“மிஸ்டர் சரவணன், நிங்ஙள் இந்த கேங்கிலே சேர்ந்நு எத்ர நாளாயி?” என்றார். நான் ஆச்சரியத்துடன் ”ரெண்டுநாள்தான்” என்றேன். ”விட்டுட்டு ஓடிக்கோ…இதிலே இரிக்காதே…திஸ் இஸ் எ வெரி டேஞ்சரஸ் கேம்” என்றார் உதயபானு. நான் அச்சத்துடன் அவரது மீசையில்லாத நீள முகத்தையே பார்த்தேன். தீவிரத்தால் வெறித்த கண்களுடன் ”நீ நசிச்சு போகும்…ஜீவிதம் நாசமாகிப்போகும்..ரெக்ஷப்பெட்டோ…ஓடிக்கோ” என்றார் உதயபானு
இரவு – ஜெயமோகன்
பதிப்பு – தமிழினி, இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2011
இணையத்தில் வாசிக்க – இரவு – 1
NLBயில் முன்பதிவு செய்ய – http://www.nlb.gov.sg/newarrivals/item_holding.aspx?bid=200127887
கன்னிமாராவில் முன்பதிவு செய்ய – தளம் வேலை செய்யவில்லை.
240 பக்கத்தில் அமைந்த ஒரு பதைக்க வைக்கும் மிகுபுனைவு (தமிழில் fantasy 🙂 ) வகை நாவல்.
நாவலை இதுவரை படிக்கவில்லை என்றால் என்னுடைய இந்தப் பதிவை வாசிப்பதை விடுங்கள். ஏனென்றால் இது உங்கள் வாசிப்பின் சுவாரசியத்தைக் குறைக்கலாம். நாவலை வாசிக்க மேலே சுட்டி தரப்பட்டுள்ளது. கடந்த முறை சென்னை செல்லும்போது, பகல் பிரயாணம் என்பதால், முன்னரே நூலகத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டேன். ஆனாலும், தடைகளின் காரணமாக, இரவலைத் திருப்பியளிக்கும் கடைசி நாள் வரை நீடித்துவிட்டது.
இரவு வாழ்க்கை என்பது தகுந்தது – யோகத்திற்கும் போகத்திற்கும். ஆனால் அதன் உண்மையான வீரியத்தை நம்மால் எதிர்கொள்ள இயலுமா என்று கேட்கிறது இந்த நாவல். சட்டங்களுக்கும் ஒழுங்குகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பது பகல் பொழுது. இரவு என்கிற கட்டட்ற வேளையின் பிரம்மாண்ட வலிமையை, அதன் குண்டூசிமுனையை சூடுபடுத்தி, கண்ணுக்குள் செலுத்துவது போல விவரிக்கிறது.
நாயகன் சரவணன் பணி நிமித்தம் கேரளா போகிறான். அங்கே இரவில் மட்டும் விழித்து, பகலில் உறங்கும் வயதான மேனன்-கமலா தம்பதியினரைச் சந்திக்கிறான். மேனன் உற்சாகமாகப் பேசுகிறார். கலையான முகம் கொண்ட மேனனின் மனைவியும், கண்மூடித்தனமாக இரவுப் பொழுதை அனுபவிக்கும் மேனனும் சரவணனை ரொம்பவே பாதிக்கிறார்கள். தானும் அறியாது, இரவுச் சமூகத்தில் கலக்கிறான் சரவணன்.
“நாக்டிரனல்னா தமிழிலே என்ன?” ”இரவுலாவி” என்றேன். ”குட்..தமிழிலே எல்லாத்துக்கும் வார்த்தை இருக்கு கமலம்…ஸீ..மலையாளத்திலே நமக்கு எதுக்கும் நல்ல வார்த்தை கிடையாது. ஒண்ணு அப்டியே இங்கிலிஷ். இல்லாட்டி அசிங்கமா சம்ஸ்கிருதம். என்ன அது, நிஸாசஞ்சாரி. மை ·பூட்”
மேனனின் மூலம், நாயர் மற்றும் அவரது மகள் நீலிமா, சாக்த சாமியார் பிரசண்டானந்தா, ஃபாதர் ஜோசப் என்று நிறைய பேரைச் சந்திக்கிறார்.
