Kanhaiya Kumar FIR No. 110/2016 – பாகம் 2


கண்ணையா குமார் பிணை மனுவின் தீர்ப்பு பற்றிய தமிழ் பதிவு இங்கே உள்ளது

Kanhaiya Kumar FIR No. 110/2016 – பாகம் 1

பாய்ந்த புலியும், பதுங்கிய எலியும்

2016 sedition case 6

9ஆம் தேதி குழப்பம் நடந்துள்ளது.

 • அப்சல் குரு, மக்பூல் பட் வாழ்க
 • இந்திய முழுதாக ஒழியும் வரை போர் தொடரட்டும் போர் தொடரட்டும்
 • போ இந்தியா திரும்பிப் போ
 • இந்திய ஆர்மி – ஒழிக
 • இந்தியா துண்டு துண்டாக சிதறும், இன்ஷா அல்லா இன்ஷா அல்லா
 • அப்சல் கொலையை பொறுத்துக் கொள்ள மாட்டேன் பொறுத்துக் கொள்ள மாட்டேன்
 • கண்டிப்பாக  சுய சுதந்திரம் கொடுக்கவேண்டும்
2016 sedition case 2
2016 sedition case 2

இப்படி வீராவேஷமாகக் கூவிவிட்டு, 11ஆம் தேதி தேசத்திலும் அரசியலமைப்பிலும் நம்பிக்கை உள்ளதாக வலிய வந்து உரையாற்றுகிறார் கண்ணையா குமார் – ஏன்? கோர்ட் அதை எவ்வாறு எடுத்துக் கொண்டுள்ளது?

கபில் சிபல் சொல்றார் – இந்திய அரசின் மீதான நம்பிக்கை கண்ணையாவிற்கு உள்ளது.

அரசு என்ன சொல்கிறது – 9ஆம் தேதி கடுமையான குற்றங்கள் செய்துள்ளதால், தனக்கு நீதி மன்றத்தின் கோபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள செய்யப்பட்ட ஏற்பாடு.

இந்தியா உடையக்கூடாது என்று மனதார பேசினாரா, 9 ஆம் தேதி நடந்த பிரச்சினையிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒரு பாதுகாப்பு கவசத்தை ஏற்படுத்த பேசினாரா என்பதையெல்லாம் இந்த தருணத்தில் கோர்ட் ஆராய முடியாது

– தீர்ப்பிலிருந்து

இதில் எது உண்மை என்று உங்கள் அறிவு உரைக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். (இவ்வளவு நேரம் செலவழிச்சி பதிவு எழுதறோம். உங்க மூளைக்கும் கொஞ்சம் வேலை கொடுப்போம்)

எது உண்மையோ எனக்குத் தெரியாது. ஆனால் கண்ணையாகுமாருக்கு நான் ஒன்று தான் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன் – ‘சிறையில் இருந்தால் கூட, நான் பேசியது தவறல்ல. ஜாமீன் செய்யமாட்டேன்’ என்று பிளிறியவர் எங்கள் மண்ணில் இருக்கிறார். அவர் பெயர் வை. கோபால் சாமி! கள்ளத்தோணி ஏறி இலங்கை போனாராம். நான் ஈழக் குடிமகனாவேன் என்றாராம். அட்சர சுத்தமாக செடிஷன் பேசும் அவரையே இந்தியா ஒன்றும் செய்யவில்லை என்பதை இங்கே பதிவு செய்கிறேன். அது தில்லு!

கனம் கோர்ட்டார் அவர்களே, பேச்சுரிமை என்னாச்சு?

2016 sedition case 7

பேச்சுரிமை கேட்கும் கண்ணையா கேளாய், ஒரு குடிமகனுக்கு உரிமையும் கடமையும் இரு கண்களாம்.

Part-III under Article 19(1)(a)ன் படி மனுதாரர் பேச்சுரிமையைக் கோருகிறார். Part-IV under Article 51Aன் படி ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பது உரிமைகளையும் கடமைகளையும் ஒரே நாணயத்தின் இரு புறங்களாக வைத்தே வரையறுக்கப்பட்டுள்ளன என்பதை அவருக்கு நியாபகப்படுத்த வேண்டி உள்ளது.

