தாய்வானில் பாலின தடையை தாண்டிய முதல் பெண் மட்டும் அல்ல – ஆசிய கண்டத்தில் அரசியல்வாதிகளின் பரம்பரைகளில் வராத ஒரு பெண் வாகை சூடியிருக்கிறார் என்றால் அவர் தாய்வானின் அடுத்த ஜனாதிபதி ஸாய் இங்-வென் தான் என்று புகழாரம் சூட்டி உள்ளன.
ஆசிய நாரிஷக்தி!
ஆசியாவின் பெரிய பதவிகளைப் பெற்ற பெண்கள் யாரென்று பார்ப்போமே.

- சிரிமாவோ பண்டாரநாயகே, இலங்கை – 1916-2000
- இந்திரா (காந்தி), இந்தியா – 1917-1984
- கோல்டா மேயர், இஸ்ரேல் – 1898-1978
- கொரோஸோன் அக்வீனோ, பிலிப்பீன்ஸ் – 1933-2009
- ஆங் சான் சூ கி, மியான்மார் – 1945 – present
- சந்திரிகா குமாரதுங்கா, இலங்கை – 1945-present
- ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் – 1947-present
- கிளோரியா மகபகல், பிலிப்பீன்ஸ் – 1947-present
- மேகவதி சுகர்ணோபுத்ரி, இந்தோனேசியா – 1947-present
- பிரதிபா பாட்டீல், இந்தியா (என்னைப் பொறுத்தவரை இது இந்தியாவிற்குப் பெறுமை இல்லை. இவர் மேலும் இவருக்கு ஆதரவளித்த காங்கிரசைக் கண்டால் அலர்ஜி)
- பெனசீர் பூட்டோ, பாகிஸ்தான் – 1953-2007
சரி கதைக்கு வருவோம்.
2002 முதல் தாய்வானின் மக்களாட்சி சட்டத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த மாறுதல்கள்தான். பள்ளிகள், பணியிடங்களில் பாலின சமத்துவத்தை இந்த சட்டங்கள் கொண்டு வந்துள்ளன. அவைதான் தாய்வானிய பெண்கள் உயரிய பதவிகளைப் பெற்றுத் தருகின்றன.
ஸாய் – ஒரு அறிமுகம்

59 வயதான ஸாய் ஒரு சட்டக் கல்லூரிப் பேராசிரியர். அவரது தந்தை ஒரு ‘வியாபார காந்தம்’. இவர்தான் மாட்டுப்பொங்கல் அன்று நடந்த தேர்தலில் சரித்திரப் புகழ் பெற்ற வெற்றியைப் பெற்றிருக்கிறார். அவர் சார்ந்துள்ள எதிர்கட்சி DPPக்குமே இது முதல் பெரிய வெற்றி.
இவர் மட்டும் பெண் அல்ல, அவருடைய பார்லிமெண்டில் 113 பேர் பெண்கள் (37 சதம்). கிழக்காசியாவிலேயே இது அதிகம். இந்தியாவில் 11 சதம். ஜெயலலிதா ஆளும் தமிழகத்தில் இன்னும் மோசம். 7 சதம். இது மட்டுமல்ல. ஒவ்வொரு 3வது சீட்டும் பெண்களுக்கானது என்கிற இட ஒதுக்கீடு வேறு தாய்வானில் உண்டு.
பையன் பொண்ணுகளை விரும்பும் இந்த சமூத்தில், பெண்களை வீட்டிலேயே வைத்துக்கொள்ளும் இந்த சமூகத்தில், ஸாய் தனது பாலியல் விருப்பம் பற்றிய சர்ச்சைகளில் பல ஆண்டுகளாக சிக்கியிருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாலும், தன் பாலியல் தேர்வு பற்றிய கேள்விகளைத் தவிர்ப்பதாலும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறார். LGBT உரிமைகளுக்கும் ஓர் பாலின திருமணத்திற்கும் வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்தவர். இந்த புகைச்சலுக்கு நடுவில்தான் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
சீன – தாய்வானிய உறவு எப்படி இருக்கும்?
