Taiwan Elections 2016 – Let democracy be the winner – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 1


மாட்டுப் பொங்கல் அன்று தாய்வான் தனது 14வது ஜனாதிபதி, உபஜனாதிபதி மற்றும் மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தது.  DPPஐச் சேர்ந்த த்ஸாய் இங் வென் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களாட்சிக்கு முக்கியத்துவம் அளித்து சுதந்திரத்திற்காக பாடுபடும் மக்களாட்சி முன்னேற்றக் கட்சிக்கு தமிழில் வாழ்த்துச் சொல்ல இந்தப் பதிவு 🙂

Taiwan Election
Taiwan’s Democratic Progressive Party presidential candidate Tsai Ing-wen attends a rally before polling day in Banqiao district of Taipei, Taiwan, Friday, Jan. 15, 2016. Taiwan will hold its presidential election on Jan. 16, 2016. (AP Photo/Ng Han Guan)

தாய்வான் – ஒரு அழகான தீவு

பரபரப்பான நிலம் தாய்வான். மக்கள் தொகை மிகுந்த நகரம் தய்பெய். டாலரில் செலவு செய்ய முடிபவர்கள் சுற்றுலா செல்ல விரும்பும் இடம். தாய்வான் ஹாங்காங் கொரியா சிங்கப்பூர் ஆகிய கிழக்காசிய புலிகளில் ஒரு சிறுத்தைப் புலி!

taipei-taiwan_photo_by_journeymart_com

தாய்வான் சீனக் குடியரசால் நிர்வகிக்கப்படும் ஒரு தீவு என்று உலகத்தை ஏற்றுக்கொள்ள வைத்துள்ளது சீனா. அதை யாராவது மீறினால் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என்றும் அச்சுறுத்தி வருகிறது. தாய்வான் மட்டுமல்லாமல் அதைச் சுற்றி உள்ள சில தீவுகளும் சீனாவின் ஆளுகைக்குட்பட்டே இருக்கின்றன.

சீன உள்நாட்டுப் போர்

1927ல் தொடங்கிய கியோ-மிந்-தாங் (KMT) மற்றும் கம்யூனிச கட்சியின் (CPC) இராணுவங்களுக்கு டையே நடைபெற்ற சீன உள்நாட்டுப் போர் கிட்டத்தட்ட 40களின் இறுதியில் முடிவுறுகிறது. அப்போது தற்போதைய சீனா PRC (People Republic of China) என்றும் தற்போதைய தாய்வான் ROC (Republic Of China) என்றும் பிளவு பட்டு ஆட்சிகளை நடத்துகின்றன. என்றாலும் அதிமுக (ஜா), அதிமுக (ஜெ) என்கிற காலம் நினைவிருக்கிறதா. அது போல நாங்கள்தான் உண்மையான சீனா என்று இருவரும் அறைகூவி வருகின்றனர்.

(c) http://dimensionscollide.wikia.com/wiki/Qin_Civil_War
(c) http://dimensionscollide.wikia.com/wiki/Qin_Civil_War

கம்யூனிச சித்தாந்தத்திற்கும் KMT சீன தேசீய வாதத்திற்கும் இடையே ஏற்பட்ட பிளவின் காரணமாக இந்தப் போர் ஏற்பட்டிருக்கிறது. 1937 வரை இடைவிடாது நீடிக்கவும் செய்திருக்கிறது.  1937ல் அபாயம் ஜப்பான் வடிவில் வந்திருக்கிறது. ஜப்பான் படையெடுப்பை ஒன்று சேர்ந்து எதிர்க்க இவ்விரண்டு அதிகார மையங்களும் இணைந்து இரண்டாம் ஐக்கிய முன்னணியை (Second United Front) அமைத்துள்ளன. ஆக இரண்டாவது சீன-ஜப்பான் போர் சீன உள்நாட்டுப் போரை 1941 வரை நிறுத்தி வைத்துள்ளது.