பிரசண்டானந்தா சொல்லும் படிமங்களை ரசிக்கும் மேனனுக்கு, அவரது யோக கலைகளில் ஆர்வமிருக்கவில்லை. ஆனால் கமலாவிற்கு அதில் ஆர்வம் உள்ளது என்று மேனன் சொல்லும்போது மெலிதாக நான் சந்தேகம் கொண்டேன். அது பின்னால் அவிழ்க்கப்படும் முடிச்சு.
“மிஸ்டர் சரவணன், நிங்ஙள் இந்த கேங்கிலே சேர்ந்நு எத்ர நாளாயி?” என்றார். நான் ஆச்சரியத்துடன் ”ரெண்டுநாள்தான்” என்றேன். ”விட்டுட்டு ஓடிக்கோ…இதிலே இரிக்காதே…திஸ் இஸ் எ வெரி டேஞ்சரஸ் கேம்” என்றார் உதயபானு. நான் அச்சத்துடன் அவரது மீசையில்லாத நீள முகத்தையே பார்த்தேன். தீவிரத்தால் வெறித்த கண்களுடன் ”நீ நசிச்சு போகும்…ஜீவிதம் நாசமாகிப்போகும்..ரெக்ஷப்பெட்டோ…ஓடிக்கோ” என்றார் உதயபானு
இந்த சாக்த சாம்ராஜ்ஜியங்கள் பற்றி எனக்கு விரிவாகத் தெரியாது. ஆனால் மேலோட்டமாக அறிந்திருக்கிறேன். இந்து மதப் பிரிவுகளில் சில குழுக்கள் செய்த தவறுகள் காரணமாக மீடியாக்களில் அடிபட்டபோது மேலோட்டமாக அறிந்தேன். பிரசண்டானந்தா மூலம் ஒரு பெரிய நிகழ்வைக் காட்டுகிறார் ஜெயமோகன். எனக்கு ஒரு நிமிடம் சிலிர்த்துவிட்டது.
அந்த பிரசண்டானந்தா குழுவில் இருக்கிறார் முகர்ஜி. யக்ஷி படங்களை வரிசையாக வரைகிறார்.
நான் கைகழுவும்போது ”ஊணு மோசமா?” என்று அவள் பின்னாலிருந்து கேட்டாள். ”நல்லா இருந்தது…எனக்கு பசியில்லை” என்றேன். அவள் சில நிமிடங்கள் தயங்கிவிட்டு ”…அந்த மேனன் விட்டுக்கு போனா…அவங்க யட்சி உபாசனை உள்ள ஆட்களாக்கும். அங்க போனா அவங்க மாயம் வச்சு பிடிச்சுடுவாங்க. பின்ன அதிலே இருந்து தப்ப முடியாது” என்றாள். நான் ”இல்லல்ல நான் சும்மாதான் போனேன்” என்றேன். ”போன வருஷம் ஒரு தோணிக்கார பையன் அவங்க வீட்டுக்கு அடிக்கடி போயிட்டிருந்தான். பின்ன அவனுக்கு கிறுக்காயிபோச்சு. இப்பம் அவன் கிறுக்கா அலையுறான்னு கேட்டிட்டுண்டு.” என்றாள். என் முகம் மாறியதை தடுக்க முயன்று வேறுபக்கம் பார்த்தேன்.
மேனனின் மனைவி கமலா அப்படிப்பட்ட ஒரு வசீகரியாக வலம் வருகிறார். தோற்றம் மட்டுமல்ல, பழக்கத்தில், பேச்சின் கூர்மையில் (ஒரு நொடிப்பொழுதில் நீலிமா மீதான சரவணனின் ஈர்ப்பை அறிகிறார்), சிரிப்பில், சமையலில். கமலாவை வயதான யக்ஷி என்கிறார் முகர்ஜி. முகர்ஜியைச் சந்தித்ததாக நீலிமாவிடம் கூறுகிறான் சரவணன், அதை அவள் ரசிக்கவில்லை. மற்றொரு வசீகரியான நீலிமாவிற்குத் தெரிந்துள்ளது கமலா மீதான முகர்ஜியின் ஆர்வம்! இதை நூல் பிடித்துக்கொண்டே வந்து கொலைக்குப் பிறகான முகர்ஜியின் நிலையழிவைப் பாருங்கள். கமலாவைக் கொன்ற பிறகு, தான் வரைந்த யக்ஷி ஓவியங்களைக் கிழித்துப்போடுகிறார். ஆக, கமலா கொலை என்பது, மதத்திற்காகவோ, இரவு வாழ்க்கைக்காகவோ, ஒழுக்கத்தின்பொருட்டோ நடந்ததல்ல. தெளிவாக இரவு வாழ்க்கையை அறிந்த, பிறரின் நிர்வாணத்தைத் தெளிவாக அறிந்து உணர்ச்சி மட்டுப்போன, ஒரு கலைஞன் தன் பெண்ணாசையின் பொருட்டு நிகழ்த்திய ஒரு வஞ்சம்.