– தீர்ப்பிலிருந்து

நீதியின் கருணை?

இந்தத் தீர்ப்பு கல்விக் கூடங்களின் ஆசிரியர்கள் படிக்கவேண்டிய தீர்ப்பு என்றே நினைக்கிறேன். தீர்ப்பில் எங்கேனும் இந்த அரசியல் பிரச்சினை பற்றி பேசவில்லை. இணையத்தில் கம்பு சுழற்றப்படும் எந்த ஒரு வார்த்தையும் கண்ணையாவின் ஜாமீன் மனுவில் எதிரொலிக்கவும் இல்லை. மாறாக, நான் தப்பே செய்யலை. விட்டுவிடுங்கள் என்கிற மன்றாட்டு தெனாவெட்டாக இருக்கிறது.

நீதிபதியின் தீர்ப்பிலும், நீ குற்றமற்றவன் என்று கூறவில்லை. அன்னையின் கண்டிப்பும் கனிவுமே இருக்கிறது.

JNUவின் சில மாணவர்கள் ஒருங்கிணைத்து ,நடத்திய நிகழ்வில் எழுப்பிய கோஷங்களில் உள்ள உணர்வுகள், பேச்சுரிமையின் கீழ் பாதுகாக்கப்பட்டது என்று உரிமைக் கோரிக்கை வைக்க முடியாது. இது போன்ற மாணவர்களிடம் காணப்படும் இந்த தொற்று, ஒரு தொற்றுநோயாகப் பரவும் முன்னர் இது கட்டுப்படுத்தப் படவோ குணப்படுத்தப் படவோ வேண்டும்.

முழங்காலில் தொற்று ஏற்பட்டால், மருந்து கொடுத்து குணப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வேலை செய்யவில்லை என்றால் இரண்டாவதாக அடுத்த மருத்துவம் செய்யவேண்டும்.  ஒரு சமயம் அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம். அதே சமயத்தில் கால் அழுகும் நிலை வந்துவிட்டால் ஊனம்தான் ஒரே மருத்துவம்.

அவருடைய முக்கியப் பணிகளைச் செய்வதற்கு ஏதுவாக நான் பழமையான சிகிச்சை முறையைச் செய்ய விரும்புகிறேன். 6 மாதம் பிணையில் விடுவிக்கிறேன்.

– தீர்ப்பிலிருந்து

இவ்வளவையும் வாங்கிக் கட்டிக்கொண்டுதான், நான் ஜெயிலில் அப்படி புரட்சி பேசினேன். சிறைக் காவலர்கள் புரட்சியில் மயங்கினார்கள் என்றெல்லாம் வடை சுடுகிறார் கண்ணையா.

2016 sedition case 3
2016 sedition case 3

யாருக்கோ வேலையில்லை. நிற்க நேரமில்லை

பி. எச்டி. பயிலும் மாணவர்கள் எப்படி இருக்கக் கூடும் என்று பிஎச்.டி ட்ராப் அவுட் ஆன எனக்குத் தெரியும். நான் சொல்வது ஜெயமோகன் நாவல்களில் எத்தணை முறை முலை என்கிற வார்த்தை வருகிறது என்று ஆய்வு செய்யும் தமிழாய்வாளர்களுக்குப் பொருந்தாது.

அறிவியலில் ஆய்வு செய்வோர்களுக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட தொடர்ந்த பணிகள் இருக்கின்றன. இந்தப் பணிகளுடன், தொடர்ந்து தம் துறையில் பிறர் செய்யும் ஆய்வுகளின் முடிவுகள் பற்றித் தெரிந்து கொள்ள உலகலாவிய அளவிலான தரவு தளத்தை அலசவேண்டி உள்ளது. தவிர, வயிற்றுப் பாட்டுக்கு, ஏதேனும் ஒரு செயல்திட்டதில் பணிபுரிய வேண்டி உள்ளது. போதாக் குறைக்கு guide உடன் உரசல் சண்டை சச்சரவு, சக நண்பர்கள் கார்ப்பரேட் கம்பெனிகளில் லகரங்கள் வாங்கும்போது நாம் மட்டும் இன்னமும் செட்டில் ஆகாமல் இருக்கிறோமே என்கிற மன அழுத்தம் இருக்கிறது. இந்த வருடத்தின் டார்கெட் இத்தணை பேப்பர்கள் என்று பணி அழுத்தம் இருக்கிறது. இவ்வளவில் உழலுபவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். இவர்கள் outletக்கு என சினிமா, விளையாட்டு (சமயத்தில் பாலியல் ஈடுபாட்டில் கூட) கவனத்தைத் திசை திருப்பினாலும், அடுத்த நாள் காலை 8 மணிக்கு ஆய்வில் அமர்ந்து விடுவார்கள்.