ஜப்பானுடன் போரை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு திரும்பவும் உள்நாட்டுப் போர் வெகு கோலாகலமாக 1946ல் மீண்டும் தொடங்கியுள்ளது. KMT பல போர் தவறுகளைச் செய்ததாலும், பிற சீன ஆர்வக்குழுக்களைப் பகைத்துக் கொண்டதாலும் CPC வெற்றிபெற்றதாக கூறுகிறார்கள். 1950ல் ஒரு புரிதலின் படி இந்தப் போர் முடிவிற்கு வந்துள்ளது. எப்படி, பிரதான சீன நிலத்தையும் (Main Land of China), சீனக் குடியரசாக கருதப்படும் தாய்வான் உள்ளிட்ட பிற தீவுகளையும் PRCயே ஆளும்.

இன்று வரை ஒரு போர் நிறுத்த ஒப்பந்தமோ, சமாதான ஒப்பந்தமோ வெளியிடப்படாததால் சீன உள்நாட்டுப் போர் சட்டப்படி முடிவுக்கு வந்ததா என்று தெரியவில்லை என்கின்றனர். தாய்வானின் அரசியல் நிலைப்பாடு, இரு அரசுகளும் ‘ஒரே சீனா’ கொள்கையைக் கடைபிடிப்பது, அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களால் இரு நிலத்திற்குமான கடல் கடந்த உறவுகள் இன்றும் தடுக்கப்படுகின்றன.

சர்வதேச அங்கீகாரத்திற்காக தாய்வான் குடியரசு என்று பெயரை மாற்றி, சுதந்திரமாயிட்டேன்… மெர்சலாயிட்டேன்.. என்றெல்லால்லாம் ROC பாட்டுப் பாடினால் இராணுவ படையெடுப்பு கண்டிப்பாக இருக்கும் என்று PRC மிரட்டி, தாய்வான் என்பது தனது ஆளுகைக்குட்பட்ட பகுதியே என்று அறிவித்து வைத்திருக்கிறது. இந்தியா கூட தாய்வானை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

பிரதான சீன நிலமே எங்களது என்று ROC மறுபக்கம் வாதத்தை எடுத்து வைக்கிறது. ‘உத்தமனா நீ இருந்தா மீசை முறுக்கு…‘ என்று இராஜதந்திர ரீதியான அங்கீகாரத்திற்காக சண்டை போடுகிறது.

இன்றைக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் போர் தொடர்ந்தாலும், இவ்விரு நிலங்களும் நெருக்கமான பொருளாதார உறவுகள் வைத்துள்ளன. தாய்வான் கம்பெனிகள் நிறைய சீனாவில் தொழிற்சாலைகளை நிறுவி உலகெங்கும் ஏற்றுமதி செய்கின்றன. ஸ்ரீபெரும்புதூர் Foxconn தெரியும்தானே. அவர்களின் பெரிய ஆப்பிள் போன் தயார் செய்யும் தொழிற்சாலை சீனாவில்தான் உள்ளது.

மக்களாட்சியும் தாய்வானும்

KMTயின் செல்வாக்குள்ள அரசியல் மற்றும் இராணுவ தலைவர் சியாங் கை ஷெக்கின் புதல்வர் சியாங் சிங் கியோ 80களின் மத்தியில் ஜனாதிபதி ஆகிறார். அரசியலமைப்பை தாராளமயமாக்க தொடங்குகிறார். 1986ல் மக்களாட்சி முன்னேற்றக் கட்சி (DPP) பிறந்து முதல் எதிர்கட்சி ஆகிறது. இது நடைபெற்ற ஓர் வருடம் கழித்து, சியாங் சிங் கியோ இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருகிறார்.  மக்களாட்சியின் ருசி பார்க்கத் தொடங்கிய தாய்வானில், கொஞ்சம் கொஞ்சமாக தாய்வானின் அரசியல் நிலை என்பது சர்ச்சைக்குரியதாக மாறியது. அதே பொருளில் நடந்த எந்த விவாதங்களும் மக்களாட்சிக்கு முன்னர் விலக்கப்பட்டதாக இருந்தது.

