பிறகு காடே ரப்பரால் நிறைந்தது. வாழைத் தோட்டங்கள் வெட்டிச் சரிக்கப்பட்டன. அங்கெல்லாம் மாமிச வாடையுடன் ரப்பர் மரங்கள் தளிர்த்தன. மனித அருகாமையையும் பராமரிப்பையும் அன்பையும் வேண்டாத மரம் அது. இன்று காடுகள் இல்லை. மலைச்சரிவு முழுக்க கண்ணுக்கெட்டிய தூரம் வரை இலை சலசலக்க சருகு மெத்தை மீது, அணி அணியாக ரப்பர் மரங்கள் நாகரீகம் செழிக்க அவை காடுகளில் நின்று ரத்தம் சொட்டுகின்றன. அவற்றின் உடல் முழுக்க ரத்தக் காயங்கள். கருகின காயங்கள். வடுக்கள், தடங்கள் நகரத்தின் தார்ச் சாலைகளில் யாருக்காகவோ உரசி அழிகிறது அவற்றின் ஜீவன். ஒரு ரப்பர் தோட்டம் வழியாக நடப்பது அவனுக்கு மிக இம்சையான அனுபவமாக இருந்திருக்கிறது. பிச்சைக்கார வரிசை போலக் கோப்பைகள் ஏந்திய மரங்கள். மவுனமாய் ரத்தம் சொட்டியபடி நிற்கும் அவற்றின் சோகம். மனம் மரத்துப்போகும். இனம் புரியாத துக்கத்தால் பிரக்ஞை கனக்கும். கோடிக்கணக்கான மரங்களை இம்சைப் படுத்திப் பெறும் நாகரீகம் அதன் ஆத்மாவையே பாவத்தால் மலினப்படுத்தி விட்டிருக்கிறது. அந்தப் பாவத்தில் தெரிந்தோ தெரியாமலோ பங்கேற்கும் ஒருவனால் எப்படித் தூயமனசுடன் கண்ணீர் விட முடியும்? எப்படிக் கிறிஸ்தவனாக இருக்க முடியும்?
- கவிதா வெளியீடு
- NLBயில் இரவல் வாங்க – Rappar / Jeyamōkan̲.
- கன்னிமாராவில் இரவல் வாங்க – ரப்பர்
- விக்கி – ரப்பர் (புதினம்)
- ஜெயமோகன் குறிப்பு – https://www.jeyamohan.in/17086
ஆரோக்கிய நிகேதனம் வாசித்து முடித்த அன்று உட்லேண்ஸ் வட்டார நூலகத்தில் உலவிக்கொண்டிருந்த பொழுது ரப்பர் நாவலை எடுத்து வந்தேன். பலபேர் வாசித்துள்ளதை நூலின் அட்டைப் படம் காட்டியது. ஆனால் இந்த 170 பக்கத்தைக் கடக்க வாசகன் எவ்வளவு பாடுபடவேண்டி உள்ளது!
இப்படி எல்லாம் நடக்கிறதா என்கிறார்கள். ‘ஆம்’, ‘ஆம்’ என்கிறது வாழ்க்கை – என்று சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலின் முன்னுரையில் ஜெயகாந்தன் குறிப்பிட்டிருப்பார். ஆம். பெருவட்டர், கண்டன் காணி, தங்கம், சிறிய பெருவட்டத்தி, பிரான்ஸிஸ். குஞ்சி, ஏபி என்று பலதரப்பட்ட மனிதர்களை இதில் பார்க்கும்போது மேற்கண்ட குறிப்புதான் நினைவிற்கு வந்தது.
நாவலின் தலைப்பு ரப்பர் என்றாலும், இது பெருவட்டரின் கதை. மனிதனின் கதை. கதையைப் பற்றி அறிய மேலே கொடுக்கப்பட்ட விக்கி பக்கத்திற்குச் செல்லவும். வாழ்வின் ஏற்றத்தாழ்வு பற்றி ஒரு சரியான மனிதனின் வாழ்க்கையை பிளேடால் கீறி நமக்குப் படம் போட்டு காட்டும் கதை. கொஞ்சம் இளகிய மனதுடன் இருப்பவர்கள் இதைப் படிக்கவேண்டாமென்றே கூறுவேன். ஒரு சில காட்சிகளைப் படித்துவிட்டு மனம் பதபதைத்து எழுதியவரை வைதிருக்கிறேன்.