(c) http://xocai.xocaistore.com/media/wysiwyg/Xocai/InfoPages/group_of_scientists.jpg
(c) http://xocai.xocaistore.com/media/wysiwyg/Xocai/InfoPages/group_of_scientists.jpg

மேற்கூறிய வேலையைச் செய்பவர்கள்தான் JNU பன்னாட்டு ஆய்வாளர்கள். அதில்தான் 3000 சம்பளம் வாங்கும் ஒரு அங்கன்வாடி பணியாளரின் மகனான கண்ணையா பி.எச்.டி செய்கிறார் என்று இடது சாரிகள் மற்றும் ஆதரவாளர்கள்  நெகிழ்ந்து கண்ணீர் மல்குகிறார்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழவேண்டும். எழுந்ததா?

அறிவாளிகளின்  மையம் என்று அறியப்படுகிற ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தின் சர்வதேச பள்ளியில் Ph.D பயிலும் அறிவாளிகள் வர்க்கத்தைச் சேர்ந்தவர் மனுதாரர்.  அவருக்கு எந்த விதமான அரசியல் தொடர்போ, கொள்கையோ இருக்கலாம். அதை அவர் தொடர எந்தவிதத் தடையும் இல்லை, அது அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறைக்குள் இருக்கும் வரை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்தியா ஒரு நல்ல உதாரணம். பேச்சுரிமை என்பது நமது அரசியலமைப்பின் Article 19(2)ன் தேவையான வரையறைக்குட் பட்டது.  ஆவணங்களின் படி, அப்சல் குரு, மக்பூல் பட்டின் படங்களை ஏந்திக்கொண்டு கோஷம் எழுப்பும் இந்த மாணவர் அமைப்பு தனது போராட்டத்தையோ அல்லது உணர்வையோ சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

JNU நிர்வாகமும் இவர்களை நல்வழிப் படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கும், JNU பல்கலை ஏற்படுத்தப்பட்ட நோக்கம் நிறைவேற்றப்படுவதற்கும் வழி செய்யவேண்டும்.

பாராளுமன்ற தாக்குதலில் குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்ட அப்சல் குருவின் இறந்த நாளில், கோஷங்களை எழுப்பிய மாணவர்களின் தேசவிரோதக் கொள்கைகளைக் கண்டறிவதுடன் அதைக் கலையவும் வேண்டும். இதே போன்ற இன்னொரு நிகழ்வு நிகழாமல் தடுக்கவேண்டும்.

– தீர்ப்பிலிருந்து

பழைய மோர் தரும் புளிப்பு வீச்சம்

ரொம்ப காலமாக சொல்லப்பட்டு வரும் புளித்த மோர்தான் இந்தப் பிரச்சினையின் மூல காரணம் – இந்துத்துவ மாணவர் கழகம் Vs இடது சாரி மாணவர் கழகம். சிலரின் காழ்ப்புணர்ச்சியால் இந்துவத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என்று இந்தியம் சந்தியில் நிறுத்தப்பட்டுள்ளது.  சிலருக்கு அப்படித்தான் தோன்றும். பள்ளி கல்லூரிக்குப் போய் தேசீய கொடிக்கு சல்யூட் அடிப்பவன் எல்லாம் இந்துத்துவ வாதி. எனவே இந்துத்துவத்தை எதிர்ப்பதும் இந்தியத்தை எதிர்ப்பதும் ஒன்றுதான். (அல்லது இந்தியத்தை எதிர்த்தால்தான் அவர்களது வழக்கு நிற்கும்)

ஆக இந்தப் பிரச்சினை வெகு சாமர்த்தியமாக India Vs Left என்று மாற்றப்பட்டுள்ளது. RSSஐ எதிர்க்கிறேன் பேர்வழி என்று தேசத்தையே எதிர்ப்பதாகப் போய்கொண்டுள்ளதன் உதாரணம் இது. அதுதான் பாமர மக்களை விட்டு இடது சாரிகள் விலகிப் போதவற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கக் கூடாது?