TAIWAN_PHOTO_BY_EPA

கியோவின் மரணத்திற்குப் பிறகு லீ டெங் ஹுய் 1988 ல் வருகிறார். தொடர்ந்து மக்களாட்சியை வலுப்படச் செய்து, தாய்வானின் ஆட்சியில் சீனாவின் தாக்கத்தைக் குறைக்கிறார். இவருக்கு முன்பு வரை KMT தங்களது சீன அடையாளத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தது. ஆனால் கியோ காலத்தில் தாய்வானிய கலாச்சாரம், தாய்வானியர்கள், தாய்வானிய வரலாறு என்றெல்லாம் பேசப்பட்டது. ஆம். நீங்கள் நினைப்பது சரிதான். சீனாவிற்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தியது. தாய்வானிய மொழிக்கு மீடியா மற்றும் பள்ளிகளில் வைக்கப்படிருந்த தடைகள் நீக்கப்பட்டன.

1990களில் மக்களாட்சி சீர்திருத்தங்கள் தொடர்ந்தன. லீ திரும்ப 1996ல் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 1996 தேர்தல் என்பது ROCயின் முதல் ஜனாதிபதி தேர்தல். லீயின் பிற்காலத்தில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. விளைவாக 2000ல் எதிர்கட்சியான DPP ஆட்சிக்கு வருகிறது. சென் ஷுய் பியான் KMT அல்லாத முதல் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெறுகிறார். 2004ல் திரும்பவும் அவரே பதவிக்கு வருகிறார். இடையில் KMT சீன தேசீயத்தை முன்னெடுக்கும் வகையில் Pan-Blue கூட்டணியையும், DPP தாய்வானிய தேசீயம் மற்றும் சுதந்திரத்தை முன்னெடுக்கும் வகையில் Pan-Green கூட்டணியையும் ஏற்படுத்தி குளிர் காய்ந்துள்ளனர்.

30 செப்டம்பர் 2007ல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வகையில் DPP ஒரு தீர்மானத்தை முன்வைக்கிறது.  அதன் மூலம் சீனாவிலிருந்து நாங்கள் வேறுபட்டவர்கள் என்றும், பிற நாடுகளைப் போன்று ‘சாதாரண நாட்டு’க்கான அரசியல் சட்டத்தையும் அரங்கேற்றுகிறது. இதன் மூலம் இந்த நிலம், ROC என்கிற சீன சிகப்பு சாயம் ஏறிய பெயருக்கு போகி கொண்டாடிவிட்டு, தாய்வான் என்ற பெயரால் அழைத்துக்கொள்ளும். தேசீய பாதுகாப்பிற்கான வாக்கெடுப்புகள் மற்றும் 2004, 2008 தேர்தல்களில் ஐநாவின் வரவு என்று DPP அரசாங்கம் முன்னேறியிருக்கிறது.

எதிர் கட்சியின் கைங்கரியத்தால் Pan-Blue கூட்டணி சட்டமன்றத்தை முடக்குகிறது, ஊழல் மற்றும் குறைந்த பொருளாதார வளர்ச்சியினால் மக்களின் கவலை போன்றவற்றால் இழந்த பலத்தை மீண்டும் பெற்ற KMT கட்சி 2008 தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கிறது. தொடர்ந்து அந்தக் கட்சியின் மா யிங் ஜியூ ஜனாதிபதியாக வாகை சூடுகிறார். இவர்கள் பிரதான சீனாவிடம் soft corner காட்டி வேலையைத் தொடங்குகின்றனர். ‘பரஸ்பரம் மறுக்காத’ கொள்கையின் படி சீனாவுடன் திரும்ப உறவுகளைப் புதுப்பித்துக்கொள்கிறார்கள். 2008ல் மா யிங் பதவியேற்ற கையோடு சென் ஷுயைத் தூக்கி ஊழல் கேசில் மாட்டிவிட்டு விடுகிறார்.

