இன்று காலையில் எழுந்து பில்டர் காப்பி போட்டுக் குடித்துக் கொண்டிருந்த பெரியவர் யூ தின் க்யாவ் ஐ, மியான்மர் தனது மக்கள் ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டுள்ளது. ‘மியான்மரின் ஓ.பன்னீர் செல்வம் வாழ்க’ என்கிற கோஷம் முழங்க உலக நாடுகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. தின் கியாவ், சூ கி யோடு எந்த பள்ளியில் படித்தார், எந்த கார் ஓட்டினார் என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விசியம். நமக்கு இது எப்படி இருக்கும் என்பதே எனக்கு ஆர்வமாக இருக்கிறது.

மக்களாட்சி முன்னேற்றக் கூட்டணியின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, அதிகாரப் பகிர்வு, சரியான (பொம்மை?) ஜனாதிபதி தேர்வு என்று தினசரி சலசலப்பு ஒலிகள் எழுந்துகொண்டிருந்தன. ஒரு வழியாக எல்லாம் முற்றுக்கு வந்துள்ளது. சூ கி-க்கு ஒரு நம்பிக்கையானவராக உடன் பணியாற்றப் போகிறார் தின் க்யாவ்.
இந்தப் பக்கம் இந்தியா 1000 கிமீ அளவின் தன் எல்லையை மியான்மருடன் பகிர்ந்து கொண்டுள்ளது. அந்தப் பக்கம் புல்டோசர் மாதிரி சீனா நின்று கொண்டுள்ளது. கேக்குக்கு நடுவில் வெண்ணை வைத்தது போல, மியான்மர் அமைந்துள்ளது. அந்த வகையில் சீனா மற்றும் இந்தியாவிற்கு பூகோள ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்த நாடு முக்கியத்துவம் பெறுகிறது.
குண்டன் குடுமி
பாகிஸ்தான் மாதிரிதான் சீனாவிற்கு மியான்மரும் என்கிற மாதிரி ஏதோ திருவாய் மலர்ந்திருக்கிறார் சீனாவுக்கான மியான்மர் தூதர்,. (வெளியுறவு இன்னும் மக்களாட்சிக்குப் போகவில்லை. இராணுவ குண்டன்கள் கையில்தான் இருக்கிறது. எனவே குண்டனின் குடுமி இப்படித்தான் ஆடும். வேறு வழியில்லை). பாகிஸ்தானுக்காக சீனா பல முதலீடுகளைச் செய்யதுள்ளது. PoK யில் சாலை, துறைமுகம் என்று. இந்தியா இருப்பதால் பாகிஸ்தானுக்குக் கிடைத்த வாழ்வு இது. அது போன்ற வாழ்வை மியான்மர் விரும்புவதாகவும் இவருடைய இந்தக் கூற்றை எடுத்துக் கொள்ளலாம்.

சூ கிக்கு இந்தியா ஆதரவாகவே இருந்துள்ளது. பூட்சு காரர்கள் வந்து அவரை அலேக்காக வீட்டுக்காவலில் வைத்துவிட்டு, நாட்டைக் கையிலெடுத்துக் கொண்டதும், இந்தியா அவரை ஆதரித்துள்ளது. 90களில் அவருக்கு விருதையும் வழங்கி கவுரவப் படுத்தியது. துரதிருஷ்ட வசமாக, அவருடைய சிறை வாசம் நீண்டு கொண்டே இருந்தது. இடைப்பட்ட நாட்களில், இந்திய எதிர்ப்பு குழுக்களின் கூடாரமாக மியான்மர் ஆகிப் போனது. மியான்மரின் மக்களாட்சிப் போராட்டத்தை ஆதரித்த இந்தியா, ஒரு கட்டத்தில் தன் நிலைபாட்டை மாற்றிக்கொண்டு, பூட்சுக் காரர்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்து கொள்ள ஆரம்பித்தது. இந்தியாவில் உள்ள பர்மிய அகதிகள் கொதித்துப் போனார்கள். 2010ல் ராணுவ ஜெனரல் த்தான் ஷ்வே, எதிர்ப்புகளுக்கிடையில், இந்தயாவிற்கு வந்து, புத்தர் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு புளியோதரை தின்றுவிட்டுப் போனார். (இதே ஷ்வேதான் இந்தியாவிற்கு எதிராக சீனா விளையாடும் வண்ணம் பர்மிய கடல்படைத் தளங்களை சீனாவிற்குத் திறந்துவிட்டார்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு அரசு அமைந்துள்ள இவ்வேளையில் சூ கி உடனான உறவுகளைச் செப்பனிட இந்தியா முயன்று கொண்டுள்ளது.