இடது சாரி அரசியல் – அம்பியும் அந்நியனும்

இடது சாரிகளை ஒழித்தே தீரவேண்டும் என்று இந்துத்துவர்கள் எழுதுகிறார்கள். இடது சாரிகளின் பழைய உளுத்துப்போன கோட்டைகளான கேரளம், வங்கத்தில் கூட அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது இந்துவர்களுக்கு மகிழ்வைத் தருகிறது. அதிலிருந்து மீண்டு வரத் துடிக்கும் காம்ரேடுகளுக்கு கண்ணையா குமார் வராது வந்த மாமணியாகத் தோன்றுகிறார். தேர்தலில் கண்ணையா பிரச்சாரம் கூட செய்யலாம் என்று செய்திகள் வருகின்றன.

என் ஊரின் பிண்ணனியிலிருந்து பார்த்தால் அப்படி ஒட்டு மொத்தமாக அவர்களை நிராகரிக்கலாமா? ஒரு பிரச்சினை என்றால் பாமரனுக்கு இவர்கள்தான் எளிதில் அணுக முடிபவர்களாக இருக்கிறார்கள். மீத்தேன் பிரச்சினையாகட்டும், கெயில் பிரச்சினையாகட்டும். திராவிட கட்சிகள் கள்ள மவுனம் சாதிக்கின்றன. திராவிட கட்சி அரசியல் வாரிசுகளின் லேட்டஸ்ட் editions மக்களை தெருவில் சந்திப்பதை இழி செயலாகக் கருதுகிறார்கள். வீட்டுக் காம்பவுண்டைத் தாண்டும் முன்னரே கார் கண்ணாடியை ஏற்றி, ஏசியைத் தட்டிவிட்டுக்கொள்கிறார்கள். ஆக, பாமரன் சொல்வதைக் கேட்க ஒருவன் இப்போதைக்கு இருக்கிறான் என்றால் அது இடதுசாரிகளாகத்தான் இருக்க முடியும். (அவர்களால் காரியம் சாதிக்க முடிகிறது, முடியலை அது வேறு விஷயம்). அவர்களது இதழியல் சேவையான NCBHன் பங்களிப்பை மறுக்கிறவன் நான் இல்லை.

ஆனால், அவர்களின் மறுபக்கம்தான் பிரிவினை பேசும் மாணவர் சங்கங்கள்,  அடுத்த தெரு ஆட்டோக்காரனையே தன் ஸ்டாண்டில் நிற்க விடாத யூனியன்கள், கையூட்டு வாங்கி தொழிலாளி நொம்பலத்தில் விடும் யூனியன் தலைவர்கள்.

லேட்டஸ்ட் ஆயுதங்களுடன் இந்திய படையை எதிர்க்கும் திறன் இவர்களுக்கு உள்ளது.  வளத்தைக் காக்கிறோம், மக்களைக் காக்கிறோம் என்று இவர்கள் கூவும் இடத்திலெல்லாம் துரதிருஷ்டவசமாக தரித்திரம் தாண்டவமாடுகிறது. கலாச்சாரத்திற்கும் இறை மறுப்பிற்கும் வித்தியாசம் தெரியாத பல வடை மாஸ்டர்கள் இந்தக் கும்பலில் பகுத்தறிவுவாதிகள் என்று சுற்றிக் கொண்டு உள்ளார்கள். நவீன தமிழிலக்கியம் பற்றி தெரியாதவர்கள் தங்களை முற்போக்கு எழுத்தாளர்கள் என்று கூட சொல்லிக் கொள்வார்கள்.