தொடர்ந்து சீனாவிற்கு சாதகமான அணுகுமுறையைக் கடைபிடித்த மா யிங், விமர்சனத்திற்கு உள்ளாகிறார். கடந்த நவம்பரில் மா வும், சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் சிங்கப்பூரில் சந்தித்துக் கொண்டனர். அரசியல், கல்வி மற்றும் அந்தக் காலத்து சீனக் கத்திகள் பற்றி அரட்டை அடித்துக்கொண்டே கடல் நண்டுடன் காரமான நூடுல்சை உள்ளே இறக்கியிருக்கிறார். தாய்வானில் ‘சீனாவின் அடிவருடி‘ என்று மா வின் கொடும்பாவியை எரிக்காததுதான் குறை.

Singapore-china-taiwan-politics-diplomacy_Photo_by_AFP

 

தாய்வான் பொங்கல் 2016

மாட்டுப்பொங்கல் அன்று தாய்வான் தனது 14வது ஜனாதிபதி, உபஜனாதிபதி மற்றும் மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தது.  DPPஐச் சேர்ந்த த்ஸாய் இங் வென் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  DPPஐ தலைமையேற்று நடத்தும் த்ஸாய் சீனாவிடமிருந்து விடுதலையை விரும்புவதாக தேர்தலுக்குப் பிந்தைய பிபிசி செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Taiwan Election
Taiwan’s Democratic Progressive Party presidential candidate Tsai Ing-wen attends a rally before polling day in Banqiao district of Taipei, Taiwan, Friday, Jan. 15, 2016. Taiwan will hold its presidential election on Jan. 16, 2016. (AP Photo/Ng Han Guan)

த்ஸாய் அவருடைய clean sweep வெற்றி உரையில், சீனாவுடன் தற்போதைய உறவுகளைப் பாதுகாப்பதாக உறுதி அளித்ததோடு, தாய்வானின் மக்களாட்சியை பெய்ஜிங் கட்டாயம் மதிக்கவேண்டும் என்றார். தவிர, இரு பக்கமும் பரஸ்பர ஆத்திரமூட்டல்களைத் தவிர்க்க வேண்டும். தாய்வான் வளைகுடா அமைதியை இரு பக்க அரசுகளும் பாதுகாக்கவேண்டும் என்றும், எந்த ஒரு அடக்குமுறையும் வளைகுடா தாண்டிய உறவை பாதிக்கும் என்றும் என்று கூறியிருக்கிறார். ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த அவர் அந்த பிராந்தியத்தின் அமைதிக்கு தாய்வான் துணை நிற்கும் என்று உறுதி அளித்திருக்கிறார்.

https://twitter.com/Lhasa_Bhu/status/688363959104090114

மண்டியிட வைக்கப்பட்ட பாப் பாடகி

ச்சௌ த்ஸு யூ என்கிற 16 வயது தாய்வானிய பாப் பாடகியை தாய்வான் தமது தீவின் குடிப் பெருமையாகக் கருதுகிறது. சீனா அந்தப் பெருமையை தன் இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பார்ப்பதைத்தான் மேலே பார்த்தோம்.  ஏற்கனவே ஜனாதிபதி மா, சீன ஜனாதிபதியுடன் கடல் நண்டு சாப்பிட்டதில் காண்டாகிப் போயிருந்த தாய்வானிய மக்கள், இன்னொரு துரதிருஷ்ட வசமான சம்பவத்தையும் காண நேர்ந்தது.

ChouTzuYu_AFP_Photo

தாய்வானிய பாப் பாடகர் மிஷேல் ஹுவாங் சமீபத்தில் ச்சௌ த்ஸுவின் படம் ஒன்றை வைய்பொ சீன மைக்ரோ பிளாகிங் தளத்தில் பகிர்ந்தார். ஒரு ஒளிபரப்பில் அந்தப் பெண் தாய்வானிய மற்றும் கொரிய கொடிகளை வைத்துக்கொண்டு படுக்கையில் அமர்ந்திருப்பதாக அந்தப் படம் காட்டியது. பார்க்க வீடியோ (need citation).

