“கஞ்சி அண்டா என்ன ஓடியா போயிடும்? வெறி புடிச்ச மூதேவி” என்றாள் மார்த்தா டீச்சர்.
“பசி வெறி, இதுங்க ஜென்ப சுபாவம்!” அம்மிணியம்மா டீச்சர் சொன்னாள்.
பின்னர் அவர்களிருவரும் குரோதத்துடன் ஆன்னியை வெறித்தார்கள்.
“கையை சுத்தமா கழுவிக்க மார்த்தா, கோக்காஞ்சறவுலேர்ந்து வர்ற பிசாசுகள்” அம்மிணியம்மா டீச்சர் உபதேசித்தாள்.
ஆலாஹாவின் பெண் மக்கள் – சாரா ஜோசஃப்
தமிழ் மொழி மாற்றம் – நிர்மால்யா (மூலம் – மலையாளம் – ആലാഹയുടെ പെണ്മക്കള്)
பதிப்பு – சாகித்திய அகாதெமி, முதல் பதிப்பு 2009
NLB முன்பதிவு – Ālāhāvin̲ peṇ makkaḷ / Malaiyāḷa mūlam, Cārā Jōcak̲ap ; Tamil̲il, Nirmālyā.ஆலாஹாவின் பெண் மக்கள் / மலையாள மூலம், சாரா ஜோசஃப் ; தமிழில், நிர்மால்யா.
கன்னிமாரா முன்பதிவு – ஆலாஹாவின் பெண் மக்கள்
சாரா ஜோசப் – விக்கி சகிப்பின்மை குறைந்து போய்விட்டது இண்டெலக்சுவல் அரசியல் செய்தவர்களில் ஒருவர் 🙂
விரிவான கதைச் சுருக்கம் – நிதர்சனம் நாளை!கனவுகள் பொசுங்கிய உலகம்
உலகின் எந்த ஒரு சமூகத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. இரண்டுக்குமான வித்தியாசங்கள் அதிகரிக்கும்போதுதான் கொலை, கொள்ளை அதிகமாகிறது. பணம் போஷித்த தனவந்தர்கள் ஒரு பக்கம். விளிம்புநிலை மனிதர்கள் மறு புறம். திருச்சூர் நகரத்தின் விளிம்பு நிலை மனிதர்களின் காபந்து பூமியான கோக்காஞ்சறவைப் பின்னணியாகக் கொண்ட நாவல் இது. 200 பக்கக்களில் செரிவான ஒரு படைப்பு.
சிறுமியாக இருக்கிறாள் ஆன்னி. அழுக்கு ஸ்கர்ட் போட்டு நாவல் முழுக்க வரும் அவளது பார்வையில் இந்த நாவல் விவரிக்கப்படுகிறது. அவளது குடும்பத்தை மையமாகக் கொண்டு, கோக்காஞ்சற சமூகத்தின் எழுச்சி, வாழ்வு, வீழ்ச்சி என்று நமக்குத் தரப்படுகிறது. ஆலாஹா – துயரம் துரதிருஷ்டம். ஆலாஹாவின் பெண் மக்களாக ஆன்னியும் அவளது குடும்பத்தினரும் வர்ணிக்கப்படுகிறார்கள்.
எழுச்சி
திருச்சூர் நகர மக்களின் வாழ்விற்கென, சில சமூகங்கள் தேவைப்படுகின்றன. புதர் மறைவில் மலம் கழித்துக் கொண்டிருந்தவர்கள் கழிப்பறையில் கழிக்கத் தொடங்குகையில், மலத்தை நீக்க ஒரு சமூகம் தேவைப்படுகிறது. தோட்டிகள் வந்து சேர்கிறார்கள். தோட்டிகளின் சேவைதான் வேண்டுமே ஒழிய, தோட்டிகள் தங்களின் பார்வையில் படக்கூடாது என்று நினைக்கிறார்கள் நகரத்துக் காரர்கள். ஊண் உண் ஆடு, மாடு, பன்றி இறைச்சி தேவைப்படுகிறது. ஆனால் அதை வெட்டும் இடம் நகரத்தை விடுத்து வெளியே இருக்கவேண்டி இருக்கிறது. ஆக இந்த சமூகங்கள் புற நகரான கோக்காஞ்சறவில் வந்து சேர்கிறார்கள்.
