வருடம் திறந்ததிலிருந்து சிறப்புப் பதிவுதான் போட முடிகிறத ஒழிய மாமூல் பதிவுகளுக்குப் போக முடியலை.
வாகை சூடிய ஜனநாயக கட்சி
முன்னோடி இல்லாத ஒரு வெற்றியைக் கடந்த வருட தேர்தலில் பெற்றுள்ளது மியான்மரின் ஜனநாயக தேசீய லீக் கட்சி. இக்கட்சியின் தலைவர் ஆங் ஸான் சூ கி மியான்மரின் முதல் தலைவர் என்கிற புகழைப் பெறுகிறார். இதுவரை பல்வேறு இக்கட்டுக்கு உள்ளாக்கிய இராணுவத்தை எதிர்த்துப் போராடிய சூ கி தற்போது இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

இவரது கட்சிக்கு எதிராகப் போட்டியிட்ட ஆளுங்கட்சியான தொழிலாளர் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக் கட்சியை அடித்து நொறுக்கி வெற்றுள்ளார். மக்களவையில் 60 சத இடங்களையும், பிரதிநிதிகள் சபையில் 57 சத இடங்களையும் வென்று வாகை சூடி உள்ளது ஜனநாயக தேசீய லீக்.

ஜனாதிபதி ஆவாரா சூ கி?
பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ள சூ கியின் கட்சி, பல்லாண்டுகளாக அங்குள்ள இராணுவ ஆட்சிக்கு மாற்றாக முதல் ஜனநாயக ஆட்சியைத் தர இருக்கிறது. அவர் மட்டுமல்ல. அவருடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பலரும் ஆட்சி அனுபவம் இல்லாதவர்கள். சரி. சூ கி பிரதமர் ஆவார் என்று நாம் திருப்திப் பட்டுக்கொள்ளலாமா?
முடியாது. 2011ல் ஒரு சாம்பிளுக்கு ஒரு இடைக்கால அரசை அமைக்க இராணுவம் அனுமதி கொடுத்தது. அப்போது ஒரு அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி உள்ளது மியான்மரின் இராணுவ ஆட்சி. சூ கி பிரதமராக வர இயலாத வர்ணம் அரசியலமைப்புச் சட்டத்தை இராணுவம் மாற்றியதாகத் தெரிகிறது.
என்றாலும், நம்பிக்கையான ஒருவரை அவை முன்னவராக தன் கட்சி நிர்ணயிக்கும் என்று சூகி அறிவித்துள்ளார். இன்றைக்கு பார்லிமெண்டின் முதல் கூட்டம் நடந்துள்ளது.

அதென்ன அயோக்கியத்தனம்?
ஒரு நபர் ஜனாதிபதி ஆக கண்டிசன்கள்
- உள்ளுர் குடிமகனாக இருக்கவேண்டும்
- பெற்றோரோ, கணவன்/மனைவியோ, சட்டப்பூர்வமான பிள்ளைகளோ, பிள்ளைகளைக் கட்டியவர்களோ எந்த ஒரு வெளிநாட்டு சக்திகளின் ஆதரவைப் பெற்றிருக்கக் கூடாது.
- மேலே சொன்ன யாருக்கும் வெளிநாட்டுக் குடியுரிமை இருக்கக் கூடாது
- ஜனாதிபதிக்கு இராணுவப் பயிற்சி இருக்கவேண்டும்.
- இரு அவைகளின் 25 சத இருக்கைகள் மீது துண்டு போட்டு இராணுவம் இடம் பிடித்துக்கொள்ளும்.
- இராணுவ, உள்துறை, எல்லை விவகாரங்களுக்கு அமைச்சர்களை நிர்ணயிக்க ஜனாதிபதிக்கு உரிமை இல்லை.
சூ கி யின் இரு மகன்கள் பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளனர். எனவே அவர் ஜனாதிபதி ஆக முடியாது. இதை மாற்றவேண்டுமானால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டும்.