பிரசண்டானந்தாவுடனான கமலாவின் உறவிற்கு இருவர் எப்படி எதிர் வினையாற்றுகிறார்கள் என்று ஆர்வமுடன் நினைத்துப் பார்க்கிறேன். முகர்ஜி கொலை செய்யும் அளவிற்குப் போகிறார். மேனன் கமலாவை வெறுக்காவிட்டாலும், தன் மனைவியின் நடத்தைப் பிறழ்வுக்குக் காரணமான இரவுக் சமூகத்தை விட்டே ஓடிவிடுகிறார். மேனன் கமலாவின் அஸ்தியைப் பெற்ற பிறகு, கதறும் இடத்தில் கலங்கிவிட்டேன்.
நாவலின் உச்சமான தருணங்களில் கமலாவின் கொலையும் ஒன்று. பகலில் இல்லையா துரோகங்கள், சீரழிவுகள். அவற்றை ஒழுக்கம், நடத்தை என்று தடைக் கயிறு கட்டி வைத்துள்ளது சமூகம். இரவுகளில் அந்த சக்திகள் தன் முழு சக்தியைக் காட்டி பீரிட்டு வருகையில் அதன் விசையை ஒரு மனிதரால் தாங்க இயலுமா? முடியாது என்றே என் வலிமையற்ற மனம் சொல்கிறது.
நீலிமா மது அருந்தி தன் மனதின் வஞ்சத்தைக் காட்டும் தருணம் நாவலின் இன்னாரு உச்சம்.
“என்ன பண்ணப்போறே? பகலிலே ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கலாமா? பட் யூ ஹேவ் டு ·பக் ஹர் இன் த நைட்… அதுக்கு அப்றம் அவ தூங்காம இருட்டை பாத்துட்டு கிடப்பா. அப்ப அவளோட ஆழத்திலே இருந்து விஷம் திகட்டி வந்து நாக்குல் முழுக்க கசக்கும். அப்ப நீ அவளைத் தொட்டா ராஜநாகம் கடிச்சது மாதிரி ஒரு சொல்லால உன்னைக் கொன்னிருவா…. யூ நோ எல்லா பெண்ணும் யட்சிதான்… யூ ஸில்லி ரொமாண்டிக் ஃபூல்…யூ..”
நீலிமா இரவு – 13
‘நானே ஒரு யக்ஷிதான்’ என்கிறாள் நீலிமா. கமலா நெய்விளக்கில் எழுகிறார் என்றால், நீலிமா அப்பட்டமான காட்டுத்தீயில் எழுகிறாள். நீலிமாவின் கழுத்துப் பகுதியிலே மயங்கிக் கிடக்கும் சரவணனுக்கு, அதுமட்டுமே நான் அல்ல என்று அப்பட்டமாகக் காட்டுகிறாள். ‘அவள் அப்படித்தான்’ படத்தின் ஸ்ரீப்ரியாதான் நினைவிற்கு வந்தார். `உண்மை என்பதைப் புதைத்து வைக்கமுடியாது. எவ்வளவு ஆழத்தில் புதைத்து வைத்தாலும் பீறிட்டு மேலே வரும்’ என்கிறார் நம் நாட்டின் பெரியவர் ஒருவர். எனவேதான் நம் உண்மைகள் காவிய ரச சுவையுடன் வருகின்றன நாவலின் இறுதி பாகத்தில் வருகிறது.