அறிக்கியும் LC112ம் கூட்டு

இந்துத்துவ வலது சாரி அரசு இப்போது மத்தியில் ஆள்கிறது. ஆக அவர்கள் மீது காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பலத்த அதிருப்தி இருப்பது எதிர்பார்க்கக் கூடியது. ‘வலதிடது’ சாரியான காங்கிரஸ் ஆட்சியிலேயே எவ்வளவு ‘தலை போன’ பிரச்சினைகள். ஒரு பார்ட்டி ஆச்சா.

இந்துத்துவ அரசு எங்களுக்கும்தான் பிடிக்காது என்கிறது மாணவர் யூனியன். போதாக்குறைக்கு கல்லூரிகளில் இந்துத்துவ மாணவர் சங்கம் வேறு வந்துள்ளது. அவர்களைப் பார்ததாலே குமட்டிக்கொண்டு வருகிறது.

எதிரிக்கும் எதிரி நண்பன் என்கிற அரதப் பழசான லாஜிக்தான் இங்கு வேலை செய்துள்ளது. இடது சாரி மாணவர்களும், காஷ்மீர இஸ்லாமிய தீவிரவாத கொள்கை கொண்ட மாணவர்களும் ஒன்றிணைந்துள்ளனர். ஆனால் புத்திசாலித்தனமாக இதை இடது சாரி – முஸ்லீம் கூட்டணி என்று வெளி உலகிற்குப் பறை சாற்றி விட்டனர். (இது எல்லாம் ரகசியமல்ல. தமிழ் பதிவுலகிலேயே பேசப்பட்டுதான் வருகிறது).

ஆக – அறிக்கியும் LC112ம் கூட்டு

போதாத குறைக்கு வழக்கு மன்றத்தில் தாக்குதல் நடத்தி, இந்தக் கூட்டணிக்கு எதிராக யார் வேலை பார்த்தார்கள், குழப்பத்தை அதிகப் படுத்தினார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

ஆக – நல்ல குழப்பம்.

ஆனாலும் மீடியாக்களுக்கு டிஆர்பி கிடைத்தது. பர்க்கா தத்துக்கு ஹீரோயிசம் கிடைத்தது. கண்ணையாவிற்கு ஜாமீன் கிடைத்தது. அர்ணாப்புக்கு இரத்தக்கொதிப்பு கிடைத்தது.

 

அரசியல் செய்யாமல் விவாதியுங்களேன் என்கிற ஈனஸ்வரம் எங்களைப் போன்ற மைனாரிடி இணைய இந்திய ரசிகர்களிடமிருந்து வருகிறது.

(முற்றும்)

 

இன்னொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.

வாழிய பாரத மணித்திருநாடு

4 thoughts on “Kanhaiya Kumar FIR No. 110/2016 – பாகம் 2

 1. மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்கள் இந்தியர்கள் அல்ல என்பவர்கள் ஒருபுறமும், தேசத்தை அழிப்போம், உடைப்போம் என்று வெற்று கோஷம் எழுப்புவது மட்டும்தான் அறிவுச் செயல்பாடு என்பவர்கள் மறுபுறமும் இருக்கையில் நாம் வேறென்ன செய்ய முடியும்? இவர்கள்தான் பாராளுமன்றத்திலும், தேசியப் பல்கலைக்கழகங்களிலும் அமர்ந்திருக்கிறார்கள்.

  1. நண்பரே,

   நீங்கள் இப்படிப் பாருங்கள்.

   பாஜக தான் 80களில் தொடங்கியது. இந்துத்துவம் அல்ல. இந்துத்துவம் சுதந்திரத்திற்கு முன்னரே தொடங்கி உள்ளது. ஏற்றுக்கொள்கிறீர்களா?
   வாஜ்பாயின் முதல் பாஜ வரும் வரைக்கும் காங்கிரசும், அவர்கள் ஆதரவு கொண்ட பிறரும்தான் ஆண்டுள்ளார்கள். ஆக, சுதந்திர இந்தியா தொடங்கி 45 வருடங்களுக்கு மக்கள் இந்துத்துவர்களுக்கு ஆதரவே அளிக்கவில்லை. காங்கிரசும் இடது சாரிகளும் பெருமையாக கோளோச்சி வந்தார்கள்.