எந்த ஒரு அரசியலமைப்பு மாற்றத்திற்கும் 75 சதவீத மெஜாரிடி வேண்டும். “ஆகவே சூ கி அம்மா, நீ 75 சத மெஜாரிடியைப் பெற்று வா பார்ப்போம். ஆனால் 25 சதவீத இடத்தை இராணுவமே வைத்துக்கொள்ளும்.” என்று சொல்லி சீல் குத்திவிட்டார்கள். ஆக, எந்த ஒரு அரசியலமைப்பு மாற்றத்தையும் தனது வீட்டோ பவரால் கழுவி, இராணுவ விளக்கமாறு வைத்துக் கூட்டித் தள்ளிவிடும்.

ஆனால் அப்படி ஒரு மாற்றமில்லாது சூ கி ஜனாதிபதி ஆக இயலாது.
தனக்குப் பிடிக்கலை என்றால் அரசைக் கலைக்க தேசீய இராணுவ மற்றும் பாதுகாப்பு சபைக்கு உரிமை உண்டு.

சரி நமது விருப்பம் என்ன?
இந்த வெற்றி சாதாரணமாகக் கிடைக்கவில்லை என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை நண்பர்களே. எனவே நமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம். ஆனால் இவரது பதவியும் நிம்மதியாக இருக்கப்போவதில்லை. ஏன்? கீழே உள்ள படம்தான் அதற்குப் பதில்.

- சோனியாவிற்கு தலையாட்டி பொம்மையாக ஒருத்தர் கிடைத்தார். தாடி வளர்த்து கண்ணீர் விட ஜெயலலிதாவிற்கு ஒருத்தர் கிடைத்தார். சூ கி அப்படி ஒருவரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இராணுவ இம்சை இருப்பதால் இவரது பதவி ரொம்ப கிரிடிகல்!
- பார்லிமெண்டு பேச்சைக் கேட்காத இராணுவச் சிப்பாய்கள் துப்பாக்கியில் ரவையை ரொப்பிக்கொண்டு பக்கத்திலேயே நிற்கிறார்கள். சுமார் 15 ஆண்டுகாலம் வீட்டுச் சிறையில் சூ கியை வைத்தவர்கள். என்றாலும் பகைமையை வெளிக்காட்டாது, அவர்களுடன் சமாதானமாக இருந்து காரியத்தைச் சாதிப்பதுதான் மேட்டர்!
- தனித்தமீல் குழுமாதிரி அங்கும் இனக்குழுக்கள் உள்ளன. தன்னாட்சி கேட்டு அவர்களும் பிரச்சினைகள் எழுப்பி வருகின்றனர். சில பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சூ கி பிற மைனாரிடி குழுக்களால் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்படலாம். ஆனால் சூ கி இதை ஏற்கனவே சமாளித்து, கூட்டாட்சியைத் தருவேன் என்று உறுதி அளித்துள்ளார்.
- மெஜாரிடி பவுத்த குழுவினருக்கும் மைனாரிடி இஸ்லாமிய குழுக்களுக்கும் பிரச்சினை கனன்று கொண்டு உள்ளது
- 2014-15 கால கட்டத்தில் 8 சதவீத பொருளாதா வளர்ச்சியைப் பெற்றுள்ளது மியான்மர். முன்னாள் ஆட்சியாளர்களின் பங்களிப்பு என்று சொல்கிறார்கள். கார்கள் இறக்கமதி அதிகரித்துள்ளது. கைபேசிகள் தாராளமாகப் புழங்குகின்றன. என்றாலும் விவசாய பகுதிகளில் வறுமை இன்னும் அதிகமாவே உள்ளது.
- மியான்மர் – சீன உறவில் தடுமாற்றமாகவே உள்ளது
இவ்வளவு பிரச்சினை இருந்தாலும், மியான்மருக்கு இது ஒரு சிறந்த மாற்றம். வாழ்த்துவோம்.

வளர்க பாரதம்!