சீனாவிடமிருந்து விடுதலை என்றெல்லாம் விஜயசாந்தித்தனம் ஏதும் ஸாய் செய்யவில்லை. சுதந்திரம் மட்டுமல்ல. வேலை இல்லா திண்டாட்டம், கொட்டாவி விடும் பொருளாதாரம் என்று ஸாய் உடனடியாக கவனிக்க வேண்டிய வேலை இருக்கிறது.
ஸாய்யின் பேஸ்புக் பக்கம் இணைய போராளிகளால் சீன அதரவுப் பிரச்சாரங்களால் நிரப்பப் பட்டுள்ளது. ‘சீனாவிலதான் பேஸ்புக் பிளாக் பண்ணிட்டாங்களே. எப்படி சீனர்களால் பேஸ்புக் பயன்படுத்த முடியும்’ என்று கேள்வி கேட்கும் அளவிற்கு நீங்கள் வெள்ளை மனசுக்காரர் இல்லை என்று நம்புகிறேன். ‘பெய்ஜிங் கட்டுப்பாட்டில் தாய்வான் கொண்டு வரப்படவேண்டும்’, ‘எட்டு பெறுமைகளும் எட்டு வெட்கக் கேடுகளும் (Eight honours and eight shames – எட்டு சீனர்களுக்கு ராசியான எண்)’, ‘தாய்நாடு மீதான அன்பு’ என்கிற கம்யூனிஸ்ட் கட்சி கோஷங்களால் சரமாரியாக பதிந்து தள்ளி உள்ளனர் சீனர்களும், சீன ஆதரவாளர்களும்.
‘தாய்வானியர்கள் ஏன் எங்களை மூளை சலவை செய்யப்பட்டவர்களாகப் பார்க்கிறீர்கள்? தாய்வானியர்கள் நமது குடிமக்கள், தாய்வான் என்பது தங்கத் தீவு என்றுதான் எங்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளார்கள்’ என்று ஒருவர் எழுதி இருக்காப்ளயாம்.
என்னதான் முறுக்கிக் கொண்டாலும் தாய்வானியர்களின் பெரிய முதலீடுகள் சீனாவில் உள்ளன. செஞ்சட்டையர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று யாருக்குத் தெரியும். எனவே பொருளாதாரத்தைப் பாதிக்கும் எந்த ஒரு முடிவையும் ஸாய் எடுக்கமாட்டார் என்று நம்புகிறேன்.
நமது எதிர்பார்ப்பு என்ன?
தொடர்ந்து சீரிய மாற்றங்களுடன் தாய்வானிய மக்களாட்சி மேலும் வலுப்பெறும் என்று எனக்குத் எண்ணத்தோன்றுகிறது. உலகின் பெரிய மக்களாட்சி என்று சிலாகித்துக் கொள்ளும் இந்தியாவினாலேயே 33 சத மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியவில்லையே.
தாய்வானில் இது வரை வந்த சீர்திருத்தங்கள் மேலும் தொடர வேண்டும் அந்த அழகிய தீவின் மக்கள் விரும்புகின்றனர். மக்களின் ஏகோபித்த வெற்றி பெற்றிருக்கும் ஸாய் தன் நாற்காலி முள் நிறைந்தது என்பதை அவர் அறிவார். இதையும் தாண்டி என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
முந்தைய பதிவுகளில் எழுதியது போல, மக்களின் விருப்பத்தைக் கொண்ட ஆட்சிதான் நடக்கவேண்டும் என்பதில் யாதொரு மாற்றமும் இல்லை. புஜபல பராக்கிரம சாலியான சீனாவிற்கு மக்களாட்சியின் வலிமையைப் புரிய வைப்பது யர்ர என்ற கேள்விதான் தொக்கி நிற்கிறது.
-இறுதி-
(கடைசியில் என்னையும் பெண்ணீய பதிவு எழுத வெச்சி அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே)
வளர்க பாரதம்.