   என்ன காரணத்திற்காக 80களில் பிறந்த ஒரு கட்சிக்கு இவ்வளவு விரைவாக மக்கள் வாக்களிக்கவேண்டும்? அப்போது ஆண்டு கொண்டிருப்பவர்களிடம் ஒரு பிரச்சினை என்பதால்தானே?

   ஆக இந்துத்துவம் (எதிர்) இடது சாரிகள் பிரச்சினை தொடர்ந்து கொண்டு இருக்கும் ஒரு சண்டையின் நீட்சிதான்.

   ஆனால் நான் அதை விட முக்கியமாக உணர்வது – இந்திய மக்களாட்சி என்பது வெளி உலகிற்கு கண்களை உறுத்துகிறது. உலகின் பெரிய மக்களாட்சி என்று வின்னாரம் பேசும் இந்தியாவின் குரல இவர்களை எரிச்சலடைய வைக்கிறது. ஐரோப்பிய, அமெரிக்க உலகும் சீன ஏகாதிபத்திய உலகும் தொடர்ந்து இந்தியா உடையும் என்றே கருதி வருகின்றனர். இல்லை. தொடர்ந்து காலத்திற்கேற்ப நான் மாறுவேனே ஒழிய உடையமாட்டேன் என்று இந்தியா தொடர்ந்து அவர்களிடம் பதில் சொல்லி வந்துள்ளது. இந்திய பாராளுமன்றம் அவர்களுக்கு தாங்க முடியாத எரிச்சலைத் தருகிறது. துரதிருஷ்டவசமாக உள்நாட்டுப் புள்ளுருவி வேலைகளைச் செய்கின்றன இந்த இடதுசாரி குழுவும், காஷ்மீர பிரிவினை தீவிரவாதிகளும் (ஒட்டு மொத்த இஸ்லாமியர்கள் என்று நான் சொல்லவில்லை என்பதைக் குறித்துக்கொள்க) இணைந்து அந்த வெளி உலக சக்திகள் போடும் எலும்புத் துண்டுகளுக்கு குறைத்து வருகிறார்கள். அதன் சத்தம்தான் இது.

   நான் பதிவில் சொன்னதைப்போல, வைகோவிற்கு இருக்கும் திமிர் கூட கண்ணையாவிற்குக் கிடையாது. கோர்ட்டிடம் இறைஞ்சிவிட்டு, பிறகு செலம்புவது என்ன வகையான ஆளுமை சொல்லுங்கள்.

   உங்கள் பெயர் என்ன? நண்பரே என்று விழிப்பது டிப்ளமேடிக்காக உள்ளது.
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   1. உண்மை, இந்துத்துவத்திற்க்கான தேவையை உருவாக்கியதில் முக்கிய பங்கு காங்கிரஸிற்கு இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். அதை அவர்கள் உணர்வதாகவோ, தங்கள் செயல்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதாகவோ தெரியவில்லை. மேலும் தேர்தல் அரசியல்களுக்கு அப்பால் தேசிய நலன் என்று ஒன்று இருக்கிறதுதான். தேசத்தை காத்தல் செய் என்றுதான் பாரதி நமக்கு சொல்லிவிட்டு போயிருக்கிறார்.

    ஆனால் இந்தியாவின் சில பகுதிகளில் இந்திய அரசாங்கம் மீதான நேர்மையான கோபமும் மக்களுக்கு இருக்கக்கூடும் என்றுதான் நினைக்கிறேன். தேசவிரோதிகள் அந்த கோபத்தை பயன்படுத்திக் கொள்ளவே செய்வார்கள். The State has no choice but to earn its legitimacy by providing good governance to these parts.

    And I’m keeping myself anonymous for a reason. You can call me CR if you don’t mind. புரிதலுக்கு நன்றி.

   2. தங்கள் பெயரின் மீதான தனிஉரிமை மதிக்கப்படுவதாக. தங்களது கருத்துகள் ஏற்புடையவை தான். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s