ஒரு பெரிய மாளிகை. அதில் ரப்பர் துணுக்குகள் சரசரக்க ஒரு கார் உள்ளே நுழைகிறது. இப்படி ஆரம்பிக்கிறது நாவல். அந்த மாளிகை மற்றும் ரப்பரின் பின்புலத்தைத்தான் ரப்பர் நாவல் நம் காட்சிக்கு வைக்கிறது. ஜெயமோகனின் முதல் நாவல். உள்ளே படித்துப் பாருங்கள், முதல் நாவல் எனத் தெரிகிறதா என்று.
பெரிய பெருவட்டர்
‘பெருவட்டரே’ என்று பரிதாபமான குரலில் அப்புக்குட்டன் நாயர் அழைத்தார். ‘தரவாட்டிலே காரியங்கள் ரொம்பக் கஷ்டம்தான் இப்போது.’
‘அதுக்கு’ என்றால் பெருவட்டர்.
கிழவர் குறுகிப் போய் நின்றார்.
‘நம்மாட்டி எடுத்துக்கிட்டு சோலிக்குப் போவும் வேய். அத்துவாளிக்க மனவில்லேங்கி பட்டினி கெடந்து சாவும். கஞ்சிக்கு வளியில்லாதவனுக இஞ்ச வேறயும் உண்டு’ பெருவட்டர் திரும்பி நடந்தார்.
‘பொன்னுமுத்து’ என்று ஆக்ரோஷத்தால் நடுங்கிய கிழக்குரல் பின்னால் கூப்பிட்டது. … ‘பொன்னுமுத்து, அல்பனுக்கு வாழ்வு வந்தால் என்ன ஆகும் என்று காட்டிவிட்டாய். பரவாயில்லை. நன்றாக இரு. பிள்ளை குட்டிகளுடன் சவுக்கியமாய் இரு.. ஆனால் ஒன்று. ஏற்றமும் இறக்கமும் கண்டவன் சொல்கிறேன், கேட்டுக்கொள். ஏறினால் இறங்க முடியாது. எல்லோரையும் எப்போதும் அகங்கரிக்கக் கடவுள் விடமாட்டார். நான் சாபம் போடமாட்டேன். நான் வயிறெரிந்து சபித்தால் பலித்துவிடும்’
தென் தமிழக-கேரளப் பகுதி. தாழ்ந்த ஜாதிக்கார இளைஞன். அந்த பகுதி உயர் ஜாதியினரிடமிருந்து ஒரு இடத்தை மானியமாகப் பெற்று, காட்டை அழித்து விவசாயம் செய்யத் தொடங்குகிறான். (காட்டை அழிக்கும் வர்ணணை இந்த நூலில் அற்புதம். நான் அதை வாசிக்கும் தருணம் சிங்கையில் இந்தோனேசிய புகை காலம் வேறு. மனதில் அந்தக் காட்சி அப்படியே பதிந்துவிட்டது)
காலம் அவனுக்கேற்றபடி மாறுகிறது. பிரிட்டிஷ் காரர்கள் ரப்பரை ஏற்றுமதிக்கு வாய்ப்பை ஏற்றுமதி செய்து தருகிறார்கள். ரப்பர் மரம் பரவுகிறது. அதனுடன் கிறித்தவ மதமும் பரவுகிறது. உழைத்தும் அடித்தும் மேலே உயர்கிறார் பெருவட்டர்.
மூன்று தலைமுறை கால வாழ்க்கையில் உயர்ந்து, வீழ்ச்சி அடைகிறது பெருவட்டர் குடும்பம். அதன் காட்சிதான் ரப்பர்.