‘ஏண்டா கோவாலு.. உனக்கு ஏண்டா இந்த காண்டு’ என்று  பார்த்ததில் ஹுவாங்குக்கு சீன ஐக்கியத்தின் மீதான அவரது உணர்வுகளுக்காக அவ்வப்போது இது மாதிரியான ஸ்டண்டுகளை அடிப்பதாகத் தெரிகிறது (தொழில் போட்டியாகவும் இருக்கலாம்). நானும் அந்த வீடியோவைப் பார்த்தேன். பிரச்சார வீடியோ எல்லாம் கிடையாது. பாவம் தேமேன்னு அந்தப் புள்ளை உக்காந்திருக்கிறது.

ஆனால் தாய்வானிய சுதந்திரத்திற்கான அறைகூவலாக திரிக்கப்பட்டு, சீனாவில் அந்தப் பெண் தடைசெய்யப் பட்டிருக்கிறார். அவரது கச்சேரிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடைசியில் அவரே இறுகிய முகத்தோடு யூடியூபில் தோன்றி மன்னிப்பு கடிதத்தை வாசிக்கும் வீடியோ மா வின் ஆட்சிக்கு சங்கு ஊதிவிட்டது. ஆமாம். அவ்ளோ அழகான பெண் அழுதால் காண சகிக்குமான என்ன? பார்க்க வீடியோ.

சும்மா இருந்த சங்கை ஊதுவதே தப்பு. அதுவும் தேர்தல் சமையத்தில் ஊதிக் கெடுப்பது ரொம்பத் தப்பு.

உலகத்தில் ஒரே சைனாதான் என்பதை உணர்ந்து கொண்டேன். இனி பண்ணமாட்டேன் என்கிற மன்னிப்புக் கோரல் ஆங்கிலப் பதிவு.

Hi everyone, I am Chou Tzuyu. Sorry, I should have came out and apologized earlier. Because I didn’t know how to face the current situation, I have been afraid to face everyone directly, so I’m only speaking out now. There is only one China. The two shores are one. I feel proud being a Chinese. I, as a Chinese, have hurt the company and netizens’ emotions due to my words and actions during overseas promotions. I feel very, very sorry and guilty. I have decided to halt all current activities in China in order to reflect seriously. Again, I apologize to everyone. Sorry.

வீடியோ கீழே!

இந்த தேர்தல் எனக்கு ஏன் ஆர்வத்தை அளிக்கிறது?

பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறது சீனா. தங்களுக்கான தவறுகளுக்கான தண்டனைகளைப் பெற்றுவருகிறது. அது இல்லாது எல்லை முழுக்க இருக்கும் நாடுகளை ஒரண்டை இழுத்து வைத்துள்ளது. தாதாத்தனம் செய்வதால் ஜப்பான், கொரியா, பிலிப்பீன்ஸ், வியத்நாம், மலேசியா, புருனே, இந்தோனேசியா, இந்தியா அனைவரும் கடுப்பாகிப் போய் உள்ளனர். இதற்கிடையில் தென்சீனக் கடல் முழுவதும் தனக்கே சொந்தம் என்றும், அதில் ஒரு செயற்கை தீவை உண்டாக்கி அதில் ஒரு ராணுவ ஏர் ஸ்பேசும் வைத்து அந்தப் பகுதியை ரணகளப் படுத்தி வருகிறது.

டிரில்லியன்களில் தான் சேமித்து வைத்துள்ள அந்நியச் செலாவணியினால் உலகையே கம்யூனிசக் கட்சியால் வெல்ல முடியும் என்று கனவு காண்கிறது. மக்கள் விரும்புகின்றனர், ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். அங்க போய் ஏன் பஞ்சாயத்து செய்யனும்? தவிர தாய்வானின் இந்த வெற்றி ஹாங்காங்கில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டுவருமா? என்றெல்லாம் ஆர்வத்துடன் உலகம் இருக்கிறது.

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

வளர்க பாரதம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s