷ்டப்படத்தான் இவ்வுலகிற்கு அனுப்பியிருக்கிறார்.”
“அட முட்டாளே, சுகம் அனுபவிக்கத்தான் கடவுள் நம்மை இவ்வுலகிற்கு அனுப்பியிருக்கிறார். நாம் சரியாக அனுபவிக்காததால்தான், நமக்கு கஷ்டங்களைக் கொடுக்கிறார். அதுதான் உண்மை, தெரியுமா? அழகையும் உலகையும் படைத்து இன்பமடையட்டும் என்று அவர் மனிதனிடம் கொடுத்தார். அதை எவன் தெரிந்து கொள்ளவில்லையோ, அவன் பாடு திண்டாட்டம்தான். சரி. இதை உனக்குப் புரிய வைப்பதற்காக நான் ஏன் மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டும்?”
ஆண்டியோகஸ் – இந்த நாவலின் ஒன்றை உணர்த்திச் செல்லும் அழுத்தமான பாத்திரம். ஒரு சிறு பையன். பாதிரி பாலுக்கு உதவியாக இருந்து வருகிறான். பால் குற்ற உணர்வில் தவிக்கும் உண்மை புரியாது, பாலை ஒரு ஆதர்ஷ குருவாகவே நினைக்கிறான். ‘சே.. எப்பேர்ப்பட்ட ஆள் இவர்’ என்று உருகுகிறான்.
ஒரு முறை பிசாசு ஓட்ட பைபிள் படிக்கும்போது, தன் குற்ற உணர்வால் பால் கண்ணீர் விட, ‘என்ன மனுசன்யா இவர். வேதத்தைத் தொட்டாலே கண்ணீர் வருதே’ என்று ஆண்டியோகஸ் வியக்கும் இடத்தில் கொல்லெனச் சிரித்துவிட்டேன்.
அவர்பால் ஈர்க்கப்பட்டு தானும் ஒரு மதகுருவாகவே ஆக விருப்பப்படுகிறான். ‘நான் படுவது போதாதா. நீ வேற ஏண்டா’ என்றெல்லாம் அவனுக்காக சிரத்தை எடுத்து அறிவுரை செய்கிறான் பால். ஆண்டியோகஸ் மற்றும் அன்னைக்கு இடையே நடக்கும் உரையாடல் பல செய்திகளைச் சொல்லிச் செல்கிறது.
“மதகுருக்கள் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாதுதான். ஆனால் எப்பொழுதாவது உனக்க மனைவி வேண்டும் என்று தோன்றினால்?”
“எனக்குத் தோன்றாது. கடவுள் அதைத் தடை செய்திருக்கும்போது எப்படித் தோன்றும்?
“கடவுளா! போப்பாண்டவரல்லவா தடை செய்து இருக்கிறார்?” என்று பையனின் பதிலைக் கேட்டுத் திகைத்துப் போய்ச் சொன்னாள் அவள்.
“போப்பாண்டவர் கடவுளின் பிரதிநிதி அல்லவா இந்தப் பூமியில்…”
“ஆனால் பழைய காலத்தில் மதகுருக்களுக்கம் மனைவி குடும்பம் எல்லாம் இருந்தது – இப்போது பிராடெஸ்டெண்டுகளுக்கு இருப்பது போல்.”
“அது வேறே. நமக்க அதெல்லாம் கூடாது.” பையன் சுடச்சுட வாதம் செய்ய ஆரம்பித்து விட்டான்.
ஒரு சிறு பிள்ளைக்குரிய ஆர்வமும், அவன் நடிக்கும் பெரிய மனித தோரணையும்….. அவன் மாதிரிதானே ஒரு காலத்தில் பால் ஆசைப்பட்டான்.
இன்னுமொரு சிறந்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
வளர்க பாரதம்.