மிகுந்த ஏழ்மைக் குடும்பத்தில் பிறக்கிறார் பெருவட்டர். அந்த ஏழ்மை நிலையை நம் கண்முன் வைக்கும் தருணம் ஜெயமோகனின் பேனா நம் நெஞ்சில் கூர்மையாக இறங்குகிறது. பேச்சுக்குச் சொல்லவில்லை நண்பர்களே – ஒரு நிமிடம் நான் அந்தக் காட்சிகளை எளிதில் மறக்கப்போவதில்லை. ஒரு வீடு. திண்ணை முழுக்க குழந்தைகள் (புழு நெளிவது போன்று இருக்கிறதாம் அந்தத் திண்ணை). தனக்குத் தராமல் எதையோ சமைத்துத் தின்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது அந்த குடும்பத்துப் பையனுக்கு. உள்ளே வருகிறான். இவன் வந்தால் எங்கே இருப்பதைப் பிடுங்கிகொள்வானோ என்று மற்ற குழந்தைகள் மறிக்கின்றன. இந்தப் பக்கம் ஒரு உதை. அந்தப் பக்கம் ஒரு அறை. குழந்தைகள் தெரித்து விழுகின்றன. வீட்டின் உள்ளே கால் சூம்பிய குழந்தை, அவித்த கிழங்கை குனிந்து மறைக்கிறது. அதைப் பிடுங்க மல்லுக்கட்டும் அவனுடைய காலைக் கடிக்கிறது. பிறகு…..
இந்த நிகழ்வை படித்துவிட்டு, அதிலிருந்து நான் வெளி வர ரெண்டு நாட்கள் ஆனது.
இப்படியான பெருவட்டர் வாழ்வில் உயர்ந்து, வயதாகி மரணப்படுக்கையில் இருக்கிறார். மகன் சிறிய பெருவட்டர், பேரன் பிரான்ஸிஸ் என்று அடுத்தடுத்த தலைமுறையில் சட சடவென வீழ்ச்சி காண்கிறது அந்தக் குடும்பம். அந்த வீழ்ச்சியின் போது வெளிப்படும் மனித குணங்கள் நமக்குச் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகின்றன.
பிரான்ஸிஸ்
“இதெல்லாம் விபச்சாரம் செய்து சம்பாதித்த சொத்து. உன் தாத்தா மாதிரி சாதுக்களைக் கொன்று கூட்டி வைத்த சொத்து இல்லை. வைடா அங்கே…”
பிரான்ஸிஸ் அவளைப் பிடிக்கத் தாவினான். “போடி. வாயத் தெறக்காதே. கொன்னு போடுவேன்”
“ஒனக்க அம்மய விடப் பெரிய மோசமானவ எவடா இருக்கா?”
அவள் கூர்மையாகத் தமிழில் கேட்டாள் “மதம் பிடிச்சவளைக் கேட்கத் துப்பில்லை, வயித்துக்கு வழியில்லாதவளைக் கேக்கறான்.. தூ..”
என்ன கெட்ட பழக்கம் இல்லை இவனிடம். எல்லாம். படிப்பு இல்லை. வேலையும் கிடையாது. ஆனால் தாத்தாவான பெரிய பெருவட்டரிடம் அதீத பாசம் கொண்டவனாக இருக்கிறான். பெருவட்டரைக் கடைசிக் காலத்தில் குடும்பம் உதாசீனப்படுத்துவதால் குடும்பத்தை விட்டே விலகியிருக்கிறான். ஆனால் பெருவட்டரும் இவனும்தான் இந்த நாவலைக் கட்டி இழுத்துச் செல்லும் இரு முக்கிய சரடுகள்.