நகர வாசிகள் அவர்களை ‘பீ அள்ளுபவர்கள்’ என அழைத்தார்கள். அவர்களுக்கும் மலத்திற்கும் வித்தியாசமில்லை என்று நகரவாசிகளில் சாமானியர்கள் கூட நம்பினார்கள். மல டப்பாக்களை இழுத்துச் செல்லும் போது வீசும் நாற்றம் தமது நாற்றம் அல்ல; மலம் அள்ளுபவர்களின் நாற்றம் என்று சொல்வதையே நகரவாசிகள் விரும்பினார்கள்….. அவர்கள் எங்கு போவார்கள். அவர்கள் எங்கு வேண்டுமானலும் போகட்டும். அதிகாலையில் வந்து மலத்தை அள்ள வேண்டும்.
கோக்காஞ்சறவில் ஆன்னியின் குடும்பத்திலிருந்து இருந்து வாழ்க்கைப்பட்டுப்போன செறிச்சி கூட திரும்ப அங்கு வர மறுக்கிறாள். ஒரு முறை வந்த போது கூட, விடுவிடுவென கிளம்பிவிடுகிறாள். ஆன்னியைத் தொட்ட பள்ளி ஆசிரியை, தன் கையை முகர்ந்து பார்த்து, பைப் நீரில் கழுவிக் கொள்கிறாள். இத்தணைக்கும் நடுவில், ஒரு தேவாலயம் எழுகிறது. பல்வேறு பிரிவினைச் சேர்ந்தவர்களானாலும் கிறித்தவர்கள். காரியம் ஆவதற்காகவோ நம்பிக்கையின் காரணமாகவோ, மறைமுகமாக கிறித்தவத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருக்கிறார்கள். செறிச்சியின் கல்யாணம் நடப்பதற்காகவே, ஆன்னியின் பாட்டி சுராயியில் சேர்கிறாள்.
ஜெபமாலை போட்ட பாட்டன்
குருசு மலைக்குப் போன பெறகு
எடுத்திட்டு வாடீ மாத்தரி
வெல்ல ஆப்பம்அதைக் கேட்ட அம்மாவுக்கு ஆத்திரம் பொங்கும்.
”அது உங்க குடும்பக் காரங்களோட குணம்” என்பாள்.
பாட்டி கொல்லென்று சிரிப்பாள். ரோமன் காரி என்று ஆன்னியையும் கேலி பண்ணுவாள்
”என்னடீ செல்லக்குட்டி, உன் கழுத்தில? மாந்தல் மீனோட தலையா?”
வாழ்வு
தீண்டாமை, கிறித்தவ பிரிவுகளுக்குள்ளான வேறுபாடுகள், சச்சரவுகள், பொறாமைகள் என்று நிறைய ஓடுகிறது.
நிறைய இழைகள் ஓடுகிறது இந்த நாவலில். அன்னியின் அம்மாவான கொச்சு ரோது – நாவல் முழுக்க வீட்டு வேலை பார்க்கிறாள். கணவன் கம்யூனிஸ்ட் காரன் இவளை விட்டு ஓடிப் போய்விடுகிறான். அவள் பார்வையில் பார்த்தால் நமக்கக் கிடைப்பது ஒரு வேறு பட்ட பெண்ணிய கதை. அடக்கப்பட்ட உணர்வுகளோடு வரும் ரோது, ஒரு கிறித்தவ பேரணியில் (அரசியலும், கிறித்துவமும் சார்ந்த பேரணி) போகும்போது வெடிக்கிறாள்.
ஒரு நாள் அம்மா சுயமாகவே தொண்டைக் கிழிய கோஷமிட்டாள்.
“கம்மூஸ்டுகள வெட்டிக் கொல்லனும்”
யாரும், சுயமாக எதையும் ஊர்வலத்தின் போது கோஷமிடக்கூடாது என்றும், ஆயர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டவற்றை மட்டுமே சொல்லவேண்டும் என்றும் பெரிய சாமியாரே கூறியிருந்தார். இருப்பினும் அம்மா நிறுத்தவில்லை.