ரகுபதி ஈ
பூட்சு காரன் காலடிக்குப் போன மியான்மர், சர்வதேச நாடுகளின் அனுசரணையிலிருந்து விலகத் தொடங்கியது. ஆள் இல்லாத இடத்தில் எருக்கு முளைப்பது நடப்பதுதானே. எனவே இடைப்பட்ட காலத்தில், பூட்சுக் காரனுக்கு பாலீஷ் டப்பியிலிருந்து, இராணுவ டாங்கி வரை அனைத்திற்கும் ஏகபோக சப்ளையராக சீனா மாறி வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சீனாவின் நிழல் மியான்மர் முழுவதும் படற ஆரம்பித்தது. இன்று சீனாவின் தாக்கமில்லாமல் ஏதுமில்லை என்கிற அளவிற்கு மியான்மரின் தினசரி வாழ்க்கை முறை மாறியுள்ளதாக சொல்கிறார்கள். ஏசியான் நாடுகளின் கூட்டமைப்பில், மியான்மரைச் சேர்ந்தது சீனா என்று சொல்கிறார்கள். தெரியலை. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், வங்காள விரிகுடாவிற்கும் பொடிநடையாகவே போய் சேர்ந்துவிடலாம் என்று சீனா கணக்குப் போட்டு செய்து வந்திருக்கிறது.
மக்களாட்சித் தத்துவம் பேசி, சந்தோஷமாக கிழக்கைக் கவனிக்கத் தவறவிட்ட இந்திய மத்திய அரசாங்கங்கள் மகிழும்படி, மியான்மர் சீனாவின் கோட்டையானது. அதன் இயற்கை வளங்களைச் சுரண்ட ஆரம்பித்ததோடு, இந்தியாவிற்கெதிராக முகாம்களையும் குஷியாக வளர்த்துவிட்டது சீனா. சீனா கொடுத்த அடியில் காங்கிரசுக்குப் பிடித்த சளி, இன்னும் கொட்டிக்கொண்டுள்ளதால், கிழக்கைப் பார்த்தாலே பதறுகிறது. அதை வசமாகப் பயன்படுத்திக் கொண்ட சீனா மியான்மருடன் வியாபாரம், எரி சக்தி மற்றும் இராணுவ உறவுகளை பலப்படுத்திக் கொண்டது.

இந்தியா ஈயை அடிக்கக் கிளம்பியது அப்போதுதான். ஏட்டின்படி, மியான்மரின் மக்களாட்சியை ஆதரித்தாலும், தனது மூலோபாய நலன்களைக் கணக்கில் கொண்டு, பூட்சுக் காரர்களுடன் வியாபாரம் பேச ஆரம்பித்தது. மக்களாட்சி கிளர்ச்சியாளர்கள் மீது மியான்மர் இராணுவம் வெறியாட்டம் நடத்திய பொழுது, இந்திய பெட்ரோலிய அமைச்சர், யங்கூனில் தங்கி ஒப்பந்தம் கையெழுத்துப் போடப் போயிருந்தார். சீனா ஆக்கிரமிக்கும் கரம் என்றாலும், இந்தியா ஒரு நட்பு மற்றும் நம்பிக்கையான நண்பன் என்று பூட்சுக் காரர்களின் ஹெல்மெட் மண்டைக்குள் இருந்த மூளைக்கு உரைக்கும் வண்ணம் சொல்லப்பட்டது. இந்த ஒரு நம்பிக்கையை இழக்க இந்தியா விரும்பாது.
-முடிந்த வரை வரும் 🙂
வளர்க பாரதம்
பிற பதிவுகள்
தெற்காசியாவில் நம் அண்டை நாடுகள் நிலையான மக்களாட்சியைப் பெற படும் சிரமங்களைப் பார்க்கும் போது, இந்தியா ஒரு மிராக்கிள் மாதிரி தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
Anyhow, மியான்மரின் இதய தெய்வம், புரட்சித் தலைவி ஆங் சான் சூ யிக்கு வாழ்த்துக்கள். டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் இல்லையா? இந்தியாவுடனான உறவு மேம்படட்டும். (இந்த அம்மாவின் ரீத் லெக்சர்களை தரவிறக்கம் செய்ததுதான் நினைவிருக்கிறது. இன்னும் கேட்கவில்லை.)
உண்மைதாள். கிழக்காசிய நாடுகளை இரு வகையாகப் பிடிக்கலாம். 1. கம்யூனிச வெறியர்கள். 2. கம்யூனிச வெறி தாங்காமல், மக்களாட்சி நோக்கி ஓடுபவர்கள். இந்தியாவோ எதை இழந்தாலும், மக்களாட்சியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டு உள்ளது. சூ கியின் உரைகளைக் கேட்டீர்கள் என்றால், உங்கள் பார்வையையும் பதிந்து வையுங்கள். விருந்தினர் பதிவேட்டில் எழுதியதற்கு நன்றி.