அந்தக் குடும்பத்தில் பெருவட்டரும் இவன் மீது மட்டுமே பாசம் வைத்தீருக்கிறார். இறுதி காலத்தில் சொத்து போய்விட்டது என்று தெரிந்ததும், விவசாயம் செய்து பிழைத்துக்கொள் என்றும், குஞ்சியை இவன் கூட இருக்கச் சொல்வதும் … வாசகனின் மனம் கணத்து விடும்.
https://twitter.com/VignaSuresh/status/593069355572662273
கண்டன் காணி
ரப்பர் நாவலில் வரும் கண்டன் காணி அனுபவித்துப் பார்க்கவேண்டிய ஒருவர். இப்படி ஒரு வாழ்க்கை வயதான காலத்தில் அமையாதா என்று யாவரும் ஏங்கும் ஒரு கதாபாத்திரம். பெருவட்டரை விட மூத்தவர். ஆனால் அவரை விட தேக ஆரோக்கியமானவர். பெருவட்டர், இவரது ஆரோக்கியத்தை எண்ணியும் தன் சுகமில்லாத நிலையை எண்ணியும் சஞ்சலப் படுகிறார்.
காணியை அவரது குடும்பத்தினர் வைத்துப் பார்த்துக்கொள்வது பற்றி இரண்டு பக்கங்கள்தான் நாவலில் வருகிறது நண்பர்களே. அந்த இரண்டு பக்கமும் வாசிப்பவருக்கு எத்தணை கனவுகளை காண வைக்கின்றன!
அவர் மற்றவர்களுக்கு அளித்து வந்த இயல்பான, களங்கமற்ற, அன்பு எல்லாத் தீசைகளிலிருந்தும் அவருக்குத் திரும்பக் கிடைத்தது. அகுறிப்பபாய்ப் பெண்கள் அவரை மிகப் புனிதமானதும், மனிதனை மீறிய சில மகத்துவங்களின் பிரதிநிதியுமான, ஒரு புராதன வஸ்து என்பது போலக் கருதி வந்தார்கள். புருஷன் அடித்தானென்றால கொள்ளுப் பேத்தி ரோஸி முழுக் கோட்டிலிருந்து ஒடி வந்து அவரிடம்தான் முறையிடுவாள். மூன்றாம் நபர் கேட்கக்கூடாது என்ற எச்சரிக்கையும் அழுகையும் அவள் குரலைப் புரிந்து கொள்ளவே முடியாதபடி ஆக்கியிருக்கும் என்றாலும், அவர் அனுதாபம் தெரியத் தன் மக்கிப் போன பழுப்பு நிறக் கண்களால் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார். அவளை நடுநடுவே தோளிலும் தலையிலும் தொட்டு வெகு சாதாரணமாக எதையாவது கூறுவார். எந்தப் பிரச்சினைக்கும் அவரால் எவ்விதத் தீர்வையும் தரமுடியாது என்றும், குறைந்த பட்சம் சம்பந்தப் பட்டவர்களைக் கூப்பிட்டுப் பேசவோ அல்லது நாலு ஆறுதல் மொழிகள் ஒழுங்காய்க் கூறி சமாதானப் படுத்தவா கூட அவரால் இயலாது என்றும் அவள் அறிவாள். அவர் முன் அவள் பெறும் ஆறுதல் சர்ச்சில் அந்தரங்கமாய் உருகி உருகிக் கண்ணீருடன் ஒரு நீண்ட ஜெபம் செய்து முடித்ததற்கு நிகர். மாதாமாதம் அவருக்கு முடிவெட்டி முகம் மழித்துவிட வரும் நாவிதன் கூடத் தன் குடும்பப் பிரச்சினைகளை வேலையின் இடையே அவரிடம் முறையிடுமளவு காலத்தீன் பதிவுகளை ஏற்று உருக்குலைந்த பின்பும், வாழ்வின் சாராம்சமான அன்பையும் களங்கமின்மையையும் கனிவையும் காட்டுவதாய் இருந்து வந்தது அவர் முகம்.