“வெட்டிக் கொல்லணும், வெட்டிக் கொல்லணும், கம்மூஸ்டுகள வெட்டிக் கொல்லணும்”
ஆன்னியின் பாட்டியாக வரும் மரி, ஆலாஹாவின் பெண் மக்களின் இன்னொருத்தி.
ஓடிப்போன பெரிய மகன், சீக்காளியான சின்ன மகன் – நல்லது என்று எதையுமே அனுபவிக்காமல் துன்பங்களை மட்டும் அடுக்கடுக்காகப் பார்த்து, மரத்துப்போன பழைய மரம். வெவ்வேறு கிறித்தவ பிரிவின் காரணமாக ரோதுவுடன் உரசல் இருந்தாலும், குடும்பத்தை அவளுடன் சேர்ந்து இவளும் இழுக்கிறாள். ரோதுவுக்குத் தெரியாமல் கீழ் ஜாதியான நீலிக் கிழவியின் வீட்டில் மண்ணெண்ணெய் வாங்குகிறாள். குட்டிப் பாப்பனுக்குத் தெரியாமல் அரிசி கடத்தல் கும்பலிருந்து கஞ்சிக்கு அரிசி பெற்று வருகிறாள்.
“ராட்சசன்களை விட ஆபத்தானவனுங்க மகளே, அரிசி புடிக்கிறவனுக! நம்ம மாதிரி ஏழைங்களோட பிச்சைச் சட்டியிலதான் கை போட்டு அள்ளுவானுங்க. பணக்காரங்களத் தொட மாட்டானுங்க. இதெல்லாம் என்ன அரிசி புடிக்கிறது இப்ப யுத்தம் எதுவும் இல்லியே.
கோக்கஞ்சறவின் வரலாறு முழுவதும் அறிந்த மரியின் பார்வையில் பார்த்தால் நமக்குக் கிடைப்பது சமூக வாழ்வுகளைக் காணும் இன்னொரு கதை.
இப்படி, ஆலாஹாவின் பிற பெண் மக்களான, குஞ்ஞிலை, சிய்யம்மா, சின்னம்மா என்று எல்லோரிடமும் ஒவ்வொரு இழைகள் நமக்குச் சொல்லப்படுகின்றன.
வீழ்ச்சி
எட்டு அறை வீட்டாரின் பிரச்சினையிலிருந்து கோக்கஞ்சற சமூகத்தின் வீழ்ச்சி தொடங்குகிறது. பகுதிகள் விரிவடைகின்றன. தேவாலயமும் சேர்ந்து விரிவடைகிறது.

நாவல் முழுக்க, வீட்டின் முன் உள்ள அவரைப் பந்தல் வருகிறது. தொடக்கத்தில் ஆன்னியும் அவள் பாட்டியும் அவரைப் பந்தல் போடுகிறார்கள். காய்க்கிறது, பூக்கிறது, காய் பூ ஏதுமின்றி தனித்திருக்கிறது. நகரமயமாக்கலையும் சந்திக்கிறது. இதை விரிவாகச் சொன்னால் வாசிப்பவர்களுக்கு சுவாரசியம் குறையக் கூடும் என்பதால் விட்டுவிடுகிறேன்.
பிற நிகழ்வுகள்
பல சுவையான நபர்கள் வந்து போகிறார்கள். கம்பவுண்டரின் சேவை, 14 போக்கிரிகளின் வயிற்றுப் போக்கு, சின்ன சாமியாருடன் சின்ன பாப்பனின் உரையாடல், சின்ன பாப்பனின் தேசீய வாதம் என்று இந்த நாவலைப் பிரித்துப் பிரித்துப் பேசினால் இன்னும் பல பதிவுகள் போடலாம்.
அப்படி எழுதும் அளவிற்கு என்னிடமோ, படிக்கும் அளவிற்கு உங்களிடமோ நேரமில்லை என்பதால் இத்துடன் இந் நாவல் அறிமுகம் நிறுத்தப்படுகிறது.
இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
வாழ்க பாரதம்.