எனக்கு இது வேண்டும் என்பது உண்மைதான். அதற்காக வேஷம் போட முடியுமா என்று நீலிமா உணர்த்துகிற கட்டத்தில், ஒரு கடுப்பான கஷாயத்தை விழுங்கியது போல் உணர்ந்தேன். அவள் பேசுவது ஒன்றும் தப்பில்லையே. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு சரவணனுக்கோ (படிக்கிற நமக்கோ) ‘திராணி’ இருக்கிறதா என்பதுதான் முக்கியம். நிலவில்லாத வின்மீண்கள் செறிந்த வானில், நீலிமாவும் சரவணனும் இன்பம் துய்க்கும் கணம், ஒரு ரசிக்கக் கூடிய ஒரு கனவு. அந்த வேளை முடிந்த பிறகு, சிந்தனைக்குள் அமிழும் சரவணணைப் பார்த்தபொழுது, ஒரே யக்ஷியால் மீண்டும் மீண்டும் சப்பிப்போடப்படும் ஒருவனாகத்தான் இருக்கப்போகிறானோ என்று மனம் பதறுகிறது. நாவலின் இறுதியில் வாசகரைப் போன்றே மேனனும் பதறுகிறார்.
“எனக்கு அந்தரங்கமாக ஒரு விஷயம் தெரியும். நீ கமலாவால் தீவிரமாக கவரப்பட்டிருந்தாய். அவள் அப்படித்தான். நெருப்பு போல. அவளை விட்டு யாரும் கண்களை எடுக்க முடியாது. நீலிமா கமலாவின் ஒரு சிறிய மாற்றுவடிவம்தான் உனக்கு”
எப்படியோ, ஒன்று சேர்கிறார்கள் சரவணனும் நீலிமாவும். கமலாவை இழந்த விரக்தியில் இரவு வாழ்க்கையை விட்டு வெளியேறிய மேனன், இரவு வாழ்க்கையைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் என்கிறான் சரவணன். அவனது மனஉறுதியின் மீது எனக்கு சந்தேகம் வருகிறது. 35 ஆண்டுகள் வாழ்ந்த மேனனுக்கே கமலா அளித்த அதிர்ச்சயை, நீலிமா இவனுக்குத் தரமாட்டாளா? அப்படிப்பட்ட வீரியமான தாக்குதல் சரவனனுக்கு இல்லாமல் போகுமா என்ன? இது நீலிமா மீதான நடத்தையின் ஒரு ஆணாக என் சந்தேகம். ஆனால் இந்தப் பதிவை எழுதுகிறபோது ஒன்றை நான் அறிகிறேன். கமலா ஒரு வேடம் பூணுகிறாள். இரவுவாழ்க்கை என்கிற பெயரில் பிரசண்டானந்தா, முகர்ஜி என்று தன் வாழ்க்கையில் அவள் அனுமதிக்கிற சுரண்டல் ஆண்களை விட்டு, தெளிவாக வெளியே நிற்கிறாள் நீலிமா. அந்த வகையில் எனக்கு அளவு கடந்த திருப்தி ஏற்படுகிறது. இதுவும் பகல் சார்ந்த, ஒழுக்கம் விதிகள் பூசப்பட்ட ஒரு ஆணின் திருப்திதான் என்றாலும், ஒரு வேலை அப்படி நீலிமா இருக்க இயலாதென்றால் அது தவறு என்று வாதிட நமக்கு என்ன உரிமை இருக்கிறது?
இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
வெல்க பாரதம்!
படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இணைப்புக்கு நன்றி. கதைகளை நீங்கள் நன்றாக அலசுகிறீர்கள், படிக்கும்போது இத்தனை எண்ணங்கள் மனதில் தோன்றுமா என்று வியப்பாக இருக்கிறது. ஒரு சிறந்த விமரிசகர் ஆக எதிர்காலத்தில் வரலாம். (ஓய்விற்குப் பிறகு இந்த வேலையை மேற்கொள்ளலாம்) புத்தகமும் படித்தாற்போல இருக்கும்; எழுதுவதையும் தொடரலாம்.
வாழ்த்துக்கள்!
அன்னையருக்கு என்றுமே பிள்ளைகள் மீது அதீத நம்பிக்கை உண்டு என்று உங்கள் பின்னூட்டம் காட்டுகிறது. வருகைக்கும், தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றி.