தங்கம்
இஸ்லாமியர் படையெடுப்பை அறைக்கல் குடும்பத்தினர் எதிர்த்து நிற்கிறார்கள். அதனால் மன்னரிடமிருந்து ஒரு பகுதியை இனாமாகப் பெறுகிறார்கள். இப்படியாக வளரும் அந்த குடும்பம் வாழ்ந்து இறுதியில் வீழ்கிறது. அந்தக் குடும்பத்துப் இளம்பெண்ணான தங்கம் பெரிய பெருவட்டரின் வீட்டில் வேலைக்காரியாக இருக்கிறாள். அவளை சிறிய பெருவட்டரின் மகன் லிவி பாலியல் ரீதியாக சுரண்டுகிறான். இது அந்த வீட்டின் பணியாளர்களுக்கே, ஏன் பிரான்ஸிசுக்கே எரிச்சலாக இருக்கிறது. தவிர அரைக்கல் குடும்பத்துப் பெண்கள் அஞ்சுக்கும் பத்துக்கும் அங்கங்கு பங்கப்படுவதைப் பார்த்தால், ஆண்டு முடித்த சொத்துக்களா இந்தப் பெண்களும் என்று மனம் பதைக்கிறது.
குஞ்சி
பெருவட்டரின் தோப்புக்குள் வயிற்றுப் பசிக்காக திருட வருகிறான் குஞ்சி. அவனை அணைத்து, தன்னுடன் வைத்துக்கொள்கிறார் பெரிய பெருவட்டர். விசுவாசமாக அவரின் நிழலிலேயே இருக்கிறான். மரணப் படுக்கையில் கூட அவன்தான் பெருவட்டருக்கு உதவியாக இருக்கிறான்.
வீட்டினர் அவரை உதாசீனப் படுத்துவதையும், அவர்களின் மனமாற்றத்தையும் பார்த்து மனத்திற்குள் புழுங்கி அவன் வெடிக்கும் காட்சி வெகு சிறப்பு.
‘நீ ஆருல இஞ்ச..? வேலக்காரப் பட்டி’ என்றான் லிவி வெறி மிளிர்ந்த முகத்துடன்.
‘ஓம் பட்டிதான். அது கொண்டுதான் திண்ண சோத்துக்கு இம்பிடு நண்ணியெங்கிலும் காட்டுதது. ஒரு காரியம் செல்லியாச்சு. எனக்கு மின்னபின்ன பாக்குயதுக்கு இல்ல. செயிலெங்கி செயிலு. போலீஸெங்கி போலீஸு, இன்னி ஆரெங்கிலும் இஞ்ச நிண்ணு வலிய பெருவட்டனுக்க காது கேக்கச் சத்தம் போட்டாச், சவிட்டி எல்ல பிடுங்கிப் போடுவேன். ஆணு பெண்ணு எண்ணு பார்க்கமாட்டேன். செல்லியாச்சு’ என்றான்.
‘நீ ஆருபில இஞ்ச? மரியாதைக்கி வெளியே போவில’ என்றாள் பெருவட்டத்தி திணறிய குரலில்.
கையை ஓங்கியபடி, மூர்க்கமான கோபத்துடன், குஞ்சி ஓரடி எடுத்து வைத்தான். மூச்சை இழுத்தபடி பெருவட்டத்தி பின்னகர்ந்தாள்.
—-
இவை தவிற, திரேஸ் (சிறிய பெருவட்டத்தி), குளம் கோரி என்று முக்கியமான இந்த பாத்திரங்கள் அனைத்தும் தத்தம் பங்கை எடுப்பாகச் செய்துள்ளன.
தென் தமிழகத்தின் கடலோர மற்றும் மலைப் பகுதிகளின் நாம் காணும் மதமாற்றத்தை இந்த நாவலில் தொட்டுச் செல்கிறார் ஜெயமோகன். பெருவட்டர் குடும்பம் வியாபார இலாபத்திற்காக கிறித்தவர்களாக மாறுவது, அதற்கும் முந்திய காலத்தில் இஸ்லாமிய படையெடுப்பில் மானம் காக்க பெண்களைக் கொன்று, மீதமுள்ளவர்கள் இஸ்லாமியர்களாக மாறுவது என்கிற காட்சிகள் வருகின்றன.
இறுதியில் பிரான்ஸிசும் கண்டன் காணி பேரனும் டாக்டர் ராமும் உரையாடுமிடத்தில் ஒளி தெரிகிறது.
இனிய வாசிப்பனுபவம் பெற இந்த நாவல் பரிந்துரைக்கப்படுகிறது.
இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
வளர்க பாரதம்.
One thought on “ரப்பர் – ஜெயமோகன்”